பிப்ரவரி 02 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கொஞ்சம் கதைக்கலாம் வாங்க : பெரூ மழக்காலம்
- ராமசந்திரன் உஷா
| Printable version | URL |
"இன்னும் சிலரோ வியாபாரம் செய்து பணத்தை அள்ளலாம் என்ற தவறான வழிக்காட்டலில் இருந்ததையும் இழந்து, கடனாளி ஆகி அவதிபடுபவர்கள்."

துபாய் என்று பொதுவாய் சொல்லப்படும் united Arab emirates  நாட்டில் நிரந்தர குடியுரிமை பெற முடியாது. விசாக்களில் சில பிரிவுகள் உண்டு. சமீபகாலமாய், இங்கு வீடு, அடுக்குமாடி குடியிருப்பு வாங்குபவர்களுக்கு ரெசிடன்ஸ் விசா தருகிறார்கள். ஆனால் இந்த வீடுகள் விலை மிக மிக அதிகம். சாதாரண மற்றும் குறைந்த சம்பளக்காரர்களால் நினைத்தும் பார்க்க முடியாது.

வேலை செய்பவர்களுக்கான ரெசிடன்ஸ் விசா என்பது  நாலாயிரம் திராம்ஸ் அளவில் மாத சம்பளம் பெற்றால் மனைவி, மக்களை அழைத்துவரலாம். அடுத்து குறைந்த சம்பளக்காரர்கள் கணவன் ஒரு விசாவிலும், மனைவியும் சாதாரண வேலை செய்து அவரவர் விசாவிலும் சேர்ந்து வாழலாம். ஆனால் பிள்ளை பெற்று, அந்த பிள்ளைகளை வைத்துக் கொள்ள முடியாது. பல முறை சாதா தொழிலாளர்கள் இப்படி திருமணமும் செய்துக் கொண்டு, பிள்ளைகளை  தங்கள் நாட்டில் மனைவியின் தாயின் பொறுப்பில் விட்டு இங்கு வசிக்கிறார்கள்.

பெரும்பாலோர்க்கு அப்படி வேலை செய்யும் பெண் கிடைப்பதும் கடினம், மேலும் மணமான பின்பு துபாய்க்கு வருபவர்களும் உண்டு. ஆக கல்யாணம் பண்ணியும் பிரம்மசாரி கதைதான். குறைந்த சம்பளம், வறுக்கும் வெய்யில்/ குளிர், ஊரில் பிரச்சனை செய்யும் உறவுகள், மனைவியின் கண்ணீர் போன்றைவைகளால் மன அழுத்தத்தால் அவதிபடுபவர்கள் அதிகம். தற்கொலை செய்திகள் அவ்வப்பொழுது கண்ணில், காதில் விழும்.

இங்கு கடையில் வேலைப் பார்க்கும் ஒருவர் மூன்று மாத விடுமுறையில் கல்யாணம் செய்துக் கொண்டு மீண்டும் அவர் மட்டும் துபாய் வந்தார். வந்த சில நாட்களில் பிரச்சனை. பெண்ணின் நடத்தையில் தவறு இருக்கிறது என்று பெற்றோர் சொல்ல, விரும்பி மணம் செய்துக் கொண்ட மனைவியை சந்தேகப்பட மனம் மறுக்க பைத்தியம் பிடித்து ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இன்னும் சிலரோ வியாபாரம் செய்து பணத்தை அள்ளலாம் என்ற தவறான வழிக்காட்டலில் இருந்ததையும் இழந்து, கடனாளி ஆகி அவதிபடுபவர்கள். சிலர், மனைவி அதிகம் படிப்பறிவில்லாதவளாய் இருந்தால், வீட்டில் உட்கார்ந்து தின்னும் உறவு கூட்டம். இவர்களையும் ஒன்றும் சொல்ல முடியாது. அந்த பெண்ணுக்கு வங்கிக்குப் போகக்கூட ஒரு துணை வேண்டும் என்ற நிலை. சம்பாதித்து அனுப்பும் பணம் வீணாகிறது என்று தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாத நிலைமை.

ஆனால் வேலைத் தேடி வரும் முறைசாராத தொழிலாளர்களின் இன்னொரு பிரச்சனை, உப்புமா கம்பனிகளில் மாட்டிக் கொள்வது. சம்பளம் இல்லாமல் தங்கும் இடம் கொடுத்துவிடுவார்கள். சுட்டெரிக்கும் வெய்யிலில் வேலையும் செய்துக் கொண்டு மாதக்கணக்காய் சாப்பாடு, குடிநீர், குளியல் (தண்ணீர் விலை இங்கு அதிகம்) முதற்கொண்டு அனைத்தும் சமாளித்து ஆகவேண்டும். சமீபக்காலமாய் இவர்கள் தெருவில் இறங்கிப் போராட தொடங்கியுள்ளனர். பத்திரிக்கைகளும் இந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் தருகின்றன.

ஆண்களுக்கு ஒரு மாதிரி பிரச்சனை என்றால், விசிட் விசாவில் பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் வலுக்காட்டாயமாய் ஈடுப்படுத்தப்படும் கொடுமையும் நடக்கிறது. பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த பெண் ஒருத்தி, தப்பிக்க ஜன்னலில் இருந்து குதித்து முதுகெலும்பு பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார். சம்மந்தப்பட்ட அரசுகள் எவ்வளவோ கடுமையான சட்டங்கள் போட்டாலும் ஏமாற்று பேர்வழிகளால் நடத்தப்படும் ஏஜன்சிகளிடம் கணிசமான பணமும் கொடுத்துவிட்டு ஏமாற்றப்படுபவர்கள் அதிகம்.

இலங்கை, பங்களாதேஷ், இந்தியா, ஸ்ரீலங்கா போன்ற நாட்டினரே அதிகம் இப்படி பாதிக்கப்படுகின்றனர். தூதரகங்கள் இந்த பிரச்சனையில் அதிகம் கவனம் செலுத்துவதில்லை என்பது பலரின் மனக்குறை. மன அழுத்ததில் அல்ப விஷயத்துக்கு பேச்சு முற்றி கைகலப்பில் முடிவதுதான் எப்பொழுது நடக்கும் சங்கதி. அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை அடிப்படையாய் வைத்து மலையாளத்தில் இயக்குனர் கமல் அவர்களால் எடுக்கப்பட்ட படம் "பெரூ மழக்காலம்". 

மீரா ஜாஸ்மின், காவ்யா மாதவன் மற்றும் பீஜூ மேனன் நடித்தது.  2004 வது வருடம் இந்திய அரசால் வழங்கப்படும் சிறந்த சமூக படத்திற்காக விருது  இப்படத்திற்குக் கிடைத்துள்ளது.

ஏறத்தாழ சமீபத்தில் செளதி அரேபியாவில் கண்ணுக்கு கண் என்ற இஸ்லாமிய சட்டப்படி தண்டனைப் பெற்று, பாதிக்கப்படவரால் மன்னிக்கப்பட்ட  கேரளாவைச் சேர்ந்த  நெளஷத் என்பவரின் கதைத்தான்.

Perumazakkalamரசீனாவின் (மீரா ஜாஸ்மீன்) கணவன் (திலீப்) கை கலப்பில் தன் அறை தோழனைக் ( வினீத்) கொன்றுவிடுகிறார். சம்பவம் நடந்த இடம் செளதி அரேபியா என்பதால்,  இறந்தவரின் மனைவி கங்கா ( காவ்யா மாதவன்) மன்னித்தால் விடுதலை கிடைக்கும் என்று தெரிந்து, அவரிடம் மன்னிப்பு கடிதம் வேண்டி மன்றாடுகிறார் ரசீனா. இதில் மீரா ஜாஸ்மீன், காவ்யா மாதவனும் போட்டிப் போட்டுக் கொண்டு நடிக்கிறார்கள். மீரா ஜாஸ்மீனின் தந்தை வேடத்தில் நடிகர் மாமூகோயா, (Mamookoya) செய்வது அறியாமல் தவிக்கும் ஏழை தந்தையின் வேடத்தில் கலக்கியிருக்கிறார்.

கேரளாவைச் சேர்ந்தவர்கள் தொகை கணிசமான அளவு அதிகம் என்றாலும் அரபு நாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் எண்ணிக்கை 1.1 மில்லியனை எட்டுக்கிறது. 2004 வது வருடம் புதியதாய் ஆரம்பிக்கப்பட்ட வெளி நாட்டு வாழ் இந்தியர்களுக்காக அமைச்சகத்தில் முதலில் திரு. ஜகதீஷ் பைலட்டும், பிறகு திரு. ஜார்ஸ் பெர்னாண்டஸ் அவர்களும் அமைச்சர்களாய் பொறுப்பெடுத்துக் கொண்டார்கள். ஆனால் சமீபத்தில் Non- Residence Indians Affairs Ministers ஆக பொறுப்பு ஏற்றுக் கொண்ட கேரளாவைச் சேர்ந்த திரு. வயலார் ரவி அவர்களின் வரவு தொழிலாளர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.

| | |
oooOooo
ராமசந்திரன் உஷா அவர்களின் இதர படைப்புகள்.   கொஞ்சம் கதைக்கலாம் வாங்க பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |