பிப்ரவரி 16 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
சிறுகதை : பட்ட மரம்
- கோவி.கண்ணன் [geekay@singnet.com.sg]
| Printable version | URL |

அந்த தொகுப்பு வீட்டின் சுத்தமின்மையை அறைகளின் சுவர்களும், தரைகளும் அழுக்குகளால் வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருந்தன. எழுபதை கடந்த பெரியவர் பெரியசாமி, வசிப்பறையின் சுவற்றில் காய்ந்த பூவுடன் கூடிய புகைப்படத்தில் தன் மனைவியை பார்த்துக்கொண்டு ஒறுக்களித்து பாயில் படுத்தபடி, பலவாறு சிந்தித்துக் கொண்டிருந்தார்.

அவருடைய கண்களும், மூக்கும் சிதறிகிடக்கும் குப்பை கூளங்களையும், அணைத்து எறியப்பட்ட சிகிரெட் துண்டுகளின் நாற்றத்தையும் கண்டுகொள்ளவில்லை. சற்று திறந்திருந்த வெளிக்கதவு வழியாக காற்று, வீட்டின் உள்ளே அடிக்கும் வீச்சத்தை குறைக்க முயன்றுகொண்டிருந்தது.

அந்த வீட்டின் அறைகளில் சில கரப்பான்பூச்சிகள் அந்த வீட்டின் சொந்தக்காரர்கள் போல் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தன. கரிபடிந்த மற்றும் கழுவாத பாத்திரங்கள், சில நாட்களாக துவைக்காத துணிகள் ஆகியவற்றையெல்லாம் அவரின் முதுமை சட்டை செய்யவில்லை. இவற்றை மாற்றினாலும் எதுவும் மாறிவிடப்போவதில்லை என்று நினைத்த அவருடைய வேதனை உணர்வுகள் அவற்றை அலட்சியப்படுத்தின.

அவருடைய இளமையில் ஆறாக ஓடிய வாழ்கைப் பயணம், கடந்த ஐந்தாண்டுகளாக தேங்கி கலங்கிய குட்டையாக ஆகி, எப்பொழுது வற்றுமோ என்ற ஏக்கத்துடன், வற்றவேண்டும் என்ற எதிர்பார்த்துக் கிடக்கும், துக்க எண்ணத்துடன் சென்று கொண்டிருக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு முன்புவரை மனைவி இருந்தாள். மனைவி இருந்தவரை அவருக்கு குறைகள் என்று எதுவும் பெரியதாக தெரியவில்லை.

பழைய வாழ்கையை நினைத்தே, நிகழ்காலத்தை கடத்த வேண்டிய கட்டாயத்திற் குட்பட்டதை நினைத்து, வயதான காலத்தை வறண்டகாலமாக கழித்தார்.  சொந்தம் கொண்டாட முடியாதபடி, யாரும் அற்றவர் இல்லை அவர், ஆனால் அவருடைய நிலை ஐந்தாண்டுகளாக அப்படித்தான் இருந்தது.

பெரியசாமி நன்றாக படித்தவர், நல்ல வேலையில் முன்பு கை நிறைய சம்பாதித்தவர். அவர் இப்பொழுது இருக்கும் மூவறை வீடு அவருக்கு சொந்தமானதுதான், வங்கியிலும் ஓரளவு சேமிப்பு இருக்கிறது. அவைகள் அவர் இருக்கும் வரை போதுமானதும் கூட.

அந்த காலத்து ஆளாக இருப்பதால் இன்னும் கை, கால்கள் வீழ்ந்துவிடவில்லை. தன்னால் முடிந்தவரை ஏதாவது வேலை செய்து கொண்டிருக்க வேண்டும் என்பதாலும், காலத்தை ஓட்டவேண்டும் என்பதாலும், அவராக விரும்பி தொழிற்சாலை ஒன்றில் பாதுகாவலாளி வேலை செய்துகொண்டு காலத்தை ஓட்டிவருகின்றார்.

சில ஞாயிற்றுக் கிழமைகளில் முடிந்தவரை வீட்டை சுத்தம் செய்வதும், சில நாட்களில் நூலகத்தில் சென்று தத்துவ புத்தகங்களை படிப்பதும் தான் அவருடைய பொழுதுபோக்கு.

அவருடைய சிந்தனை திருப்பும்படி மெதுவாக கதவு திறக்கப்படும் ஓசை கேட்க, மெதுவாக தலையை திருப்பி  பார்த்தார்.

அப்படி பார்த்தவர், சுருங்கிய தன் முகத்தை மேலும் சுருக்கி, தலை குனிந்துகொண்டார். வந்தவன் வேறுயாருமில்லை நாற்பது வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் அவருடைய ஒரே மகன் பரசுராமன்.

உள்ளே நுழைந்தவன், வீட்டின் அவலத்தை நோட்டமிட்டபடி மெதுவாக, அவரை பார்த்து

"அப்பா, எப்படி இருக்கிங்க ..." அக்கரையாக கேட்பது போல் கேட்டான்

பெரியவர் ஒன்றும் சொல்லாமல், அவனை பார்க்க விரும்பாதது போல மேலும் முகத்தை திருப்பிக்கொண்டார்.

அவனாகவே பேச்சு கொடுக்க ஆரம்பித்தான்

"அப்பா, உங்களுக்கு வயசாயிடுச்சி, நீங்க ஏன் இன்னும் இங்க தனியா கஷ்டபடுறீங்க ..."

"பேசாம எங்க கூட வந்திடுங்க, உங்க பேரப்புள்ளைங்க கூட சந்தோசமாக இருக்கலாம் ..."

அவர் அசைந்து கொடுக்கவில்லை, விடாமல் அவனும் ரொம்பவும் உரிமையுடன்,

"இந்த வயசில என்னப்பா பிடிவாதம், உங்க நல்லதுக்கு தான் சொல்றேன், பேசாமா வந்துடுங்கப்பா .."

அதுவரை எதுவும் சொல்லாதிருந்தவர்,

'உங்க நல்லாதுக்கு' என்று சொன்ன உடன் அவருக்கு பெரும் கோபம் வந்தது,

"நீ மொதல்ல வெளிய போ, நான் கஷ்டப்படுறேன்னு யார்கிட்டயும் சொல்லலே ..."

அவன் திகைத்து போய்விடவில்லை, அவன் அவரிடம் இருந்து இதை எதிர்பார்த்தது தான், அவரின் இந்த எதிர்ப்பு அவனுக்கு கோபம் ஏற்படுத்தவில்லை, மாறாக தலையை குணிய வைத்தது.

"இல்லப்பா, எவ்வளவு நாளைக்குதான் நீங்க தனியா ..." அவன் என்று முடிப்பதற்குள்

"ஐஞ்சு வருசமா தனியா தாண்டா இருக்கேன்..."

"சாவு வருமான்னு பாத்துக்கிட்டு இருக்கேன் ..."

"சாகறவரைக்கும் தனியா தான் இருப்பேன் ..."

என்று கண்களில் கோபம் கொப்பளிக்க வெடித்தார்.

மறுபடியும் பேச்சற்று தலை கவிழ்ந்தான் பரசுராமன்.

சிறிது நேர மவுனத்திற்கு பிறகு, அவரே தொடர்ந்தார்

"நீ எதுக்கு இங்க வந்திருக்கேன்னு எனக்கு தெரியும்டா ..."

கேள்வியாக பார்த்தான் பரசுராமன்

"எனக்கு ஒன்னும் தெரியாதுன்னு நினைச்சிக்கிட்டு இருக்கியா ?"

"நீ போன வாரம் தூது அனுப்பினியே, உன் பிரண்டு தங்கராசு, அவன் தான் சொன்னான்"

"முதல்ல, எங்கிட்ட கரிசனமா பேசி, கஷ்டப்படாம மகன் வீட்டோட போயிடுங்கன்-னு சொல்லிட்டு ..."

"நான் பிடிகொடுக்கலன்-னு தெரிஞ்சதும், மெது மெதுவா ..."

"நான் பரிதாபபடுவேன்-னு நெனெச்சு விசயத்தை சொன்னான் ..."

"பரசுக்கு பிசினஸ்ல பெரிய நஷ்டம் ..."

"அவனோட வீடு அடமானம் ஆகி நேட்டீஸ் வந்துடுச்சுன்-னு சொன்னவன் ..." என்று நிறுத்தியவர், தொடர்ந்து

"இன்னொன்றையும் சொன்னான் ..."

பெரியவர் கோபம் சற்றும் குறையாமல்,

"அதனால, என் வீட்டை வித்துட்டு, உன் கூட வந்துட்டா, உன்னோட கடனை அடச்சிடலாமாம்"

பரசுராமனுக்கு பகீரென்று இருந்தது,  அவன் நடந்து கொண்டவிதத்தால், நேரிடையாக அவரிடம் பேசுவதற்கு வெட்கப்பட்டதால்.  அவன் தன் நண்பன் தங்கராசை 'அப்பாவை பார்த்து, கொஞ்சம் பேசி சரிப்படுத்து' ன்னு சொல்லியிருந்தான். தங்கராசு எல்லாவற்றையும் விபரமாக பேசியது அவனுக்கு தெரியாது. ஆனால் அவர் தங்கராசிடம் கோபமாக பேசி மறுத்துவிட்டார் என்பது மட்டும் தெரியும்.

அவரே தொடர்ந்தார்,

"ஐஞ்சு வருசமா, அப்பன் இருக்கிறானா, செத்துட்டானான்னு கவலைப் படாத நீ, இன்னைக்கு இங்க வந்து நிக்கிறேன்னா... பணம் !..."

"உனக்கு இன்னைக்கு தேவை பணம் ...!"

பரசுராமன் சிலையாக நின்று கொண்டிருந்தான்,

அடுத்து அவர் அவன் முகத்தை பார்த்து வீசிய கேள்விகள், அவனை குறுகி கூசவைத்தது.

"சின்ன, சின்ன பிரச்சனையை பெருசாக்கி, உங்க அப்பா, அம்மாவை விட்டுட்டு தனியா போகலாம்னு உன் பொண்டாட்டி சொன்னப்ப ..."

"அவ முந்தானைய புடிச்சிக்கிட்டு, பத்து வருசத்துக்கு முன்பு, எங்கள திரும்பி பாக்காம போனவன் தானே நீ ?"

"அன்னைக்கு கை நிறைய சம்பாதிக்கிற திமிரு உன்னையும், உன் பொண்டாட்டியையும் அப்படி போக வெச்சிச்சு ... ?" கேள்வியாக நிறுத்தி தொடர்ந்தார்.

"பதினைஞ்சு வருசமா, வராத கரிசனம் இப்ப வந்திடுச்சா ?"

"உன் அம்மா, பக்க வாதத்துனால, காலு முடியாம, படுத்த படுக்கையாக தொடர்ந்து இரண்டு வருசம் கெடந்தாள்..."

"ஒரு தடவையாவது வந்து எட்டிப்பார்த்தியா ?"

"அவ சாவுக்கு வந்துட்டு, விருந்தாளி மாதிரி அன்னைக்கே போன நீ ..."

"ஐஞ்சு வருசம் ஆகி இன்னைக்கு வந்து நிக்கிற ... ?"

"அன்னைக்கே எல்லாம் முடிஞ்சு போச்சு ..."

"உங்க அம்மா என்ன சொல்லிட்டு செத்தாள் தெரியுமா ?"

"நம்பள பார்க்க போகக் கூடாதுன்னு, பேரப் புள்ளைகளை தடுத்த அவன் பொண்டாட்டி முகத்திலயும் ..."

"அவன் முகத்துலையும் நிங்க முழிக்க கூடாது, சீக்கிரமா என் கூட வந்திடுங்கன்னு ..."

"சாகுறத்துக்கு முன்னாடி உன் அம்மா சொல்லிட்டுத்தாண்டா போனாள்"

"நல்லா கேட்டுக்கோ ...!"

"நீ, உன் பொண்டாட்டி சொல்றபடி கேட்டு நடந்துக்கிறப்ப ... உன் அப்பன் நான் ..."

"என் பொண்டாட்டி சொன்ன மாதிரியே வாழ்ந்துட்டுபோறேன்"

"அதனால ... உன் கஷ்டத்தப் பார்த்து பரிதாப படுவேன்னு நினைச்சிடாதே ..."

"பரிதாபப்பட்டு, பரிகாசத்துக்கு ஆளான எத்தனையோ ஜென்மங்களை கண்ணால பாத்திருக்கேன்"

"இப்பவாவது, பொழுதுபோகலைன்னா கோயிலுக்கு உள்ள போய்டுவர்றேன் ..."

"உங்கிட்ட என் சொத்தெல்லாம் கொடுத்துட்டு ... உன் கூட வந்தா ... அப்புறம் நீ வெறட்டி விட்டுடேன்னா ... கோவில் வசாலில் உக்காந்து பிச்சை எடுக்க வேண்டியிருக்கும்..."

"அந்த நிலைமைக்கு என்னை தள்ள தயங்காதவன் நீ ..."

"ஒரு அப்பனா, எல்லா கடமைகளையும் ஒனக்கு சரியா செஞ்சிருக்கேன், அந்த திருப்தி எனக்கு இருக்கு"

"நான் ஏற்கனவே பட்டது போதும்... இப்ப பட்ட மரமா நின்னுகிட்டிருக்கேன் ... நானா சாயரத்துக்துள்ள... வெட்டி சாச்சிடாதே ..."

அதிர்ந்து போனான் பரசுராமன். முதியவர் மேலும்,

"அப்படி ஒரு நிலைமையை எனக்கு நானே ஏற்படுத்திக்க விரும்பல, நான் இப்படியே இருந்திடுறேன் ..."

முடிவாகம், உறுதியாகவும் சொன்னார்

"இப்பவே சொல்லிடுறேன் கேட்டுக்க ... நான் செத்த பின்பு ... அடக்கம் செஞ்சிட்டு என் சொத்த எடுத்துக்க ... முடியாதுன்னா இப்பவே சொல்லிடு, ட்ரெஸ்டுக்கு எல்லாத்தையும் எழுதி கொடுத்துட்டு புண்ணியம் தேடிக்கிறேன்"

கைகளை தலைக்குமேல் குவித்துபடி தின்னமாக,

"நீ போகலாம்"  என்றார்.

திருடனுக்கு தேள்கொட்டியமாதிரி சிறிது நேரம் விக்கித்து நின்ற பரசுராமன், அவர்முகத்தை பார்க்க கூசியதால் தலையை குனிந்தபடி சத்தமின்றி வெளியேறினான்.

அறையில் மீண்டும் நிசப்தம் படர, சற்றும் அலட்டிக்கொள்ளாமல்  திரும்பிய தலையும், அவருடைய பார்வை மறுபடியும் மனைவியின் புகைப்படத்தில் நிலைத்தது, அப்பொழுது தன் மனைவி தன்னை பெருமிதமாக பார்பதாக உணர்ந்தார்.

oooOooo
கோவி.கண்ணன் அவர்களின் இதர படைப்புகள்.   சிறுகதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |