பாடல் 85
தேங்காய்க் குலைகளைக் கொண்ட தென்னை மரங்கள் நிறைந்த கூடல் மாநகர். அதன் தலைவன் பாண்டியன், அவனைக் கணவனாய் அடைய விரும்பினாள் இந்தப் பெண்.
ஆனால், அவளுடைய அன்னை இந்த ஆசையை அங்கீகரிக்கவில்லை, 'பாண்டியனை நீ காதலிப்பதா ? என்ன வேடிக்கை இது ?', என்று அதட்டி, மகளை வீட்டினுள் அடைத்துக் காவல் வைத்துவிட்டாள் !
தன்னுடைய நிலையை எண்ணி வாடி வருந்திய அந்தப் பெண், சோகத்துடன் பாடுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.
'அம்மா, என் காதலன் பாண்டியனோடு சேர்வதற்கு விரும்பி, என் இதயம் அவனிடம் சென்றுவிட்டது ! ஆனால், அந்த விஷயம் உனக்குத் தெரியாமல், என்னுடைய உடலைமட்டும் சிறைப்பிடித்துக் காவல் வைத்திருக்கிறாய் !'
- இப்படிச் சொல்லிவிட்டு, அவள் மெல்லமாய்ச் சிரித்துக்கொள்கிறாள், 'அம்மா, நீ செய்திருக்கும் இந்தக் காரியம் எப்படி இருக்கிறது தெரியுமா ? பறவை பறந்து சென்றபின், வெறும் கூட்டைமட்டும் காவல் காக்கிற வேடனைப்போல அசட்டுத்தனமாய் இருக்கிறது !'
கோள்தேங்கு சூழ்கூடல் கோமானைக் கூடஎன வேட்(டு)அங்குச் சென்றஎன் நெஞ்சறியாள் - கூட்டே குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன்போல் அன்னை வெறுங்கூடு காவல்கொண் டாள்.
(தேங்கு - தென்னை வேட்டு - வேட்கை கொண்டு / விரும்பி குறும்பூழ் - காடை)
பாடல் 86
'ஏம்பா, இந்த நியாயத்தைக் கேளுங்க !', என்று நம்மை அழைக்கிறாள் பாண்டியனின் காதலி ஒருத்தி.
'என்னம்மா ? என்னாச்சு ?', ஆவலுடன் வம்பு கேட்கத் தயாராகிறோம்.
எடுத்த எடுப்பில், 'இந்தப் பாண்டியன் இருக்கானே, அவன் ஒரு நியாயமில்லாத பேர்வழி !', என்று குற்றம் சாட்டுகிறாள் அவள் !
'ஐயோ, அப்படியெல்லாம் பேசக்கூடாதும்மா, அவர் பெரிய நீதிமானாச்சே !', என்று வியக்கிறோம் நாம்.
'அட, நீங்க வேற ! இப்போ நான் சொல்றதைக் கேட்டுட்டு, அப்புறம் சொல்லுங்க, அவர் நீதிமானா, இல்லை அநீதிமானா-ன்னு !', என்று சலித்துக்கொள்கிறாள் அவள் !
'பீடிகை போதும், விஷயத்தைச் சொல்லும்மா !'
அவள் சொல்கிறாள், 'இந்த பூமியில் இருக்கிற மற்ற அரசர்களோட ஒப்பிட்டால், பாண்டியன் வயதில் மிகச் சிறியவன் ! ஆகவே, 'பொடிப் பயல்' என்று அவனைப்பார்த்து கேலி செய்கிறார்கள் மற்ற அரசர்கள் !'
'சரி, அதுக்கு என்ன இப்போ ?'
'அப்படிக் கிண்டலடிக்கும் அரசர்களின்மீது போர் தொடுத்து, தன்னுடைய வீரத்தை நிரூபித்து, அவர்களுடைய நாட்டைப் பறித்துக்கொள்கிறான் இந்தப் பாண்டியன் ! போர் வெறி பிடித்த யானைகளை உடைய அவனுடைய படை, இப்படி ஏராளமான மன்னர்களை அவனுக்குப் பணியவைத்திருக்கிறது !', என்று பெருமிதத்துடன் சொல்கிறாள் அவள் !
'அப்படீன்னா, அவர் நல்லவர், வல்லவர்-ன்னுதானே அர்த்தமாகுது ? நீ முன்னாடி வேற ஏதோ சொன்னியே !', என்று விசாரிக்கிறோம்.
'அதெல்லாம் சரிதான்பா !', என்கிறாள் அவள், 'தன்னை மதிக்காத எதிரிகளோடு சண்டை போட்டு, அவர்களுடைய நாட்டைப் பறித்துக்கொள்வதெல்லாம் நியாயம்தான். ஆனால், அணிகலன்களால் அலங்கரித்த அவனுடைய உடலைக் கைகளால் தொழுது வாழும் அப்பாவிக் காதலி நான், என்னுடைய உடம்பின் நிறத்தை அவன் ஏன் பறித்துக்கொண்டான் ? இது அநியாயமில்லையா ?'
- இப்படிச் சொல்லிவிட்டு, அவள் தன்னுடைய கைகளை நீட்டுகிறாள் - அவள் சொல்வது உண்மைதான் ! இனிய மணம் பொருந்திய மாந்தளிரைப்போன்ற அவளுடைய அழகிய உடலில், இப்போது பசலை படர்ந்திருக்கிறது ! பாண்டியனைப் பிரிந்த பசலை !
அந்த பாண்டியன் உண்மையிலேயே நீதிமான், நியாயமான் என்றால், உடனடியாக இங்கே திரும்பிவந்து, இவளுடைய பசலையை குணப்படுத்தி, பழைய மாந்தளிர் நிறத்தை இவளுக்குத் திரும்பித்தரட்டும் !
களியானைத் தென்னன் இளம்கோ என்றுஎள்ளிப் பணியாரே தம்பார் இழக்க அணிஆகம் கைதொழு தேனும் இழக்கோ நறுமாவின் கொய்தளிர் அன்ன நிறம்.
(களியானை - களிப்புடைய / மதம் பிடித்த யானை இளம்கோ - இளைய தலைவன் எள்ளி - கேலி செய்து பணியார் - பணியாதவர்கள் பார் - உலகம் / நாடு ஆகம் - உடல் இழக்கோ - இழக்கவேண்டுமா ? / இழப்பது சரிதானா ? நறு - மணம் மிகுந்த அன்ன - போல)
|