பாடல் 77
பாண்டியனின்மீது காதல் கொண்ட ஒரு பெண், தன்னுடைய உள்ளத்தின் ஏக்கத்தை இந்தப் பாடலில் வெளிப்படுத்துகிறாள்.
'என் கையில், அவனுடைய பாண்டிய நாட்டுக் கடலில் கிடைத்த சங்கு வளையல்களை அணிந்திருக்கிறேன்.
அவனுடைய நாட்டுக் கடலில் மூழ்கி எடுத்த செழிப்பான முத்துகளைக் கோர்த்து, மாலையாய்க் கழுத்தில் அணிந்திருக்கிறேன்.
உடலெங்கும், அவனுக்குச் சொந்தமான, நீண்ட பொதிகை மலையில் கிடைத்த சந்தனத்தைப் பூசியிருக்கிறேன்.
- இப்படி என்னைச் சுற்றியிருக்கும் எல்லாமே அவனை நினைவுபடுத்தும் பொருள்கள், ஆனாலும், வேறு எதையோ எண்ணி வாடுகிறது என் மனம் - என் தோள்கள் மெலிகின்றன, ஏன் ? இன்னும் என்ன வேண்டும் என்று ஏங்குகிறேன் நான் ?'
பிரிந்திருக்கும் காதலர்கள் மிகவும் நுணுக்கமான நினைவுக்காரர்கள் - தொட்டாற்சிணுங்கிபோல், (ஞாபகம்) பட்டாற்சிணுங்கிகள் - ஒரு சிறு தென்றல் துணுக்குகூட, அவர்களுக்குத் தங்கள் காதலரின் ஞாபகத்தைத் தூண்டிவிடுகிறது.
நிலைமை அப்படியிருக்க, இந்தப் பெண், தன்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் பாண்டியனின் நினைவாகவே பார்க்கிறாள் - ஆகவே, அவனை நினைவுபடுத்தும் ஒவ்வொரு பொருளும், அவன் இங்கே இல்லாத ஏக்கத்தைத் தூண்டுகிறது - அவளுடைய தோள்கள் வருந்தி வாடுகின்றன.
கையதுஅவன் கடலுள் சங்கமால் பூண்டதுவும் செய்யசங்கு ஈன்ற செழுமுத்தால் மெய்யதுவும் மன்பொரு வேல்மாறன் வார்பொதியின் சந்தனமால் என்பெறா வாடும்என் தோள்.
(சங்கம் - சங்கு பூண்டது - அணிந்தது செய்ய - சிறந்த / அழகிய / சிவந்த ஈன்ற - பெற்ற செழுமுத்து - செழிப்பான முத்து மெய் - உடல் மன் - மன்னர் பொரு - சண்டையிடும் வார் - நீளம் பொதி - பொதிகை)
பாடல் 78
பாண்டியனை நேரில் பார்க்கும்போது, அவனுடைய காதலியாகிய பெண்ணின் நிலைமை, இருதலைக் கொள்ளி எறும்பாகிவிடுகிறது.
அவனை நன்றாக நிமிர்ந்து பார்க்கலாம் என்றால், பெண்மைக்குரிய நாணம் தடுக்கிறது., சரி, பார்க்காமல் இருந்துவிடலாம் என்றால், அந்த ஏக்கத்தில் கை வளையல்களெல்லாம் கழன்றுவிடுகின்றன.
இந்த மனப் போராட்டத்தைச் சொல்லிப் புலம்புகிறாள் அந்தப் பெண், 'என் காதலன் பாண்டியன், கழுத்தில் பூ மாலை அணிந்திருக்கிறான். அந்த மாலையிலுள்ள மலர்களின் தேனை உண்டு, வண்டுகள் பசி தீர்கின்றன. இப்படி வண்டுகளின் பசித் துயரத்தையெல்லாம் போக்கும் பாண்டியன், காதல் ஏக்கத்தில் நான் படும் துன்பத்தைமட்டும் கண்டுகொள்ளாமல் இருக்கிறானே., ஏன் ? நான் இந்த வேதனையிலிருந்து விடுபடுவதற்கான வழி என்ன ?'
நாணாக்கால் பெண்மை நலன்அழியும் முன்நின்று காணாக்கால் கைவளையும் சோருமால் காணேன்நான் வண்டுஎவ்வம் தீர்தார் வயமான் வழுதியைக் கண்டுஎவ்வம் தீர்வதோர் ஆறு.
(நாணாக்கால் - வெட்கப்படாவிட்டால் சோரும் - தளர்ந்துபோகும் / கழன்றுவிடும் எவ்வம் - துன்பம் தார் - மாலை வயமான் - வலிமை மிகுந்த குதிரை ஆறு - வழி)
|