பிப்ரவரி 09 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
ஆன்மீகக் கதைகள் : தர்மரின் பொறுமையும் திரௌபதியின் பெருமையும் - இறுதி பகுதி
- ர. பார்த்தசாரதி
| Printable version | URL |

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5  | பகுதி 6 | பகுதி 7

யுதிஷ்டிரர் நினைக்கிறார்: 'நேற்று காலை முதல் இன்று மாலை வருவதற்குள் காலச்சக்கரச் சுழற்சியில், மாமன்னன் யுதிஷ்டிரன் என்ற நிலையிலிருந்து மாறி சூதாடி யுதிஷ்டிரன் என்ற பெயர் எனக்கு பாமரர் பலராலும் தரப்பட்டு விட்டது. இது பற்றி சிறிதும் வருத்தம் கூடாது. ஏனென்றால் பிறர் எதிரிபார்ப்புகளுக்காக மட்டும் வாழ்வது என்றால் முடிவே கிடையாது. தன் வழியை தானே அமைத்துக் கொள்ளவேண்டும். அதே சமயம் பிறர் நடந்து கொள்ளும் விதம், அது எப்படி இருந்தாலும் சரி, நமக்கு நல் வழியில் நடக்க உதவியாக இருக்கும்.

ஏன்? இந்த சொக்கட்டான் சூதில், நாடு நகரம் என்று எல்லாம் இழந்து, அற்ப பொறாமை, அழிவுப் பேராசை கொண்ட துரியோதனன் செய்த அவமானங்களையும் பொறுத்து, பன்னிரண்டு வருட வனவாசம் ஒரு வருட அஞ்ஞாத வாசம் என்று ஏற்ற என்னைப் பார்த்து இவர்கள் அறிவது என்ன? இருட்டில் முன்னே நடப்பவன் பின்னால் தொடர்ந்து வருபவனுக்கு வழிகாட்டி என்று சொல்வார்கள். அதன் கருத்து என்ன? முன்னால் நடப்பவன் தடுக்கி விழுந்தால் பின் தொடர்பவன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நான் சூது என்னும் பாழ் இருட்டில் சிக்கி, பதிமூன்று வருட வனவாசம் அடைந்தேன். இதை சரியாக பார்த்து சிந்தித்தால் பாமரர்கள் என்ன, அரசர்கள் பலரும் சூதின் கொடுமையை உணர வழியுண்டு. இதை நான் எடுத்துச் சொல்ல முடியாது! அனைவரும் உணர வேண்டும்.

போகட்டும், சகுனி இனி சொக்கட்டான் காய்களை வைத்து சூது ஆட மாட்டார். சற்று முன், காய் இரண்டையும் என் கையில் எழுந்து வந்து கொடுக்கும் போது காதோடு காதாய் "இனி காய் ஆடமாட்டேன்; இது சத்தியம்" என்றார்.

காய் ஆடுவது குற்றம் அல்ல. சூது ஆடுவது, சூது செய்வது தவிர்க்க வேண்டும். ஏன்? தாங்கள் இப்போது என்னிடம் கொடுத்த இந்த காய்களைத்தான் இனி நான் சொக்கட்டான் ஆட உபயோகிக்கப் போகிறேன் என்று சொன்னேன். சகுனியும் "இனி சூது ஆடேன்!" என்றார். அது போதும்.

நேற்று துரியோதனன் கண்களில் விரிந்து கிடந்த பேராசை என்னும் திரையின் பின்னால் சகுனியின் சூதை பார்க்காமல் விட்டது தவறு. "மாமன்னனாய் இருக்கும் என்னை யாரும் ஏதும் செய்துவிட முடியாது" என்ற மமதையோ என்னவோ, அது நாடு, நகரம் இழக்கும் சறுக்கலில் கொண்டு போய் விட்டுவிட்டது.

நாட்டை பதிமூன்று வருடம் இழந்து இருப்பதில் எனக்கு துளியும் வருத்தம் இல்லை. செய்த தவறுக்கு இந்த தண்டனை தேவைதான். எப்படியெல்லாம் பெரியப்பாவும், தன் பங்கிற்கு துரியோதனனும் சகுனியும் நடந்து கொண்டதற்கு துணை போக இருந்தார்!

சூதாடியது தவறு என்ற வார்த்தையையும், பன்னிரண்டு வருட வனவாசம் தண்டனை என்பதையும், முன்னும் பின்னுமாக குழப்பி, "நாடு இழந்தது இழந்ததுதான்" என்று இவர்கள் கூறிய கூற்றை சித்தப்பா விதுரர், மன்னர் வாய் வழியாகவே, "சூதாடியதற்கு தண்டனை வனவாசம்; அது முடிந்ததும் நாட்டை திரும்ப தந்துவிட வேண்டும்" என்று ஒரு நீதியை எடுத்து வைத்து விட்டார்.

அப்படி அவர் செய்யவில்லை என்றால் பல தேசங்கள் உருவாவதற்கும், பலர் பெரும் தனவந்தர்கள் ஆவதற்கும், "சூதுதான் வழி" என்ற நிலை வந்துவிடலாம். மகாத்மா விதுரர், இது தவறான அணுகுமுறை என்பதை நொடியில் மன்னர் திருதராஷ்டிரருக்கு எடுத்துச் சொல்லி, மன்னர் மகன் மேல் கொண்ட பாசத்தின் விளைவாய், அரச தர்மத்தையே அழித்து விடாமல், செயல்பட செய்துவிட்டார்.

கொல்லாமை உயர் தர்மம். அதுவும் சகோதரர்களுக்கு இடையே, விரோதமும் குரோதமும் ஏற்பட்டு, நாட்டிற்காக, மன்னராக வாழ்வதற்காக என்று சகோதரர்களையே கொல்வது என்பது மிக மிக அவமானம். துரியோதனன் இதுவரை செய்ததை பொறுத்தோம். ஆனால் அவன் பாஞ்சாலியிடம் நடந்து கொண்ட முறை பொறுக்க முடியாதது. அவனுக்கு பெரியப்ப தகுந்த தண்டனை கொடுத்திருக்க வேண்டும். அரசர் என்ற முறையில் தவறி விட்டார். நீதி தவறிய இந்த அரசு நிலைக்காது, காலம் அதன் போக்கில் வழி சொல்லட்டும்.

தண்டனை பதிமூன்று வருட இடைவெளி. இதை முழுவதும் அறிந்தே தேர்ந்தெடுத்தேன். பதிமூன்று வருட காலத்தில் ஏதும் நிகழலாம். துரியோதனனோ, அல்லது பீமனோ, ஏன் இப்போது இங்கு இதில் சம்பந்தப்பட்ட பலருமோ மீளா உறக்கத்தை அடையலாம். எனக்கென்னவோ துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்ற வார்த்தைபோல், துரியோதனனிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்பதே சரி என்று தோன்றுகிறது. ஆனால் அது க்ஷத்திரியர்களின் கடமையோ அல்லது தர்மமோ அல்ல என்று சொல்லலாம். பல வருட இடைவெளிக்குப் பிறகும் பாண்டவர்கள் தான் துரியோதனனுக்கு தண்டனை தரவேண்டும் என்றிருந்தால் அதை என்னால் தடுக்க முடியாது.

மனிதன் பிறக்கும் போது பிரும்மனின் சிடுஷ்டி சூத்திரத்தின் படி அந்த சூத்திரத்தை உள்ளடக்கி, சூத்திரனாகப் பிறக்கிறான். அந்த சூத்திரத்தின் துணை கொண்டு, பகுத்து அறிந்து, தனக்காகவும், தன் சுற்றத்தாருக்காகவும், தன்னை சுற்றியுள்ளவர்களுக்காகவும், தன தான்யத்தை விருத்தி செய்து வைசியன் என்று ஆகிறான். தனதான்யத்தை விருத்தி செய்தால் மட்டும் போதுமா? அவற்றைக் காப்பதும் கடமையல்லவா? அப்படிக் காக்கும் போது க்ஷத்திரியன் ஆகிறான். உழைத்து நல்வழியில் பொருள் ஈட்டி வாழும் முறை தவறி, பிறர் தேடிய பொருள்களை அபகரிக்க வேண்டும் என்று நினைக்கும் தாழ்ந்த குணமுடைய மனிதர்களிடமிருந்து காப்பது என்பது க்ஷத்திரியர் கடமையாகிறது. இதில் பல்வேறு நிலைகளையும் உணர்ந்து, பலரும் நல்வழியில் நடந்து பொருளீட்டி வாழும் போது, சிலர் மட்டும் ஏன் தவறான முறையில் பிறர் பொருளை அபகரிக்க முயல்கிறார்கள் என்பதை சிந்திக்க, அந்த மனிதனுக்கு பிரம்ம ஞானம் வருகிறது. அவன் பிராமணன் ஆகிறான்.

ஆக மனிதனின் பல நிலைகள் தான் இந்தப் பிரிவுகள். இதை முழுவதும் உணர்ந்தவனே ஞானி. இந்த ஜாதிப்பிரிவுகள் எல்லாம் நாடகத்தில் போடப்படும் வேஷங்கள் போலத்தான். எந்த வேஷமானாலும் எல்லோரும் நடிகர்கள் தான். ஆமாம்! எல்லா மனிதர்களும் இதை உணர வேண்டும்.

மனிதர்களில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பது பிறப்பால் கிடையாது. தன் நிலை உணராதவன், தன் கடமையை உணராதவன், தாழ்ந்த குணம் பெற்று தாழ்ந்த நிலையை அடைகிறான். பலராலும் எள்ளி நகையாடப்படுகிறான்.

அங்க தேசத்து மன்னன் கர்ணன் கூட அப்படித்தான்; தன் நிலையை அவன் உணரவில்லை. தன் கடமைகளையும் உணரவில்லை. துரியோதனன் பால் கொண்ட விசித்திரமான பிரேமை, அவனை துரியோதனனின் அடிமையாகச் செய்து விட்டது. இதையே பாஞ்சாலியும் அங்க தேசத்து முதல் அடிமை என்று சுருக்கமாய் சொல்லி விட்டாள்.

எப்போது உயர் க்ஷத்திரிய தர்மத்தை தவற விட்டானோ, அப்போதே கர்ணன் தன் நிலை தாழ்ந்தவனாகிறான். ஆனால் இவர்கள் எல்லோரும் போராடுவது, பிறரை யுத்தம் அல்லது துவந்தம் செய்து வெல்வது மட்டும் தான் க்ஷத்திரிய தர்மம், வீரம் என்று எண்ணுகிறார்கள்.

ஒவ்வொரு மனிதனும், பிரும்ம சூத்திரம் தன்னுள் அடங்கி இருக்கிறது என்பதை உணர்ந்து தான் ஒரு சூத்திரன் என்று உணர வேண்டும். அதை உணர்ந்த மாத்திரத்தில் அவனே பிரும்ம ஞானி ஆகிறான். உலக வாழ்க்கைக்கு பொன், பொருள் ஈட்டி, காத்து, பகிர்ந்து, வழங்கி வரும் போது வைசியன், க்ஷத்திரியன் என்று ஆகிறான். இவை ஒரு நிலை. உடல் அழியக் கூடியது. தேடிய பொருள்களும் காலத்தில் கடந்து நிற்கப் போவது இல்லை. பிறவிகளின் சுழற்சியும், பொருள்கள் புதிது புதிதாகத் தோன்றி, பழையனவாகி, அழிந்து மண்ணோடு மண்ணாவது தான் உண்மை, என்பதையும் உணர்ந்த மாத்திரத்தில் பிரும்மத்தை அடையும் வழியைக் காண்கிறான்.

இந்த நிலைகளை, நான்கு வகை நிலைகளை தன்னுள் அடக்கியிருப்பதை மனிதர்கள் மறந்துவிட்டார்கள் போலும். ஆனால் மாபெரும் ஞானிகள் இதை மறக்கவில்லை. "வசிஷ்டர் வாயால் பிரும்ம ரிஷி" என்ற வாக்குக்கு என்ன பொருள்? விஸ்வாமித்திர மகரிஷி கோப தாபங்களைக் கடந்து "தான்" என்னும் அகந்தை, மமதை எள்ளளவும் இல்லாது உயர் நிலையை அடையும் போது வசிஷ்டர் பிரும்மரிஷி என்று அழைத்தார். அப்படி அழைக்கப்படும் போது அந்த பட்டம் விஸ்வாமித்திரருக்கு தேவையாய் இருந்ததா? விஸ்வாமித்திரர் அதை எப்படி எதிர்கொண்டிருப்பார்? பிரும்மரிஷியான பின் அவர் எல்லாம் கடந்த நிலையைத் தான் அடைந்திருப்பார்.

இந்த மனிதர்கள் எல்லோரும் எப்படி அழைக்கப்பட்டாலும் சரி, பரம் பொருளாய் உள்ள பரந்தாமனை சுற்றி வரும் வட்டத்தில் உள்ளவர்கள். தான் ஓடும் பாதையை சற்று மறந்து உள்ளே பார்த்தால் அவர்கள் பரந்தாமனைக் காண முடியும். வட்டப் பாதையில் யார் எங்கிருந்தாலும், எல்லோரும் பரந்தாமனிடமிருந்து ஒரே தூரத்தில் தான் சுற்றி வருகிறார்கள். ஆக இவர்களில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பேதம் இல்லை. ஆமாம்! பரந்தாமனை சிந்திக்க ஆரம்பித்த நொடியில் எல்லோரும் ஒன்றுதான்.

நாடகத்தில் மன்னன் வேடம் போடுபவன் பகட்டான ஆடை அணிகலனோடு ஆசனத்தில் அமர வேண்டும். அதே சமயம் பெரும் தனவந்தனான ஒருவன், சேவகனாக வேடமிட்டால் மிக சாதாரணமான உடையுடன் தான் வருவான். "என்னிடம் சரிகை பட்டாடை உள்ளது; நான் அதைத்தான் உடுத்தி வருவேன்" என்று அந்த தனவந்தன் கூற முடியாது. அப்படி வந்தான் நாடகம் சோபிக்காது. அதே சமயம், ஆடை அணிகலங்களுக்கு மேலாக, அவன் எந்த சிறு வேடம் தாங்கினாலும், அவன் நடிப்பிற்கு மதிப்பு உண்டு.

அதே போல், வாழ்க்கையில் மனிதன் அரசனாக இருந்தாலும் சரி, ஆண்டியாக இருந்தாலும் சரி, அவன் எந்த பிரிவை சேர்ந்தவனாக இருந்தாலும் சரி, பரம் பொருளை மனத்தில் கொண்டு, தன் கடமையை மட்டு சரி வர செய்து, பலனைத் தான் அனுபவிக்க வேண்டும் என்றெண்ணாது, பலன் இப்படித்தான் இருக்க வேண்டுமென்ற அபிலாஷை ஏதுமில்ல்லது வாழ்ந்தால், அவனே உயர் குணம் உடைய தர்ம நெறியுடைய மனிதனாவான்.

இதை அந்த பரந்தாமனே, தானே நேரில் வந்து, தன் வாயால் சொன்னாலும், இவர்கள் மௌடீகத்தை விட்டு கடமை என்ன என்று உணர்ந்து செயல்பட்டு, பலன் பலருக்கும் கிடைக்க வேண்டும் என்று உணர்வார்களா?'

'யுதிஷ்டிரர் தன் நிலை மறந்து, சூதாட்டத்தில் எல்லாம் இழந்து வனவாசம் சென்றார்', என பலரும் எண்ணிய நேரத்தில் தன் தவறுக்கு இந்த தண்டனை சரிதான் என்ற மன நிறைவுடன், கொல்லாமை மிக உயர்ந்த தர்மம்; துரியோதனன், சகுனி சூதிற்கு மன்னர் திருதராஷ்டிரர் துணை போயும் போகாமலும் இருந்து, பல வருட இடைவெளியை ஏற்படுத்தி கொடுத்து விட்டதை நினைத்து வனவாசம் மேற்கொண்டார் யுதிஷ்டிரர்.

'தர்மம் வெல்லும்' என்ற கூற்றுப்படி, பின் யுத்தத்தில் பாண்டு புத்திரர்கள் வெற்றி பெற்று யுதிஷ்டிரர் பட்டாபிஷேகத்துடன் இந்த இதிகாசம் நிறைவு பெற்றது, நாம் அறிந்தது தான்.

(முற்றும்)

 

| |
oooOooo
ர. பார்த்தசாரதி அவர்களின் இதர படைப்புகள்.   ஆன்மீகக் கதைகள் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |