பிப்ரவரி 17 2005
தராசு
பங்குச்சந்தை ஒரு பார்வை
மஜுலா சிங்கப்புரா
முத்தொள்ளாயிரம்
கவிதை
ஆன்மீகக் கதைகள்
வ..வ..வம்பு
நூல் மதிப்புரை
நையாண்டி
கட்டுரை
சமையல்
திரைவிமர்சனம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • ஹர்ஷத் மேத்தா
 • - சசிகுமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  மஜுலா சிங்கப்புரா : தேசத்துள்ள இளைஞரறிமினோ?
  - எம்.கே.குமார்
  | Printable version |
  "'உலகமெல்லாம் கம்யூனிசமழை ஒத்தபடி பெய்யட்டும்' என்பதைத்தான் ஒரு முக்கிய கொள்கையாக இடதுசாரிகள் எப்போதும் வைத்திருந்தார்கள்"

  புயல்காற்று தாக்கும்போது மரங்கள் திடுக்கிடுகின்றன. ஆனால் ஏன் என்று எப்போதும் கேட்பதேயில்லை. பலசமயங்களில் அடியோடு சரணடைந்தும் சிலசமயங்களில் அறைகுறை இழப்புகளோடும் வாழ்ந்து பழக்கப்பட்டு விட்டன. ஆனால் நாணலின் கதை என்ன? புயலுடன் இணைந்து போதை நடனம் ஆடும் தைரியம் கொண்டவை அவைகள். புயலையும், 'போ தம்பி போ' என்று புறக்கணிக்கும் ஆற்றல் அதனுடையது. நாணல்களுக்கு நிறைய விஷயங்களில் நாம் நன்றி சொல்லியாக வேண்டிய தருணம் இது. வாழ்க்கையை அதன் பயணத்தினூடே இணைந்து கலந்து ரசிக்கும் கலையை நாணலிடமும் நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.

  சிங்கப்பூர் என்றொரு விதை முளைவிடத்துவங்கிய நேரம். எங்கே இது செழித்து வளர்ந்து மரமாகி விளைந்து நம்மைப்போன்றவர்களை பின்னுக்குத் தள்ளி விடுமோ என்று மற்ற வளர்ந்துகொண்டிருந்த மரங்களும் செடிகளும் பார்த்து பயந்து பொருமிக்கொண்டிருந்த நிலையில் ஒரு நாள். சூழ்ந்து கொண்டிருந்த 'கம்யூனிச' பகை மேகங்களைத் தனக்கு சாதகமாக்கிக்கொண்டு அத்தகு செயல்களில் இறங்கியது ஒரு மரம். வாழும் மரம். சுனாமி என்றொரு அரக்கனால் அண்மையில் சூழப்பட்ட மரம்!

  சிங்கப்பூரின் வரலாற்றில் ஒரு முக்கிய நன்றிப்படலம் 'மலாயன் கம்யூனிஸ்ட்காரர்களுக்கும்' 'பாரிசான் சோஷலிஸ்ட் கட்சிக்காரர்களுக்கும்' இந்தோனேசியாவின் 'பி.கே.ஐ' எனப்படும் 'பார்ட்டாய் கொம்யூனிஸ் இந்தோனேசியா' கட்சிக்கும் இருக்கிறது. உடலுக்குள் ஏற்படும் நோய்க்கிருமிகளின் வளர்ச்சி அவ்வுடலின் நோய் எதிர்ப்புச்சக்தியின் ஆற்றலுக்கு இணையாக இருப்பதைப்போல இவர்களை முன்வைத்தே, இவர்களைக் குறிவைத்தே இவர்கள் நடத்திய அராஜகங்களையும் தீவிரவாதத்தூண்டுதல்களையும் எதிர்க்கும் பொருட்டே திரு. லீ குவான் யூ அவர்களும் அவர் கொண்ட சிங்கப்பூர் கொள்கைகளும் பிரமாண்டமாய் விரிந்து மேலெழும்பி நின்று சாதிக்கத்தூண்டின, சாதித்துக்காட்டின என்பதில் எள்ளளவும் மிகையில்லை.

  கம்யூனிஸ்ட் கட்சியையும், சிங்கப்பூரில் அதனுடைய வரலாற்றையும் நாம் விரிவாக இங்கே காண்பதற்கு முன்னால் இந்தோனேசியாவின் கம்யூனிஸ்ட் கட்சியான 'பி.கே.ஐ' எப்படி சிங்கப்பூருக்குள் காலடி வைத்தது என்பதைப் பார்ப்போம்.

  ஒருகாலத்தில் உலகின் மூன்றாவது மிகப்பெரிய கம்யூனிச சக்தியாக 'சோவியத் ரஷ்யா', 'சீனா'வுக்குப் பிறகு விளங்கிய கட்சி இந்தோனேசியாவின் 'பார்ட்டாய் கொம்யூனிஸ் இந்தோனேசியா' எனப்படும் இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி. ஆசியாக்கண்டத்தின் முதல் கம்யூனிச கட்சியாகவும் இதைச் சொல்லலாம். 1920 ல் (ஆங்கிலேயர்களின் கிழக்கிந்தியக்கம்பெனி போலவே) டச்சுக்காரர்களின் கிழக்கிந்தியக்கம்பெனி இந்தோனேசியாவைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தபோது இக்கட்சி இங்கே உருவெடுத்தது.

  மேற்கு சுமத்ராவிலும் 'பாண்டென்' மாகாணத்திலும் தொடர்ந்து ஈடுபட்டுவந்த இதன் அரசியல் கிளர்ச்சியால் 1927 ஆம் ஆண்டு டச்சு அரசாங்கம் இதனைத் தடை செய்தது. அதற்குப்பிறகு தலைமறைவாய் இருந்து சில காலங்கள் தாம் செய்யவேண்டியவைகளைச் செய்துகொண்டு வந்தது இந்த இந்தோனேசியா கம்யூனிஸ்ட் கட்சி. 1945 ல் ஜப்பானியர்களின் 'குறுகிய கால நாட்டாமை வாழ்க்கை' தெற்காசியப்பகுதிகளில் முடிவுக்கு வந்த பிறகு சந்தடி சாக்கில் இக்கட்சியும் தலைமறைவு, தரையடி வாழ்க்கையிலிருந்து கிளம்பி தரைக்கு மேலே வந்தது.

  நிழல் உலகத்திலிருந்து நிகழ் காலத்திற்கு வந்தபின் இதுவும் சில அரசியல் கட்சிகளோடு இணைந்து டச்சுக்காரர்களிடமிருந்து இந்தோனேசியாவின் சுதந்திரத்திற்காய் பாடுபட்டது. 1950களில் 'திரு. திபா நுசாந்தரா ஐதித்' என்பவரின் தலைமையின் கீழ் பொறுப்புமிக்க ஒரு கட்சியாக விளங்கியது. அசைக்கமுடியாத அசுர பலத்துடன் சிங்கப்பூர், மலாயா, புருனே உட்பட அனைத்து நாட்டு கம்யூனிஸ்ட்டுகளுடனும் அது தீவிரத்தொடர்பு கொண்டிருந்தது.
   
  சுமார் 30 லட்சம் உறுப்பினர்களுடன் மிகப்பெரிய சக்தியாக விளங்கிக்கொண்டிருந்த இதன் வளர்ச்சியில் இந்தோனேசியாவின் அதிபர் சுகர்னோ அவர்களுக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை. எங்கே இது மாபெரும் மாற்றுசக்தியாக உருவாகிவிடுமோ என்று பயந்துகொண்டிருந்தாலும் தான் சாதிக்கவேண்டிய சில அரசியல் கீழறுப்பு வேலைகளுக்கு இக்கட்சியை தோழமையாய் பயன்படுத்திக்கொண்டார் திரு. சுகர்னோ.

  'உலகமெல்லாம் கம்யூனிசமழை ஒத்தபடி பெய்யட்டும்' என்பதைத்தான் ஒரு முக்கிய கொள்கையாக இடதுசாரிகள் எப்போதும் வைத்திருந்தார்கள். இக்கொள்கையில் தலைவர் முதல் தொண்டன் வரை யாருக்கும் வேற்றுமை இல்லை. இதை அவர்கள் உணர்ந்திருந்தார்களோ இல்லையோ இதுதான் அவர்களின் பலமும் பலவீனமும் என்பதை திரு. சுகர்னோ உணர்ந்திருந்தார். அதன்படி சிங்கப்பூரில் தீவிரமாய் இயங்கிவரும் கம்யூனிச கட்சிகளுக்கும் மலாயன் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இந்தோனேசியாவின் கம்யூனிச கட்சிக்கும் புருனே கம்யூனிச கட்சிக்கும் எல்லா விதத்திலும் தொடர்பு இருக்கிறது என்பதையும் அவர் உணர்ந்து கொண்டார். இதை வைத்து எதை முடிப்பது என்று கொஞ்சம் யோசித்துக்கொண்டுதான் இருந்தார்.

  திரு. சுகர்னோவின் அடிமனதில் இருந்த ஆசை ஒன்றும், பொறாமையில் வந்த கோபம் ஒன்றும் எல்லா அரசியல் கீழறுப்பு வேலைகளுக்கும் காரணமாக அமைந்தன. முதலாவது, மலாயா, சரவா, சாபா, புருனே, சிங்கப்பூர் மற்றும் போர்னியா ஆகிய அனைத்து பகுதிகளையும் இணைத்து 'ஒட்டுமொத்த இந்தோனேசியாவாக' ஒன்றை உருவாக்கி அதன் அதிபராக தான் அமரவேண்டும் என்பது. இரண்டாவது, பொருளாதாரத்தில் வளர்ந்துவரும் பக்கத்துநாட்டுப் பகுதிகள் எதனையும் 'எதிரியை எதிரியை வைத்தே' கொலை செய்வதைப்போல ஒரே கல்லில் இருவர் கதைகளையும் முடிப்பது.   

  Sukarnoஆங்கிலேயர்களின் அறிவுரையின் கீழ் மலாயா சாபா, சரவா, புருனே மற்றும் சிங்கப்பூர் ஆகியவை 'ஒரே நாடாக' உருவாக திட்டம் போடப்பட்டு வந்தது. இதை இந்தோனேசியா அதிபர் சுகர்னோ வெறுத்தார். இத்திட்டத்தை எல்லா பகுதிகளைச்சேர்ந்த கம்யூனிஸ்ட்டுகளும் தீவிரமாக எதிர்த்து வந்தனர். இத்திட்டத்தைத் தீர்த்துக்கட்ட எல்லா அரசியல் கீழறுப்பு நாசவேலைகளையும் அவர்கள் செய்துவந்தனர். இந்நிலையில், கடைசி நேரத்தில் புருனே சுல்தான், 'தான் தனி வழி' செல்லப்போவதாய்ப் பின்வாங்க, புருனே தவிர்த்து மலாயா, சிங்கப்பூர், சாபா, சரவா பகுதிகள் ஒன்றிணைந்து 'மலேயா கூட்டமைப்பு' என்பதன் கீழ் ஒன்றாக வந்தன. அதன்படி 1963ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி இப்பகுதிகள் ஒன்றிணைந்து 'மலேசியா' என்ற ஒன்றைத் தோற்றுவித்தன. அதில் வெறுப்பு கொண்டு தனது வேலையைக் காட்டினார் திரு.சுகர்னோ.

  ஆக இரண்டையும் ஒன்றாக ஓரிழையில் இணைத்து 'காரியங்களைச்' செய்யத்தொடங்கினார் திரு. சுகர்னோ. தனக்குப்பிடிக்காத காரியத்தை தான் எதிர்த்தால் என்ன? தன்னுடைய எதிரி எதிர்த்தால் என்ன என்பது அவரது திட்டம். அதன்படி இந்தோனேசியாவிலிருக்கும் பிரிட்டிஷ் தூதரகமும் மலாயாத்தூதரகமும் 'இந்தோனேசியர்களால்' தாக்கப்பட்டன. புருனேயின் பல இடங்களில் திடீர் திடீர் என்று கலவரங்கள் வெடிக்க ஆரம்பித்தன. சிங்கப்பூருக்குள்ளும் கம்யூனிசக்கார்களால் கல்லூரி மாணவர்களால் கலவரம் தூண்டப்பட்டது. புருனேயின் கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வர சிங்கப்பூரிலிருந்தும் ஆங்கிலேய, ஆஸ்திரேலிய படைகள் புருனேக்கு அனுப்பப்பட்டன. சொந்தமாக ஒரு 'கொசுறு' படை கூட வைத்துக்கொள்ளாமல் ஆங்கிலேயர்களின் அடிவருடி பிழைத்துவரும் சிங்கப்பூர் எனக்கெதிரே எள்ளி நகையாடுகிறதா என்று வந்தது கோபம் திரு. சுகர்னோவிற்கு. கோபம் என்ன செய்யும்?

  கோபம், சிங்கப்பூர் அம்பாசிடர் ஹோட்டலில் 1963 செப்டம்பர் 24 ஆம் தேதி குண்டு வைத்தது. சிங்கப்பூரின் வரலாற்றில் இந்தோனேசியாவால் வைக்கப்பட்ட முதல் குண்டு அது!

  (தொடரும்...)


  சிங்கப்பூர் டைம்ஸ் 2015 இதழில் இருந்து.

  நாட்டு மக்களுக்கு உரை.

  நியூடெல்லி : இந்தியாவின் 66ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று காலை 8:55 க்கு இந்தியாவின் முதல் குடிமகன் மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் ஜனாதிபதி மாளிகையில் இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். 'பாதுகாப்புக் காரணங்களை' முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சியை 'சுப்ரீம்கோர்ட் உத்தரவுப்படி' ஜனாதிபதி மாளிகையிலேயே வைத்துக்கொண்டதாகவும் இதை பொதுமக்கள் 'நேரிடையாக' தொலைக்காட்சியிலும் இண்டெர்னெட்டில் www.seekodi.com என்ற முகவரியிலும் கண்டு மகிழலாம் என்றும் ஒரு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

  கொடி ஏற்றிய பிறகு நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையில் 'இந்தியா இன்னும் சில ஆண்டுகளில் வல்லரசாவது உறுதி' என்றும் மற்ற நாடுகளைவிட எல்லாவிதத்திலும் முன்னேறி வருவதாகவும் கூறினார். நாடு 'பாதுகாப்புத்துறையில் தீவிர முன்னேற்றம்' கண்டு மிகவும் பாதுகாப்பாக விளங்குவதாகவும் சொன்னார்.

  ஜனாதிபதி அவர்களுடன் நேரிடையாக உரையாட விரும்புபவர்கள் இந்திய அரசாங்கத்தின் இணைய முகவரியில் தொடர்பு கொண்டு பேசலாம். அரசியல், பொருளாதாரம், பண்பாடு, கலை கலாச்சாரம், கல்வி, வரலாறு, காஷ்மீர் மற்றும் தனிப்பட்ட விஷயங்கள் தவிர்த்து எதுவேண்டுமானாலும் அவரிடம் பேசலாம் என ஜனாதிபதி மாளிகை செய்திக்குறிப்பொன்று தெரிவிக்கிறது.

   

   

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2005 Tamiloviam.com - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |