Tamiloviam
ஜனவரி 15 2009
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : கோகுலத்தில் ச.ந. கண்ணன்!
- ச.ந. கண்ணன்
  Printable version | URL |

 

ஏதோ நான் கோகுலம் சிறுவர் இதழில் பணிபுரிந்த கதையை இங்கு சொல்லப்போகிறேன் என்று எண்ணிவிடாதீர்கள். இது கொஞ்சம் அப்படி இப்படி. அப்படி இப்படியென்றால் எனக்கு அப்படி இப்படி. சிலர் இந்த விஷயத்தில் டாக்டரேட் எல்லாம் வாங்கியிருக்கிறார்கள். நான் இன்னமும் ஆரம்பநிலையிலேயே இருப்பதால் எனக்கு அது எழுதக்கூடிய அளவுக்குப் பெரிய விஷயம்.

வேறு என்ன, எல்லாம் ஸ்திரீகளுடனான சிநேகம் தொடர்பானவைதான்.

27 வயதுவரை என் வாழ்க்கையில் பெண்கள் என்றால் என் ரத்த உறவுகள் மட்டும்தான். வேறு யாரிடமும் தலை நிமிர்ந்து பேசியது கிடையாது. நான் படித்த கல்லூரியில் சில பெண்கள் படித்தார்கள். அவர்கள் முகத்தை நேருக்கு நேர் பார்க்க எனக்குத் தைரியமே இருந்தது கிடையாது. எழுத்தார்வம் வந்த பின்பு ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தபோது ஒரு பெண்ணுக்கு அருகே என் இருக்கை. என்ன பிரயோசனம், அந்தப் பெண்ணுக்கும் எனக்கும் தினமும் பூசல்தான். ஒருமுறை சண்டையில் வலுவிழந்துபோனவள் அழுதுகொண்டே அலுவலகத்தை விட்டுக் கிளம்பியது இன்னமும் என் கண்ணில் நிற்கிறது. சரி, அப்துல் கலாமுக்கும் வாஜ்பாயுக்கும் எப்படி வாழ்நாள் முழுக்கப் பெண்கள் பாக்கியம் கிட்டவில்லையோ அதுபோலொரு வாழ்வுதான் எனக்கும் என்று என்னைத் தேற்றிக்கொண்டேன்.

வாழ்க்கை எனக்கு வேறொரு பக்கத்தைக் காண்பித்தது.

ஒரு பிரபல இதழில் வேலைக்குச் சேர்ந்தபோது என்னையறியாமல் என்மீது ஒரு முத்திரை விழுந்தது. பெண்களைப் பேட்டி எடுக்கவேண்டுமா, காலேஜ் ஆர்டிகிள் செய்யவேண்டுமா, பிடி ச.ந. கண்ணனை! எங்கு ஆரம்பித்தது, யார் காரணம் என்றெல்லாம் தெரியாது. இப்படியொரு முடிவு என்மீது பலவந்தமாகத் திணிக்கப்பட்டது. நிலைமை எல்லை மீறிப்போய் ஒருமுறை அந்தப் பத்திரிகை, டிவி விளம்பரம் செய்வதற்காக மாடல்களை அழைக்காமல் கல்லூரிப் பெண்களை அழைக்க முடிவு செய்தபோது முதலில் அணுகியது என்னைத்தான். நானும் அந்த வேலையைச் செய்துமுடித்தேன் என்றாலும்கூட பெண்கள் என்றால் எனக்கு அப்படியொரு பயம். தயக்கம். இன்றைக்கும்.

ஆனால் பத்திரிகை ஆசிரியர், துணை ஆசிரியர்கள் கட்டளையிடும்போது மறுக்க முடியாது. உன்னை என்ன, போலீஸ் கமிஷனரையா பேட்டி எடுக்கச் சொன்னோம் என்று கேட்பார்கள். ஒருமுறை மீசைக்கார கமிஷனர் நட்ராஜைப் பேட்டி எடுக்கப் போனபோது அவர் மீசையை முறுக்கி விளையாடும் அளவுக்கு என்னிடம் தைரியம் இருந்தது. பெண்கள் கல்லூரிக்குச் செல்வதும் அங்குள்ள இளம்பெண்களைப் பேட்டி எடுப்பதும்தான் மரண அவஸ்தை. பத்திரிகையாளனின் முதல் கடமை - சொல் பேச்சு கேட்கவேண்டும். ஆகவே பணிந்தேன்.  

சென்னையில் எந்தக் கல்லூரிக்குச் சென்றால் அழகானப் பெண்கள் கிடைப்பார்கள் என்று முதலில் திட்டமிடவேண்டும். ஒரே காரணம், அப்போதுதான் புகைப்படம் அழகாக அமைந்து பக்கமும் விஷூவலாக இருக்கும். கல்லூரிக்குள் நுழைந்து எதிரில் வரும் அழகான பெண்ணை வழிமறிக்கவேண்டும். வணக்கம், நான் டேஸ் டேஸ் பத்திரிகையில் வேலை செய்கிறேன். இதுபோல என்னத்தையாவது பேசி வைத்தால் தங்களை மதித்து ஒருவன் கேட்கிறானே என்று சில பெண்கள் நம் கோரிக்கைக்கு செவி சாய்ப்பார்கள். கேட்ட கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும். ஆனால் பையிலிருந்து கேமராவை எடுத்தவுடன் ஒத்துழையாமை ஆரம்பித்துவிடும். எங்க பேரையும் கருத்தையும் போட்டுக்கோங்க. போட்டோ எல்லாம் வேண்டாம் என்று ஓட்டம் எடுப்பார்கள். அம்மணி, உன் பெயரும் கருத்தும் யாருக்கு வேண்டும் என்று வெளிப்படையாக அவர்களிடம் சொல்லமுடியாது.

வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு ஏதோ நான் சொர்க்க வனத்தில் வாழ்வது போலிருக்கும். லட்டு லட்டா பொண்ணுங்களைப் பார்க்கறாம்பா என்று வம்புக்கு இழுப்பார்கள். என் பெயருக்கேற்றாற்போலொரு வாழ்க்கையை வாழ்வதாக புரளி பேசுவார்கள். ஆமாம். ராதைகள் அத்தனை பேரும் தினமும் என்னைக் கொஞ்சுகிறார்கள் பாருங்கள். ஒவ்வொரு இடத்திலும் நான் மண்டியிடுவது யாருக்குத் தெரியப்போகிறது? ஒருமுறை ஒரு பெண்ணிடம் தமிழ் பற்றிப் பேசப்போய் அவளுக்கும் எனக்கு வாக்குவாதம் முற்றியது. அவள் தமிழை கிஞ்சித்தும் மதிப்பதாக இல்லை. இறுதியில் என்னை அழுகிற நிலைமைக்குக் கொண்டுசென்று போட்டோவுக்கும் பெப்பே காட்டிவிட்டுச் சென்றாள்.

சென்னையில் உள்ள புகழ்பெற்ற கல்லூரி ஒன்றில் கடவுள்போல எனக்கு ஒரு சிநேகிதி கிடைத்தாள். ஆபத்தில் உதவுபவரைக் கடவுள் என்றுதானே விளிப்போம். அப்படியென்றால் அவள் எனக்குக் கடவுள்தான்.

பெயர் - மேகா. சென்னையின் ஒரு புகழ்பெற்ற கல்லூரியின் மாணவி. ஸ்டூடண்ட் லீடர். பஞ்சாபி. சிம்ரன் அளவுக்கு இல்லாவிட்டாலும் அதில் பாதியழகு. அந்தப் பாதியில் அப்படியொரு முழுமை.

முதல்தடவை நடுங்கிக்கொண்டுதான் அவளிடம் உதவி கேட்டேன். ஒரு ஆர்டிகிள். சும்மா எதுவேணா பேசலாம். நடுப்பக்கத்துல பெருசா போட்டோ போடுவாங்க. சில கேர்ள்ஸ் வேணுமே’

’ஓ யெஸ். எத்தனை மணிக்கு வர்றீங்க?’

சொன்ன நேரத்துக்குச் சென்றபோது இருபது பெண்களைத் திரட்டியிருந்தாள். ஒவ்வொரு பெண்ணையும் அட்டைப் படத்தில் அமரச் செய்யலாம். அவ்வளவு பேரும் கொள்ளை அழகு. ஒரே பிரச்னை, மேகா முதற்கொண்டு யாருக்கும் தமிழ் சுட்டுப் போட்டாலும் வராது. என் ஆங்கிலம் என்பது எனக்குப் பணம்போல. கஞ்சத்தனமாகத்தான் செலவழிப்பேன். சாட்டில் மட்டுமே நீண்டநேரம் உபயோகப்பட்ட என் ஸ்போக்கன் இங்க்லீஷ் அன்றைக்கு ஒருமணி நேரம் கைகொடுத்தது.

திடீரென்று மேகா என்னை மாடிக்குக் கூப்பிட்டாள். அதாவது அந்தக் கல்லூரியின் பெண்கள் விடுதி மாடிக்கு. நான் வெலவெலத்துப் போய்விட்டேன். எந்தப் பெண்கள் விடுதியிலும் ஆண்கள் வரவேற்பு அறை வரை மட்டுமே செல்லமுடியும். பெண்ணின் தந்தையாக இருந்தாலும் கோட்டைத் தாண்ட அனுமதி கிடைக்காது. ஆனால் அவள் என்னைச் சர்வசாதாரணமாக விடுதிக்குள் அழைத்தாள். இதைப் பாக்கியம் என்று சொல்வதா அல்லது பிரச்னை ஏதும் காத்திருக்கிறதா என்று அஞ்சிக்கொண்டே மேலே சென்றேன். முதல் மாடிக்குச் சென்றபோதுதான் அவள் அழைப்பின் அர்த்தம் புரிந்தது. அந்த மாடியில் பெண்களுக்கு இணையாக ஒரே குரங்குகள்.   

எனக்குப் பிராணிகள் என்றாலே அலர்ஜி. பூனை என்னை ஒருநொடி உற்றுப் பார்த்தாலே பின்வாங்குவேன். ஆனால் இங்கே என் முன்னால் பத்துக்கும் மேற்பட்ட குரங்கள். அதேசமயம் என்னைச் சுற்றி 20 பெண்கள் நின்றுகொண்டு அடுத்து நான் செய்யப்போகிறேன் என்று ஒரு நொடி இமைக்காமல் என்னையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். என்ன செய்யலாம்? பெண்கள் முன்னால் பேடித்தனத்தைக் காட்டமுடியுமா? எங்க காலேஜில் இதுமாதிரி நிறைய குரங்குங்க. பசங்க தொந்தரவுகூட இல்லாத காலேஜ் இது. ஆனால் இந்த வானரங்க படுத்தற பாடு தாங்கலை. இதைப் பத்தி எழுதுங்க கண்ணன் என்று மேகா கோபித்துக்கொண்டே குரங்குகளைத் துரத்தினாள். 

நான் என்ன குரங்காட்டியா? குரங்குகளையும் விதவிதமாகப் புகைப்படம் எடுத்து வந்த ஜோலி முடிந்துவிட்டது என்று அங்கிருந்து ஒரே ஓட்டமாக வந்துவிட்டேன். பெண்களைத் தவிர அந்த விடுதிக்குள் அனுமதிக்கப்பட்டவர்கள் நானும் அந்த குரங்குகளும்தான் போலிருக்கிறது.

மேகா என் தோழியானாள். ஒருமுறை மேகாவுக்கு அவசரமாக போன் செய்தேன். எந்த காலேஜூம் செட் ஆகலை. எப்படியாவது ஒரு பத்து கேர்ள்ஸ் வேணுமே. தமிழ் சினிமாவுல அவங்களுக்குப் பிடிச்ச ஹீரோஸ் யாருனு கேட்கணும்?

உடனே தன் கல்லூரியில் படிக்கும் முதல்வருடப் பெண்கள் பத்து பேரை சொன்ன நேரத்துக்குச் சொன்ன இடத்தில் நிறுத்தினாள். அதன்பிறகு அந்தக் கல்லூரியின் பெயரைக் குறிப்பிடாமல் வழியில் வந்து விழுந்த பெண்களைப் பார்த்து எழுதியதுபோல பலமுறை அவள் கல்லூரியைச் சேர்ந்த பெண்கள் என் கட்டுரையில் இடம்பெற்றார்கள்.

எத்தனைநாள் தான் எனக்கு மேகா சேவகம் செய்வாள்? கல்லூரி படிப்பு முடித்து சண்டிகர் சென்றுவிட்டாள். பொன்முட்டை இடும் வாத்து பறந்து சென்றபிறகு என்னால் முன்புபோல அதே வேகத்தில் இயங்கமுடியவில்லை. என் வாழ்க்கையும் வேறு திசையில் பயணித்ததால் இதுபோன்ற நெருக்கடிகளுக்கு ஆளாக்கப்படுவதில் இருந்து பரிபூரண விடுதலை பெற்றேன்.  

அட, மேகாவைச் சந்தித்த கதையை இன்னமும் உங்களுக்குச் சொல்லவில்லை பாருங்கள்.

அவள் கல்லூரியில் ஏதோவொரு இசை விழா. அதைப் பற்றி எழுதுவதற்காக நான் சென்றிருந்தேன். அப்போதுதான் மேகாவை முதல்முதலாகப் பார்த்தேன். இவள் என்ன மாணவியா, அல்லது நிகழ்ச்சியைத் தொகுத்த வந்த மாடலா, கஜோல் கல்லூரிக்குள் நுழைந்தது போல் இருக்கிறாளே என்றுதான் முதலில் அவளைப் பார்த்தபோது எண்ணத் தோன்றியது. சரி, வந்த வேலையைப் பார்ப்போம் என்றாலும் மேகாவிலிருந்து ஒரேடியாக விலகிச் செல்ல முடியவில்லை. எங்கு திரும்பினாலும் அவளே தெரிந்தாள். என்னை மட்டுமல்ல, அந்த அரங்கில் இருந்த அத்தனை பேரையும் தன் அழகால் வசியம் செய்துகொண்டிருந்தாள். போய்ப் பேசலாமா என்று ஒருநிமிடம் யோசித்தேன். மேடம் டாய்லெட் எங்க இருக்கு? செறுப்பைத் தூக்கிவிட்டால்? மேடம் இந்த டிபார்ட்மெண்ட் எங்க இருக்கு? கையை மட்டும் காண்பித்து திசை சொல்லிவிட்டால்? மேடம், இங்கே ஸ்டூண்ட் ரெப் யாரு? கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டால்? எனக்கு அவள் குரலைக் கேட்டாகவேண்டும்.

நிகழ்ச்சி முடிந்தது. நிகழ்ச்சி முடியும்வரை மேகா இருக்கையில் அமரவேயில்லை. பட்டாம்பூச்சிபோல அங்குமிங்கும் சிட்டாகப் பறந்துகொண்டிருந்தாள்.

தேவதையே, நான் வருகிறேன். இனிமேல் எங்கே உன்னைக் காணப் போகிறேன். நன்றி கடவுளே, ஒரு பேரழகியை கண்ணில் காட்டிவிட்டாய். போன ஜென்மத்தில் மயிலுக்குப் போர்வை போர்த்திய பேகனாக நான் இருந்திருக்கவேண்டும். இல்லாவிட்டால் ஏன் இப்படியொரு கொடுப்பினை?

ஆற்றாமையோடு அங்கிருந்து கிளம்பினேன். அரங்கை விட்டு வெளியே வந்தேன். பறவை ஒன்று என் காதை உரசுவதுபோல உணர்வு. 

’எக்ஸ்கியூஸ்மி சார்.’

குரலில் மயங்கித் திரும்பினேன். அவள். அவளேதான். அவளை விழுந்து விழுந்து ரசித்ததை அறிந்துவிட்டாளா? சீ, பார்த்தா டீசண்டா இருக்கே. மேனர்ஸ் இல்லை. ஒரு பிஹேவியர் இல்லை. உன்னை யாரு காலேஜூக்குள்ள விட்டது? செக்யூரிட்டி.....

அவள் இன்னமும் என் அருகில்தான் பணிவோடு நின்றுகொண்டிருந்தாள். ஓ பெண்ணே நீ இன்னமும் பேசவில்லையா?

சார், நீங்க மீடியாவா? நான் மேகா. இந்த காலேஜ் ரெப்.  எங்க காலேஜ்ல நடக்குற எல்லா நிகழ்சிக்கும் உங்களால வரமுடியுமா? அதைப் பத்தி எழுதணும்னு கட்டாயம் கிடையாது. ஜஸ்ட் வந்தா போதும். ப்ளீஸ் சார். திஸ் இஸ் மை நம்பர். 98403.....

முன்ஜென்மத்தில் மயிலுக்குப் போர்வை என்ன, வீடே கட்டிக்கொடுத்திருப்பேன் போலிருக்கிறது. இருவரும் எண்களைப் பறிமாறிக்கொண்டோம். அடுத்த நாளே பேசினேன். பிறகுதான் அவள் என்னை குரங்குகளிடம் கொண்டு விட்டாள்.

oooOooo
                         
 
ச.ந. கண்ணன் அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |