ஜனவரி 12 06
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : பிரச்சினை 2005 - ஈராக்
- பாஸ்டன் பாலாஜி
| Printable version | URL |
"சாதாரண ஈராக்கியன் காலையில் எழுந்து வண்டியோட்டும்போது முன்னாடி செல்லும் வண்டியில் குழந்தை சிரிப்பதையோ, ஹெல்மட் போடாத இளநங்கையையோ, செல்பேசியில் கதைக்கும் சக ஈராக்கியனையோத்தான் பார்க்க விரும்புகிறான். எட்டு சக்கரத்தில் துப்பாக்கி தாங்கிய பதினெட்டு பேர் கொண்ட அமெரிக்காவின் அன்னிய முகங்களை அல்ல."

பொருளாதாரத்தை குலைக்க வேண்டும். அது மக்கள் மத்தியில் அதிருப்தியை தோற்றுவிக்கும். அதனால் அரசின் பலம் வீக்கமடையும். அதிகாரத்தின் நம்பகத்தன்மையும் வீழும். குழப்பத்தை காசு செலவில்லாமல் உருவாக்கலாம். தடுப்பது மிகவும் கஷ்டம். எங்கோ ஒரு பாலத்தை வெடி வைத்து தகர்த்தால் போதும். அனைத்து பாலங்களுக்கும் காவலாளிகளின் தேவை தோன்றும். ஒரு தியேட்டருக்குள் குண்டு வீசினால் போதும். எல்லா பொது இடத்திலும் நுழைவதற்கு முன் சோதனை போடும் அவசியம் உருவாகும்.

Counterinsurgency Warfare: Theory & Practice by David Galula, 1964

ஈராக்கில் சென்ற வருடம் என்ன நடந்தது என்றவுடன் அனைவரின் மனதிலும் எழும் கேள்வி - 'அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு எப்பொழுது நீங்கும்' என்பதாகத்தான் இருக்கிறது. சன்னிக்களும் பெருவாரியாக கலந்து கொண்ட தேர்தல் வெற்றிகரமாக நடந்திருக்கிறது. அனைத்து தரப்பினரும் ஒப்புக்கொள்ளும் அரசியல் அமைப்பு ஒப்புதலாகியிருக்கிறது. இருந்தாலும், அமெரிக்கப் படை இருக்கும் வரை வெற்று வதந்திகள் கூட ஆயிரம் பேரை கொன்றுவிடுகிறது.

இத்தனைக்கும் மொத்த ஈராக்கின் பதினெட்டு மாகாணங்களில் நான்கே நான்கில் மட்டும்தான் வன்முறை தலைவிரித்தாடுகிறது. நான்கு மாகாணங்களுமே தலைநகரமான பாக்தாதில் மையம் கொண்டிருக்கிறது.

பொதுமக்கள் நுழையமுடியாதபடி பாதி பாக்தாத் மூடப்பட்டிருக்கிறது. மழை, வெள்ளம் போன்றவை எதுவும் இல்லாவிட்டாலும் மின்சாரம் இல்லாமல் வாழப் பழகிக் கொள்கிறார்கள். இந்த மாதிரி அன்றாட தலைவலிகளைப் பொறுத்துக் கொண்டாலும், குண்டுவெடிப்பு, துப்பாக்கிச் சூடு, தினசரி சண்டை என்று வாழ்க்கையே போராட்ட களமாக மாறிப் போனதை வெறுக்கிறார்கள்.

வீட்டில் இருந்து காய்கறி வாங்க கிளம்பினால் துப்பாக்கியில் குறிபார்த்துக் கொண்டே செல்லும் அமெரிக்க இராணுவப்படைகள். நகரத்துக்குள் செல்லமுடிகிற பத்து தெருக்களுள், ஒரு நாளில் பத்து இடங்களில், விமான நிலையத்துக்குள் நுழைவது போன்ற உடல் பரிசோதனைகள்.

ஷியாக்களுக்கும் சன்னிக்களுக்கும் பல நிலைப்பாடுகளில் கடும் கருத்து வேறுபாடு இருந்தாலும் 'அமெரிக்கா படைகளை திரும்பப் பெறவேண்டும்' என்பதில் உறுதியாக கை கோர்க்கிறார்கள். ஜனவரி 30 நடந்த இடைக்கால தேர்தலில் சன்னி முஸ்லீம்கள் பங்குபெற வேண்டுமென்றால் அமெரிக்காவின் வெளியேற்றத்திற்கான கால அட்டவணை வெளியிட வேண்டும் என்று ஈராக்கில் கிளர்ச்சியை பெருமளவில் தூண்டிவிடும் 'இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் கூட்டமைப்பு' (Association of Muslim Scholars) நிபந்தனை விதித்தது. ஷியா முஸ்லீம்களின் சார்பாக முக்ததா அல்-சாதரும் (Muqtada al-Sadr) இஸ்லாமிய புரட்சி இயக்கத்தின் (Islamic Revolution) அப்தெல் ஆஸிஸ் அல்-ஹகிமும் (Abdel Aziz al-Hakim) ஏப்ரல் 2003-இல் இருந்தே அமெரிக்கா வெளியேறுவதை கோருகிறார்கள்.

ஈராக்கிடம் அணு ஆயுதங்களை தயாரிக்கும் ஆதார பொருள்கள் இருக்கலாம், ஆந்த்ராக்ஸ் போன்ற உயிரியல் மற்றும் வேதியியல் பேரழிவு ஆயுதங்களை ஈராக் கொண்டிருக்கலாம் என்று சொல்லி அதன்மீது போர் தொடுத்தது அமெரிக்கா. ஆனால், இன்றுவரை ஆதாரங்களுக்கு பதில் மழுப்பல்களும், ஒப்பனைகள் நிரம்பிய கோப்புகளின் பல்லிளிப்பும் மட்டுமே நிரூபிக்கப்பட்டிருக்கிறது. வியட்நாமில் கம்யூனிஸத்தை தடுத்து நிறுத்த எண்ணியது போல், ஈராக்கில் இஸ்லாமிய ஜிஹாத் எண்ணங்களுக்கு தடா போடவே அமெரிக்கா படையெடுத்தது. இரண்டுமே பெரும்தோல்வி.

ஈராக்கை வ்¢ட்டு அமெரிக்கா விலகுவது என்பது எளிதானது அல்ல. ஈராக்கின் ஒன்றரை லட்சம் காவல் படை வீரர்களுக்கும்; 85,000 இராணுவ வீரர்களுக்கும் அமெரிக்கா பயிற்சியளித்து வருகிறது. நூற்றிப் பதினைந்து பகுதிகளாக இவர்களைப் பிரித்து - போராளிகளைத் தடுப்பது, கொரில்லா போர்முறைகள், துப்பாக்கி சுடுவது, விசாரணை முறைகள், உளவியல் பயிற்சிகள் என்று அனைத்து துறைகளிலும் எதிர்த்து நிற்க, தீவிரவாதிகளை ஒடுக்க, வகுப்பெடுக்கிறார்கள்.

ஜூன் மாதத்தில், இவர்களை ஒரு கல்லூரி போல் பிரித்து மதிப்பிட்டிருக்கிறார்கள். கல்லூரியில் கடைசியாண்டு போல், அனேகமாக 'தயார்' நிலையில், தனிப்படையாக செயல்படும் திறன் கொண்டவர்களாக மூன்று தொகுதிகளை கிராஜுவேட் நிலைக்கு மதிப்பிட்டார்கள். மீண்டும் நடந்த செப்டம்பர் தேர்வில், மொத்தம் இருக்கும் 115 தொகுதிகளில், ஒன்றே ஒன்று மட்டும்தான் தேறியது.

இரண்டாம் நிலையாக சண்டை போடத் தெரிந்தவர்கள் என்னும் தகுதிக்கு மூன்றில் ஒருவர் தயார் நிலையில் இருந்தார். சீக்கிரமே தேறிவிடுவார் என்னும் மூன்றாம் நிலையில் மூன்றில் இரண்டு பங்கு இராணுவமும், பாதி போலீசாரும் இருந்தார்கள். ஒன்றுக்குமே லாயக்கில்லாத கடைசி நான்காம் நிலையில் மிச்ச பாதி காவல் துறை வீரர்கள் தகுதி பெற்றிருந்தார்கள்.

சண்டையில் ஜெயித்தபிறகு விலகிவிடாமல், ஜெர்மனி, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளில் ராஜ்ய பரிபாலனத்துக்கு உறுதுணையாக இருந்த அமெரிக்கா; வியட்னாம் போன்ற தோற்ற நாடுகளில் இருந்து மட்டுமே உடனடியாக பின்வாங்கியது. அப்போதைய உலகப் போர் முடிந்தவுடன் அமெரிக்கா போர்க்கால அடிப்படையில் தன்னுடைய ஜெனரல்களுக்கு பிறமொழி வகுப்பெடுத்தது. பெருமளவில் மொழிபெயர்ப்பாளர்கள் தேவை என்று பொது அறிக்கை வெளியிட்டது. அதனைப் பயன்படுத்துக் கொள்ள பல்கலைக்கழகங்களிலும் ரேபிடெக்ஸ் பாடங்களை முப்பது நாளில் ஜப்பானிய மொழி என்று கற்றுக் கொடுத்து ஆயிரக்கணக்கில் அனுப்பி வைத்தார்கள். இதுநாள் வரை அமெரிக்காவில், 'அராபிய மொழி தெரிந்தவர்கள் தேவை' என்று பெரிய அளவில் கேட்க ஆரம்பிக்கவில்லை. கேட்டாலும் ஈராக் என்னும் பெயரைக் கேட்டாலே காலன் வந்து நிற்பதாக நினைக்கும் அமெரிக்கர்களும் அரேபிய மொழி படித்து, மொழி வல்லுநர்களாக மாறி ஈராக்கின் படைவீரர்களை கரை சேர்க்க வருவது சந்தேகமே.

மேலும், ஜப்பான், ஜெர்மனி போல் அல்லாமல், ஈராக்கியர்கள் அமெரிக்கப் படையை விரோதியாகப் பார்க்கிறார்கள். அமெரிக்க நண்பர்களைக் கூட, ஈராக்கை ஆக்கிரமிப்பாக எண்ணுவதில்தான், அபிப்பிராய பேதம் ஆரம்பிக்கிறது.

நிலையான அமைதியை நிறுவாமல் ஈராக்கை விட்டு அமெரிக்கா வெளியேற முடியாது. இன்றைக்கு உடனடியாக படைகளை வாபஸ் பெற்றுக் கொண்டால் ஈராக்கில் கலகம் வெடித்து, குழப்பத்தில் ஆப்பிரிக்க நாடுகள் போல் உள்நாட்டுப் போர் மூளும் அபாயம் இருக்கிறது. ஈராக்கிய இராணுவத்தையும், காவல் படையையும் - எவ்வித அச்சுறுத்தலையும், கிளர்ச்சியாளர்களை அடக்கும் வழிமுறைகளையும், கற்றுத் தந்துவிட்டு விலகுவதே அல் கொய்தா போன்ற தீவிரவாத இயக்கங்கள் ஈராக்கில் குளிர் காய்வதை தடுக்கும்.

American Troops in Iraqஈராக்கில் சன்னி முஸ்லீம்களும் ஜனநாயகத்தில் பங்குபெற விரும்புகிறார்கள். தற்போது ஷியாக்கள் மட்டுமே பெரும்பாலும் உள்ள ஆட்சி அமைப்புகளும் சன்னிக்களின் வருகையால் சமநிலையை அடையும். ஆனால், அமெரிக்கப் படைகள் வெளியேறும் வரை சன்னிக்கள் தேர்தல்களில் பங்கு பெறுவதை தவிர்க்க விரும்புகிறார்கள். அமெரிக்காவை வெளியேற்றும் அளவுக்கு சன்னி கிளர்ச்சியாளர்களிடம் பெரிய ஏவுகணைகளும் ஹெலிகாப்டர்களும் கிடையாது. கைகுண்டுகளையும் நாட்டு வெடிகுண்டுகளையுமே அவர்கள் வீசி வருகிறார்கள்.

பாலஸ்தீனத்திலும் காஷ்மீரிலும் ஒலிப்பது போல் பெரும்பாலான கலகக்காரர்களின் குரல் 'ஜிஹாத்' என்பதாக ஈராக்கில் இல்லை. அவர்களின் கரகோஷம் 'முக்காவாமா' - எதிர்ப்பு என்பதாகத்தான் இருக்கிறது. ஈராக் தேசியத்தை தாங்கிப் பிடித்து அந்நியர்களை எதிர்ப்பதுதான் அவர்களின் தாரக மந்திரம். காட்டாக ஈராக்கிய இஸ்லாமிய படை மற்றும் ஈராக்கின் தீநாக்கு (Flame of Iraq) போன்ற அமைப்புகளின் பெயர்களை சொல்லலாம்.

தாங்கள் தோற்றுப் போனதற்காக, தங்களின் உடமைகள் நாசமாகியதற்காக, தங்களின் வீடுகளின் உள் புகுந்ததற்காக, ஒவ்வொரு அமெரிக்க வீரரைப் பார்க்கும்போதும் அவரை பழிவாங்கத் துடிக்கிறார்கள். இந்த எதிர்ப்பாளர்களின் குறி, அத்துமீறி புகுந்திருக்கும் அமெரிக்கப் படையின் மீது 'இந்திக்வாம்' - பழிக்குப் பழி. அமெரிக்கா விலகிவிட்டால், இவர்கள் தோன்றியதற்கான காரணம் முழுமையடைந்து விடும். இவர்கள் எதிர்ப்பதற்கு எவரும் இலக்காக மாட்டார்கள். குறிக்கோளும் இருக்காது.

அல் கொய்தாவின் அபு முஸப் அல்-ஜர்காவி (Abu Musab al-Zarqawi) அடிக்கடி பேசி இவர்களைத் தூண்டி விடுவது போல் தோன்றலாம். ஜர்காவிக்கு உலகமே இஸ்லாம் மயமாவது குறிக்கோள். கண்ணுக்கு கண், ரத்தத்துக்கு ரத்தம் என்னும் தாரக மந்திரம் அல்-கொய்தாவுக்கு, ஆள் சேர்க்க உபயோகப் படுகிறது. வளைகுடா இஸ்லாமிய நாடுகளில் நிதி வசூலிக்க உதவியிருக்கிறது. அமெரிக்காவுக்கு எதிராக கொம்பு சீவ பயன்படுகிறது. ஆனால், அல் கொய்தாவால் ஈராக் கிளர்ச்சியாளர்களுக்கு எவ்வித நேரடி உறவுமில்லை.

சன்னி முஸ்லீம்கள் அண்டை நாடுகளில் இருந்து போராளிகளை இறக்குமதி செய்தார்கள்; செய்கிறார்கள். கடந்த வருடத்தில் தற்கொலைப் படையாக இயங்கிய 235 பேர்களில் பாதிக்கு மேற்பட்டோர் சவூதி அரேபியர்கள். ஆப்கானிஸ்தானை சோவியத் ஆக்கிரமித்தபோது, எகிப்து ஏற்றுமதி செய்தார்கள். இன்று ஈராக் பிரச்சினைக்கு, சவூதியில் இருந்து வீரர்கள் சப்ளை ஆகிறார்கள். மே 2003-இல் நடந்த ரியாத் குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு அதிகாரபூர்வமாக 'ஜிஹாத்' முடுக்கிவிடும் மார்க்க அறிஞர்களை வாய்மூடச் சொன்னது சவுதி அரசு. ஆனால், இன்றளவில் இருபத்தியாறு இஸ்லாமிய அறிஞர்கள் அமெரிக்காவுக்கு எதிராக ஜிஹாத் குரல் கொடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு ஈராக் கிடைத்தால் போதுமானது.

சாதாரண ஈராக்கியன் காலையில் எழுந்து வண்டியோட்டும்போது முன்னாடி செல்லும் வண்டியில் குழந்தை சிரிப்பதையோ, ஹெல்மட் போடாத இளநங்கையையோ, செல்பேசியில் கதைக்கும் சக ஈராக்கியனையோத்தான் பார்க்க விரும்புகிறான். எட்டு சக்கரத்தில் துப்பாக்கி தாங்கிய பதினெட்டு பேர் கொண்ட அமெரிக்காவின் அன்னிய முகங்களை அல்ல.

ஈராக்கில் ஸன்னி மற்றும் ஷியா முஸ்லீம் இடையே குர்திஸ்தான் பொருந்தாமல் ஒட்டிக் கொண்டிருக்கிறது. குர்துக்களுக்கு விடுதலை தேவை. சதாம் வீழ்வதற்கு முன்போ ஐ.நா. அனுகூலத்தோடு சுயாட்சி நடத்திக் கொண்டிருந்தார்கள். ஈராக்கில் நடக்கும் இனக் கலவரத்துக்கும் தங்களுக்கும் தாமரையிலை நீராகத்தான் பட்டும் படாமல் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒரு லட்சம் வீரர்களைக் கொண்ட 'பெஷ்மெர்கா' என்னும் கட்டுக்கோபான இராணுவம் இருக்கிறது. தன் ஆளுகை அனுபவம் உண்டு. இஸ்ரேலைப் போல் அமெரிக்காவின் செல்லப் பிள்ளைகள். மிக சீக்கிரமே இவர்கள் தனி நாடாக உருவாகி, அமெரிக்காவுக்கு படைத்தளங்களும் விமானதளங்களும் அமைத்து உதவுவார்கள். நாடோ-வில் (NATO) உறுப்பினராக இருக்கும் அண்டை நாடான துருக்கியும் பழைய பகைகளை தூசி தட்டாமல் சுமுகமாக அமைதி கொண்டாடுவார்கள்.

ஈராக்கின் இன்னொரு அண்டை நாடான் ஈரானுடன் நல்லுறவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. சதாம் ஆண்ட காலத்தில், அவரின் ஆட்சியை வீழ்த்த நினைத்த பல அரசியல்வாதிகளும், சதாமால் தேடப்பட்ட ஷியா முஸ்லீம் அறிஞர்களும் ஈரானில்தான் தஞ்சம் புகுந்திருந்தார்கள். ஆனால், இந்த மாதிரி புகலிடம் கொடுக்கப்பட்ட ஒரு சில ஷியாக்களுக்கு பர்த்தியாக ஆயிரக்கணக்கான ஷியா படை வீரர்கள் கைதிகளாக ஈரானின் சிறைகளில் கொடுமை அனுபவித்திருக்கிறார்கள். அதனால் மேல்மட்டத்தில் கை குலுக்கினாலும், சாதாரண மனிதர்களுக்கு ஈரான் இன்னும் பகை நாடாகவே விளங்கும்.

கடைசியில் அமெரிக்காவின் ஆதர்ச லட்சியமான - சமயச் சார்பற்ற, பெண்களுக்கும் சமவுரிமை கொடுக்கும் உதாரண நாடாக ஈராக் மாறும் என்னும் எண்ணத்தில்தான் மண் விழுந்து புல் கூட முளைத்திருக்கிறது. குர்துக்கள் தவிர மற்ற எந்தப் பகுதியுமே மதச்சார்பற்ற அரசியல் அமைப்பை ஆதரிக்கவில்லை.

ஆமை புகுந்த வீடு உருப்படாது என்பது போல் பிரிட்டிஷார் பிரித்த நாடும் உருப்படாது என்று சொல்லலாம். சரித்திரம் மீண்டும் பிரதிபலிக்கிறது. இங்கிலாந்து முடியாட்சியின் கீழ் இருந்த 1900-களில் உள்நாட்டு கலகத்தை அடக்க உள்ளூர் சிப்பாய்களை நம்பினார்கள். இங்கிலாந்து உதவியுடன்  புதிய அரசை நிறுவினார்கள். மக்களின் பெருவாரியான வரவேற்பைப் பெற்றிருந்த நூரி சேத் (Nuri Said) தலைவரானார். 1958-இல் நடந்த புரட்சியில் பிரிட்டிஷ் அரசு நியமித்த அரசு கவிழ்க்கப்பட்டது. மக்களின் அபிமானமான அரசியல் தலைவராக இருந்தாலும் வேற்று நாட்டுடன் சரசமாடியதாக சேத் நினைக்கப்பட்டார். பெண் வேடமணிந்து தப்பிக்க முயலும்போது, பிரதம மந்திரியான நூரி சேத் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.

'சாஹில்' என்ற வழக்கத்திற்கு கால்கோளாக நூரி சேத்தின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது. ஈராக் வீதியெங்கும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அயல் இனத்தாருக்கு ஆதரவு தந்தால் இதுதான் தண்டனை என்று பறையப்படுவதுபோல் 'சாஹில்' என்பது தொடர்ந்து ஈராக்கில் நிகழ்ந்து வருகிறது. அமெரிக்கா கூடிய சிக்கீரமே குடிபெயராவிட்டால், தற்போதைய பிரதம் மந்திரி இப்ராஹிம் ஜா·பரிக்கும் (Ibrahim Jaafari) 'சாஹில்' அரங்கேறலாம்.

'சாஹில்' ஆவது பரவாயில்லை. தலைவர் மட்டும்தான் சின்னாபின்னப்படுவார். சர்வாதிகார அடக்குமுறையில் இருந்து விடுதலையாகும் தேசங்கள் ஆபத்தானவை. 1947 பாகிஸ்தானைப் போல; நெப்போலியனிடமிருந்து சுதந்திரம்டைந்த பிரான்சைப் போல; உள்நாட்டு கலகமும், உள்வாங்காத தேசிய உணர்வும், கட்டற்ற சுதந்திரமும் சண்டைக்குப் போக வைத்திருக்கிறது. ஏற்கனவே, ஈராக்கின் ஆளுங்கூட்டணியில் இருக்கும் ஷியா அணியினர், சன்னி முஸ்லீம்கள் நிறைந்த ஜோர்டானை கடுமையாக விமர்சிக்கிறார்கள். சமீபத்திய தேர்தலில் பங்குகொண்ட சன்னி அணியினர், ஈரானை நோக்கி குற்றம் குறைகளைப் பட்டியலிடுகிறார்கள். குர்துக்களுக்கும் துருக்கிக்கும் என்றுமே ஏழாம் பொருத்தம். எங்களுடைய நாடு என்று சொந்தம் கொண்டாடிய குட்டி குவைத், ஆஸ்தான எதிரி இஸ்ரேல், அமெரிக்காவுக்கு சமீபத்தில் அடிபணிந்த சிரியா என்று ஈராக்கின் சந்தர்ப்பவாத அரசியல் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் போர் தொடுத்து பாயும் அபாயமிருக்கிறது.

அன்று ஆப்கானிஸ்தானில் வளர்த்த கடா அல் கொய்தா. நாளை, கடுமையான அமெரிக்கப் பயிற்சியையும் நுட்பங்களையும் பெற்ற ஈராக் இராணுவம், அமெரிக்காவுக்கு எதிராகவே வியூகம் வகுக்கும்.

|

oooOooo
பாஸ்டன் பாலாஜி அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |