பிப்ரவரி 02 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
ஆன்மீகக் கதைகள் : தர்மரின் பொறுமையும் திரௌபதியின் பெருமையும் - 7
- ர. பார்த்தசாரதி
| Printable version | URL |

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5  | பகுதி 6

மனிதப் பிறவியை நினைத்தால் மனம் சங்கடப்படுகிறது. செய்யும் தொழிலின் காரணமாய் பல பிரிவுகளாய், ஜாதிகளாய் பிரித்து சொல்லப் பட்டாலும், உத்தமான குணங்களை விடுத்து, வீணாய் திரிகின்ற மனிதர்களை நினைத்தால், மனம் வெறுத்து வனத்தில் உள்ள மரங்கள் பால் செல்கிறது. ஏன் க்ஷத்திரியர்களை எடுத்துக் கொள்வோம் - மற்றவர்களைக் காப்பதற்கு தன் உயிரையும் தரத் தயாராக இருக்க வேண்டிய அவர்கள், யுத்தம் அல்லது துவந்தம் என்ற பெயரில் மற்றவனைக் கொல்வது க்ஷத்திரிய தர்மம் என்று கொண்டுவிட்டார்களே! இதை நினைத்து என் மனம் மிகவும் வருந்துகிறது. இதையெல்லம் நினைத்துத்தான், ஆட்டத்தில் இப்போது தோற்று வனவாசம் செல்வது என்று முடிவு செய்தேன். அதே சமயம் சகுனியின் சூதையும் முறியடிக்க வேண்டும். பிறகு வனவாசம் செல்ல வேண்டும். என்னை ஆசீர்வதியுங்கள் தேவதைகளே!'

துர்தேவதைகள்: 'முடியாத காரியத்தை செய்ய முயயலாமா? சகுனி ஆட்டத்தில் வென்றால் தான், தாங்கள் வனவாசம் செல்ல முடியும். காய் ஆடுவதற்கு முன்பே, தாங்கள் வனவாசம் என்று புறப்பட்டால் கூட அதுவும் சகுனியின் வெற்றிதான். தாங்கள் தோல்வியை ஆடும் முன்பே ஒப்புக்கொண்டு ஆடாமலேயே வனவாசம் ஏற்பதாகத்தான் சொல்லுவார்கள். எப்படியும் சகுனியின் சதுரங்க ஆட்ட வெற்றியும், தங்கள் வனவாசமும் ஒன்றாய் பின்னப்பட்டிருக்கின்றன. பிரித்துப் பார்க்கத் தெரியவில்லை. தாங்களே ஏதாவது உபாயம் இருந்தால் சொல்லுங்களேன்.'

யுதிஷ்டிரர்: 'தேவதைகளே! வணங்குகிறேன். நிச்சயம் தங்களுக்குத் தெரியாத உபாயத்தை நான் கூற முடியாது. நீங்கள் கேட்டதனால் கூறுகிறேன். நேற்று இரவு, செம்பை உருக்க ஆரம்பித்தவுடன், சகுனி மந்திர உச்சாடனம் செய்ய ஆரம்பித்து, அதன் பலனாய் தாங்கள் வெப்பத்தால் மிகவும் தாக்கப்பட்டு இருக்கிறீர்கள். சகுனி காய்களை செய்து முடித்தபின் மந்திர உச்சாடனம் செய்ய ஆரம்பித்திருக்க வேண்டும். அவர் அவசரம், பிரும்ம முகூர்த்தத்திற்கு முன் காய்களின் மீது மந்திரப் பிரயோகம் முழுவதும் நடந்து விட வேண்டும் என்ற வேகம். அதன் பலனை சகுனி அனுபவித்தே ஆக வேண்டும். இப்போது சகுனி கையில் இருக்கும் பகடைக் காய்கள் இரண்டிலும் அந்த வெப்பத்தின் ஒரு பகுதியை உண்டாக்குங்கள். சகுனி அதைத் தாங்கிக் கொண்டால், அவருக்கு கட்டுப் பட்டு ஆட்டத்தில் அவர் ஜெயமடைய உதவுங்கள். சூடு பொறுக்க முடியாமல் அவர் காயை கீழே தவற விட்டால், 'மந்திர உச்சாடனம் செய்த காயைத் தவறவிட்டதால் பகடைக் காயிலிருந்து நாங்கள் விடுபடுகிறோம்' என்று கூறி வெளிவந்து விடுங்கள். மறுமுறை மந்திர உச்சாடனம் செய்து காயில் உங்களைக் கட்டுப் படுத்த உடன் அவரால் முடியாது. ஆட்டம் முடிந்து நான் வனவாசம் புறப்படும் போது என்னோடு வனத்திற்கு வாருங்க்கள்.'

துர்தேவதைகள்: 'யுதிஷ்டிரரே! எங்களுக்குப் புரிகிறது. நாங்கள் இதை நிச்சயம் செய்வோம்'.

சகுனி காயை கையில் முன்னும் பின்னுமாக உருட்டிக் கொண்டிருக்கிறான். காய்கள் திடீரென அதி வெப்பத்துடன் கையைச் சுடுகிறது. புத்தி ஏதும் யோசிக்கும்முன் சகுனி காயை கையிலிருந்து கீழே தவற விடுகிறான். யுதிஷ்டிரன் சட்டென இரு கைகளாலும் காயை ஏந்திக் கொள்கிறான்.

தேவதைகள் (சகுனியிடம்): 'சகுனி! நேற்று உலைக்களத்தில் உருகிய நிலையில் இருந்த செம்பில் எங்களை ஆவிர்க்குமாறு அவசரப்பட்டு மந்திர உச்சாடனம் செய்தீர்கள். அந்த வெப்பம் எங்களை மிகவும் தாக்கியது. மந்திரத்திற்கு கட்டுப்பட்டு அதைப் பொறுத்தோம். இன்று அந்த வெப்பத்தின் சிறு பகுதியை தங்களால் தாங்க முடிகிறதா என்ற சோதனையில் தோற்றுவிட்டீர். அதே சமயம் யுதிஷ்டிரர் வென்று விட்டார். அவருடைய தர்ம சிந்தனை எங்கள் மனதை குளிரச் செய்துவிட்டது. எங்களை நீங்கள் தவற விட்டதால் இனி யுதிஷ்டிரர் வேண்டினாலே தவிர திரும்ப அந்த காய்களில் புக மாட்டோம். அவையிரண்டும் இனி சாதாரண செப்புக் காய்கள் தான். ஆடித் தோற்றால் அதன் முழுப் பொறுப்பும் தங்களுடையது தான்.'

இந்த வார்த்தைகளை யுதிஷ்டிரரும் கேட்டுக் கொண்டிருந்தார்.

சகுனிக்கு மரணபயம் வந்து விட்டது. கண்களில் சவக்களை. துரியோதனனின் கொலைவாள், யுதிஷ்டிரன் கையில் இருக்கும் பகடைக் காய்களில் தெரிகிறது. இந்த வாளை, துரியோதனன் கையில் யுதிஷ்டிரன் கொடுத்து விடுவானா?

யுதிஷ்டிரர்: "சகுனி அவர்களே! 'தலைக்காய் போய் பழமாய் வருமா?' என்றா யோசிக்கிறீர்கள்? போகாமல் தலைப் பழம் வரும். நம்புங்கள்" என்று சகுனிக்கு மட்டும் கேட்கும் படி கூறி கைகளில் இருந்த காய்களில் ஒன்றை மட்டும் எடுத்து மேல் கீழாய் மாற்றி வைக்கிறார்.

சகுனி யோசிக்கிறான்: 'இப்போது இந்த தேவதைகள் அவையில் இருப்பவர்களோடு இன்னுமொரு சாட்சி, அவ்வளவுதான். இனி உபகாரம் ஏதாவது செய்ய வேண்டும் என்றால், யுதிஷ்டிரன் ஏவினால் தான் செய்வோம் என்றும் தெளிவாய் கூறி விட்டன. இப்போது வெற்றி என்பது நிச்சயமல்ல. தேவதைகள் யுதிஷ்டிரன் சொற்படி ஆடுவதென்றால், யுதிஷ்டிரன் வெற்றி நிச்சயம். நான் தோற்ற அடுத்த கணம், முரடன் துரியோதனன் என் தலையை தனியாக எடுத்து மரியாதை செய்து விடுவான்; தேவதைகள் முன் செய்த சபதத்தை நான் நிறைவேற்ற வேண்டியது இல்லை. அவசரத்தில் தேவதைகளை நான் கொடுமைப் படுத்தி விட்டேன். பதிலுக்கு அவைகள் என்னை சோதித்து அதில் நான் தோற்றதோடு, யுதிஷ்டிரன் வென்று விட்டான் என்று தேவதைகள் தெரிவித்துவிட்டன.

இப்போது என் உயிர் யுதிஷ்டிரன் கைப்பிடிக்குள். காயை மாற்றி ஏதோ சொன்னானே! தலைக்காய் போய் பழமாய் வருமா? தலை போகாமல் பழம் வரும் என்று நம்புங்கள் என்கிறானோ? யுதிஷ்டிரனை நம்பினால் தலை தப்புமா? காய் தலை மாற்றி போட்டால் தலை போய் காய் பழமாகுமா? அப்படியானால் தலை போகாமல் பழம் வரும். ஆகா! யுதிஷ்டிரன் சொல்லி விட்டான் - சகுனி உன் தலை தப்பும்; என்னை நம்பு. என் தலை தப்புவதற்கு ஆட்டத்தில் யுதிஷ்டிரன் தோற்க வேண்டும். என்னால் ஏதும் செய்ய முடியாது. யுதிஷ்டிரன் கையில் காய்கள்! தேவதைகளும் யுதிஷ்டிரன் ஏவினால் நாங்கள் ஏதும் செய்வோம் என்று சொல்லுகின்றன. என்னை நம்பு என்கிறானே! துரியோதனனிடமிருந்து நிச்சயம் என்னைக் காப்பாற்றுவான்.

யுதிஷ்டிரனிடம் நேரிடையாக ஏதும் பேச முடியாது. நான் செய்த மந்திர, உபசார பலன், தேவதைகள் இன்னமும் என் காதில் பேசுகின்றன. அவற்றிடம் சொன்னால் யுதிஷ்டிரனிடம் சொல்லலாம். ஐயகோ! யுதிஷ்டிரனிடம் உயிர் பிச்சை கேட்க வேண்டிய நிலை வந்து விட்டதே!! ஓ! தேவதைகளே! நான் நேற்று செய்த தவறு, இன்று என் உயிருக்கு எமனாக வந்து விட்டதே. நான் காயை தவற விட்ட போதே, விட்டு விலகி விட்டோம் என்று கூறி விட்டீர்கள். எது எப்படியோ, என் சாவுக்கு காரணம் நீங்கள் தான். துரியோதனன் என் கழுத்தை அறுத்தால் என்ன? அதை நீங்கள் விலகி நின்று பார்த்தால் என்ன?'

தேவதைகள்: 'கேட்கும் முன் கொடுப்பவன் கடவுள் மட்டும் தான். அதே போல் யுதிஷ்டிரன் நீ கேட்கும் முன் உனக்கு உயிர் பிச்சை கொடுத்து விட்டான்'.

சகுனி (உடனே மனத்தில் சந்தோஷத்துடன்): "ஆட்டத்தில் நான் ஜெயிப்பேனா?"

தேவதைகள்: "உன் கெட்ட புத்தி! சாவின் பிடியிலிருந்து தப்பிக்க வழியிருக்கிறது என்ற உடனேயே மனத்தில் மமதையுடன் ஜெயம் எனக்கு என்று பேச ஆரம்பித்துவிட்டாயே சகுனி! உன் தோல்வியின் முடிவு எப்போதோ தெரிந்து விட்டது. கையில் காயை ஏந்திய போதே யுதிஷ்டிரன் ஜெயித்து விட்டான். அதன் பலன் தான் நீ உயிருடன் இருப்பது. உன் உயிருக்கு உத்திரவாதம் என்ற வாக்கின் படி யுதிஷ்டிரன் விளையாடுகிறான். சகுனி! உனக்கு தர்ம நியாயங்கள் மனத்தில் எட்டாது. ஏனென்றால், எல்லாவற்றையும் புத்தியினால் மட்டுமே பார்ப்பவன் நீ. பிறரையும் நீ நினைக்கும் புத்திசாலித்தனத்தினால் மட்டும் எடைபோடும் குணம் உன்னுடையது. அடுத்தவர் மனம் எவ்வளவு விசாலமானது என்பதை அறிய உனக்குத் தெரியாது. ஏனென்றால் உனக்கு மனத்தினால் சிந்திக்கத் தெரியாது. இப்போது யுதிஷ்டிரன் காயை கொடுக்கப் போகிறான். மறுபேச்சு ஏதும் பேசாமல் ஆடு. எமன் வாயில் வரை வந்து விட்ட சில உயிர்களை, பதிமூன்று வருட இடைவெளிக்கு நகர்த்திச் செல்ல யுதிஷ்டிரன் முன்பே தீர்மானித்துவிட்டான். அவற்றுள் உன் உயிரும் ஒன்று."

யுதிஷ்டிரன் சகுனியின் கைகளில் காயை கொடுத்து "ஆடுங்கள்" என்று கூறுகிறான். காய்கள் பனிபடர்ந்த பழங்கள் போல் குளிர்ந்து காணப்படுகின்றன.

சகுனி யோசிக்கிறான்: 'நான் யார் சார்பில் ஆடுகிறேன்? துரியோதனன் சார்பில் ஆடுகிறேனா? இல்லை யுதிஷ்டிரன் சார்பில் ஆடுகிறேனா? என்னைக் காத்துக் கொள்ள முடியாத நான், அபயம் அளித்த யுதிஷ்டிரன் சார்பில் தான் விளையாடுகிறேன். இது எனக்குத் தெரிந்துவிட்டது.'

சகுனி (ஏதோ எண்ணத்தில்): "எனக்கு ஒன்றுதான் தெரிகிறது."

யுதிஷ்டிரர்: "தங்கள் எண்ணிக்கை ஒன்று. அவ்வளவுதானே! நீங்கள் ஆடலாம்". யுதிஷ்டிரர் மனத்துள், 'தேவதைகளே! பகடை ஒன்றைக் கொடுங்கள்'.

சகுனி காயை உருட்டுகிறான். பகடை ஒன்று.

யார் ஜெயித்தார்கள்? யார் தோற்றார்கள்? யாருக்கும் தெரியாது! எல்லோரும் பகடை ஒன்று என்பதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே யாரும் சொல்வதற்கு முன்பு, சட்டென சகுனி எழுந்து, காய்கள் இரண்டையும் எடுத்து யுதிஷ்டிரன் கைகளைப் பற்றி கொடுக்கிறான். சகுனி யுதிஷ்டிரனின் கைகளை அழுந்தப் பற்றி, தன் கைகளால் நன்றியை ஒரு நொடியில் தெரிவித்துவிட்டான்.

நடந்ததைப் பார்த்த துரியோதனன் நினைக்கிறான்: 'மாமா சகுனி, ஆட்டத்தில் ஒன்று பெற்று வென்று விட்டார். யுதிஷ்டிரன் பல வருட வனவாசம் செய்யும் போது 'எப்படி இழந்தோம்?' என்பதை தினம் நினைத்துப் பார்ப்பதற்காக, காய்கள் இரண்டையும் ஏக உபசாரத்துடன் கொடுப்பதுபோல் யுதிஷ்டிரன் கைகளில் எழுந்து நின்று கொடுத்துவிட்டார். இனி இந்திரப்பிரஸ்தமும் நம்முடையது. பாண்டவர்கள் வாசம் வனவாசம்தான்.' சந்தோஷம் பொங்குகிறது அவன் மனத்தில்.

கர்ணன் நினைக்கிறான்: 'நேற்று திரௌபதி இரண்டு வித காய்களையும், அஸ்திரம் என்று கூறி முறியடித்தாள். இன்று, யுதிஷ்டிரன் இதை எதிர்பார்த்தேதான் வந்திருக்க வேண்டும். நடுவில் சகுனி காய்களை கைகளிலிருந்து தவற விட்டார். ஏதோ பொறுக்க முடியாமல் அவசரமாய் காய்களைப் போடப் போனார். அதே சமயம் யுதிஷ்டிரன் இதை எதிர்பார்த்தே இருந்தது போல், சட்டென காய்களை கையில் ஏந்தி விட்டான். மாமா சகுனியின் சூது, அவர் கைகளையே சுட்டு விட்டதோ? பின் யுதிஷ்டிரனை அது சுடவில்லை! ஏன், அவன் பொறுமை, அவன் தர்ம குணம் அவனைக் காக்கிறதோ?'

திருதராஷ்டிரன்: 'நேற்று காயில் சூது இருந்தது என்பதை பலரும் உணர்ந்திருப்பார்கள். இன்று உலோகக் காய் என்று பொதுவாக சொல்லி, 'சோதியுங்கள்' என்று மாமேதையான விதுரனைக் கேட்டேன். துரியோதனன் செம்பு என்று சொல்லி, விதுரன் செம்பைப் பற்றி சிறிது சிந்தி என்று யுதிஷ்டிரனுக்கு கோடி காட்டி விட்டான். இருந்த போதும் "பகடை ஒன்று" என்று சகுனி கேட்டு பாண்டவர்கள் வனவாசத்தை உறுதி செய்து விட்டான்.

என்னால் ஒரு முடிவிற்கும் வர முடியவில்லை. யுதிஷ்டிரன் உண்மையில் ஆட்டத்தில் தோற்றானா? இல்லை, இந்த வழியை தானே தேர்ந்தெடுத்தானா? எது எப்படியோ, இன்னும் பல வருடம் இடைவெளி! யுதிஷ்டிரன் பதிமூன்று வருடங்களுக்கு எதையோ ஒத்திப் போட்டு விட்டான். எதை, யாருக்காக, எதற்காக, எப்படி என்று ஏதும் புரியவில்லை.'

விதுரர் நினைக்கிறார்: 'என்னால் முடிந்த வரை யுதிஷ்டிரனை எச்சரித்து விட்டேன். சகுனியுடன் துரியோதனன் சேர்ந்து, சூது ஏதோ செய்திருக்க வேண்டும். நடந்தவற்றை வைத்து பார்க்கையில், யுதிஷ்டிரன் தெரிந்தே தேர்ந்தெடுத்து வனவாசம் செல்லுவது என்று தீர்மானித்து விட்டான் எனத் தோன்றுகிறது. ஏன்? எதற்காக யுதிஷ்டிரன் இந்த முடிவை செய்தான்? சூது எப்போதும் வெல்லுமா? பகடைக் காய்களை எடுத்து சகுனி மிக மரியாதையுடன் எழுந்து நின்று கொடுத்தார். உண்மையில் சகுனி வெற்றி பெற்றிருந்தால் இப்படி நடந்து கொள்ள மாட்டார். எதையோ கவனிக்கத் தவறி விட்டேன். நடுவில் யுதிஷ்டிரனின் கைகளில் இந்த காய்கள் இரண்டும் இருந்தன. சகுனி ஏன் கொடுத்தான்? எப்படிக் கொடுத்தான்? அதை கவனித்திருந்தால் எனக்கு எல்லாம் சரியாக புரிந்திருக்கும். இது யுதிஷ்டிரனின் வெற்றியா என்ன ?'

(தொடரும்..)

| | | |
oooOooo
ர. பார்த்தசாரதி அவர்களின் இதர படைப்புகள்.   ஆன்மீகக் கதைகள் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |