பிப்ரவரி 16 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
நூல் அறிமுகம் : குவாண்டம் சித்துவேலைகள்
- பி. ஏ. கிருஷ்ணன் [feedback@tamiloviam.com]
| Printable version | URL |

நாங்கள் தத்துவங்களின் பின்னால் அலைபவர்கள் இல்லை.  நாங்கள் தேடுவது உண்மையான பொருள்களின் செயற்பாடுகளை -  ரிச்சர்ட் பெயின்மென்.

முப்பது ஆண்டுகளுக்கு முன் தங்களை அறிவு ஜீவிகள் என்று கூறிக் கொள்பவர்கள் தாங்கள் படித்து உள்வாங்கிக் கொண்டு விட்டதாகக் கூறிக் கொண்ட புத்தகங்களில் முக்கியமான ஒன்று காப்ராவின் 'இயற்பியலின் தாவோ' ( அல்லது டாவோ).  முப்பது ஆண்டுகளுக்குப் பின் - காப்ரா அனேகமாக காலாவதி ஆன பின் - இந்தப் புத்தகத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு வந்திருக்கிறது.  கடினமான இயற்பியல் கொள்கைகளை மிகுந்த முயற்சி எடுத்து தமிழில் திரு முருகேசன் மொழி பெயர்த்துள்ளார். தமிழ் மட்டுமே அறிந்த ஒருவர் இவரது புத்தகத்தைப் படித்தால் காப்ரா என்ன சொல்ல வருகிறார் என்பதை ஓரளவு புரிந்து கொள்ள முடியும்.  எனவே முருகேசனின் முயற்சி வியப்பளிக்கத் தக்கது என்பதிலும் பாரட்டத் தக்கது என்பதிலும் ஒரு வித ஐயமும் இல்லை. இந்த மதிப்புரை புத்தகத்தில் கூறப் படும் கருத்துகளைப் பற்றி.
 
இந்த பிரபஞ்சத்தின் அளவோடும், விரிவோடும், வயதோடும் மனித குலத்தின் இத் தன்மைகள் ஒப்பிடப் பட்டால் அவை பொருட்படுத்த தக்கவை அல்ல. இந்த உண்மையை மனிதர்களில் பலர் ஏற்க மறுப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. எல்லா மதங்களும் மனிதன் தனிச் சிறப்பு வாய்ந்தவன், அவன் கடவுளின் செல்லக் குழந்தை  என்பதையே வலியுறுத்துகின்றன. பிரபஞ்சம் நினைக்க முடியாதபடி பெரிதாக இருப்பதால், அதன் இருப்பும் அதன் கூறுகளின் இருப்பும் ஐயத்திற்கு உள்ளாக்கப் படுகிறது.  நாம் பார்க்கவிட்டாலும் வானத்தில் சந்திரன் இருக்கிறது என்ற ஐன்ஸ்டீனின் புகழ் பெற்ற கூற்றும் ஐயத்திற்கு உள்ளாக்கப் படுகிறது.

பிரபஞ்சம், நவீன இயற்பியலில், ஓர் இயக்கப் பண்பு மிக்க, பார்ப்போரையும் சாராம்சமான ரீதியில் இணைத்துக் கொள்ளக் கூடிய முழுமையாக உணரப் பட்டுள்ளது.  இந்த  அனுபவத்தில், மரபு வழிக் கருத்தாக்கங்களான வெளியும் காலமும், தனித்துவமான பொருள்கள், வினை-விளைவு இவையெல்லாம் பொருள் இழந்து போகின்றன. இத்தகையதோர் அனுபவம் கிழக்கிந்திய இறை ஞானியருடைய அனுபவத்திற்கு ஒப்பானது.  இவ்வொப்புமை குவாண்டம் கொள்கையிலும் சார்பியல் கொள்கையிலும் வெளிப்படையாகவே தோன்றுகிறது.(பக்கம் 111)

இதுதான் தாவோ -பேருண்மை- பிரம்மம். சொன்ன காப்ரா ஒரு  இயற்பியல் விஞ்ஞானி என்பதாலே நம்மில் பலருக்கு  நமது தந்தையர் செய்த விந்தைகளைப் பற்றி மணிக் கணக்கில் பேச ஒரு வழி கிடைத்து விட்டது என்று தோன்றுகிறது.  இறைஞானிகள் உய்த்துணர்ந்து கூறியவைகளை எள்ளல் செய்யும் நோக்கம் எனக்கு இல்லை. ஆனால் இறைஞானிகள் கூறியவை மனிதனின் உள்ளுணர்வு பற்றி. புறவுலகை அவன் மனதளவில் எவ்வாறு அறிந்து கொள்கிறான் அவனுடைய அறிதலில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பது பற்றி. ஆனால் குவாண்டம் இயற்பியல் என்பது பொருண்மையின் உண்மையைத் தேடும் முயற்சி. தேடுவது மனிதன். இந்த உண்மை மனிதனின் தேடலால் மாறுமா என்ற கேள்விக்கு பதில் கிடையாது. தேடுவதால் பொருண்மையின் உந்தம் மாறுகிறது என்பது பொருண்மையின் உண்மை மாறுகிறது என்பது ஆகாது. முழு உண்மையை அறிய முடியாதது என்பது பொருண்மையே உண்மையல்ல என்பது ஆகாது.
 
எனவே குவாண்டம் கொள்கை  மாயத்தையும் பிரபஞ்சத்தின் ஒற்றைத்தன்மையையும் உறுதி செய்யும் விதத்தில் ஏதும் கூறுவதாக எனக்குத் தெரியவில்லை. மாறாக குவாண்டம் கொள்கை பயன்படுத்தும் வார்த்தைகளை வைத்து சித்து விளையாடுபவர்கள்தான் இவ்வாறு சொல்கிறார்கள்.  பிரபஞ்சத்தில் ஒன்றை மற்றொன்று சார்ந்து ஒன்றி இருக்கிறது என்று சொல்வது பிரபஞ்சத்தின் ஒற்றைத் தன்மையை உறுதி படுத்துவதாக ஆகாது. குறிப்பாக காப்ரா குறிப்பிடும் பூட்ஸ்ட்ராப் அணுகுமுறை -எந்த  ஒரு அடிப்படை அமைப்புகளையும் ஏற்றுக் கொள்ளாத அணுகுமுறை - இன்றைய இயல்பியற் புத்தகங்களில் காணப் படாத ஒன்று. அடிப்படை அமைப்புகள் எதையும் ஏற்றுக்கொள்ளாத அணுகுமுறையை உயர்த்திப் பிடிப்பவர்கள் எப்படி எல்லாம் ஒன்றுதான் என்ற அடிப்படை ஆன்மீகக் கொள்கையை ஏற்றுக் கொள்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. 

காப்ரா - மூன்றாவது பதிப்பின் பின்னுரையில் - கூறுகிறார்: உயிர், மனம், உணர்வு நிலை, ஆன்மா போன்ற பிற நிலைகளோடு, பிற பரிமாணங்களோடு இயற்பியலுக்கு எவ்வித ஒட்டுறவு இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன்.  இத்தகைய நிலைகளோடு இயற்பியலுக்கு வேண்டுமானால் ஒட்டுறவு இல்லாது போகலாம். விஞ்ஞானத்திற்கு உள்ளது. (பக்கம் 427)

இந்த ஒப்புதலுக்குப் பிறகு புத்தகத்திற்கு இயற்பியலின் தாவோ என்ற பெயர் ஏன் தொடர்கிறது என்பதும் எனக்கு விளங்கவில்லை.  மனிதனுடைய ஆன்மீகத் தேடலும் அறிவியற் தேடலும் முடிவிலியில் சேரும் இணைத் தடங்கள். இரண்டையும் இடையில் இணைக்க முயற்சி செய்தால் மனிதன் தடம் புரளும் அபாயம் இருக்கிறது.

|
oooOooo
பி. ஏ. கிருஷ்ணன் அவர்களின் இதர படைப்புகள்.   நூல் அறிமுகம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |