Tamiloviam
ஜனவரி 25 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
சிறப்பு ஆசிரியர் : தெருவோவியன்
- அரை ப்ளேடு [araiblade@gmail.com]
| | Printable version | URL |

நகரின் மையப் பகுதிக்கு அருகில் இருக்கும் வணிக வளாகங்களை ஒட்டிய போக்குவரத்து இல்லாத நடைபயணிகளுக்கான சந்து அது. அந்த தெருவை கடப்பவர்கள் யாவரும் கடந்த ஒரு வாரமாக அவனை கவனித்திருக்க கூடும்.

Ramஒரு வாரமாக தினமும் காலை அவன் இங்கு வருகிறான். கால்கள் கிடையாது. அந்த சக்கரங்கள் வைத்த மரச்சட்டம் ஒன்றுதான் அவன் வாகனம்.

அதில் அமர்ந்தவாறு கைகளால் தள்ளியவாறு அந்த தெருவிற்கு வந்து சேர்வான் அவன். வயது, நரையை ஒதுக்கி பார்த்தால் நாற்பத்தைந்து ஐம்பதுதான் இருக்கும். பிச்சைக்காரன் என்று அவனை சொல்லலாமா.  சொல்ல இயலாது. அவன் தெருவோர ஓவியன். தினமும் தெருவில் ஓர் அழகான தெய்வ உருவை வரைகிறான்.

அந்த வழியே செல்பவர்கள் அந்த ஓவியத்தை பார்த்து அதன் மேல் காசினை விட்டெறிந்து செல்ல அதுவே அவன் வருமானம். இது பிச்சையன்று. அவன் கலைக்கு கிடைத்த விலையென்று கொள்ளலாம்.

அவன் யார்.. எங்கிருந்து வருகிறான். யாரும் அறிய மாட்டார்கள். யாரிடமும் அவன் பேசியதில்லை.

இதோ இன்றும் நாம் அவனை காண்கிறோம். தனது வேலையை துவங்கி விட்டான்.

அந்த சாக்பீஸ் ஒன்றுதான் அவனுடைய தூரிகை. தெருவே அவன் வரைதளம்.

இதோ இன்று அவன் ஓவியம் துவங்குகிறது. லாவகமாக அவன் கைகள் விளையாடுகின்றன. இன்றைய கடவுள் யாரோ.

இதோ மெல்ல மெல்ல அவன் ஓவியம் உருப்பெறுகிறது.  சுண்ணக்கட்டியின் தீற்றல் துவங்குகிறது.

மெல்ல மெல்ல வடிவம் பெறும் இந்த உருவம்...
வெற்று மார்பு.. பதக்கம் தரித்த கழுத்து. கிரீடம். காதிலாடும் குழைகள்.
அழகிய வடிவம் உருப்பெறுகிறது.
நெற்றியில் இடப்பட்ட நாமம். கண்ணனோ...

பொறுப்போம். அதோ முதுகில் முளைத்த அது அம்புக் கூடு அல்லவா.
கையில் அது வில். கோதண்டம் அல்லவா.

ஆகா இது இராமன் அன்றோ?
என்னவொரு அற்புதமான ஓவியம்.
இரண்டொருவர் கண்ணத்தில் போட்டுக் கொண்டு காசையும் போட்டு நகர்ந்தார்கள்.

திடீரென்று தெருவில் ஒரு பதட்டம். ஒவ்வொரு கடையாக மூடப்பட்டுக் கொண்டிருந்தது.
புரியாதவனாய் அவன் இருந்தான்.

எங்கோ ஏதோ ஒரு பொறி பற்றி மதக்கலவரம் கடைத் தெருவிற்கு வந்து கொண்டிருப்பதை அறியாதவன் அவன்.
சற்று நேரத்தில் கடைகள் யாவும் மூடப்பட்டு தெரு வெறிச்சோடி போயிற்று.

சற்று நேரத்தில் ஒரு சிறு கும்பல் அந்த பக்கம் வந்து அவனை சூழ்ந்தது.
உயரமான ஒருவன் கேட்டான் "உன் பெயரென்ன".
மெளனம்.
"கேட்டு கிட்டு இருக்கோம் பதில் சொல்ல மாட்டியா"
மெளனம்.
கோபம் அவர்கள் முகத்தில் தெரிந்தது.
"இவன் கேட்டா பதில் சொல்ல மாட்டான். அடிங்கடா."
அடுத்த நிமிடம் அடுத்தடுத்த அடிகளில் அவன் சுருண்டான்.

"போலீஸ் ஜீப்"  ஒருவன் கத்த அடுத்த நிமிடம் அந்த கும்பல் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது.

மயங்கி கிடந்த அவனை நெருங்கின காக்கி சட்டைகள்.

"மூச்சு வருது சார். மயக்கம்தான்"
"தண்ணி தெளி".

நினைவு திரும்பி எழுந்தான்.
"ஏய். உன்னோட பேர் என்ன?"
மெளனம்.
"ஐயா கேக்குறாரு இல்லை. பேர சொல்லு".

மெல்லிய குரலில் அவன் சொன்னான் "இப்ரஹீம்".

| |
oooOooo
                         
 
அரை ப்ளேடு அவர்களின் இதர படைப்புகள்.   சிறப்பு ஆசிரியர் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |