ஜனவரி 12 06
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கொஞ்சம் கதைக்கலாம் வாங்க : ஒரு சொல்லுக்கு பொருள் அதுவேதான்
- ராமசந்திரன் உஷா
| Printable version | URL |

 கொஞ்சம் கதைக்கலாம் வாங்க - 1

முன்னுரையைப் படித்துவிட்டு சிலர், பெண்கள்தான் பொருள் இல்லாமல் மணிக்கணக்காய் பேசுவார்கள் என்ற கருத்தை வைத்தார்கள்.  இப்படி ஆண்கள் மட்டும் பேசமாட்டார்களா என்ன?  இன்று படிப்பு, வேலை அதனால் கிடைக்கும் நட்புவட்டம் என்று பெண்கள் தங்கள் சிந்தனைகளை, கருத்துக்களை பரிமாறிக்கொள்ள பல தளங்கள் கிடைத்துள்ளன.

பெண்களுக்கான பிரத்தியோக உணர்வுகள், கருத்துக்கள், எண்ணங்கள் என்று தனியாய் ஒன்று உண்டு என்பதிலேயே எனக்கு ஒப்புமையில்லை. (கவனிக்க தேவையில்லை என்ற கருத்தை சொல்லவில்லை) ஆணோ பெண்ணோ அவரவர் வளர்ந்த சூழ்நிலை, படித்த படிப்புக்கள், பழகும் வட்டம் இவற்றை வைத்தே எண்ணங்கள் ஏற்படுகின்றன என்பது என் தாழ்மையான எண்ணம்.

எழுத்தாளர் ஒருவரிடம்  பேசிக் கொண்டிருந்தப்பொழுது, நான், பெண்களுக்கான 33% தேவையேயில்லை, தங்கள் வீட்டுப் பெண்களை முன் நிறுத்தி ஆண்கள் பாலிடிக்ஸ் செய்வார்கள் என்றேன். அதற்கு அவர் ஆரம்பம் அப்படித்தான் இருக்கும், காலப்போக்கில் பெண்கள் தானே முடிவெடுக்க ஆரம்பித்துவிடுவார்கள்  என்றார். அவர் பார்த்த பஞ்சாயத்து பெண் தலைவிகள் அனைவரும் மக்களின் பிரச்சனையைத் தீர்க்க முனைந்தார்களே தவிர, வழிப்பாட்டு தலங்களை புதுப்பிக்க யாருமே பணம் செலவழிக்கவில்லை என்றார். அடுக்களையைத் தாண்டி வெளியே வரும்பொழுது, செய்திகள், பிரச்சனைகள், அதற்கான தீர்வுகள் என்று பல தளங்களில் அவர்களால் இயங்க முடியும் என்பதைச் சொல்ல முற்பட்டேன்.

சரி, சரி போதும் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. சென்ற வாரம், சொற்களின் பொருள் சொல்வதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். ஓரளவு இணையான சொல்லை, அதே மொழியில் சொல்ல முற்படலாமே தவிர, சரியான பொருள் சொல்வது கடினம்.


Kambar Jeyaramanஇந்த வசனம் சின்ன வயதில் டிடியில் பார்த்த "கவிசக்கரவர்த்தி கம்பன்" என்ற நாடகத்தில் வரும். அப்பொழுது எல்லாம் செவ்வாய் தோறும், ஒரு மணிநேர நாடகம் போடுவார்கள். சீரியல்/ தொடர் என்ற பெயர் கிடையாது. ஸ்டூடியோவில் செட் போட்டு நடத்தியதால் நாடகம் என்றே சொல்லப்படும். இந்த நாடகத்தில் கம்பராய் நடித்த ஜெயராமன் என்பவர், கம்பர் ஜெயராமன் என்றே பின்பு அழைக்கப்பட்டார். இப்பொழுது படங்களில், தொடர்களில் அழுதுவடியும் அப்பாவாக வருகிறார். நாடகத்தில் சோழ மன்னனாய் நடித்தவர் சண்முகசுந்தரம். நல்ல நடிகர், ஆனால் நல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது அவரின் துரதிஷ்டம். கரகாட்டக்காரனில் கனகாவின் தந்தையாக வருவாரே அவர்தான். கொஞ்சம் ஓவர் ஆக்ட் செய்வார். பாருங்க, மறந்தே போனேன், இப்பொழுது "கெட்டி மேளம்" தொடரில் அப்பாவாக வருகிறாரே அவர்தான். அது என்னவோ தொடரில் வரும் அப்பாக்கள் எல்லாம் கேனையன்களாக இருக்கிறார்கள்.

இவரின் தங்கை உதயசந்திரிகா. (பெயர் சரியா என்று சொல்லுங்கள்) சில படங்களில் "இது சத்தியம்" உட்பட சிலபடங்களில் கதாநாயகியாய் நடித்து, சிறுவயதிலேயே காலமாகிவிட்டார். சண்முகசுந்தரத்திற்கு பெண் வேடம் போட்டதுப் போலவே இருப்பார். இது சத்தியம் ஜாவர் சீதாராமன் எழுதி குமுதத்தில் தொடராய் வந்தது. திரைப்படத்தில் நாயகன் அசோகன், ஆமாம் வில்லனாய் வரும் அசோகன் தான் இதில் ஹீரோ. நாயகி உதயசந்திரிக்கா வாயசைக்க, பி.சுசீலா பாடிய " சரவண பொய்கையில் நீராடி, துணை தந்தருள் என்றேன் முருகனிடம் " என்ற பாடல் சுசீலாம்மாவின் காலத்தால் அழியாத தேனிசையில் ஒன்று.

ஜாவர் சீதாராமன் என்றதும் நினைவில் வருவது "உடல், பொருள், ஆனந்தி" என் அம்மா குமுதத்தில் தொடராய் வந்தப் பொழுது கிழித்து வைத்து, கோணி ஊசியால் தைத்து வைத்ததைப் பிறகு அம்மாவுக்கு தெரியாமல் படித்து நடுங்கியது. இந்தளவு வேறு எந்த பேய் கதையும் கவரவில்லை. சரி இவ்வளவு நன்றாக எழுதுகிறாரே என்று "மின்னல் மழை மோகினி என்ற நாவலை, சென்ற முறை ஊருக்குப் போயிருந்தப் பொழுது, சென்னை பொது நூலகத்தில் இருந்து எடுத்துப் படித்தால் ...  எல்லாவித மசாலாக்களும் கொண்டு, பாத்திரங்கள் கூட இதற்கு இன்னார் என்று கண்டுப்பிடித்துவிடலாம், சினிமாவுக்கு என்றே எழுதப்பட்ட மகாகாவியம் (!)

தொலைக்காட்சியில் புத்தக கண்காட்சி பற்றி காட்டியிருப்பார்கள், வேறு என்ன அடிதடி விவகாரம்தான். தமிழ்முரசுவில் விலாவாரியாய் செய்தி கவர் செய்தப்பொழுது, சன்னில் காட்டாமல் இருந்திருப்பார்களா? நான் பார்க்க தவறிவிட்டேன். புத்தக காட்சி கன ஜோராய் நடந்துக் கொண்டு இருக்கிறது. இரு வருடங்களுக்கு முன்பு இலக்கிய நண்பர் ஒருவர் சொன்ன விஷயம், எழுத்தாளர் ரமணிசந்திரன் அவர்களின் நாவல்கள்தான் அதிகம் விற்கப்படுமாம். இந்த வருடம் சுஜாதா, ஜெயமோகன் அவர்களின் படைப்புகள் நன்றாக விற்பதாக சொன்னார்கள்.

ஆனால் இன்னும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் தமிழில் தரமாய் இல்லை. ஆங்கிலத்தில் என்னை கவர்ந்த குழந்தைகளுக்கான கதைகள் பல எழுதிய எழுத்தாளர் Roald Dahl. இவர் எழுதியதில் நான் படித்தவை, குழந்தைகளுக்கான Charlie and tha chocolate factory, Matilda, James and the giant peach, George's marvelous medicine.

Boy இதில் சிறுவயது குறும்புகள், ஹாஸ்டலில் பட்டப்பாடு, அது என்னவோ இவருக்கு ஆசிரியர்கள் மீது அவ்வளவு கோபம்! என்று ஆர். கே. நாராயணின் சிறுகதைகள் போல, குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் கதை. சுயசரித்திரம். அடுத்து Going Solo. இது இவரின் வேலைக்கு சேர்ந்த அனுபவம், இவரின் ராணுவ வாழ்க்கை, பல்வேறு நாட்டு மக்களுடனான அனுபவங்கள் என்றுப் போகும்.

இதைத் தவிர இவரின் சிறுக்கதை தொகுப்பு. சென்ற வருடம் செய்த அளவு சன் டீவியில் புத்தகக்கண்காட்சியை அதிகம் கவர் செய்யவில்லை. ஏன் என்று தெரியவில்லை, ஒருவேளை தனி நிகழ்ச்சியாய் தினமும் ஏதாவது காட்டுகிறார்களா? என் கண்ணில் விழவில்லை.

ஆர். எஸ். மனோகர் காலமான செய்தி உங்களுக்கு தெரிந்திருக்கும். மனோரமா கதாநாயகியாய் அறிமுகம் ஆனப்படம் "கொஞ்சும் குமரி". அதன் நாயகன், ஆர். எஸ். மனோகர். அவர் நகைச்சுவை நடிகையானார். இவர் வில்லனாகி மாறிப் போனார். மனோரமா நடிக்க விரும்பி இன்னும் கிடைக்காதப் பாத்திரம் இருபாலினம் (அலி.) ஆண்களே இந்த வேடம் போடுவார்கள், பெண்கள் போட்டதில்லை என்றுச்  சொல்லியிருந்தார்.

ஜெமினிகணேசன் இறந்தப் பொழுது, மனோரமா அவர்கள், "என்னுடன் நடிக்க வந்தவர்கள் ஒவ்வொருவராய் போய் கொண்டு இருக்கிறார்கள்" என்று சொன்னார். வயதானக் காலத்தில் தன் நட்புக்கள் ஒவ்வொருவராய் போய் கொண்டு இருப்பது, அவ்வயதையொத்தவர்களுக்கு அடுத்து நாம்தானா என்ற கேள்வி மனதில் எழும். சென்ற முறை ஊருக்குப் போயிருந்தப் பொழுது, இதே வசனம், ஆரோக்கியமான எண்பத்திரண்டு வயதான என் தந்தை சொல்லியப் பொழுது, ஒரு வினாடி என்ன சொல்வது என்று புரியாமல் தவித்தேன். நீண்ட ஆயுள் வரமா, சாபமா ?

|

oooOooo
ராமசந்திரன் உஷா அவர்களின் இதர படைப்புகள்.   கொஞ்சம் கதைக்கலாம் வாங்க பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |