ஜனவரி 19 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
சிறுகதை : வியாதி
- குமரவேலன் [thambudu@hotmail.com]
| Printable version | URL |


மணி நண்பகல் பன்னிரண்டு. அக்கினி நட்சத்திர வெயில் சென்னையை ஆக்ரோஷத்துடன் சுட்டெரித்துக்கொண்டிருந்தது.

ராஜாங்கம் நாயுடு தன் மளிகைக்கடையைப் பூட்டி முடித்தார். ஒரு சிட்டிகை பொடியை ஆனந்தமாக உறிஞ்சிக்கொண்டே நான்கு தெருக்கள் தள்ளி இருந்த தன் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார். பசி வயிற்றைக் கிள்ளியது. உஷ்ணத்தின் கடுமை  தாக்காமல் இருக்க மேல் துண்டால் தன் வழுக்கைத் தலையை மூடி மறைத்துக்கொண்டார். சாப்பிட்டு  சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டு மூன்று மணி வாக்கில் கடைக்குத் திரும்புவது அவர் வழக்கம்.

சுற்று முற்றும் வேடிக்கை பார்த்துக்கொண்டே தெருவில் மெதுவாக நடந்த நாயுடுவுக்கு தூரத்தில் ஒரு சவ ஊர்வலம் வருவது கண்ணில் பட்டது. அடிக்கடி அவர் பார்க்கும் காட்சிதான்.

ஏனோ அத்தகைய ஊர்வலங்களைப் பார்க்கும் போதெல்லாம் அவர் மனதை லேசான ஒரு சோகம் கப்பிக்கொள்ளும். எண்ணங்கள் கண்டபடி தறிகெட்டு ஓடும். அவருக்கும் வயது எழுபதைத் தாண்டிவிட்டது. மரணத்தைப் பற்றிய நினைவுகள்அவ்வப்போது தோன்றி அவரை அச்சுறுத்தி அவர் மனஅமைதியைக் குலைப்பதுண்டு.

அன்றும் அப்படித்தான்.

"யாரோ ஒரு புண்ணியவான் இந்தப் பொல்லாத உலகத்தை விட்டுத் தப்பிச்சுட்டாரு. எனக்குன்னு எந்தத்தேதியை சாமி குறிச்சு வச்சிருக்கோ தெரியிலை. அந்த நாளை எதிர்பார்த்து நாட்களைத் தள்ளிகிட்டு வரேன். வயசானதுக்கபுறம் பிறத்தியாருக்குப் பாரமா ரொம்ப நாள் உயிரோட வாழ்றது தப்பு. இன்னைக்குத் தெருவிலே தெம்பாவும் சுறுசுறுப்பாவும் நடக்கற நான், எப்போ உயிரில்லாத சவமா நாலு பேர் சுமக்க இதே மாதிரி போகப்போறேனோ தெரியலை"-- வாய் முணுமுணுக்க இதே நினைப்பில் அவர் தன்னை மறந்திருந்தபோது. அந்த ஊர்வலம் மெதுவாக அந்த இடத்திற்கு அருகில் வந்துகொண்டிருந்தது.  நாயுடு தெருவின் ஒரு மூலையில் ஒதுங்கி நின்று கொண்டு கண்ணிமைக்காமல்  பார்த்துக்கொண்டிருந்தார். தெருவில் நடந்துகொண்டிருந்தவர்களும் அங்கங்கே கும்பலாக நின்றுகொண்டு ஊர்வலத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

இறந்தவர்  வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பது நாயுடுவின் கணிப்பு. காரணம் அந்த ஊர்வலம் அவர் அடிக்கடி பார்க்கும் ஊர்வலங்களைப்போல் சாதாரணமானதாக இல்லை. அதன்  ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமும் அவரை மட்டுமல்ல அங்கிருந்த அனைவரையும் அயர வைத்தன.

ஊர்வலத்திற்கு முன்னால் நான்கைந்து இளைஞர்கள் கூடைகூடையாகப் பட்டாசை வைத்துக்கொண்டு வழி நெடுக தெருவில் சரங்களை  வெடித்துக்கொண்டே போனார்கள். அவர்கள் செயலில் விளையாட்டுத்தனமும் பிறரைப் பயமுறுத்தும் நோக்கமுமே மேலோங்கி இருந்ததாகத் தோன்றியது.அவர்களுக்குப் பின்னால் வந்த சிலர் பைகளில் பூக்களை நிரப்பிக்கொண்டு வழியெங்கும் அட்டகாசத்துடன் வாரி இறைத்துக்கொண்டே வந்தார்கள். வேகமாக அவர்களைக் கடந்த கார்கள், இரண்டு சக்கர வாகனங்கள், முக்கியமாக இளம் பெண்கள் இவர்களைக் குறி பார்த்து கேலி, கிண்டலுடன் பூ வீசப்பட்டது. குடிபோதையிலிருந்த சில இளவட்டங்கள் ஆபாச உடலசைவுகளுடன் டப்பாங்குத்து நடனம் ஆடியது விரசத்தின் எல்லையையே தொட்டது. போவோர் வருவோர் அருவருப்புடன் முகம் சுளித்ததை அவர்கள் கொஞ்சமும் சட்டை செய்யவிலலை.

அந்த இறுதி ஊர்வலத்திலேயே எல்லோருடைய கவனத்தையும் சுண்டி இழுத்தது சடலம் வைக்கப்பட்டிரு
ந்த வண்டிதான். ஒரு நீள டெம்ப்போவை மலரால் புஷ்பக விமானம் போல் கண்ணைக்கவரும் விதமாகக் கலைநயத்துடன் அலங்கரித்திருந்தார்கள். மலர் படுக்கையின் மேல் அந்த உடல் கிடத்தப்பட்டிருந்தது. வண்டி முழுக்க பூக்கள், வழிநெடுக பூக்கள்.காணுமிடமெல்லாம் பூக்களே!

"அடேங்கப்பா! இந்தப் பூ அலங்காரத்துக்கே எக்கச்சக்கமா செலவாயிருக்கும் போல இருக்கே.. கோயம்பேடு பூ மார்க்கெட்டையே காலி பண்ணியிருப்பாங்கன்னு தோணுதடி" இரண்டு பெண்கள்  ஆச்சரியத்துடன் வாய் பிளந்தார்கள்.

இந்தக் காட்சிகளையெல்லாம் பார்த்த நாயுடுவின் மனம் மிகவும் சஞ்சலப்பட்டது. சோகம் சூழ்ந்திருக்கவேண்டிய நேரத்தில் ஏன் இந்தத் தேவையற்ற உற்சாகம், கேலி,குதூகலம்? மெளனம் நிலவ வேண்டிய இடத்தில் கூத்து,கும்மாளம்--அமைதி காக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் ஆர்ப்பாட்டம், ரகளை. என்ன கொடுமை இது!. இவர்கள் இறந்தவருக்காக துக்கப்படுகிறார்களா அல்லது அந்த நிகழ்ச்சியைக் கொண்டாடிச் சந்தோஷம் காண்கிறார்களா?

சில ஊர்வலங்களை அவரும் பார்த்திருக்கிறார்.  இழப்பின் சோகத்தை பிரதிபலிக்கும் பிண்ணணியோடு எளிமையாய், சத்தம் சந்தடி சிறிதும் இல்லாமல் மெளனமாய்போவதைப் பார்க்கும் போதெல்லாம் அவர் மனதிலும் விவரிக்க முடியாத துக்கம் தோன்றி அவரை  கண்கலங்கவைத்து மனதை நெகிழ  வைத்ததுண்டு.

"யாரு அதுன்னு தெரியுங்களா?" -- நாயுடு அருகில் இருந்த ஒரு பெரியவரை விசாரித்தார்.

"கேனா மானான்னு கேள்விப்பட்டிருக்கீங்களா?"

"அடேடே,தெரியுமே, மெயின் பஜார்லே ஜவுளிக்கடை, மளிகைக் கடை, ஸ்டேஷனரி கடையெல்லாம்
வச்சிருக்காரே அவர்தானே ?"

"அவரேதான். பாவம் கடைசிக்காலத்திலே ரொம்பக் கஷ்டங்களை அனுபவிச்சுட்டாரு"

"'ஏன் அவருக்கு மூணு பசங்க இருக்காங்க இல்லையா'?

"பிரச்னையே அவங்கதான். மூணு பேரு இருந்து என்ன பிரயோசனம்? அவரு உழைச்சு சம்பாதிச்ச வரையிலும் ஒட்டிகிட்டு இருந்தாங்க. அவரு உடம்பு முடியாமே போனதும் அவரை தனியா வெட்டி விட்டுட்டாங்க. கிராதகனுங்க...

"கடைங்கல்லாம்?"

"மூணு கடையையும் ஆளுக்கொண்ணாப் பிரிச்சிகிட்டாங்க."

"அசோக் நகர்லே ஒரு பெரிய வீடு இருந்ததே."

"அந்த அநியாயத்தை ஏன் கேக்கறீங்க? அவர் மனைவி காலமானதுக்கப்புறம்  அவரு ரொம்ப சீக்காளி ஆயிட்டாரு.

கொஞ்சம் கூடப் பாசமோ இரக்கமோ இல்லாமெ இந்தப் பசங்க அவரை ஒரு மட்டமான ஓட்டு வீட்டிலே கொண்டு போய் குடி வச்சுட்டு அசோக் நகர் வீட்டை வாடகைக்கு விட்டுட்டாங்க. வாடகைப்பணத்திலே மூணு பேருக்கும் பங்காம். பேசிக்கறாங்க."

"என்ன கண்றாவிங்க இது,கேக்கவே பரிதாபமாயிருக்கு...அப்போ அந்தப் பெரியவரை யார்தான் கவனிச்சுக்கிடாங்க ?"

"அவர் கடையிலே வேலை பார்த்த சில விசுவாசமான வேலைக்காரங்க அப்பப்போ அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்வாங்களாம். மகனுங்க அவங்க இஷ்டப்பட்டப்போ ஏதோ ஒரு சொல்ப தொகையை யார் மூலமாவது குடுத்தனுப்புவாங்களாம்.அவங்களே நேராப் போனா எங்கே அப்பா தங்களோட வந்துடுவாரோன்னு பயம் தான்."

"வயசாயிட்டாலே கஷ்டம்தான். வியாதியும் சேர்ந்தா சொல்லவே வேணாம். அத்தோட சொந்தமெல்லாம் கைவிட்டு தனியா இருக்கிறது பெரிய கொடுமை. கூட பணக்கஷ்டமும் இருந்துட்டா வாழ்க்கையே நரகம்தான்...பாவம், தெய்வம் ஏன் தான் இப்படி அவரை சோதிச்சதோ?"

"அவருக்கு ஹார்ட் ரொம்ப வீக்காம். நாலு வருஷத்துக்கு முன்னாடி தான் பெரிய ஆபரேஷன் நடந்ததாம். ரெண்டு தடவை அட்டாக் வந்திருக்காம். மாத்திரை மருந்தெல்லாம் ஒரு நாள் கூட விடாமெ சாப்பிடணுமாம். சாப்பாட்டு விஷயத்திலேயும் நிறைய கட்டுப்பாடு வேணுமாம். ஆனா உடம்பு முடியாத அந்த மனுஷனுக்கு இதெல்லாம் பார்த்துப்பார்த்து சிசுருஷை பண்ண யார் இருக்காங்க?"

"த்ஸோ,கேக்கவே மனசு ரொம்பக் கஷ்டப்படுதுங்க."

"முந்தாநாளு பெரியவருக்கு உடம்பு ரொம்ப மோசமாயிடிச்சாம். மாத்திரை மருந்தெல்லாம் தீர்ந்து போச்சாம். கையிலே சல்லிக்காசு கிடையாதாம். கடன் கேக்கத் தயக்கம். பசங்க மூணு பேரும் வியாபார விஷயமா ஆளுக்கொரு ஊரா சுத்திகிட்டிருக்காங்க. கேவலம் ஒரு நூறு ரூபாய்க்கு மாத்திரை வாங்க முடியாமெ அவஸ்தைப் பட்டு திடீர்னு அட்டாக் வந்து பட்டுன்னு போயிட்டாரு..."

"ஆனாலும் ரொம்ப அக்கிரமங்க. அப்பன் உசிரோட இருந்தப்ப செய்ய மூக்காலே அழுதாங்க. இப்போ பாருங்க. ஆளு போனப்புறம்  ஊர்வலத்துக்கு இப்படிப் பணத்தை வாரி இறைச்சிருக்காங்க.படு பாவிங்க. இதெல்லாம் பார்த்து அவர் சந்தோஷப்படப் போறாரா என்ன..வயிறு பத்தி எரியுதுங்க.."

"இதைத் தான் கவிஞர். ரொம்ப அழகாச் சொன்னாரு,'தென்னையைப் பெத்தா இளநீரு, பிள்ளையைப் பெத்தா கண்ணீரு'ன்னு

"அது தாங்க உலகம்! நல்ல மனைவி மட்டுமில்லை நல்ல பிள்ளைங்க அமையறது கூட இறைவன் கொடுத்த வரம்தான். இதிலே ஒரு வேடிக்கை பாருங்க..' அப்பாவுக்கு பிள்ளைங்க செலவைப் பொருட்படுத்தாமே ஈமச்சடங்குகளைச் செய்யறாங்க'ன்னு ஊரே மெச்சிப் பேசணும்னு அவங்க ஐடியா. வியாபாரம் பண்றவங்க இல்லையா ஊரை ஏமாத்தி நல்ல பேரு சம்பாதிச்சுக்க இப்படியெல்லாம் பண்றாங்க. இது கூட ஒரு 'பப்ளிசிடி ஸ்டன்ட்' தான்"

" வயசானதுக்கப்புறம் இவங்களுக்கு இதே கதி ஏற்பட்டாத்தான் அப்பனுக்கு எவ்வளவு கொடுமை பண்ணோம்னு புத்தியிலே உறைக்கும்"

"நீங்க சொல்றது நூத்துக்கு நூறு வாஸ்தவமான பேச்சு." என்று தலை ஆட்டினார் மற்றவர்.


மேற்படி இருவருக்கும்  தெரியாத ஒரு ரகசியத்தை உங்களிடம் மட்டும் சொல்லி விடுகிறேன். கேனா மானா படு சாமர்த்தியசாலி. கடைசிக் காலத்திலே பிள்ளைங்க  கொஞ்சம் கூட  பாசம் இல்லாமெ அலட்சியாமா தன்னை நடத்தறதை நல்லாப் புரிஞ்சு கிட்டு, ரொம்ப நாட்களுக்கு முன்னாடியே வக்கீலைக் கூப்பிட்டுத் தன் சொத்துக்கள் முழுசையும் அனாதை இல்லங்களுக்கும் முதியோர் காப்பகங்களுக்கும் எழுதி வச்சிட்டார். அப்பா தன் உயில் மூலம் மறக்க முடியாத பாடம் புகட்டி அதிர்ச்சி வைத்தியம் தந்து விட்டது அன்று வரை அந்த நன்றி கெட்ட பிள்ளைங்களுக்குத் தெரியாது.

oooOooo
குமரவேலன் அவர்களின் இதர படைப்புகள்.   சிறுகதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |