Tamiloviam
ஜனவரி 24 2008
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திரைவிமர்சனம் : எவனோ ஒருவன்
- மீனா [feedback@tamiloviam.com]
| | Printable version | URL |

 

தன்னைச் சுற்றி நடக்கும் அநியாயங்களை எல்லாம் பார்த்தும் ஒன்றும் செய்யமுடியாமல் கையைப் பிசைந்துகொண்டிருப்பவர்கள் தான் நம்மில் பெரும்பாலானோர். அவற்றை எதிர்த்துக் கேட்க ஒருவன் வந்தால் - வழக்கமாக சினிமாத்தனமாக நாயகனாக இல்லாமல் அவன் நம்மில் ஒருவனாக இருந்தால்... அதுதான் எவனோ ஒருவன்.

Madhavan, Sangeethaவங்கியில் அதிகாரியாக வேலை பார்க்கும் மாதவனுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள். தண்ணீர் லாரிக்காரனில் ஆரம்பித்து எல்லாவற்றிலும் பிரச்சனைதான். நல்ல ஸ்கூலில் பிள்ளையை சேர்க்க நினைக்கும் போது அவர்கள் கேட்கும் டொனேஷனைத் தர இவர் மறுக்க - அட்மிஷனை அவர்கள் மறுத்துவிடுகிறார்கள். தகுதியில்லாதவனுக்கு வங்கியில் லோன் தர மாதவன் மறுக்கும் போது அவரது மேனேஜர் லோன் தர ஆதரவு தருகிறார். இப்படி தன்னைச் சுற்றி நடப்பது எல்லாம் தப்பு தப்பாக இருப்பதைக் கண்டு பொங்கியெழுகிறார் மாதவன். தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தில் நடக்கும் அட்டூழியங்கள், முறைகேடுகள் லஞ்ச லாவண்யங்களால் மனம் வெதும்பி புரயோடிப்போயிருக்கும் சமூக அவலங்களைச் சுத்தப்படுத்த முயல்கிறார். நல்லது செய்தாலும் அதை அடிதடி வழியில் செய்வதால் சமூகம் அவரை ஒரு சமூகவிரோதியாகப் பாவித்து தண்டிக்க முயல்கிறது. முடிவில் மாதவன் சமூக அவலங்களுக்கு எதிரான தன் போராட்டத்தில் ஜெயித்தாரா இல்லையா என்பதுதான் கிளைமாக்ஸ்.

மாதவனின் நடிப்புக் கிரீடத்தில் இந்தப்படம் ஒரு வைரமாக நிச்சயம் ஜொலிக்கிறது. அந்த அளவிற்கு பண்பட்ட - யதார்த்தமான நடிப்பு. தன்னிடம் இரண்டு ரூபாய் அதிகம் வாங்கும் கூல் டிரிங்ஸ் கடைக்காரனையும், அவன் கடையையும் துவம்சமாக்கும் மாதவனின் ஆக்ரோஷம் அசத்தல். இதைப்போலவே அவர் எடுக்கும் ஒவ்வொரு பிரச்சனையும் அதற்கு அவர் தரும் தண்டனைகளும் அற்புதம். கார்ப்பரேஷன் தண்ணீருக்கு காசு வசூலிக்கும் கவுன்சிலரின் கழுத்தில் கத்தியை வைத்து 'வெட்கமா இல்ல...வெட்கமா இல்ல...' என அவர் கேட்பது நாம் ஒவ்வொருவரும் கேட்கத் துடிக்கும் கேள்வி. சினிமாவில் போலியான ஹீரோத்தனம் கொஞ்சமும் இல்லாமல் நம்மில் ஒருவராக அவர் வருவது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. யாரோ ஒருவர் ஓடும் ரயிலில் அடிபட்டு இறக்கும் போது அதை மறைப்பதுபோல எழும் ரயில் பயணிகளின் பேச்சுகளையும் சிரிப்பையும் மாதவன் மெளனமாக உற்று நோக்கும் இடத்தில் அவரது நடிப்பை பாராட்ட வார்த்தைகள் இல்லை.

மிடில்க்ளால் மனைவியாக வரும் சங்கீதா சூப்பர். உங்கள கட்டிக்கிட்டு இந்த பத்து வருஷத்துல என்ன சுகத்தைக் கண்டேன் என்று ஒரு சராசரி மனைவியாக புலம்பும் சங்கீதா இயல்பை மாறாத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மாதவனின்
மாற்றங்களைக் கண்டு " அவரை அப்பவே நான் தடுத்திருந்தா இப்படி எல்லாம் நடந்து இருக்காதே.." என்று சீமானிடம் அழும் போது கலங்க வைக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக கம்பீரமாக வருகிறார் சீமான். ஒரு நல்ல அதிகாரி எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது அவரது நடவடிக்கைகள். மாதவனின் செயல்களில் உள்ள நியாயத்தை உணர்ந்து பேசாம என்னுடைய காக்கி சட்டையை கழற்றி அவனை போட்டுக்க சொல்லலாம்னு தோணுது என்கிறபோது அதிர வைக்கிறார். அவர் பேசும் பல வசனங்களில் உள்ள யதார்த்தம் நெஞ்சை சுடுகிறது.

மிகைப்படாத நடிப்பு - கூர் தீட்டிய வசனங்கள் - யதார்தமான கதைக்களம் என்று இருக்கும் படத்திற்கு பாடல்கள் அவசியம் இல்லை என்று நினைத்திருப்பார் போலும் இயக்குனர். பாடல்கள் மற்றும் அதிரடியான ஸ்டண்ட் காட்சிகள் எல்லாம் கட்.  ஆனாலும் பின்னணி இசையில் பல இடங்களில் கண்களைக் கலங்க வைக்கிறார் சமீர். மேலும் சஞ்சய் யாதவின் ஒளிப்பதிவு படத்திற்கு ஒரு மிகப்பெரிய பலம். இப்படத்தின் மூலம் வசனகர்தாவாக அவதாரம் எடுத்துள்ள மாதவனின் வசனங்களின்
கூர்மை நம் இதயத்தை பலமுறை பதம் பார்க்கிறது.

கதையில் வில்லன் என்று தனியாக யாரும் இல்லை. மாதவனைச் சுற்றி நடக்கும் சமூக அவலங்கள் அனைத்துமே வில்லன்கள் தான்.

அநீதிக்கு எதிராக தன் புஜபலத்தைக் கொண்டு போராடும் - நம்ப முடியாத அசாத்திய செயல்களைச் செய்யும் சினிமா ஹீரோக்களை மட்டுமே நாம் பார்த்து சலித்துப் போயிருக்கும் நேரத்தில் எவனோ ஒருவனில் தெரிவது நெஞ்சம் கனக்கும் நிஜம். சாதாரண அதேசமயம் நேர்மையான ஒரு தனிமனிதன் தன் சக்திக்கு உட்பட்டதை மட்டும் செய்யும் சினிமாத்தனம் துளிகூட கலக்காத யதார்த்தம். எந்திரமயமான சுயநலமிக்க சமூகச் சூழலில் வாழ்க்கையை தொலைத்துவிட்டு ஓடிக் கொண்டிருக்கிற நமது கதையை சினிமாத்தனம் துளியும் இல்லாமல் ஆபாசம் அருவருப்பின்றி மிகவும் நேர்மையான சினிமாவாக கொடுக்க முடியும் என்று நிரூபித்துள்ளனர் இயக்குனர் நிஷிகாந்த். ஒரு நல்ல தயாரிப்பாளராக அவருக்கு தோள் கொடுத்து தமிழ் சினிமாவில் ஒரு புதிய கலாச்சாரத்தை கொண்டுவர முயற்சி செய்துள்ளார் மாதவன்.

oooOooo
                         
 
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   திரைவிமர்சனம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |