பிப்ரவரி 16 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
உள்ளங்கையில் உலகம் : செல்பேசிச் சந்தை நிலவரம்
- எழில்
| Printable version | URL |

கடந்து சென்ற ஆண்டில் செல்பேசிச் சந்தை நிலவரம் குறித்தும், இந்த வருடத்தின் முன்னோட்டத்தினையும் இப்பதிவில் காண்போம்.
 
2005-ல் செல்பேசிச் சந்தை மிகவும் விறுவிறுப்பான நிலையை அடைந்தது. சென்ற ஆண்டில் மட்டும் உலகெங்கும் 800 மில்லியனுக்கும் மேற்பட்ட செல்பேசிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2004- ல் சுமார் 700 மில்லியன் செல்பேசிகள் விற்கப்பட்டன. ஆக 17 சதவீத வளர்ச்சியைச் சென்ற ஆண்டில் செல்பேசிச் சந்தை கண்டது . செல்பேசித் தயாரிப்பு நிறுவனங்களும் புதுப் புது மாடல்களைப் போட்டி போட்டுக்கொண்டு அறிமுகம் செய்து பயனாளர்களைத் திக்குமுக்காடச் செய்தனர். வளரும் சந்தைகளான இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் செல்பேசி விற்பனை பரபரப்பாக இருந்தது . செல்பேசி விற்பனை வளர்ச்சிக்கு இவ்வித வளரும் சந்தைகளே பெரிதும் உதவுகின்றன. பெரும்பான்மையான ஐரோப்பிய மற்றும் வளர்ந்த நாடுகளில் செல்பேசிச் சந்தை ஒருவித முதிர்ச்சி நிலையை அடைந்துவிட்டது எனலாம் . ஏறக்குறைய ஒவ்வொருவரிடமும் ஒரு செல்பேசி உள்ளது. புதிதாய்த் தயாரிக்கப்பட்ட செல்பேசிகளை ஐரோப்பியச் சந்தையில் விற்பனை செய்ய வேண்டுமெனில் புதுப்புது நுட்பங்களைப் புகுத்திக் கவர வேண்டும் ; ஏற்கனெவே செல்பேசி வைத்திருப்பவர்களைக் கவர இவ்வாறு புதிய பல பயன்பாடுகளை அறிமுகம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் செல்பேசித் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்பட்டது . செல்பேசியுடன் கேமரா நுட்பத்தையும் இணைத்து விற்பது இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பே தொடங்கினாலும், கேமராவின் மூலம் எடுக்கப்படும் படங்களின் தரத்தை அதிகப்படுத்தும் முயற்சி சென்ற வருடம் தீவிரமாக்கப் பட்டது. மெகா பிக்ஸெல் கேமராக்கள் இணைக்கப்பட்ட செல்பேசிகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்குத் தயாராயின. இசை கேட்பதற்குத் தனியாக எதற்கு மிண்ணனுவியல் கருவிகள் ?  செல்பேசியிலேயே பாடல்கள் கேட்கும் வசதி செய்துகொள்ளலாமே என்றெண்ணிய செல்பேசித் தயாரிப்பாளர்கள் செல்பேசியிலேயே இசை கேட்கும் வசதி செய்து இசைபேசிகளைச் சந்தையில் அறிமுகம் செய்தனர் . சென்ற வருடத்தில் இசை பேசிகளும் (Music Phones) பெரும் வரவேற்பைப் பெற்றன . எல்லா முன்னணிச் செல்பேசி நிறுவனங்களும் இசை பேசிகளை வெளியிட்டாலும், ஸோனியின் வாக்மேன் முத்திரையைத் தாங்கி வந்த சோனி எரிக்ஸனின் இசை பேசிகள் சிறந்த இசைபேசிகளாகக் கணிக்கப் பட்டன. சென்ற ஆண்டில் மூன்று மில்லியன் இசைபேசிகளை விற்றதாய் ஸோனி எரிக்ஸன் அறிக்கை வெளியிட்டது . 
 
பேசும் போது எதிர்முனையில் உள்ளவரைப் பார்த்துக் கொண்டெ பேசும் வீடியோ பேசிகளும் (3G phones) பெருவாரியாகச் சென்ற ஆண்டில் விற்பனையான. மூன்றாந்தலைமுறை வலையமைப்புகள் பல நாடுகளில் முழு வடிவம் பெற்றதன் விளைவாய் செல்பேசி மூலம் வீடியோ பேசுதலும், செல்பேசி மூலம் அதிவேக இணைய இணைப்பும் சாத்தியமானது . ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் போட்டிகளை நேரடியாகச் செல்பேசியிலேயே பார்க்கும் வசதியும் அறிமுகமானது. இருப்பினும் மூன்றாந்தலைமுறைச் செல்பேசிகளின் பயன்பாடுகள் இன்னும் முழுமையடையாத காரணத்தினால் இவ்வகைச் செல்பேசிகள் அதிகம் விற்றாலும் , பயன்பாடுகள் சற்றுக் குறைந்தே காணப்படுகின்றன. சீனாவில் இருபது மில்லியன் பேர் மூன்றாந்தலைமுறைச் செல்பேசிகளைப் பயன்படுத்துவதாய் ஒரு அறிக்கை தெரிவிக்கிறது . வளரும் சந்தைகளான இந்தியா, சீனா மற்றும் பல தென் அமெரிக்க நாடுகளில் செல்பேசி விற்பனை கொடிகட்டிப் பறந்தது எனலாம் . இந்நாடுகளில் முதன்முறையாய்ச் செல்பேசி வாங்கும் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. விலை குறைந்த , பேச்சு மற்றும் குறுந்தகவலுக்கு மட்டும் பயன்படுத்தப்படும் அடிப்படைச் செல்பேசிகளே இங்கு அதிகம் விற்பனையாகின்றன. உயர்வகைத் தொழில் நுட்பப் பயன்பாடுகள் அடங்கிய , அதிக விலைச் செல்பேசிகளுக்கு அவ்வளவாய் வரவேற்பில்லை என்றாலும் அவையும் அறிமுகமாகி மக்களின் கவனத்தை ஈர்க்கின்றன . ஜி எஸ் எம் செல்பேசிச் சேவைகள் அறிமுகமாகிப் பதினைந்து ஆண்டுகள் ஆகியிருக்கும் இவ்வேளையில் உலகமெங்கும் 1.68 பில்லியன் மக்கள் ஜி எஸ் எம் செல்பேசிச் சேவையைப் பயன்படுத்துகிறார்கள் .இந்தப் புள்ளி விவரத்திலிருந்து இச்சேவையின் அசுர வளர்ச்சியைப் புரிந்து கொள்ளலாம் . 
 
செல்பேசித் தயாரிப்பில் வழக்கம் போல் நோக்கியா நிறுவனம் தன்னருகே வேறெவரையும் நெருங்கவிடாது முன்னணியில் திகழ்கிறது. மொத்த செல்பேசிச் சந்தையில் 32 சதவீதம் நோக்கியாவின் கையில் உள்ளது. அதாவது, சந்தையில் விற்பனையாகும் மூன்றில் ஒன்று நோக்கியாவின் செல்பேசி . சென்ற வருடத்தில் சுமார் 265 மில்லியன் செல்பேசிகளை நோக்கியா விற்றிருக்கிறது . மிகக் குறைந்த விலைச் செல்பேசிகள் முதல் விலை அதிகம் உள்ள செல்பேசி வரை எல்லாவிதமான செல்பேசிகள் விற்பனையிலும் நோக்கியா செல்பேசிகள் கொடிகட்டிப் பறக்கின்றன. இந்தியாவின் சந்தையில் நோக்கியாவின் ஆதிக்கம் இன்னும் அதிகம். இந்தியாவில் விற்கப்படும் அறுபது சதவீதச் செல்பேசிகள் நோக்கியாவின் தயாரிப்பில் உருவானவை . 145 மில்லியன் செல்பேசிகளை விற்று 18 சதவீதச் சந்தை விற்பனையுடன் மோடரோலா இரண்டாமிடத்தில் தொடர்கிறது . அமெரிக்கச் சந்தையில் மோடாராலாவுக்குத் தனியிடம் எப்போதும் உண்டு. மோடரோலாவில் RAZR V3 வகைத் தட்டை பேசிகளுக்குச் (slim phones) சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கிறது. சென்ற வருடம் மோடரோலாவின் விற்பனையும் படு சுறுசுறுப்பாயிருந்தது . 
 
102 மில்லியன் செல்பேசிகளை (12 சதவீதப் பங்கு ) விற்ற ஸாம்சங்-கும் 55 மில்லியன் பேசிகளை (6.7 சதவீதப் பங்கு) விற்ற எல் ஜிMotorola Razor Slim Phones நிறுவனமும் முறையே மூன்றாம் , நான்காம் இடங்களைப் பிடித்தன. இந்த இரண்டு நிறுவங்ன்களும், ஜி எஸ் எம் செல்பேசிகளுடன் ஸி டி எம் ஏ பேசிகளையும் அதிக அளவில் தயாரிப்பவை . 51 மில்லியன் செல்பேசிகளை விற்ற ஸோனி எரிக்ஸன் 6.2 சதவீதப் பங்குடன் ஐந்தாம் இடத்தைப் பிடித்தது. எனினும் அதிக செல்பேசிகள் பயனாளர்களைச் சென்றடைந்த விகிதத்தில் ஸோனி எரிக்ஸன் நான்காம் இடத்தைப் பிடித்ததாகச் சில ஆய்வுகள் தெரிவித்தன . எல் ஜி நிறுவனத்தின் செல்பேசிகள் அதிக அளவு விற்கப்பட்டாலும் சில மில்லியன் செல்பேசிகள் பயனாளர்களைச் சென்றடையாமல் கடைகளிலேயே தேங்கி விட்டதாக அவ்வறிக்கைகள் தெரிவித்தன . இரு வருடங்களுக்கு முன் நான்காம் இடம் பிடித்த ஸீமன்ஸ் நிறுவனத்தின் விற்பனை சென்ற வருடம் பின் தங்கியிருந்தது . ஸீமன்ஸ் நிறுவனத்தின் செல்பேசிப் பிரிவை பென்க்யூ (BenQ ) எனும் நிறுவனம் வாங்கி விட்டாலும், தொடர்ந்து ஸீமன்ஸ்- பென்க்யூ எனும் பெயரிலேயே செல்பேசிகள் வெளிவரும் வண்ணம் ஒப்பந்தம் செய்து அதன்படியே செல்பேசிகள் சந்தையில் விற்கப்படுகின்றன. நான்கரை சதவீதப் பங்குடன் ஆறாவது இடமே இந்நிறுவனத்தால் அடைய முடிந்தது. முன்னணி ஐந்து நிறுவனங்களுமே சென்ற வருடம் நல்ல இலாபம் ஈட்டியுள்ளன. பிடித்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும், போட்டியில் முந்திச் செல்லவும் முனைந்து , இந்த வருடமும் பல்வேறு நுட்பங்களைச் செல்பேசியில் புகுத்தி வாடிக்கையாளர்களைக் கவரத்திட்டமிட்டு வருகின்றன. ஆனால் இவ்வருடச் சந்தை விற்பனை சென்ற வருடத்தினை விடச் சற்றுக் குறைவாகவே இருக்கும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். முதிர்ச்சியடைந்த சந்தையில் இவ்வருடம் விற்பனை மந்தமாகவே இருக்கும் என்றும் , வளரும் சந்தைகளில் வெளுத்துக் கட்டும் எனவும் எதிர்பார்க்கப் படுகின்றது. 
 
செல்பேசித் தயாரிப்பு நிறுவனங்கள் முக்கியத்துவம் அளிக்கும் மற்றொரு விஷயம், சராசரி விற்பனை விலை ( Average Selling Price, ASP). சந்தையில் தங்களது ஒரு செல்பேசி விற்கப்பட்டால் கிடைக்கும் சராசரிப் பணம் எவ்வளவு என்பதே இது. நோக்கியாவின் செல்பேசிகள் வளரும் சந்தையில் அதிக அளவு விற்றாலும், விலை குறைவான செல்பேசிகளே அதிகம் விற்பனை ஆவதால் , ஒரு நோக்கியா செல்பேசியின் சராசரி விற்பனை விலை சுமார் 100 ஈரோ -வாக உள்ளது . ஸோனி எரிக்ஸனின் சராசரி விற்பனை விலை 143 ஈரோ ஆகும். அதாவது ஒரு ஸோனி எரிக்ஸனின் செல்பேசி விற்பனை செய்யப்பட்டால் , நிறுவனத்துக்கு 143 ஈரோ கிடைப்பது உறுதி. இருப்பினும் , செல்பேசியின் விலை சரிந்து வருவதாலும், வளரும் சந்தைகளில் விலை குறைவான செல்பேசிகளை அறிமுகம் செய்ய வேண்டியிருப்பதாலும் , சராசரி விற்பனை விலை இறங்குமுகமாகவே உள்ளது. இனி வரும் மாதங்களில் இவ்விலை இன்னும் வெகுவாகக் குறையக் கூடும். 

| | |
oooOooo
எழில் அவர்களின் இதர படைப்புகள்.   உள்ளங்கையில் உலகம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |