ஜனவரி 20 2005
தராசு
கார்ட்டூன்
காந்தீய விழுமியங்கள்
பங்குச்சந்தை ஒரு பார்வை
மஜுலா சிங்கப்புரா
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
சமையல்
முத்தொள்ளாயிரம்
கட்டுரை
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • ஹர்ஷத் மேத்தா
 • - சசிகுமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் : சொல்லும் பொருளும்
  - எஸ்.கே
  | Printable version |

  அன்னையின் கருவறையில் நிகழும் உயிரணுக்களின் வகுபாடு தொடங்கிய கணத்திலிருந்தே நாம் தன்னைச் சுற்றியுள்ள உலகத்துடன் தொடர்பு கொள்ள ஆரம்பித்து விடுகிறோம். மனித உருவமும், தானியங்கு விசையும் அந்தக் கருவுக்கு ஏற்பட்ட பிறகு. சிறுசிறு அசைவுகள், அதிர்வுகள் மூலம் அன்னையுடன் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறது. கருப்பையில் மிதந்து கொண்டிருக்கும்போதே வெளியுலகத்தின் ஓசைகளை செவிமடுக்கிறது என்று கூறுகிறார்கள்.

  பின் இந்த உலகத்தின்பால் அம்மகவு தலையெடுத்து (அதுதானே முதலில் வெளியே நீளுகிறது) வைத்தவுடன் பசி, கோபம், வலி எல்லாவற்றையும் அழுகை மூலமாகவே எடுத்துறைக்கிறது. சிறிது சிறிதாக தன்னைச் சுற்றி எழுகின்ற ஓசைகளை செவி வழியாக மூளையினுள் செலுத்திப் பதிவு செய்து கொண்டு, அவற்றை தன் உள்ளுணர்வின் உந்துதல்களுடன் (instinctive urges) சேர்த்து ஒரு படிமத்தை உருவாக்குகிறது. அதன்பின் தன் பசி, மகிழ்ச்சி, கோபம், வலி, பயம், விருப்பு, வெறுப்பு, தோழமை, ஒவ்வாமை போன்ற எல்லா வித உணர்ச்சிகளையும் அழுகையுடன் கூட, உடல் அசைவுகளாலும், பலவித ஓசைகளாலும் பகிர்ந்து கொள்கிறது. இந்தவித பகிர்வுகளை தாய் உணர்வு பூர்வமாகவும், உற்று நோக்குதல் மூலமாகவும் அறிகிறாள். இன்ன காரணத்திற்காக ஒரு மதலை அழுகிறது என்பதை துல்லியமாக கண்டறிவாள் ஒரு தாய். அது பசியா, அல்லது தொடையில் கடித்த எறும்பா, எது காரணம் என்பதை அந்த அழுகையின் வீச்சு, தன்மை இவைகளால் இனம் காண முடிகிறது அத்தாயால்.

  இதனால்தான் ஒரு மதலை வளரும் பருவத்தில் அதன் சூழ்நிலை அமைதியானதாக இருத்தல் வேண்டும் என்கிறார்கள். இந்த உலகத்தின் அறிமுகம் அதற்கு சரியான புரிதலுடன் அமைய வேண்டும். ஒரு குழந்தையின் அண்மை சரியான தன்மையுடன் அமைந்தால், அதன் வளர்ச்சி செம்மையாகவும், அதன் காரணமாக அதன் எதிர்காலம் வளமையுடனும், வெற்றி கொண்டதாகவும் அமைகிறது.

  இப்படித் தொடங்குகிறது நம் பரிமாறல் பயணம் (Thus commences our journey of communication with the outside world!). அப்போது தொடங்கி நம் வாழ்நாள் முழுதும், நம் ஒவ்வொரு அசைவிலும் வெளி உலகத்துடன் தொடர்பு கொண்டு கருத்துப் பரிமாற்றங்கள் செய்து கொண்டே இருக்கிறோம். நம் எண்ணங்களை, செய்திகளை, கருத்துக்களை, உணர்வுகளை, தேர்வுகளை, நாம் கொண்டுள்ள அறுதியான கோட்பாடுகளை, நாம் எடுத்த முடிவுகளை - இவற்றை எல்லாம் எவ்வளவு சரியாக, வெற்றிகரமாக பிறர் (target) அறியக் கொண்டு சேர்க்கிறோம் என்பதுதான் இவ்வுலகில் நம் முயற்சிகளின் வெற்றிதோல்வியை நிர்ணயிக்கிறது. நாம் பகிர்ந்து கொள்ள எண்ணியவற்றை சொல்லியாகி விட்டது; புரிந்து கொண்டு அதற்கேற்ப நடத்தல் அந்த இன்னொருவர் கடன்தானே எனலாம். ஆனால் அந்த இன்னொருவரிடம் நாம் சொல்லும் பொருள் முழுதும் சென்றடையும் வகையில் அதனை உரைத்தல் நம் கடன் அல்லவா?

  பிறரிடம் நாம்,

  திறந்த கண்களுடனும்
  திறந்த காதுடனும்
  திறந்த மனத்துடனும்

  உரையாட வேண்டும். இந்தக் கலையை பெரு முயற்சி செய்து கைக்கொள்ளல் வேண்டும்.

  இவ்வுலகில் மனிதர்களுக்குள் தோன்றும் சண்டை, போராட்டம், கருத்து வேற்றுமை, முரண்பாடு அனைவற்றுக்கும் முக்கிய காரணம் இந்த mis-communication தான். ஒவ்வொருவர்

  பேசும் மொழியும், அவர்கள் கையாளும் சொற்களும், பொருட்பாடும், படிமங்களும், நடையும் தம்முடைய நடைமுறையையும், பண்பாட்டையும், பழக்க வழக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டவை. மொழி ஒன்றானாலும் அதன் வட்டார வழக்குகள் (dialects) மற்றும் idioms மாறுபடும். அதனால் நாம் கேட்பவர்களின் பின்னணி, வளர்ந்த சூழ்நிலை, கல்வியறிவு இவற்றை அறிந்து, அவற்றுக்கு ஒப்ப உரைத்தால்தானே நான் சொல்லுவது உங்களுக்கும், நீங்கள் சொல்லுவது எனக்கும் புரியும்.

  ஒரே சொல் வெவ்வேரு மனிதர்களின் புரிதல் மற்றும் பின்னணிக் கேற்ப பொருள் கொள்ளப்பட்டு அதன் எதிர்வினைகளும் மாறுபடும். சிர சமயம் நேரெதிர் பொருள் கூட கொள்ளப்படும்.

  சுதந்திரப் போராட்ட காலத்தில் ஒருவர் தன் கட்டுரையில், முரண்டு பிடிக்கும் இரு சாரார் பிணக்கை விட்டு பேசித்தீர்க்க வேண்டும் என்ற பொருளில், "break the ice" என்று எழுதினாராம்.

  ஆனால் அதனைப் படித்த ஒரு அதிகாரி, தன் கல்விக்குறைவினால், "break" என்கிற சொல்லை மட்டும் மனதில் கொண்டு, எதனையோ உடைக்கப் போகிறார்கள் என்று எழுதியவரை கைது செய்து விட்டாராம். நாம் சொல்ல முற்படுவதை நேரடியாக, சுற்றி வளைக்காமல் சொல்லுதல் வேண்டும். சொற்களால் தோரணம் கட்டி, பேச்சால் வீதியுலா வந்தோமானால், கெட்பவருக்கு நாம் என்ன சொன்னோம் என்பதே மனதில் பதிந்திருக்காது. "ஏதேதோ சொன்னார்" என்பார்கள். நீங்கள் குறிப்பிட்டு சொல்ல நினைத்த விஷயம் கேட்டவர் மனத்தினுள் பதிவாகியிருக்காது. பிறகு நஷ்டம் உங்களுக்குத்தான். தொலைபேசியில் பேசும்போது கூட துல்லியமாகச் சொல்லவேண்டிய கட்டளைகள், செயல்பாடுகள் முதலியவை பொதுவான விசாரிப்புகளில் மூழ்கி மறைந்துவிடும் அபாயம் உள்ளது. "நீ உடனே வீட்டுக்குப் போய் பாஸ் புக்கை எடுத்து கிட்டு வா. என்ன? அப்பறம், எப்படி இருக்கு நிலைமையெல்லாம்..." இந்த ரீதியில் உங்கள் உரையாடல் தொடர்ந்தால்,

  போன் பேச்சு முடிந்தவுடன் நீங்கள் முக்கியமாக எதை செய்யச் சொன்னீர்களோ, அது நினைவில் இருக்காது. குசலம் விசாரித்ததில் ஏதோ ஒன்று கேட்டவர் மனதில் பதிந்து, அதில் ஏதாவது அவர் மனத்தினுள் பதுங்கிக் கிடந்த முள்ளை கிளர்ந்தெடுத்து, அதுவே அவர்தம் மனத்தை ஆக்கிரமித்து, அந்தக் குழப்பத்தில் நீங்கள் அடிக் கோடிட்டுச் சொன்ன கட்டளை பறந்து போயிருக்கும். இது சாதாரணமாக அன்றாடம் நடக்கும் communication gap! இதனால் நீங்கள் எப்போதும் கடைசியாக "வைச்சுடட்டுமா?" என்று மங்களம் பாடுவதற்கு முன்னால் ஒரு முறை அந்த போன் பேச்சின் சாரமான முக்கியச் செய்தியைக் கூறி விடுதல் வேண்டும். அது மனத்தில் தங்க வாய்ப்பு இருக்கிறது.

  சொல்ல நினைப்பதை சிறு சொற்றொடர்களாக அனைவருக்கும் புரியும்படியாகச் சொன்னால் நாம் சொல்பவை முழுதும் அதன் இலக்கை எட்டும் சாத்தியம் உள்ளது. அதை விடுத்து உங்கள் மேதா விலாசத்தைக் காண்பிப்பதற்காகவே ஒன்றை திரித்து உரைத்தால், அவை சென்றடையாமலிருத்தல் ஒரு பக்கமெனினும், அதன் பொருட்டு ஏற்படும் எதிர்மறை விளைவுகள் இன்னொரு பக்கமாக அமையும்! இதனையே "K.I.S.S" என்பார்கள் (Keep it short, stupid!). "தொகச் சொல்லி தூவாத நீக்கி நகச் சொல்லி" என்றார் வள்ளுவர். பதரை நீக்கிப் பக்குவமான நெல்மணிகள் போன்ற பலன் தரும் சொற்களையே கோர்த்து உரைக்க வேண்டும்!

  எதனையுமே சுருங்கச் சொல்லுதல் வேண்டும். Brevity is the soul of wit - என்பார்கள். ஆனால் அது எளிதன்று. முன்ணாள் அமேரிக்க அதிபர் தியோடார் ரூஸ்வெல்ட் அவர்களைக் கேட்டார்களாம், "நீங்கள் ஒரு பத்து நிமிட சொற்பொழிவுக்கு தயார் செய்ய எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்வீர்கள்" என்று. அதற்கு அவர், "அரை நாள் தேவை" என்றார். "அரை மணி நேரம் பேச வேண்டும் என்றால்?" என்று கேட்டதற்கு, "இதோ, இப்போதே தயார்" என்றாராம்!

  உரையாடும்போது "அசை"ச் சொற்களை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். அவை கேட்பவர்க்கு ஒரு கவனச் சிதறலையும், சலிப்பையும் உண்டாக்கும். "ம்ம்ம்", "அது வந்து", "அங்கேர்ந்து", "அதாகப் பட்டது", "like...", "you know", "no", "what" இது போன்ற "மலட்டுச் சொற்களை"யும் ஓசைகளையும் தவிர்த்தல் வேண்டும்.

  உரையாடலின் முக்கிய பகுதி கேட்டல் அல்லது கேள்வியாகும் (Listening).

   சொல்லப் படுவதில் பாதிதான் காதால் கேட்கிறோம்
   அதில் பாதிதான் மனத்தினுள் உறைந்தது
   அதனினும் பாதியையே பொருள் கொண்டுணர்கிறோம்
   உணர்ந்ததில் பாதியே நம்பப் படுகிறது
   நம்பியதில் பாதியே நினைவில் நின்றது!

  இப்போது புரிகிறதா, "ஏன் எல்லோரும் நாம் சொன்னதைப் புரிந்து கொண்டு அதன்படி நடக்கவில்லை" என்று அங்கலாய்க்கிறோமே, அதன் காரணம்!

  பிறர் சொல்லுதலைக் கேட்டல் என்பது வெறும் காது மட்டும் சம்பந்தப் பட்ட விஷயமல்ல. முழுவதும் உணரப்பட்டு, மனத்தினுள் பதிவு பெறுதல் வரை அதன் வீச்சு உள்ளது. Listening is an art and a science - என்பார்கள். இத்னை செயல் படுத்துவது எப்படி, கேள்வியின் போது செய்யத்தகாதவை எவை என்பதை சிறிது பார்ப்போம்:

  * பிறர் உரையாடும் போது முழு ஈடுபாட்டுடன் கேட்க வேண்டும்

  * சரியான எதிர்வினைகளை காட்ட வேண்டும். அப்போதுதான் நீங்கள் கேட்கிறீர்கள் என்பது தெரியும்.

  * நன்கு கவனித்துக் கேட்பவர்கள் தம் முகம் முழுவதும் பயன் படுத்துவர்.

  * பாதி கேட்கையில் எதையுமே முடிவு கட்டாதீர்கள். முழுவதையும் கேளுங்கள்

  * இன்னொருவர் நம்மிடம் பேசும்போது கவனம் சிதறி வேறெங்கோ யோசனை செய்யாதீர்கள். சிலர் இப்படி எங்கேயோ "மோட்டு வளையை"ப் பார்த்துக் கொண்டு "குருட்டு யோசனை"

  செய்ய ஆரம்பிப்பார்கள். They are all very poor listeners! (சிலர் அப்போது பல்லைக் குத்திக் கொண்டோ, மூக்கை நோண்டிக் கொண்டோ வேறு இருப்பார்கள்!)

  * நாம் கேட்டுக் கொண்டிருக்கும் போதே நம் மனதில் ஏற்கனவே பதிவாகியுள்ள விஷயங்கள் (cached data) வேலை செய்ய ஆரம்பித்து விடும். அதனால் மேற்கொண்டு கூறியவை நம் மனத்தினுள் சென்றடைந்திருக்காது. அதனால் assumptions, pre-conceived notions - முதலிய தடுப்புச் சுவர்களை சண்டையிட்டு விரட்டி, புதிய செய்திகளை     உள்வாங்குதல் வேண்டும்.

  * உரையாடலினிடையே அடிக்கடி எடுத்துக் கொண்ட பொருளை மாற்றிக் கொண்டே இருக்கக் கூடாது.

  * "இவன் என்ன அண்ணாவி, என்னமோ எனக்குத் தெரியாதென்று பேசிக் கொண்டேயிருக்கிறான்" என்ற ஈகோ உந்துதலால், எதனையும் முழுவதுமாய்க் கேட்க பொறுமையிலாமல்,

  "அதுதான் எனக்குத் தெரியுமே" (I know. I know) என்று "கட்" பண்ணுதல் கூடாது
   
  * கண் பார்த்துப் பேச வேண்டும் (eye contact). இல்லாவிட்டல் உங்கள்மேல் நம்பிக்கை ஏற்படாது.
   
  * தன் பங்கீடும் இருக்க வேண்டும் என்பதற்காகச் செய்யப்படும் அநாவசியக் குறுக்கீடுகளைத் தவிர்க்க வேண்டும்.
   
  * உரையாடலை திசை திருப்பாதீர்கள். முழு விவரமும் உங்களுக்குக் கிட்டாமல் போய்விடும்.
   
  * நடு நிலையில் பிறர் சொல்வதைக் கேளுங்கள். அனைத்தும் கேட்டு ஆராய்ந்தறிந்த பின்பே உங்கள் கருத்தை வெளியிடுங்கள். உங்கள் முடிவை பாதியிலேயே கொட்டி விடாதீர்கள்.
   
  * வேறொருவர் தன் அநுபவங்களை விவரிக்கும் போது, "ஊடாயில்" புகுந்து உங்கள் கதையை எடுத்து விட ஆரம்பிக்காதீர்கள். ஒரு புதுக் கதை கிடைப்பதை இழப்பீர்கள்! நாம் நம் என்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும் போது நம், உடல், நாம் பேசும் சொல் வளம், ஓசையின் ஏற்ற இறக்கம், பேசும் முறை, நம் முகம் மற்றும் கைகால்களின் அசைவு, நம் பொருத்தமற்ற செயல்கள் முதலிவை எல்லாமே உரக்கப் பேசுகின்றன! இந்த ஜோடிகள் பேசிக் கொள்ளும்போது பாருங்கள், வாய்ச் சொல்லுக்கு வேலையே இல்லை! உண்மையிலேயே, செய்திப் பகிர்தலில் சொற்களின் பங்கு 7 சதம் தான்! சொற்களின் ஓசை 38 சதமும், Body Language 55 சதமும் பங்களிக்கின்றன! உங்கள் கண், முகம், கைகால்களின் பங்கு எவ்வளவு என்பதைக் கண்டீர்களா? அதனால்தான் உங்கள் சொல்லுக்கு ஒப்ப உங்கள் அவயவங்களின் அசைவுகள் அமையவேண்டும். அவைகள் எதிர்மறையான புரிதலை அளிக்கும்படியாக அமைந்தால் கேட்பவர்கள் உங்கள் உடல் சுட்டும் பொருளையே எடுத்துக் கொள்வர். அல்லது அவர்கள் உங்கள்பால் நம்பிக்கை இழப்பர்.

  தொலைபேசி உரையாடலில் கூட சொற்களின் பங்கு 18 விழுக்காடுதான். சொல்லும் விதமும், அவற்றின் குரல் ஏற்ற இறக்கங்களும் மீதி 82 பங்கைக் கொண்டு செல்கின்றன. பேசும்போது நாம் காண்பிக்கும் சைகைகளின் பொருள் வெவ்வேறு நாடுகளில் மாறுபட்ட பொருள்களைக் கொடுக்கும். அதை நாம் மனத்தில் கொண்டு கவனமாக இருத்தல் வேண்டும்.

  இல்லையெனில் விபரீதமான விளைவுகள் ஏற்படும்.

  1. "V" என்று காண்பிக்கும்படியாக இரு விரல்களை உள்ளங்கையை வெளிக்காண்பிக்கும் படியாகக் காட்டினால் "வெற்றி" என்று பொருள். இது எல்லோருக்கும் தெரியும். அதையே புறங்கை வெளியே இருக்கும்படி காண்பித்தால் அது மிக அருவருப்பான பொருளைக் கொடுக்கும் (Shove it up your ....hole!)

  2. கட்டை விரலும், ஆட்காடி விரலும் சேர்ந்து வட்டமாகத் தூக்கிக் காண்பித்தால் சில நாடுகளில் "OK" என்றும், மத்திய கிழக்கு போன்ற நாடுகளில் அதுவே "orifice" என்றோ, அல்லது "நான் ரெடி" என்றோ மோசமான கருத்தை அளிக்கும்!

  3. கால்களால் எதையுமே சுட்டினால் மரியாதைக் குறைவாக நினைப்பர் பலர். நம்மூரில் வேண்டுமானால் அதைப் பொருட்படுத்தாமல் இருக்கலாம்.

  4. எதையுமே இரு கைகளையும் கொண்டு அளிப்பதையே ஜப்பானியர்கள் மரியாதையாகக் கருதுவர்.

  5. தலையை மேலேயும் கீழேயும் ஆட்டினால் "சரி", "ஆமாம்" என்று தானே பொருள்? ஆனால் கிரீஸ், பெல்ஜியம் போன்ற நாடுகளில் அதற்கு எதிர்மறையான அர்த்தம்!

  பிறரால் சொல்லப் படுவைத் தவிர. சொல்லப் படாததையும், சொல்ல முடியாததையும் கேட்கும் திறன் உங்களுக்கு வேண்டும். கண்களையும், உடலசைவையும், குறிகளையும் சுற்றுப்

  புறத்தையும் கொண்டு மெய்ப்பொருளை அறிதல் வேண்டும். யூதர்களை அடைத்து வைத்த பகுதியில் சர்வ தேசக் குழு ஒன்று உண்மை அறிய வந்த போது எழுதப் பட்டதாக ஒரு கவிதை

  படித்தேன். அதன் சுருக்கம் இது:-

   கவனமாகக் கேளுங்கள்
   நான் சொல்லாததை.
   அதை நான் சொல்ல விரும்புகிறேன்
   நான் உயிர் வாழ அதை சொல்லியே தீர வேண்டும்
   ஆனால் அதை நான் சொல்ல இயலாது!

  என் நண்பர் ஒருவர் சென்னை நகரில் படித்துக் கொண்டிருந்த தன் மகனை யாரோ சொன்னார்கள் என்று ஒரு குக்கிராமத்தில் இருக்கும் விடுதி ஒன்றில் சேர்த்து விட்டு, "அவனைக் கேட்டேன், அவன் மகிழ்ச்சியாக இருப்பதாகத்தான் சொன்னான்" என்று சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அவன் சொல்லாமல் விட்டதை அவர் செவிமடுக்க வில்லை. ஆறு மாதங்கள் கழித்து நோய்வாய்ப்பட்ட நிலையில் திரும்பிக் கொண்டு வந்து வேறொரு பள்ளியில் சேர்த்தார்!

  இனிதாய்ப் பேசி, கருத்துக்களை தகுந்த முறையில் எடுத்துறைக்க வல்லவனின் சொல்லை உடனே கேட்டு உலகம் செயல்படும் என்கிறார் வள்ளுவர் இந்தக் குறளில்:

   விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்தினிது
   சொல்லுதல் வல்லார்ப் பெறின்.

  மேலும், சொல்வன்மை என்பது மிகச் சிறந்த பேறு என்கிறார் இங்கே:-

   நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
   யாநலத்து உள்ளதூம் நன்று

  அத்தகைய பெருமை வாய்ந்த நாவன்மையை எல்லோரும் பெருக என்று வேண்டுகிறேன்!

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2005 Tamiloviam.com - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |