ஜனவரி 13 2005
தராசு
வ..வ..வம்பு
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
பங்குச்சந்தை ஒரு பார்வை
காந்தீய விழுமியங்கள்
நையாண்டி
மஜுலா சிங்கப்புரா
முத்தொள்ளாயிரம்
திரைவிமர்சனம்
கட்டுரை
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • ஹர்ஷத் மேத்தா
 • - சசிகுமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  காந்தீய விழுமியங்கள் : தன்னிறைவு
  - ஜெ. ரஜினி ராம்கி
  | Printable version |

  காந்திஜியின் பொருளாதார கொள்கைகளை புரிந்து கொள்வது கொஞ்சம் சிரமம்தான். மெஷின்களே இருக்கக்கூடாதுன்னு சொன்னார்; எல்லோரும் ராட்டையை சுத்திக்கிட்டு இருங்கன்னு சொன்னார் என்றுதான் பலர் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறோம். ராட்டைக்கு பின்னால் மிகப்பெரிய தத்துவமே ஒளிந்திருந்ததை சிலரால் மட்டுமே கவனிக்க முடிந்திருக்கிறது. அந்நியப் பொருட்களை பகிஷ்கரிக்கச் சொன்னதை ஏதோ பிரிட்டிஷார்களுக்கு எதிரான நடவடிக்கையாக மட்டுமே மீடியா சித்தரித்துவிட்டது. பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு உட்பட்ட நாடுகளிலிருந்து வந்த அந்நியப் பொருட்கள் மட்டுமல்ல எந்த நாட்டிலிருந்து வந்தாலும் எல்லா அந்நியப் பொருட்களையும் ஒதுக்கச் சொன்னதற்கு முக்கியமான காரணம் இந்தியப் பொருட்களை பிராண்ட் செய்வதற்குத்தான்.
   
  வெளிநாட்டுப் பொருட்களை தடுத்து நிறுத்தினால் மட்டுமே உள்நாட்டு தொழில்கள் உயிரோடு இருக்க முடியும் என்பது அவரது பொருளாதார கொள்கைதான். வெளிநாட்டு உதவியே இல்லாமல் நம்மால் இருந்துவிட முடியுமா? அவரே கேள்வி கேட்டு தனது கொள்கையை கொஞ்சம் தளர்த்திக் கொள்கிறார். தேவைப்பட்டால் பரஸ்பரம் உதவிசெய்து கொள்ளலாம். ஆனால் மற்றவர்களை நம்பி நாம் இருக்கவே கூடாது! சுனாமியால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தியாவுக்கு உதவி செய்ய வளர்ந்த நாடுகள் ஓடோடி வந்தபோது உதவியெல்லாம் தேவையில்லை; நிலைமையை எங்களால் சமாளிக்க முடியும் என்கிற முடிவைத்தான் மத்தியில் எந்த கட்சி ஆட்சியிலிருந்தாலும் எடுப்பார்கள். முடிந்தவரை நாமே நிலைமையை சமாளிக்கப் பார்ப்போம். முடியாத பட்சத்தில் மட்டுமே கையேந்துவோம் என்கிற நிலைப்பாடுதான்.

  எல்லாவற்றையும் நம்மால் உற்பத்தி செய்துவிடமுடியாது என்கிற நிலையில் நம்மால் தன்னிறைவு பெறாவிட்டாலும் கூட பரவாயில்லை. நம்மால் என்ன உற்பத்தி செய்யமுடியுமோ அதை செய்து மற்றவர்களிடம் அதைக்கொடுத்துவிட்டு நம்மிடம் இல்லாததை கொடுக்கல் வாங்கல் முறையில் வெளியிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். இதுதான் அவரது ஐடியா. இதனால் கொடுத்துவிட்டார்களே என்பதற்காக பெரிய கும்பிடு போட வேண்டியதில்லை. கிடைத்திருப்பது பரஸ்பர உதவி மட்டும்தான்.

  அந்த பரஸ்பர உதவி கூட தேவையில்லை என்று மறுத்துவிட்டு சொந்தமாக நம்மால் தன்னிறைவு அடைய முடியுமா? முடியும் என்கிறார் காந்திஜி.

  'உணவைப் பொறுத்தவரை, இந்தியாவில் ஏராளமான நிலவளமும், போதிய நீர் வளமும் உள்ளன. மனித வளத்திற்கோ பஞ்சமேயில்லை. மக்களை தங்கள் சுயதிறமையில் நம்பிக்கை வைப்பவர்களாக ஆக்கிவிட்டால், அவர்களும் சொந்தக் காலில் மட்டுமே நிற்க வேண்டுமென முடிவு செய்துவிட்டால் அது சூழ்நிலையையே தலைகீழாக மாற்றியமைத்துவிடும்' (ஹரிஜன், 19.10.1947)

  காந்திஜியின் பொருளாதார கொள்கை மையப்படுத்துவது கிராமங்களைத்தான். கிராம வாழ்க்கை மீது காந்திஜிக்கு அசாத்தியமான பிடிப்பு இருந்ததற்கு அவரது வாழ்க்கையே ஒரு சாட்சி. கோடிக்கணக்கான மக்கள் ஒரு போதும் நகரங்களில் வசதியுடனோ அமைதியாகவோ வாழ்ந்துவிடமுடியாது. என்றாவது ஒரு நாள் எளிமையான வாழ்க்கையை தேடி கிராமங்களைத்தான் நாடி வரவேண்டியிருக்கும். காந்திஜியின் கனவுக்கிராமத்தில் சகதியிலும் இருட்டிலும் உலா வரும் எளிய மக்கள் இல்லை; சோம்பி திரிதலோ அல்லது சுதந்திரத்திற்கோ பங்கமோ இல்லை. அப்படிப்பட்ட கனவுக் கிராமங்கள் மிகுந்திருக்கும்போது இந்தியா தன்னிறைவு பெற்றுவிடும் என்பது அவரது நம்பிக்கை.

  எந்தவொரு மனிதனும் தனியாக வாழ்வதற்காக பிறக்கவில்லை. நாம் எல்லோருமே சமூகப் பிராணிகள்தான். யாரையாவது சார்ந்துதான் இருந்தாக வேண்டியிருக்கும். அப்படியொரு இணக்கமான சூழலுக்கு கனிந்து வர ஓரே வழி சமூகத்தின் அடிப்படையான விஷயம் கிராமமாக அதுவும் தன்னிறைவு பெற்ற கிராமமாக இருந்தாகவேண்டும். கிராமத்தின் மக்கள் தொகையும் குறைவு என்பதால் ஒருத்தரையொருத்தர் புரிந்து கொள்ள வாய்ப்ப்பு அதிகம். பரஸ்பரம் உதவிகள் செய்துகொள்வதும் எளிது. உணவு, உடை, இருப்பிடம், தண்ணீர் போன்ற தேவைகளை நாமே உற்பத்தி செய்து கொள்ளக்கூடிய அளவுக்கு ஆற்றல் வேண்டும். தன்னிறைவு என்பது வெறும் பயிர், உணவு தானியங்களை பயிரிடுவதிலும் உணவு விஷயங்களில் நாம் தற்சார்பு உடையவர்களாக மாறுவது மட்டுமல்ல. பொதுப்பிரச்னைகளை தீர்க்கவும், சுகாதாரம் மற்றும் நிவாரண வசதி போன்றவற்றிலும் நாம் தன்னிறைவு பெற்றாகவேண்டும்.

  சரி, எப்படி இதையெல்லாம் செயல்படுத்துவது? வழக்கம்போலவே சத்தியமும் அகிம்சையுமே முக்கியமான அடிப்படை சங்கதிகள் என்கிறார். சமுதாயத்திற்கு நாம் ஒரு சுமையாக இருக்கக்கூடாது என்பதே நமது முதல் கடமையாக இருக்கவேண்டும். எல்லோருமே தற்சார்பு உடையவர்களாக இருத்தல்வேண்டும். ஒரு வகையில் பார்க்கம்போது தற்சார்புடன் இருப்பதே பெரிய தொண்டுதான். பிறருக்கு உதவுவதற்கு முன்னால் நாம் தற்சார்பு உடையவர்களாகிவிடவேண்டும். எல்லா மனிதனும் எந்த அளவிற்கு தன்னை சார்ந்திருக்கிறானோ அந்த அளவிற்கு பிறரையும் சார்ந்து இருக்கிறான். கூட்டுறவு என்று வரும்போது பலமானவன், பலவீனமானவன் என்கிற வித்தியாசமெல்லாம் கிடையாது.

  'ஒவ்வொரு கிராமமும் தன் ஆற்றலாலேயே இயங்கவல்லதாகவும் தனது விவகாரங்களை தானே நிர்வகித்துக்கொள்ளும் திறனுடையதாகவும் உலகமே எதிராகத் திரண்டெழுந்தாலும் தன் உரிமையை காத்துக்கொள்ள தயாராகவும் இருக்கவேண்டும்.' (ஹரிஜன், 28.7.1946)

  இந்தியா ஏன் வறுமையான நாடானது என்று யாரோ கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில், நமது நகரங்கள் அயல்நாட்டுப்பொருட்களின் சந்தைகளாக மாறி, அயல்நாடுகளிலிருந்து வந்த பண்டங்களை கிராமங்களின் மீது குவித்து திணித்ததால்தான் இந்தியா வறுமையான நாடானது.  

  இயற்கை சார்ந்த எளிய பொருளாதாரம்தான் நம்முடைய நாட்டிற்கு பொருத்தமானது. அதில்தான் வெற்றியும் நிம்மதியும் அடங்கியிருக்கிறது என்பார். அப்போதே வளர்ந்த நாடுகளாகிவிட்டிருந்த அமெரிக்காவையும், ரஷ்யாவையும் பற்றி காந்திஜி சொல்வது இப்போதைய நிலைமைக்கும் பொருத்தமான விஷயமாகவே இருக்கிறது.

  'உலகிலேயே முழுமையாக தொழில்மயமான நாடு என்று அமெரிக்காவை குறிப்பிடுகிறார்கள். ஆனாலும் அமெரிக்காவில் வறுமை முழுவதுமாக நீங்கிவிடவில்லை. இதற்கு காரணம் ஓட்டுமொத்த மனித உழைப்பை புறக்கணித்ததும் பலர் உழைப்பில் பணத்தை குவித்திடும் ஒரு சிலரின் கரங்களில் அதிகாரத்தை கொடுத்ததும்தான் காரணம்' (ஹரிஜன், 23.3.1947)

  'தொழில்மயமாக்குதல் என்கிற கொள்கையை தீவிரமாக பின்பற்றும் ரஷ்யாவை காணும்போது அங்குள்ள வாழ்க்கை நாம் போற்றும்படியாக இல்லை என்றுதான் சொல்வேன். பைபிளில் சொல்லப்பட்டிருப்பது போல 'உலகம் முழுவதையும் தன்வசப்படுத்திக்கொண்டு ஆன்மாவை இழந்த மானிடனுக்கு அதனால் என்ன பயன்?'  நமது தனித்தன்மையை விட்டுக்கொடுத்துவிட்டு உலகத்தோடு ஓட்டமாக ஓடுவதால் நமக்கு நிம்மதி எங்கே கிடைக்கப் போகிறது?'  (ஹரிஜன், 28.1.1939)

  காந்திஜியின் பொருளாதாரக் கொள்கைகள் முற்றிலுமாக பின்பற்றப்பட முடியாவிட்டாலும் ஆழமானவை; அர்த்தமுள்ளவை.  நம்மை நிறையவே சிந்திக்க வைப்பவை.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2005 Tamiloviam.com - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |