ஜனவரி 26 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திரைவிமர்சனம் : பரமசிவன்
- மீனா [feedback@tamiloviam.com]
| Printable version | URL |

கொஞ்சம் வித்தியாசமான கதை. ரொம்பவும் வித்தியாசமாக தோன்றும் அஜித்.. வழக்கமாக அர்ஜுன், விஜயகாந்த் போன்றவர்கள் நடிக்கும் தேசபக்தி படம்.

Ajithஇந்தியாவில் முதலீடு செய்ய முன்வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் இந்தியாவில் தீவிரவாதம் தலைவிரித்து ஆடுகிறது - இங்கே முதலீடு செய்வது மிகவும் ஆபத்தான விஷயம் என்ற எண்ணத்தை ஏற்படுத்த தமிழகத்தில் தங்களது தீவிரவாதச் செயல்களை கட்டவிழ்த்து விடுகிறார்கள் தீவிரவாதிகள். இவர்களுக்கு காவல் துறையைச் சேர்ந்த சிலரே அனைத்து உதவிகளையும் செய்கிறார்கள். இந்தத் தீவிரவாதிகளை ஒடுக்கும் பொறுப்பு போலீஸ் உயர் அதிகாரியான பிரகாஷ்ராஜிடம் ஒப்படைக்கப்படுகிறது. நேர்மையான வழியில் தீவிரவாதிகளை அடக்க முற்பட்டால் தன் துறையைச் சேர்ந்தவர்களே அதற்கு இடைஞ்சலாக இருப்பார்கள் என்று கருதும் பிரகாஷ்ராஜ் இதற்காக தூக்கு தண்டனை கைதியான அஜித்தை தேர்ந்தெடுக்கிறார்.

அஜித்திற்கு ஏன் தூக்கு தண்டணை விதிக்கப்பட்டது என்பதற்கு ஒரு சின்ன பிளாஷ் பேக் - நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருந்த தன் தந்தை ராஜேஷையும் தன் தங்கையையும் தீவிரவாதிகளுக்கு உதவும் சில காவல்துறை அதிகாரிகள் கொன்றுவிட்டதை அறிந்து கொள்ளும் அஜித் அந்த அதிகாரிகள் அனைவரையும் கொன்று குவிக்கிறார்.. அதனால்தான் அவருக்க் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ளும் பிரகாஷ்ராஜ் அஜித்தை சாமர்தியமாக தன்னுடைய உயர் அதிகாரியின் துணையுடன் தப்பிக்க வைக்கிறார்.
தான் போட்ட திட்டம் நல்லபடியாக முடிந்தவுடன் அஜித்தை தானே கொன்று விடுவதாக தன் உயர் அதிகாரியிடம் கூறுகிறார் பிரகாஷ்ராஜ்.

ஊட்டியில் பிரகாஷ்ராஜுக்கு சொந்தமான இடத்தில் தங்கும் அஜித் பிரகாஷ்ராஜ் கூறும் அனைத்து வேலைகளையும் முடிக்கிறார். இதற்கிடையே ராசியில்லாத பெண் என்று அனைவராலும் முத்திரைக் குத்தப்பட்ட லைலாவுடன் காதல். ஒருவழியாக பிரகாஷ்ராஜ் சொன்னபடி தீவிரவாதிகள் அனைவரையும் வெற்றிகரமாக அஜித் தீர்த்து கட்டிவிட்டு லைலாவுடன் செட்டில் ஆகலாம் என்று நினைக்கிற வேளையில் அவர் தலையில் துப்பாக்கியை வைக்கிறார் பிரகாஷ்ராஜ். அதிர்ந்து போகிறார்கள் லைலாவும் அஜித்தும். அஜித்தின் நிலை என்ன என்பதுதான் படத்தின் முடிவு.

ஆரம்ப காட்சிகளில் அந்நியன் கெட்டப்பில் அறிமுகமாகும் அஜித் சிறையில் தாதா வேலை செய்யும் ரவுடிகளை அடித்து துவைக்கிறார். பத்திரிக்கையாளர் போல வரும் பிரகாஷ்ராஜை பார்த்த மாத்திரத்திலேயே போலீஸ் என்று கண்டு கொள்கிறார். லைலாவுடனான காதல் காட்சிகளில் கொஞ்சம் ரிசர்வ் டைப் ஆசாமியாக இருந்தாலும் சண்டைக் காட்சிகளில் பிரமாதப்படுத்தியுள்ளார். போலீஸ் கமிஷ்னரையும் அவர் குடும்பத்தாரையும் வீட்டுக்குள் சிறைவைத்திருக்கிறான் தீவிரவாதத் தலைவனும் அவனது கும்பலும். அவர்கள் அனைவரையும் ஒவ்வொருவராக வெளியே வரவழைத்து அஜித் சுட்டுக்கொல்கிற காட்சி அருமை. மேலும் அஜித்தின் பைக் ரேஸ் காட்சியும் சூப்பர்.. தற்போது நடந்து வரும் சினிமா ரேசில் வெற்றிபெற்று தனக்கென்று ஒரு இடத்தை தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்ற அஜித்தின் ஆர்வம் படம் முழுவதும் வெளியாகிறது.

படத்தில் அஜித்திற்கு இணையாக அனைத்து காட்சிகளிலும் வருகிறார் பிரகாஷ்ராஜ். அஜித்தை தன்னுடைய ரிமோட் போல பாவிக்கும் காட்சிகளிலும், அஜித் யார் என்ற உண்மை தெரியாமல் தனக்கும் அஜித்திற்கு கொஞ்ச நாளில் திருமணம் என்று சொல்லி பிரகாஷ்ராஜின் காலில் ஆசிர்வாதம் வாங்க லைலா விழ - அஜித்தை கொன்றுவிடும் எண்ணத்தில் இருக்கும் பிரகாஷ்ராஜ் தன்னால் தனக்கு ரொம்பவும் தெரிந்த பெண்ணின் வாழ்க்கை பாதிக்கப்படப்போவதை அறிந்து ஒரு நொடி கலங்கும் காட்சியில் கைத்தட்டல்கள் வாங்குகிறார்.

விவேக்கும் படத்தில் இருக்கிறார். அவ்வளவே.. குறிப்பிட்டு சொல்லும்படி அவரது நகைச்சுவை மனதில் பதியவில்லை. போதாத குறைக்கு சி.பி.ஐ அதிகாரியாக வரும் ஜெயராம் பேசிப் பேசியே படுத்துகிறார். லைலாவின் கேரக்டரை அமைப்பதில் இயக்குனர் கொஞ்சம் குழம்பிவிட்டார் போலும். ஆறாவது வரை தான் படித்தவர்.. எனவே அரைகுறை ஆங்கிலம் பேசுகிறார் லைலா. இது சரி. ஆனால் ஏன் முக்கால்வாசி நேரம் லூசு மாதிரி நடந்துகொள்கிறார்? புரியவில்லை.

வித்யாசாகரின் இசையில் பாடல்கள் ஓக்கே ரகம். கதையில் இயக்குனர் பி.வாசு இன்னமும் கவனம் செலுத்தியிருக்கலாம். அதிலும் குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் மனித வெடிகுண்டுகளாக மாறப்போகும் தீவிரவாதிகள் அனைவரும் என்னவோ ராணுவ அணிவகுப்பு மரியாதை செலுத்துவதைப் போல ஒரே மாதிரியாக பைக்கில் அணிவகுத்து வருவதும், அவர்களை குருவி சுடுவதைப் போல அஜித் சுடுவதும் கொஞ்சம் நெருடலான விஷயம் என்றால் ஒரு போன் பேசி முடிப்பதற்குள் சென்னையிலிருந்து ஊட்டி சென்று விடுகிறார் அஜித்..

சந்திரமுகியில் ரஜினிக்காக பார்த்து பார்த்து கதையைச் செதுக்கிய வாசு அஜித் விஷயத்திலும் கொஞ்சம் அக்கறை எடுத்து இருக்கலாம். மற்றபடி பரமசிவனுக்காக அஜித்தை தவிர வேறு யாரும் ரொம்பவும் மெனக்கெடவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

oooOooo
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   திரைவிமர்சனம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |