பங்குச்சந்தைக்கும் தமிழ் சினிமாவுக்கும் பொதுவான ஒரு குணம் உண்டு. என்ன என்று தெரியுமா ? செண்ட்டிமெண்ட். தமிழ் சினிமாவுக்கு அம்மா செண்ட்டிமெண்ட், தாலி செண்டிமெண்ட் என்று பலச் செண்டிமெண்ட்கள் இருப்பது போலப் பங்குச்சந்தையின் உயர்வுக்கும் சில செண்டிமெண்ட்கள் தேவைப்படுகின்றன. அதுவும் கடந்த சில வாரங்களாக தள்ளாடிக்கொண்டிருக்கும் சந்தையை ஊக்கப்படுத்த நிச்சயமாக ஒரு பலமான செண்டிமெண்ட் தேவைப்பட்டது. ஒரு வழியாகக் இந்த வாரம் அது கிடைத்தும் விட்டது.
திங்களன்று நடந்த முதல் வர்த்தகத்திலேயே குறியீடுகள் சுமார் 77 புள்ளிகள் சரிவடைந்தவுடன், இந்த வாரமும் சந்தை சரிவடையக் கூடும் என்றே தோன்றியது. இந்த வாதத்தையே பெரும்பாலானப் பங்குச் சந்தை வல்லுனர்களும், பத்திரிக்கைகளும் முன்வைத்தன. இதோடு சேர்த்து இந்த வாரம் வியாழனன்று டிரைவேட்டிவ்ஸ் காண்ட்ராக்ட் (Derivatives) முடிவடைவதால், சந்தை மேலும் கடும் வீழ்ச்சியை சந்திக்கும் என்றே அனைவரும் கருதினர். சந்தையில் உள்ள தடுமாற்றமானச் சூழலில் டிரைவேட்டிவிஸ் காண்ட்ராக்ட்டை அடுத்த மாதத்திற்கு யாரும் தொடர மாட்டார்கள், பங்குகளை பங்குச்சந்தையில் விற்று விடுவார்கள் என்ற எண்ணமே பரவலாக இருந்தது.
அனைவரின் எதிர்பார்புக்கும் மாறாக செவ்வாயன்று குறியீடு 56 புள்ளிகள் உயர்ந்தது. கடந்த வாரம் போல் இல்லாமல் இந்த வாரம் நிறுவனங்களின் காலாண்டு அறிக்கைகள் சந்தையை உற்சாகப்படுத்தின. இதோடு சேர்த்து பங்குகளின் விலை கடுமையாகச் சரிந்திருந்தால் இந்தச் சூழலை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முதலீட்டாளர்கள் முனைந்தனர். வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் (FII), உள்நாட்டு நிறுவனங்கள் தவிர சிறு முதலீட்டாளர்களும் பங்குகளை வாங்கினர். ஒரு கட்டத்தில் குறியீடு சுமார் 100 புள்ளிகள் உயர்ந்திருந்தது. குறிப்பாக வங்கி, ஆட்டோமொபைல் போன்ற துறைகளில் முதலீடு அதிகமாக இருந்தது.
ஆட்டோமோபைல் துறையில் ஆர்வம் பெருகியதற்கு காரணம் மாருதி நிறுவனத்தின் எதிர்பார்ப்பை மிஞ்சிய அறிக்கையே. இந்தக் காலாண்டில் மாருதி சுமார் 239 கோடி ரூபாய் லாபம் கண்டுள்ளது. கடந்த காலாண்டின் லாபமான 140 கோடியுடன் ஒப்பிடும் பொழுது இது சுமார் 70% உயர்வு. பஜாஜ் நிறுவனத்தின் அறிக்கைச் சந்தைக்கு ஏமற்றமளித்த நிலையில் மாருதியின் அறிக்கை அந்தப் பங்குகளை எகிறச் செய்தது. இந்தியர்கள் நிறையக் கார்களை வாங்கிக் குவிக்கிறார்கள் போலும். டூ விலர்களை யாரும் கண்டு கொள்வதில்லை. இரு நிறுவனங்களின் இரு வேறான அறிக்கை இதனையேக் குறிக்கிறது.
மாருதியின் உயர்வுக்கு இது மட்டுமே காரணமல்ல. அரசிடம் இருக்கும் மாருதியின் உரிமையில் 8% மற்றும் BHEL நிறுவனத்தின் 10% உரிமையையும் அரசு விற்கக் (Disinvestment) கூடுமென்று செய்திகள் வெளியாயின. இந்தச் செய்திகளும் மாருதியின் பங்குகளை சுமார் 3% அளவுக்கு உயர்த்தி 422 ரூபாய்க்கு கொண்டு வந்தன.
லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கப் போவதில்லை என்ற இந்தக் கூட்டணி அரசின் கொள்கை முடிவில் ஏற்பட்ட மாற்றம் அனைவருக்கும் வியப்பையே ஏற்படுத்தியது. வழக்கம் போல் இடதுசாரிக்கட்சிகள் நிதி அமைச்சரைக் குற்றம் சாட்டத் துவங்கினர். கூட்டணி அரசின் கொள்கை வரைவான CMPல் இருந்து விலகி அரசு தன்னிச்சையாக முடிவு எடுப்பதாக குற்றச்சாட்டுகள் எழ, இந்த Disinvestment திட்டம் இப்போதைக்கு இருக்காது என்பதே வார இறுதி நிலவரம்.
மற்றொரு பொதுத்துறை நிறுவனமான NTPCம் ஒரு நல்ல அறிக்கையைக் கொடுக்க சந்தையில் பாசிடிவ் செண்டிமெண்ட் கரைபுரண்டு ஒடத் துவங்கியது. இந்தக் காலாண்டில் NTPC 1365.5 கோடி லாபம் ஈட்டியுள்ளது. கடந்த காலாண்டின் லாபம் 819 கோடி. இது சுமார் 66% உயர்வு. இந்த உயர்வுக்கு ஏற்றாற் போல NTPC பங்குகளும் உயரத் தொடங்கின. NTPC பங்குகளுக்கு வரும் நாட்களில் ஏற்றம் இருக்கும் என்றே கருதப்படுகிறது.
இதைப் போலவே HDFC நிறுவனமும் நல்ல அறிக்கையைக் கொடுத்தது.
புதனன்று குடியரசு தினத்தை முன்னிட்டு சந்தைக்கு விடுமுறை. இந்திய இராணுவத்தின் ஏற்ற மிகு அணிவகுப்பை பார்த்தச் சந்தை அதே மிடுக்குடன் வியாழன்று எகிறத் தொடங்கியது. மும்பை பங்குச்சந்தை குறியீடு, BSE, சுமார் 76 புள்ளிகள் உயர்ந்து 6239 புள்ளிகளுடனும், தேசியப் பங்குச்சந்தைக் குறியீடு, NSE Nifty, 23 புள்ளிகள் உயர்ந்து 1955 புள்ளிகளுடனும் வியாழனன்று வர்த்தகம் முடிவடைந்தது.
வியாழனன்று முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டினர். அதைப் போலவே ஏற்கனவே பங்குகளை விற்று வைத்தவர்களும் பங்குகளை வாங்கி லாபமடைய முனைந்தனர். சில நிறுவனங்களின் வியக்கத்தக்க காலாண்டு அறிக்கைகள் சந்தையை உற்சாகத்தில் ஆழ்த்தின.
பார்தி நிறுவனம் ஒரு சிறப்பான அறிக்கையைக் கொடுத்தது. இந்தக் காலாண்டில் பார்தி நிறுவனத்தின் லாபம் 70% அதிகரித்துள்ளது. கடந்த காலாண்டில் சுமார் 191 லாபம் ஈட்டிய பார்தி, இந்தக் காலாண்டில் சுமார் 372 கோடி லாபம் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது லாபம் 90% உயர்ந்துள்ளது. நாட்டின் செல்பேசித் தொடர்புச் சந்தையில் ஏர்டெல்லின் பங்கு 26%. பார்தி பங்குகள் ஒரு கட்டத்தில் சுமார் 5% உயர்ந்திருந்தது.
வியாழனன்று உயர்ந்தப் பிறப் பங்குகளில் முக்கியமானவை மென்பொருள் நிறுவனமான ஹேக்சாவேர். இந்தப் பங்குகள் ஒரே நாளில் சுமார் 16% உயர்வைப் பெற்றன. இதைப் போலவே ஜவுளிப் பங்குகளான அரவிந்த் மில்ஸ், பாம்மே டையிங் போன்றவையும் லாபமடைந்தன.
அரவிந்த் மில்ஸ் நிறுவனம் கடந்த காலாண்டுடன் ஒப்பிடும் பொழுது 19% உயர்வையும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது 89% உயர்வையும் பெற்றிருக்கின்றது. இந்தப் பங்குகளுக்கு வரும் நாட்களில் நல்ல ஏற்றமிருக்கும்.
சந்தை இரு நாட்களாக உயர்ந்தாலும் (இந்தப் பதிவு வியாழனன்று இரவு எழுதப்பட்டது) வெளிநாட்டு முதலீடுகளைப் பற்றிய அச்சம் இருக்கத் தான் செய்கிறது. டாலரின் விலை ஏற்றமடைந்தால் இந்தியப் பங்குச்சந்தையில் வெளிநாட்டு முதலீடு குறைந்துப் போகும் என்ற கருத்தை Associated Chambers of Commerce and Industry (Assocham) என்ற அமைப்பு நடத்திய சர்வேயில் மிகப் பெரிய நிறுவனங்களின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த வருட துவக்கத்தில் சில மாதங்களுக்கே இந்த நிலை இருக்கும். பிறகு சரியாகிவிடும் என்றும் கருதப்படுகிறது. கடந்த ஆண்டு சுமார் 8.5 பில்லியன் டாலர் முதலீடுகளைக் குவித்த வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகளைப் பொறுத்தே இந்தியப் பங்குச்சந்தையின் உயர்வு இருக்கும்.
|