ஜனவரி 19 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
ஜெயிக்கலாம் வாங்க : "கொஞ்சம் கெட்டவனாக இரு"
- எஸ்.கே
| Printable version | URL |
"அவனுக்கென்று குடும்பம் இருக்கிறது. ஏன், அவனுடைய எதிர்காலம், அவனுடைய கனவுகள், திட்டங்கள், ஆளுமை - அவையெல்லாம் என்னவாயிற்று?"

Birbal, akbarஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னன் அக்பருக்கு பலவிதமான குதிரைகளை வாங்கிச் சேர்ப்பதில் மிகவும் பிரியமாம். ஒரு நாள் வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு குதிரை வியாபாரி சிறப்பான தோற்றம் கொண்ட குதிரை ஒன்றைக் காண்பித்து இதுபோன்ற குதிரைகள் பல என்னிடம் இருக்கின்றன என்று அக்பரிடம் கூறினார். அவர் அவ்வியாபாரியிடம் பல ஆயிரம் பொற்காசுகளைக் கொடுத்து அதுபோல் 20 குதிரைகளை கொண்டுவரச் சொன்னார். பொன்னை வாங்கிச் சென்றவன் குதிரைகளுடன் வருவான் என்று அக்பர் காத்திருந்தார்.

இதனிடையே, ஒருநாள் அக்பர் தன் அமைச்சர் பீர்பாலை அழைத்து உலகிலேயே பெரிய முட்டாள்களை பட்டியலிடும்படி கூறினார். பீர்பாலும் அப்படியே சில பெயர்களை எழுதி அக்பரிடம் கொடுத்தார். அதில் பார்த்தால் அக்பரின் பெயர் முதலில் இருந்தது. அக்பர் கோபம் கொண்டு ஏன் என்று விளித்தபோது, "முன்பின் தெரியாத ஒருவனிடம் பல ஆயிரம் பொற்காசுகளைக் கொடுத்து அவன் குதிரைகளுடன் வருவான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பவரை உலகில் சிறந்த முட்டாளாகத்தானே கருத வேண்டும்" என்று பதிலளித்தார். அதற்கு அக்பர், "சிறிது தாமதமானாலும் அந்த வியாபாரி நிச்சயம் குதிரைகளுடன் வருவான் பார்" என்றார். "அப்படியானால் உங்கள் பெயரை அடித்துவிட்டு அவன் பெயரை எழுதிவிடுகிறேன்" என்றார் பீர்பால்!

இதுதான் மனித மனத்தின் இயற்கை. சாமர்த்தியமாகப் பிழைக்கவேண்டும். பிறர் நம்மை ஏய்க்கவோ, நம் மேல் ஆதிக்கம் செலுத்தவோ அனுமதிக்கக் கூடாது.

ஒரு உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். "இலை போட்டாயிற்று. சாப்பிட வா" என்ற அழைப்புக்குப் பிறகு கூடத்தில் அமர்ந்த பிறகுதான் கவனித்தேன், ஒரு புதிய இளைஞரும் எங்களுடன் அமர்ந்திருந்ததை. அவரை என் உறவினர் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். "அன்னதான சிவன் தெரியுமா, அந்த பரம்பரையில் வந்தவர் இவர்" என்று. அன்னதான சிவனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் - தன் சொத்து முழுவதையும் "பசி"யென்று வந்தவர்களுக்கெல்லாம் உணவளிக்கும் தொண்டிலேயே செலவழித்தவரென்று. பிறகு என் உறவினர், "இவனுக்கு வேலை எதுவும் இல்லை. உன் முயற்சியால் ரயில்ல ஏதாவது சேர்த்து விடேன்" என்று சிபாரிசு செய்தார். என் சிந்தனையெல்லாம் இதுபோல் கைப்பணம் முழுவதையும் பிறருக்கு உணவளிப்பதில் செலவழிப்பது சரியா என்பதிலேயே சுற்றி வந்தது. "அலைபாயுதே கண்ணா" போன்ற சிறந்த பாடல்களைப் புனைந்த ஊத்துக்காடு வெங்கடசுப்பையரும் இதுபோல் அன்னதானம் செய்துவிட்டு பின்னாளில் மிகவும் கஷ்ட ஜீவனம் செய்தார் என்று படித்திருக்கிறேன். "Rich Dad, Poor Dad" என்ற நூலில் கண்டுள்ளபடி செல்வந்தராவதும், ஏழையாய் உழல்வதும் நம் கையில்தான் இருக்கிறது. அவரவர் செய்கைகளின் விளைவால் (அல்லது சிலவற்றை செய்யாமல் விட்டதால்) அவர்கள் கஷ்டப்படுகிறார்கள். இதற்காக தம்மை அழித்துக் கொண்டு பிறருக்குத் தொண்டு செய்வது என்பது இயற்கைக்குப் புறம்பானது.

தர்மம் செய்வதற்காக என்று ஒரு குறிப்பிட்ட துகையை ஒதுக்கி வைத்து அதற்குள் அந்தவகை சிலவுகளை அடக்கிக் கொள்வதுதான் சரியான செயல்பாடு என்கிறார்கள். ஏனென்றால், உங்கள்பால் மற்றும் உங்கள் குடும்பத்தின்பால் உங்களுக்கென்று ஒரு கடமை இருக்கிறதல்லவா. அதுதவிர, இனாமாக ஏதேனும் கிடைத்தால் அவற்றைப் பெறுவதற்கென்று ஒரு கூட்டமே எப்போதும் தயாராக இருக்கும். அவர்களிடமிருந்து எத்தகைய நன்றியுணர்வையும் எதிர்பார்க்க முடியாது. நம் இளகிய மனத்தைப் பயன்படுத்தி நம்மை ஏய்த்துப் பிழைக்கும் மனப்பான்மைதான் மிகுந்திருக்கும். நம்மை நாமே முட்டாளாக்கிக் கொள்வதுதான் விஞ்சி நிற்கும்.

ஒருமுறை காரைக்கால் அருகிலுள்ள ஒரு புண்யஸ்தலத்திற்குச் சென்றிருந்தபோது, பல பிச்சைக்காரர்கள் எங்களைச் சூழ்ந்துகொண்டார்கள். அவர்களுக்கு பிச்சையிடவில்லை என்பதற்காக கண்டபடி ஏசத்தொடங்கினார்கள். அவர்களில் சிலர், காரில் வந்திருந்த யாத்திரிகர்களிடம் பிச்சைபோட்டே தீரவேண்டும் என்று சண்டையிட்டுக் கொண்டிருந்ததைக் காணமுடிந்தது. அந்தப் பிச்சைகாரர்களில் பலர் அடியாட்கள்போல் தோற்றமளித்தனர். நீங்கள் "அன்னதானம்" செய்கிறேன் என்று அறிவித்தீர்களேயானால், முதல் பந்தியில் முண்டியடித்துக் கொண்டு இடம்பிடிப்பவர்கள் இவர்களைப் போன்றவர்கள்தான். Your sympathies are misplaced and your philanthropic sentiments are misdirected.

சில நாட்களுக்குமுன் தொலைக் காட்சியில் ஒரு நிகழ்ச்சியைக் கண்டேன். அதில் ஒரு அரசியல் தலைவரைக் கைது செய்தார்கள் என்பதற்காகக் கூட்டம் போட்ட தொண்டர்கள்மேல் தடியடி நடந்ததைக் காண்பித்தார்கள். ஒரு ஊர், பெயர் தெரியாத தொண்டரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டுகிறது. ஆனால் எவரும் அவரைப் பற்றிக் கவலைப்படவில்லை. கடைநிலைத் தொண்டனாயிருப்பவன் இத்தகைய தியாகங்களுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்னும் தீர்மானமான எண்ணப் போக்கு எங்கும் நிறைந்திருக்கிறது. அதுபோல் பிறர் பொருட்டு தன்னை அழித்துக் கொள்ளத் தயாராயிருக்கும் ஒரு முட்டாள் மனிதன் இத்தகைய கஷ்டங்களை எதிர்கொள்வதுதான் நியதி என்பதுதான் நிதர்சனம். அவனுக்கென்று குடும்பம் இருக்கிறது. ஏன், அவனுடைய எதிர்காலம், அவனுடைய கனவுகள், திட்டங்கள், ஆளுமை - அவையெல்லாம் என்னவாயிற்று?

Remember, you have a duty to yourself.

இன்னும் சிலர் ஏதேனும் சில நம்பிக்கைகளை முறட்டுப் பிடியாகப் பிடித்துக் கொண்டு, அத்தகைய வரட்டு சித்தாந்தங்களுக்காகவே தன்னை அழித்துக் கொள்வர். அவர்கள் பிறரின் சொற்களால், போதனைகளால் மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள். "Game football first, and then the Gita" என்றார் விவேகானந்தர். வலுவான, பொறுப்புணர்வு மிக்க சமுதாயத்தை உருவாக்குவதுதான் முக்கியம்; ஆன்மீகமெல்லாம் அதன் பிறகுதான் என்றார் அவர். நல்ல தொண்டிற்காக தன் முயற்சிகளை அர்ப்பணிக்க வேண்டியதுதான். ஆனால் அதுவே நம் வாழ்வின் அடிப்படைகளை அழித்துவிட இடம் கொடுக்கக் கூடாது. வாழ்வின் நோக்கத்தில் எது முதன்மையானது என்பதில் தீர்மானமான கருத்து கொண்டிருத்தல் வேண்டும். Priorities are to be fixed properly.

"என் நண்பனை முழுதுமாக நம்பினேன்", "என் குடும்பத்தினரை நம்பிக் கையெழுத்துப் போட்டேன்"; "என் வரவு செலவுக் கணக்கு பூராவும் என் உறவினர்கள் கையில்தான்; நான் என்ன சம்பாதிக்கிறேன் என்பதே எனக்குத் தெரியாது"  என்றெல்லாம் பெருமையாக வசனம் பேசிவிட்டு, கடைசியில் கைப்பணத்தை இழந்து தெருவில் நிற்கும்போது "ஐயோ, நம்பி மோசம் போய்விட்டேனே" என்று புலம்பும் பலரைக் கண்டிருக்கிறோம். மனித இயல்பினை அறியாமல் உங்களை யார் பிறரை முழுமையாக நம்பச் சொன்னது? "தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறே" என்பார்கள் பெரியோர்.

"நான் எல்லோருக்கும் நல்லவனாகத்தான் இருப்பேன். அவர்கள் மனத்தில் என்ன எண்ணங்கள் இருந்தாலும், அவர்கள் எனக்குக் கெடுதல் எண்ணினாலும், நான் என்னளவில் அவர்களுக்கு நல்லது செய்து கொண்டே இருப்பேன். எனக்கு அவர்கள் மேன்மேலும் கெடுதல் செய்யக்கூடிய சூழ்நிலைகளை உருவாக்கிக் கொடுத்துக் கொண்டேயிருப்பேன்" என்று கங்கணம் கட்டிக் கொண்டு அழிபவர்களை கடைத் தேற்றுவது கடினம். அவர்கள் கிரிக்கெட் நியதிகளைக் கொண்டு கால்பந்து விளையாடுபவர்கள். மனித மனம் செல்லும் திசைகளை அறியாதவர்கள். அதாவது அவர்கள் தவறான, நடைமுறை இயல்புக்கு ஒவ்வாத புத்தகங்களைப் படித்துவிட்டு கண்மூடித்தனமாக அவற்றில் படித்ததைப் பின்பற்றுபவர்கள்.

"குனியக் குனிய குட்டுபவனும் முட்டாள்; குட்டக் குட்ட குனிபவனும் முட்டாள்" என்பார்கள். இந்தக் கருத்தையே "Fool me once, shame on you. Fool me twice, shame on me." என்னும் பழமொழி குறிக்கிறது.

என்கீழ் பணியாற்றிய உதவியாளர் ஒருவரிடம் ஒரு முக்கியமான பணியை முடிக்கச் சொல்லிவிட்டு, நான் வெளியூர் சென்று திரும்பியபின் பார்த்தால் அதனை அவர் முடிக்கவேயில்லை. ஏனென்று வினவியதற்கு அவர், இன்னொரு அதிகாரி (அவர் நேரடியான பாஸ் (Boss) அல்ல. இருந்தாலும் ஆபீஸில் "பவர்ஃபுல்" மனிதர்.), "நான் பார்த்துக் கொள்கிறேனப்பா. நீ நான் குடுக்கும் வேலையைச் செய்" என்று சொல்லி அவரை தன் வேலைக்கு பயன்படுத்திக் கொண்டுள்ளார். "நீ செய்தது தவரில்லையா" என்று நான் என் உதவியாளரிடம் கடிந்து கேட்டதற்கு, அவர் அளித்த பதில்: "சார், அவர் உங்களைப் போல இல்லை சார். ரொம்ப மோசமானவர். நீங்கள்ன்னா கொஞ்சம் கோபமா பேசிட்டு மறந்துடுவீங்க சார். தங்கமானவர் சார் நீங்க. ஆனா அந்த ஆளு விஷப் பாம்பு சார். மனசிலேயே வைச்சுகிட்டு கருவிக்கிட்டே, எப்ப சிக்குவான்னு பார்த்து "போட்டுத் தள்ளிடுவார்" சார். நீங்களே சொல்லுங்க சார், அவர் சொன்னதைத் தானே கேட்கணும்" என்ன்றார். எப்படி இருக்கிறது நியாயம்? ஆனால் நானும் என் உணர்ச்சிகளை வெளிக்காண்பிக்காமல் அந்த உதவியாளருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஒன்று வந்த போது "கூலா"க அவர் பெயரை அடித்து விட்டு வேறொரு நபரை சிபாரிசு செய்து, அவர்தான் சிறந்தவர் என்று மேலதிகாரிகளையும் "கன்வின்ஸ்" செய்து விட்டேன். அந்த நிகழ்ச்சி ஆபீஸ் முழுவதும் பரவியபின் நானும் "பவர்ஃபுல்" மனிதன் ஆகிவிட்டேன். அதன் பிறகு யாரும் என் சொல்லைத் தட்டியதில்லை. "கசாப்புக் கடைக்காரரைத்தான் ஆடு நம்பும்" - இதனை எப்போதும் மனதில் இருத்திக் கொள்ளுங்கள்.

"The world will be unfair. Be prepared", says Bill Gates. The world is unfair, ok. But why only to me? இந்தக் கேள்வியை பலர் தனக்குள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் அத்தகைய நியாயமின்மையை அவர்களுக்கு திருப்பியடிக்கத் தெரியவில்லை என்பதே நிஜம்!

இந்த உலகத்தில் வெற்றிகரமாக வாழ்வது என்பது ஒரு மனம் சார்பான, சக்தியைச் சார்ந்த, ஸீரியஸான விளையாட்டு. இதில் யார் கையில் "பவர்" இருக்கிறது, அதனை அவர்கள் எவ்வளவு புத்திகூர்மையுடன் கையாளுகிறார்கள், எவ்வளவு விழிப்புடன் இருக்கிறார்கள் என்பதுதான் வாழ்வின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கின்றது.

ஆகவே எப்போதும் விழிப்புணர்வுடன், தற்காப்புணர்வுடன் இருங்கள். ஏமாறாதீர்கள்.

கொஞ்சம் - சிறிதளவு - கெட்டவனனாக இருங்கள். அப்போதுதான் இவ்வுலகம் உங்களை மதிக்கும்; போற்றும்; தலைவனாக ஏற்கும்!

The power of the boss is directly proportional to the degree of his ruthlessness !

பீர்பால் | அக்பர் | Rich Dad Poor Dad

oooOooo
எஸ்.கே அவர்களின் இதர படைப்புகள்.   ஜெயிக்கலாம் வாங்க பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |