ஜனவரி 26 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கொஞ்சம் கதைக்கலாம் வாங்க : திருமங்கை
- ராமசந்திரன் உஷா
| Printable version | URL |

மோகனாவையும், லாவண்யாவையும் பார்க்கும்பொழுது, ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லை. ஆனால் பேச ஆரம்பித்ததும் தெரிந்துவிட்டது. ஆணாய் இருந்து பெண்ணாய் மாறிய அரவாணிகள் என்று. அரவாணி என்பதற்கு தமிழிலில் திருமங்கை என்பார்கள்.

மோகனாவின் வாழ்க்கை, பொதுவாய் சொல்லப்படும் அனைத்து இருபாலினரின் கதை. சிறுவயதிலேயே பெண்களின் உடுப்புகள் அணிய ஆசை. ஆண் பிள்ளைகளைப் பார்த்தால் மோகம், விளையாட்டு, பேச்சு, நட்பு எல்லாம் பெண்களுடன் மட்டுமே. வீட்டில் எதிர்ப்பு, அடிதடி. சுற்றமும், நட்புகளும் செய்த கேலியைத் தாங்காமல் ஊரை விட்டு ஓடி, மும்பைக்கு சென்று ஆபரேஷன் செய்துக் கொண்டு, முழு பெண்ணாய் மாறியது என்று சொல்லிக் கொண்டுப் போனார். ஆனால் உண்மை என்னவென்றால், இவர்களால் முழு பெண்ணாய் மாற முடியாது. கர்ப்பபை இல்லாததால் குழந்தை பெற முடியாது. மனம் பெண் மனம் என்பதால், உடலை பெண்ணாய் உருவகித்துக் கொண்டு, பெண் என்று சொல்லிக் கொள்ளலாம்.

ஆனால் சிறுவயது நண்பரை ஊர் அறிய மணந்துக் கொண்டு இருக்கிறார். ஆனால் மோகனாவின் பேச்சைப் பார்க்கும்பொழுது, அவர் கணவர் அவரைப்பணத்திற்காக கல்யாணம் செய்துக் கொண்டிருப்பார் என்று தோன்றியது. தன்னால் பிள்ளை பெற முடியாது என்பதால் தானே தன் கணவனுக்கு இன்னொரு கல்யாணம் செய்து வைத்துள்ளார். பார்க்கும்பொழுது, கணவன், அவரின் இன்னொரு மனைவி, அவள் பெற்ற பிள்ளைகளை என்று குடும்பத்தில் மோகனாவின் கை ஓங்கியுள்ளது என்று தெரிந்தது.

Kamalhaasanஏறக்குறைய இதே கதைதான் சு.சமுத்திரம் எழுதிய "வாடாமல்லி", ஆனந்தவிகடனில் தொடராய் வந்த கதையிலும். இவர்கள் சிறுவயதில் மனப்போராட்டங்களால் அலைகழிக்கப்பட்டு, பிறரின் கேலிக்கு உள்ளாகி, இக்கூட்டத்தாரால் கண்டெடுக்கப்பட்டு மும்பைக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர். மோகனா சொன்னார், வடநாட்டில் எங்களுக்கு மரியாதை அதிகம், இங்குத்தான் கேலிக்கு உள்ளாகிறோம் என்று.
 
நான் சில வருடங்கள், வடக்கில் இருந்தப் பொழுது, எதிர் வீட்டில் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. மூன்றாம் நாள் குழந்தையுடன் தாய் வீட்டுக்கு வந்த சில மணி நேரங்களில் நாலைந்து ரிக்ஷாவில் ஒரு படையே வீட்டில் நுழைந்தது. ஏதோ பாட்டுபாடி, குழந்தையை ஆசிர்வாதிக்கிறோம் என்று சொல்லிவிட்டு, பேரம் பேசி சில நூறு ரூபாய்களைப் பெற்றுக்கொண்டுப் போயினர். அவர்கள் சென்றதும் என்னவென்று அந்த வீட்டாரைக் கேட்டப்பொழுது, இப்படி குழந்தை பிறந்தால், ஆஸ்பத்திரியில் விசாரித்துக் கொண்டு வருவார்கள், நம் நிலைமைக்கு தகுந்த பணம் தந்தால் வாங்கிக் கொண்டுப் போவார்கள் என்றவர்கள் முகத்தில் தெரிந்தது கேலியும் எள்ளலும் மட்டுமே. இப்படி கல்யாண வீடுகளிலும் கும்பலாய் போவதால், இவர்கள் போனால் போதும் என்று பணத்தைக் கொடுத்து அனுப்புவார்களாம்.

ஆனால் இவர்களையும் திருமணம் செய்துக் கொண்டு வாழ்பவர்கள் உண்டு. மோகனாவைப் போல இல்லாமல், திருட்டு தனமாய் தன் வீட்டாருக்கு, இன்னொரு மனைவி பிள்ளைகளுக்கு தெரியாமல், ஒரு குடித்தனம். இது இவருக்கும் தெரியும். நல்ல மனைவியாய் கணவனுடன் மனதார வாழ்ந்தாலும், எந்நேரமும் கணவனின் உறவினர்கள் கண்ணில் பட்டு அடி உதையுடன், அவன் இழுத்து செல்லப்படலாம். அவர்கள் வாழ்வில் எந்த உத்திரவாதமும் இல்லை. மோகனாவுக்கு கிடைத்ததுப் போன்ற வாழ்க்கை எத்தனைப்பேருக்கு அமையும்?

ஆனால் மோகனா, மும்பையில் பாட்டுபாடி நிறைய சம்பாதித்தேன் என்றார். இப்படி இவர்கள் கதையைக் கேட்கும்பொழுது எல்லாம் மனதில் தோன்றும் எண்ணம், ஏன்  இவர்களால் சாதாரணமாய் வாழ முடியாதா என்று எண்ணும் மீண்டும் தோன்றியப்ப்பொழுது, லாவண்யா வந்தார்.

தாய், தந்தை, அண்ணனுடன் வசிப்பவர், குறிப்பிட்ட வயது வந்ததும் என் மனப் போராட்டத்தை சொன்னதும், தந்தை புரிந்துக் கொண்டார், தாய்க்கு சில காலமானது என்றார். ஊர் வம்பு மெல்லுபவர்கள் ஏதாவது வம்புக்கு இழுத்தால், தன் பெற்றோர்கள் கடவுள் தந்த குழந்தைகள் ஆண் ஒன்று, பெண் என்று என்று சொல்கிறார்களாம். படிப்பு, பாட்டு, ஓவியம், கணிணி என்று அவருடைய விருப்பங்களை சொல்லிக் கொண்டே போகும்பொழுது, மாறி வரும் சமுகப்பார்வை சந்தோஷத்தை அளிக்கிறது. சொல்லுவது எளிது என்றாலும் இதில் பெற்றோரின் பங்கே அதிகம்.

புகைவண்டிகளில், தெருவில், முக்கிய கடை வீதிகளில் கும்பல் கும்பலாய் பிச்சை எடுப்பதும், தான் பெண் என்று நிரூபித்து அழைப்பதையும் பார்க்கலாம். படைப்பின் கோளாறு, இதை சரி செய்ய முடியாது. ஆனால் அருவருத்து ஒதுங்கிப் போக நினைக்கும் நம் எண்ணங்களை மாற்றிக் கொண்டால், மேல் நாடுகள் போல, இவர்களும் நம் நாட்டில் சமூகத்தில் கெளரவமாய்  வாழலாம். இவர்களை நல்வழிப்படுத்தவும், எயிட்ஸ் போன்ற நோய்களில் இருந்து காத்துக் கொள்ளவும் பல சேவை அமைப்புகள் உள்ளன என்றார் மோகனா.

இந்த மோகனாவையும், லாவண்யாவையும் பார்த்தது ஜெ தொலைக்காட்சியில் நடிகை லஷ்மி நடத்தும் அச்சமில்லை இனி அச்சமில்லை என்ற நிகழ்ச்சியில்.

லாவண்யாவைப் போல, இந்த ஹார்மோன் குளறுப்படியை ஏற்றுக் கொண்டு படிப்பு, வேலை என்று சமூகத்தில் சாதாரணமாய் பலரும் வாழத் தொடங்கியுள்ளனர் என்ற செய்தி கல்கி 11. 12. 2005 இதழில் கண்ணில் பட்டது.

தங்கள் சோகங்களை, வலிகளை, போராட்டங்களை "உறையாத நினைவுகள்" என்ற நாடகமாக ஒன்பது அரவாணிகள் மட்டுமே பங்கெடுத்து  சென்னையில் அரங்கேற்றியுள்ளனர். தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் அரவாணிகள் இருப்பதாகவும்,  அவர்களில் ஒரு சதவீதத்தினர் பட்டம் பெற்று, கணிப்பொறி கற்று  தாங்களும் மனிதராய் சொந்தகாலில் நிற்க தொடங்கியுள்ளனர் என்ற செய்தியை சொல்லி நாடகம் முடிந்துள்ளது. சிறு துளிதான், ஆனால் சமூகமும், அரசாங்கமும் அவர்களும் மனிதர்கள் என்ற அங்கீகாரத்தை தரத் தொடங்கினால், அனைவரும் கெளரவமாக வாழ ஆரம்பிப்பார்கள். திரைப்படங்களில் இவர்களை நகைச்சுவை என்ற பெயரில் கேவலமாய் சித்தரிக்கும் காட்சிகள் வருகின்றன.

மனோரமா ஆச்சி, அரவாணி வேடத்தில் நடிப்பது தன்னுடைய ஆசை என்று சொல்லியிருக்கிறார். இது அவர் நடிப்பு திறமைக்கு சவாலான வேடமாய் இருக்கும். ஆண் பெண் வேடமிட்டு வந்தாலும், ஆண் என்று நன்கு தெரியும். அவ்வை சண்முகியில் கமலும், ஆணழகனில் பிரஷாந்தும் ஓரளவு ஜெயித்தாலும்,  பெண்ணாய் மாறி நடித்ததில் முதல் இடத்தைப் பெறுபவர் வைகைபுயல்தான். "பாட்டாளி" படத்தில் கருப்பு ஐஸ்வர்யாவாக வந்து, 99% சதவீதம் பெண்ணாகவே மாறி தன் நடிப்பு திறமையை நிரூபித்தார்.

oooOooo
ராமசந்திரன் உஷா அவர்களின் இதர படைப்புகள்.   கொஞ்சம் கதைக்கலாம் வாங்க பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |