ஜனவரி 13 2005
தராசு
வ..வ..வம்பு
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
பங்குச்சந்தை ஒரு பார்வை
காந்தீய விழுமியங்கள்
நையாண்டி
மஜுலா சிங்கப்புரா
முத்தொள்ளாயிரம்
திரைவிமர்சனம்
கட்டுரை
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • ஹர்ஷத் மேத்தா
 • - சசிகுமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் : சுற்றம் பேணில் ஏற்றம் உண்டு!
  - எஸ்.கே
  | Printable version |

  "உன்னையறிந்தால்" என்று தொடங்கும் இந்த வரிசையில் உங்களைச் சுற்றியுள்ள சமுதாயத்தின் ஒரு அங்கமாக "உன்னை" அறிய வேண்டியதன் அவசியத்தைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன். உங்களைப் பற்றிய புரிதல் இந்த உலகத்தில் எவ்வாறிருக்க வேண்டும் என்பதை இதுவரை பார்த்தோம். நம்மைச் சூழ்ந்த சமூகத்தின் முக்கிய அங்கமாகிய நம் உறவினர்கள் மீது கொள்ள வேண்டிய சரியான அணுகுமுறை என்ன என்பதை இப்போது சற்று சிந்திப்போம்.

  ஞாயிறைப் போற்றும் நன்னாளாகிய பொங்கல் திருநாளில் "சன்" தொலைக் காட்சியில் ஒரு பட்டிமன்றம் நிகழ்த்தினார்கள். அதன் தலைப்பு, "உறவினர்களால் உண்டாவது நிம்மதியா, தொல்லையா" என்பதுதான். வழமையான நகைச்சுவை இடைச் செருகல்களை நீக்கிப் பார்த்தால், ஆங்கு பேசப்பட்டவற்றின் சாரம், இன்றைய சூழ்நிலையில் உறவுகள் பேணப் படவில்லை, தொல்லையாகவே கருதப்படுகிறது என்பதுதான். மனிதர்களின் நல்லியல்புகளான பாசமும், நேசமும் ஏன் உறவினர்பால் அடைபட்டுப் போய் விட்டது என்று எண்ணலானேன். உடன் பிறப்புக்கள் சிறுவர்களாக இருக்கும் போது மிக்க நெருக்கத்துடன், ஒருவரோடொருவர் உயிருக்குயிராகப் பழகி வருகிறார்கள். ஆனால் அவர்கள் வயதுக்கு வந்து, தமக்கென ஒரு தனியான குடும்பம் என்று வந்தபின் சுயநல உணர்வு மேலோங்கி, பூர்ஷ்வாவின் ஆதிக்கம் மிக்கவர்களாக ஆகி அதே உடன்பிறப்பை ஒரு சுமையாக நோக்குகின்றனர். நல்லுறவெனும் ஒரு மெல்லிய நூற்பிணைப்பு அறுபட்டு விடுகிறது.

  பழம்பெரும் காப்பியங்களில் ஆரம்பித்து, நெடுங்கதை, திரைக் கதை, சின்னத்திரை எங்கெங்கிலும் உறவினர்களினூடேயுள்ள பிணக்குகளாலும் பகையினாலும் தோன்றும் சண்டை சச்சரவு பற்றிய நிகழ்வுகள்தான் சித்தரிக்கப் படுகின்றன.

  இராம காதையில், சின்னம்மாவின் சூழ்ச்சியினால்தானே இராமர் பட்டம் துறந்து காட்டில் வாசம் செய்ய வேண்டி வந்தது? (ஒன்றுக்கு மேல் மனைவிகள் இருந்தால் அது "உறவு" அல்ல, "தவறு"). இது போதாதென்று, பரதன் இராமனின் காலணிகளை கேட்டு வங்கிச் சென்றதே, வெறுங்காலுடன் காட்டின் தரையில் நடந்து, இராமனின் பாதங்களை கல்லும் முள்ளும் பதம் பார்க்கட்டுமே என்ற கெடுமதியினால்தான் என்று, காப்பியத்தில் இல்லாத கோப்பினை ஒரு பேச்சாளர் இணைத்ததை ஒரு சொற்பெருக்கில் கேட்க நேர்ந்தது! அது தவிர, அந்தக் கதையில் காணப்படும் உடன்பிறப்புகளின் நிலைமையைப் பாருங்கள்:

   வாலி x சுக்ரீவன்
   இராவணன் x விபீஷணன்

  விபீஷணனின் பங்களிப்பு இல்லாமல் இராவணனை வென்றிருக்க முடியாது என்பதை அந்தக் கதையில் காண முடிகிறது. "தம்பியுடையான் படைக்கஞ்சான்" என்பார்கள். ஆனால் தம்பியே "ஐந்தாம் படை"யானால்? (கும்பகர்ணனையும், விபீஷணனையும் இரு வேறுபட்ட பாத்திரங்களாகப் படைத்துக் காட்டியிருப்பது அக்காவியத்தின் சிறப்பு!)

  மகாபாரதக் கதையின் அடிப்படையே சகோதரர்களுக்குள் உண்டாகிய பகைதான்.  அந்த இலக்கியத்தில் உறவுகளின் எதிர்மறை உணர்வுகளும் சூழ்ச்சிகளும் நிறைந்திருப்பதைக் காண்கிறோம். நாடு, அரசியல், நிலம், சொத்து இவை சார்ந்த பிணக்குகள் எவ்வாறு கடும்பகையாக உருவெடுக்கின்றன என்பதை சித்தரிக்கிறது அந்தக் கதை.

  நிகழ்காலத் தலைமுறையினருக்கு இந்த "ஒன்று விட்ட" உறவுகளைப் பற்றி எதுவுமே தெரியாது. ஒரு தலைமுறை உறவுகள்தான் அவர்கள் அறிவர். அதுவும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் எல்லோரும் கூடினால் இன்னும் கொஞ்சம் அறிமுகம் ஆவர். ஒரே ஆளை பல குழந்தைகள் சூழ்ந்துகொண்டு, ஒரு குழந்தை "மாமா" என்றும், மற்றொன்று "சித்தப்பா" என்றும், இன்னும் சிலர் "அத்தான்", "அம்மாஞ்சி" என்றும் - இதுபோல் அழைக்கப்படும் காட்சி இனியும் காணக்கிடைக்குமா! இனிமேல் மாமா, சித்தி, பெரியப்பா போன்ற உறவுகளின் பொருள் என்னவென்பதே தெரியாத சூழ்நிலை உருவாகும்போல் தெரிகிறது. மேலும் இப்போது அது போன்ற நிகழ்ச்சிகளில் எல்லோரும் கூடுவதும் கிடையாது. ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டும் வந்து அட்டெண்டென்ஸ் கொடுப்பது வழக்கமாகி விட்டது. நுழைவுத் தேர்வுக்கான 'கோச்சிங்', பாட்டு கிளாஸ், டான்ஸ் கிளாஸ், காராதே கிளாஸ் இவ்வளவையும் விட்டுவிட்டு எங்கே வெளியே கிளம்புவது!

  முன்பெல்லாம் பள்ளிகளில் விடுமுறை விட்டவுடன் அத்தை வீடு, பாட்டி வீடு, மாமா வீடு என்று பறந்துவிடுவது வழக்கம். அவர்களும் இவ்வாறு குழந்தைகளின் வருகையை முறுக்கு, சீடையுடன் எதிர்நோக்கி இருப்பர். ஆனால் இன்னாளில் நீங்கள் வருவதாகச் சொன்னால் "நாங்கள் வெளியூர் செல்வதாக இருக்கிறோம். எதற்கும் டெலிஃபோன் செய்துவிட்டு வாருங்கள்" என்று கூறி தவிர்த்து விடுகின்றனர். சம்பிரதாயமான விசாரிப்புகளில் உறவுகள் அடங்கி விடுகின்றன.

  உடன்பிறப்புகளிடமும், இன்னும் கொஞ்சம் தள்ளி தாயாதி, பங்காளிகளுடனும் (cousins, once or twice removed) நெருங்கிய உறவு வைத்துக் கொள்வதில் சில சிக்கல்கள் தோன்றுகின்றன. ஏனென்றால் அவர்கள் ஒருவித எதிர்பார்ப்புடன்தான் நம்மை அணுகுகின்றனர். உணர்வு பூர்வமாக அல்லாமல் ஒருவித இயற்பொருள் சார்ந்த (materialistic) அணுகுமுறைதான் மேலோங்கி நிற்கிறது. அதனால் காழ்ப்புணர்ச்சியும், பொறாமை, பொச்சரிப்பு போன்றவையும், உறவுகளின் அஸ்திவாரத்தையே பெயர்த்து விடுகின்றன.

  சில சமயம் உறவுகள் பல கசப்பான நிகழ்வுகளுக்குக் காரணமாகி விடும் சூழ்நிலையைப் பார்க்கிறோம். "தலைக்கறி" தன் இலைக்கு வரவில்லை என்று சண்டையிட்டுக்கொண்டு செல்லும் மாமன்மார்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். திருமணம் மட்டுமில்லாது, இழப்பு நேரங்களிலும் உறவுகளினூடே இருக்கும் பகை வெடிப்பதை கிராமங்களில் கண்டிருக்கிறேன். ஒரு குடியிருப்பில் புதுமனை புகுவிழாவின்போது அண்ணன், தம்பிகளுக்குள் அடிதடி சண்டை மூண்டதைப் பார்த்திருக்கிறேன் - அவர்களின் பெற்றோர் அவர்களில் ஒருவருக்கு அதிகமாகப் பணம் கொடுத்து விட்டார்களாம்!

  சில ஆண்டுகளுக்கு முன்பு என் உறவினர் ஒருவர் தலையில் அடிபட்டு மூன்று வாரங்கள் நினைவில்லாமல் ஒரு மருத்துவ மனையில் இருந்தார். நெருங்கிய உறவினர் அனைவரும் ஷிப்டு போட்டுக் கொண்டு அவரைக் கண்காணித்துக் கொண்டிருந்தோம். நீர்ம உணவு மூக்கில் சொருகப்பட்ட குழாய் மூலம் குறிப்பிட்ட நேர இடைவெளியில் செலுத்தப்பட வேண்டும். ஒரு நாள் இரவு ஷிப்டில் நான் அந்தப் பணியில் ஈடுபட்டிருக்கும்போது ஒருவர் வந்தார். அவருடைய வயதான தாயார் அடுத்த வார்டில் நினைவில்லாமல் படுத்த படுக்கையாக இருக்கிறார். "அவருக்கு முடிந்தால் இரவில் ஒரு முறை இந்த குழாயிலிருக்கும் நீர்ம உணவை செலுத்தி விடுங்கள்" என்று கேட்டுக் கொண்டார். "முடிந்தால் செய்யுங்கள், இல்லாவிட்டால் பரவாயில்லை" என்றும் சொன்னார்! நான் அவரிடம் வினவினேன், "உங்களைப் பெற்ற தாயார் அல்லவா, அவரை நீங்கள் அருகில் இருந்து கவனியுங்களேன்" என்று. அதற்கு அவர், "எல்லா சொத்தையும் என் தங்கைக்கே கொடுத்து விட்டார். அவள் வந்து செய்யட்டுமே" என்று "நிஷ்டூரமாக"க் கூறிவிட்டுச் சென்று விட்டார். ஆனால் அந்த "சொத்து பெற்ற சகோதரி"யோ, வாரம் ஒரு நாள் பகலில் வந்து, தாயாரின் முகத்தைக் கூடப் பார்க்காமல் நேரே நர்ஸிடம் சென்று "எப்படி இருக்கிறது நிலைமை" என்று சம்பிரதாயமான முறையில் கேட்டுவிட்டுச் சென்று விடுவார். தாய், மக்களிடனூடேயே இதுபோல் உறவு தடுமாறும் நிலைகண்டு கலங்கினேன். ஆனால் இது போன்ற நிலை இன்று வெகுவாகப் பரவி வருவதை என்னால் காணமுடிகிறது.

  நீங்கள் பெரிய மனத்துடன் (அவ்விடத்து உத்தரவும் பெற்று) உங்கள் உடன் பிறப்பின் அவசியத் தேவைக்காக, (கடனோ உடனோ வாங்கி) ஒரு தொகையைக் கொடுத்துவிட்டு, நன்றியுணர்வை எதிர்பார்த்து நின்றீர்களானால், உங்களுக்கு மிஞ்சுவது ஏமாற்றம்தான். ஏனென்றால் அந்த உடன்பிறப்பினர் உங்களிடம் இதைவிட மேலதிக எதிர்பார்ப்பில் இருந்திருப்பார்! உங்கள் மனைவிக்கும் சிறிது அர்ச்சனை விழுந்திருக்கும்! "என்ன உலகமடா இது" என்று நீங்கள் அங்கலாய்க்கும் நிலை ஏற்பட்டிருக்கும்!

  நான் கூடியவரையில் எல்லோராலும் அடித்துத் துவைக்கப்பட்டு, நூல்நூலாக வெளிவந்து, நைந்து கிடக்கும் சொற்றொடர்களையும், மூதுரைகளையும் (cliche`s) தவிர்க்க முயற்சிக்கிறேன், ஆனாலும் உங்கள் அனுமதியுடன், "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை" என்கிற வசனத்தை, (வேறு ஒன்றும் இதே பொருளுடன் என் சேமிப்பில் இல்லாத காரணத்தினால்), இங்கு இட்டு விடுகிறேன். (இதற்கொத்த வேறு வசனக்கள் உங்கள் கைவசம் இருந்தால், அவற்றை பின்னூட்டத்தில் தயைகூர்ந்து தெரிவியுங்கள்.) இந்த வசனத்தின் அடிப்படை assumption, சுற்றம் என்றாலே குற்றம் இழைக்கும் என்பதுதான்! ஆனால் அதனைப் பெரிதாகப் பாராட்டினால் - அவற்றையே உங்கள் மனத்தில் மிகையாகக் கொண்டால், உறவே அற்றுப் போய்விடும் என்று இதனால் அறியப்படுகிறது.

  தந்தை காலத்தில் தொடங்கிய நிறுவனங்கள் மேலோங்கி "வளர்ந்து", பின் அடுத்த சந்ததிகள்தம் சண்டையில் "தளர்ந்து" போன பல காட்சிகளை நாம் அன்றாடம் காண்கிறோம். அம்பானிகளே இதற்கு சாட்சி! மேலும் பல குடும்பம் சார்ந்த அமைப்புக்களிலும் இதே நிலைதான்.

  சரி, உறவுகளை கொண்டாடுவதே ஒரு பிரச்னையான விஷயம் என்பதை விலாவாரியாகப் பார்த்தோம். உறவுகள் வேண்டுமா, வேண்டாமா? இன்றைய சூழ்நிலையில் இது போன்ற உறவுகள் பேணப்பட வேண்டியவையா? அதான் நண்பர்கள் உள்ளனரே, போதாதா - என்று கேட்கலாம். ஆனால், அந்த உறவே நட்பாகும் போது எவ்வளவு நன்மைகள் உண்டாகும் என்பதை சிந்திக்க வேண்டும். உங்கள் மனைவி (கணவன்), பிள்ளைகள் போன்றோரும் உறவுகள்தான், அவர்களும் உங்கள் உறவுகளின் நீள அகலத்தைப் பெருக்குகிறார்கள் என்பதை மறக்காதீர்கள்.

  முன்னொருநாள் எங்கள் நிறுவனத்தில் நுகர்வோரை எதிர்கொள்ளும் திறன் பற்றிய கருத்தரங்கம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. அதில் பங்கு பெற்ற மனவியல் பேராசிரியர் ஒருவர், உறவுகளின் மேன்மைகள் பற்றி உரையாற்றிக் கொண்டிருந்தார். அவரை இடைமறித்து ஒரு அதிகாரி அடிக்கடி உறவுகள் ஒரு மாயை, அவைகளால் உண்டாவது துன்பமே என்று வாதிட்டுக் கொண்டிருந்தார். அவர் மனதில் ஏதோ ஆறாத வடு இருக்கிறது எனக்கண்டுகொண்ட அந்த பேராசிரியர் அவரிடம் அது பற்றி ஆழ்ந்த விசாரணை நடத்தினார். அந்த அதிகாரிக்கு அவருடைய தம்பியுடன் கடந்த பத்து வருடங்களாக பேச்சுவார்த்தை யில்லை. ஏதோ மனஸ்தாபம் - ஒன்றிலிருந்து மற்றொன்று என்று அது கப்பும் கிளையுமாகப் பெரிதாகி, இரு குடும்பங்களுக்குமிடையே யாதொரு தொடர்புமின்றி அறுபட்டுக் போயிற்று. இந்த விவரமெல்லாம் அவர் கூறுகையில், தவறு முழுவதும் அவருடைய தம்பியின் மேல்தான் என்ற முறையில் அடுக்கிக் கொண்டு போனார். இது உலக இயல்புதான் என்றாலும் அவருடைய கூற்றில் கொஞ்சம் conviction கம்மியாயிருந்தது போல் பட்டது!

  அவர் மனத்தில் உள்ளதையெலாம் கொட்டியபின், அந்தப் பேராசிரியர் அவரை நோக்கி, "உங்கள் தம்பியை ஒருமுறை தொலைபேசியில் அழையுங்களேன்" என்றார். அவரோ வெகுண்டு, "நான் ஏன் அழைக்க வேண்டும்? தவறு செய்தது அவன்தான். அவன் என்னிடம் மன்னிப்புக் கேட்கும் வரையில் எந்தவொரு தொடர்பும் கொள்ள மாட்டேன்" என்றார். பேராசிரியரோ பிடிவாதமாக, "தவறு அவருடையதாகவே இருக்கட்டும். நீங்கள் வாழ்க்கையில் இவ்வளவு முன்னுக்கு வந்திருக்கிறீர்கள். இது உங்கள் பெருந்தன்மையின் அடையாளமாக இருக்கட்டும். சும்மா கூப்பிட்டு 'ஹலோ' சொல்லுங்கள். போதும்" என்றார். நாங்களும் கோரஸாக அவரை ஊக்குவித்தோம். நம்பர் தெரியாது என்று தவிர்க்கப் பார்த்தார். அவருடைய குடும்ப நண்பர்கள் மூலமாக எப்படியோ அவருடைய தம்பியின் மொபைல் எண் கிடைத்தது. ஒரு மாதிரி தயக்கத்துடன் அவர் எண்களைத் தட்டினார். அவருடைய கைகள் நடுங்குவது எல்லோருக்கும் தெரிந்தது. "ஹலோ" என்று கிணத்தடிக் குரலை அனுப்பினார். பின், "பையா" என்றார் உடைந்த குரலில். அவ்வளவுதான்! அவர் கண்களில் நீர் பொங்கியது. அவர் கையிலிருக்கும் மொபைல் கருவியையே அவருடைய உடன்பிறப்பு போல் பாவித்து அதனை அணைத்துக் கொண்டு அந்த அரங்கத்தை விட்டு வெளியேறினார். அரைமணிநேரம் கழித்து திரும்பி வந்தவர் அங்கிருந்த அனைவருக்கும் இனிப்பு வழங்கி அவர் பெற்ற உறவின் மீட்சியைக் கொண்டாடினார்! உறவுகள் மேம்பட நம் மனத்தில் கொண்டுள்ள அழுக்குகளை அகற்றினாலே போதும்!

  இதைத்தான் வள்ளுவர்,

   தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
   காரணம் இன்றி வரும்.

  என்று கூறுகிறார். பிரிந்துபோனதன் காரணங்கள் விலகியபின் சுற்றம் ஒட்ட வேண்டியதுதானே!

  நான் முன்பே கூறியது போல் உறவினர்களுடன் ஒப்பிட்டுக் கொண்டிராமல் அவர்களை "as is where is" நிலையில் அணுகுங்கள். நம் இரத்த சம்பந்தமான உறவுகளானாலும் சரி, மணம் புரிந்து கொண்ட வகையில் ஏற்பட்ட உறவுகளானாலும் சரி, சமமாகப் பாவித்து நேர்மையுடன் நடந்து கொள்ளுங்கள். உங்கள் நியாய உணர்வு உறவினர்கள்பால் பெரும் மதிப்பை ஏற்படுத்தும். அவர்களுக்கு உங்களாலான உதவிகளைச் செய்யுங்கள். கைம்மாறு எதனையும் எதிர்பார்க்காதீர்கள்.

  உறவினர்களின் பிறந்த நாள், திருமண நாள் முதலியவற்றை நினைவில் வைத்து வாழ்த்துத் தெரிவியுங்கள். முடிந்த வரை ஏதாவது பரிசளியுங்கள். குழந்தைகள் இருந்தால் அவர்களுக்குப் பிடித்தமான பொருட்களைக் கொடுங்கள். அவர்கள் அவற்றை பயன்படுத்தவில்லையே என்று கவலைப் படாதீர்கள். உங்கள் பிள்ளைகள் நீங்கள் வாங்கிக் கொடுக்கும் பொருட்கள் பலவற்றை தனக்குப் பிடிக்கவில்லை என்று சொல்வதில்லையா, அது போன்ற சுதந்திரத்தை உறவினர் பிள்ளைகளுக்கும் அளியுங்கள்.

  எந்தவித உறவும் செழிப்பதற்கு சில சிறிய தியாகங்களைச் செய்ய நாம் தயாராயிருக்க வேண்டும். "கொள்வதற்கே என் கைகள். கொடுப்பதற்கல்ல" என்ற கோட்பாட்டுடன் இருந்தால் சுற்றமாவது, புடலங்காயாவது! ஆறடிதான் சொந்தம்! "இணைய குசும்பர்" ஒருமுறை எனக்கிட்ட மறுமொழியில் குறிப்பிட்டபடி, "என்னத்தை வாரிக்கட்டிடப் போறோம்", இருக்கிறவரை நல்லபடியா நம் சுற்றங்கள் தழைத்திருக்க நம்மால் முடிந்ததை செய்து விட்டுப் போவோமே! "நெருநல் உளனொருவன் இன்றில்லை" என்கிற நிலையில்,

   ஆறடிக்கு ஆட்டம்போட்ட நம்பரு - மூச்சு
   அடங்கிப்பூட்டா எல்லாமிங்கே சைபரு.

   ஆட்டங்காட்டி துள்ளுகிற டெம்பரு - ஆவி
   அடங்கிப்புட்டா எலக்கடை டிம்பரு!
   
   அப்படிச் சொன்னது நானா? - இல்லை,
   ஆசாத்பாய் கானா! 

  சிறு வயதில் சகோதரர்கள்பால் நம் மனதில் தோன்றும் அன்புணர்ச்சியை, வயதான பின்னும் மேன்மேலும் வளர்த்துப் பேணுதல் வேண்டும். When the chips are down எனப்படுகிற ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நம் உடன்பிறப்புக்களின் பங்களிப்பு இன்றியமையாதது. நீங்களே கூறுங்கள், உங்கள் சகோதருக்கு ஒரு தீங்கு என்றால் உங்களால் நிம்மதியாக இருக்க முடியுமா - மனத்தின் ஏதாவது ஒரு மூலையில் உறுத்துகிறதா இல்லையா!

   சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
   பெற்றத்தால் பெற்ற பயன்.

  என்ற வள்ளுவர், மேலும் சுயநல நோக்கில்லத, அன்பு மாறாத சுற்றத்தவர் அமையப் பெற்றால் ஏற்படும் ஆக்கங்களைப் பற்றி இப்படி எடுத்துறைக்கிறார்:

   விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
   ஆக்கம் பலவும் தரும்.

  கொஞ்சம் "விட்டுக் கொடு"த்தால்தான் உறவு வளரும். ஆனால் உறவினருக்கு ஒரு நெருக்கடி வருங்கால் அவர்களை "விட்டுக் கொடு"க்காதீர்கள்!

  "ஒரு முஸ்லீம் தமது சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் வெறுக்கலாகாது. இருவரும் சந்திக்கும்போது அவர் இவரைப் புறக்கணிக்க வேண்டாம். அவ்விருவரில் யார் ஸலாமைக் கொண்டு முந்துகிறாரோ அவரே அவ்விருவரில் சிறந்தவர்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவுறை கூறியிருக்கிறார்கள்.

  சுற்றமும் நட்பும் சூழ்தரச் சிறந்து, நல்ல மனம் கொண்டு, தொண்டு பல செய்து, இவ்வையகத்தில் வாழ்வாங்கு வாழிய நீவிர்!

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2005 Tamiloviam.com - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |