Tamiloviam
பிப்ரவரி 08 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
பேட்டி : தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இன்ஜினியர் கணேசனுடன் பேட்டி
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
| | Printable version | URL |

Ganesan & Familyஇந்தியாவில் உள்ள தீவிரவாத அமைப்புக்களில் உல்பா தீவிரவாத அமைப்பு படு மோசமானது. மனிதாபிமானம் கிலோ என்ன விலை என்று கேட்பவர்கள் இவர்கள் என்ற விமர்சனமும் உண்டு. இவர்களால் அசாமில் கடத்தப்பட்ட கணேசன் என்ற சிவில் இன்ஜினியர் அதிர்ஷ்டவசமாக விடுவிக்கப்பட்டுள்ளார். இவரை தீவிரவாதிகள் விடுவித்ததற்கு முப்பை மிரர் பத்திரிக்கை கணேசன் மகா அதிர்ஷ்டக்காரர் என வர்ணித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விஜயகரிசல்குளம் என்ற குக்கிராமத்தை சேர்ந்த இவர் தனது சொந்த ஊருக்கு வந்த பொழுது கிராமமே திரண்டு வரவேற்றது.

சுற்றிலும் பசுமை நிறைந்த வயல்கள், தென்னைகள் இவற்றிற்கு நடுவே இருக்கிறது விஜயகரிசல்குளம். மனைவி ரதிதேவி ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகளுக்கு தந்தையான கணேசன் தன்னை தீவிரவாதிகள் விடுவித்தது ஒரு அதிசயம் தான் என்கிறார். இவர் கடத்தப்பட்டார் என்பதை அறிந்து மிகவும் சிரமப்பட்டவர் இவரது மனைவி ரதி தேவி. கணவன் உயிரோடு வர வேண்டும் என்பதற்காக வேண்டாத கோவில் கிடையாது. காலில் விழாதா அரசியல்வாதிகள் கிடையாது என்கிறார் ரதி தேவி. கணவர் வேண்டும் என்பதற்காக சில கோவில்களில் 1001 முறை சுற்றி இருக்கிறார். பிள்ளையார்களுக்கு அருகம்புல் மாலை கோர்த்துப் போட்டு இவர் கையே தேய்ந்து விட்டது, இவை தவிர கண்களில் கண்ணீர், சரியான சாப்பிடாமல் கணவருக்காக அலைந்த ரதிதேவியின் முகத்தில் தற்பொழுது புது புரிப்பு. ஜனாதிபதி அப்துல்கலாம், பிரதமர், தமிழக முதல்வர், ம.தி.மு.க. தலைவர் வை.கோ., உள்பட பல அரசியல் தலைவர்கள் தங்களுக்கு பெரிதும் உதவியதாக நெகிழ்ச்சியோடு சொல்கிறார். இந்நிலையில் கணேசனுடன் பேசியதிலிருந்து..............

தமிழோவியம் :- அசாமில் எத்தனை ஆண்டுகள் பணி செய்கிறீர்கள் ?

பதில் :- எல்லைப் பாதுகாப்பு படையின் பிரிவில் எனக்கு அங்கு பணி. முதலில் எனக்கு இரண்டு ஆண்டுகள் தான் பணி. அதன் பின் டிரான்பர் வரும் என நினைத்தேன். எனது பணி சிறப்பாக இருந்ததால் என்னை மேலும் ஓர் ஆண்டு நீடிப்பு செய்து பணி செய்ய சொன்னார்கள். அங்கு வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பில் பாலங்கள் கட்டுவதற்கு சர்வே அளந்து கொடுப்பது தான் எனது பிரதான வேலை.

தமிழோவியம் :- நீங்கள் வேலை பார்த்த சமயங்களில் இந்த மாதிரி கடத்தல் சம்பங்கள் வேறு எதாவது நடந்திருக்கிறதா?

பதில் :- இல்லை. அப்படி நடந்ததில்லை. நான் அங்கு வேலை பார்த்த காலங்களில் ஏப்ரல், மே மாதங்களில் எனது குடும்பத்தினர் அங்கு வந்து தங்குவார்கள். இந்த வருடமும் அங்கு வர திட்டமிட்டு இருந்தனர். அங்கு இரண்டு மாதம் பிரச்சினை இல்லாமல் இருப்பார்கள். ஊருக்கு வரும் பொழுது கூட அவர்களாகவே வந்து விடுவார்கள். அது நல்ல ஏரியா தான்.

தமிழோவியம் :- நீங்கள் எப்படி கடத்தப்பட்டீர்கள் ?

பதில் :- எனது வேலையை முடித்து விட்டு மாலை 6 மணி அளவில் மோட்டர் சைக்கிளில் வந்து கொண்டிருந்த பொழுது திம்மகுச்சி என்ற பாலத்தின் அருகே கடத்தப்பட்டேன். ஒருவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி உதவி கேட்பது போல் கேட்டார். நானும் எனது பைக்கை நிறுத்தி அவருக்கு உதவலாம் என்று சென்ற பொழுது முகமூடி போட்டு மறைந்திருந்த சிலர் வந்து என்னை பிடித்து உன்னை நாங்கள் கடத்துகிறோம் என சொல்லி அழைத்துச் சென்றனர். எனது உடன் வந்த நபரை கையை கட்டி விட்டுவிட்டனர். இப்படித் தான் கடத்தல் நடந்தது.

தமிழோவியம் :- வெளியே சுதந்திரமாக இருந்து விட்டு தீவிரவாதிகளின் கண்காணிப்பில் இருக்கும் பொழுது, உங்களுடைய உணர்வு எப்படி இருந்தது?

பதில் :- அது ஒரு வித்தியாசமான உணர்வு தான். உயிரின், சுதந்திரத்தின் மதிப்பு அப்பத் தான் தெரிந்தது. அதுக்கு முன்னாடி உயிருக்கோ, சுதந்திரத்திற்கோ உரிய மதிப்பு தெரியாமல் தான் இருந்தது. அதுக்கு முக்கியத்துவமும் நான் கொடுத்ததில்லை.

தமிழோவியம் :- இப்படி உங்களைப் போன்ற ராணுவத்தினரை, பொதுமக்களை தீவிரவாதிகள் கடத்தவதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?

பதில் :- 28 வருடமாக தனி நாடு கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இது எல்லாம் அரசியல் சமாச்சாரம். நான் அதில் தலையிட முடியாது. தலையிடவும் விரும்பல. பிறரை கடத்தி அனைவரது கவனத்தை ஈர்க்க இதனை செய்யலாம். அரசை மிரட்டுவதற்காக இப்படி செய்யலாம். பினைத் தொகைக்காகவும் இது போன்ற கடத்தலை அவர்கள் மேற்கொள்கிறார்கள்.

Ganesan & Familyதமிழோவியம் :- அவர்களுக்கு உள்ளூர் பொது மக்களின் ஆதரவு இருக்கிறதே?

பதில் :- உள்ளூர் மக்களின் ஆதரவு இல்லாமல் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. அந்த மக்களும் உண்மை தெரியாமல் தங்களுக்காகத் தான் அவர்கள் போராடுவதாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இது தான் அவர்களின் பலம் என நினைக்கிறேன். இவை தவிர உல்பாக்கள் தங்களுக்கு கென்று திருமணம் செய்து கொள்வதில்லை. எந்த நேரத்திலும் சாவதற்கும் தயாராக இருக்கிறார்கள்.

தமிழோவியம் :- உங்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை உங்களால் அங்கு அறிந்து கொள்ள முடிந்ததா?

பதில் :- இல்லை தெரிய வாய்ப்பில்லை. பொதுவாக கண்ணைக் கட்டித் தான் அழைத்துச் செல்வார்கள். கிட்டதட்ட 60 கிலோ மீட்டர் தூரம் நடந்திருப்பேன். எங்கு செல்கிறார்கள். என்ன செய்கிறார்கள் என்று தெரியாது. இங்கு வந்தப் பிறகுதான் என்னை மீட்க எத்தனை பேர் உதவியாக இருந்திருக்கிறார்கள் என்பதை உணர முடிந்தது. அத்தனை மீடியாக்களும் எனக்காக கரல் கொடுத்திருப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

தமிழோவியம் :- உல்பா தீவிரவாதிகளின் அணுகுமுறை எப்படி இருந்தது?

பதில் :- என்னை கடத்திய உடனே என்னிடம் சொல்லி விட்டனர். உங்களிடம் இருந்து பணம் எதுவும் வாங்க மாட்டோம். இந்திய அரசாங்கத்திடம் இருந்து தான் பணம் வாங்கப் போகிறோம். அது வரை நாங்கள் சொல்வதைத் தான் கேட்க வேண்டும் என்று சொல்லி விட்டனர். தூங்குவதற்கு மட்டும் இரண்டு கம்பளி போர்வைகள் கொடுத்தனர். சாப்பாடு சரியில்லாமல் தான் இருந்தது. மற்றபடி எனது கண்ணை கட்டியிருந்ததால் அவர்களது அணுகுமுறையை சரியாக தெரிந்து கொள்ள முடியவில்லை. நான் ஆரம்பத்திலேயே சொல்லி விட்டேன். என்னை விட்டு விடுங்கள். என்னை வைத்து அரசாங்கத்திடம் பணம் வாங்க முடியாது என்பதை தெளிவாக சொல்லி விட்டேன்.

தமிழோவியம் :- உல்பா தீவிரவாதிகளிடம் இருந்து மீண்டு வருவது அவ்வளவு சுலபமானதல்ல என்று சொல்கிறார்கள். நீங்கள் மீண்டு வந்ததைப் பற்றி எப்படி நினைக்கிறீர்கள்?

பதில் :- அது மறுபிறவி என்று தான் சொல்ல வேண்டும். அது தவிர நாங்கள் அவர்களின் பகுதியில் வளர்ச்சி பணிகளைத் தான் செய்து கொண்டு இருந்தோம். அதனால் உள்ளூர் மக்கள் எனக்காக குரல் கொடுத்துள்ளனர். எனது உயிருக்கு ஆபத்து என்றால் அடுத்து அந்தப் பகுதியில் வளர்ச்சிப் பணிகள் நடக்காது என்று அவர்கள் உணர்ந்திருந்தனர். அவை ஒரு புறம் நடந்தாலும் ராணுவத்தின் சார்பில் என்னை எங்கு வைத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து மீட்க முயற்சி எடுத்து வந்தனர். ராணுவத்தின் பிடி இருகியதால் என்னை விடுவித்து விட்டனர்.

தமிழோவியம் :- உல்பா தீவிரவாதிகளிடமிருந்து விடுதலை ஆகி வந்தவுடன் உங்களின் உணர்வு எப்படி இருந்தது?

பதில் :- ரொம்ப மகிழ்ச்சியாகத் தான் இருந்தது. இது ஓர் அப்பார்பட்ட நிகழ்வு. மனித சக்திக்கும் மேலான ஒரு சக்தி என்று நினைக்கிறேன். அதே போல என்னை மீட்க ராணுவம் பலத்த முயற்சி எடுத்திருக்கிறார்கள். என்னை மீட்பது முக்கியமல்ல. உயிரோடு தான் மீட்க வேண்டும் என செயல்பட்டிருக்கிறார்கள். இவை தவிர எனக்காக அனைத்து மீடியாக்களும் பத்திரிக்கைகளும் குரல் கொடுத்திருக்கி;னறன. இப்படி என் மேல், எனது குடும்பத்தினர் மேல் காட்டப்படும் பாசத்தை பார்க்கும் பொழுது நெகிழ்ச்சியாகவே இருக்கிறது.

| | |
oooOooo
                         
 
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   பேட்டி பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |