'சத்திய விரதன்' என்று ஒரு மன்னன். பெயருக்கு ஏற்ப சத்தியசந்தன்.
ஒருநாள், பிரும்ம முகூர்த்த நேரம். புனித நீராடப் புறப்பட்டான். அப்போது ஓர் அழகிய பெண் நகர வாயிலைக் கடந்து போவதைக் கண்டான்.
"யாரம்மா நீ.. ?"
"நான் தான் தனலட்சுமி. ஓரிடம் நில்லாதவள்"
அரசன் அவளைப் போக அனுமதித்தான். அடுத்ததாக ஓர் ஆணழகன் வெளியேறினான்.
"யாரப்பா நீ.. ?"
"நான் தான் தர்மதேவன். செல்வம் போனபின் எனக்கு என்ன வேலை ? போகவிடு.."
அரசன் அவனையும் போக அனுமதித்தான். சற்று நேரத்தில் இன்னொருவன் வெளியேறினான்.
"யார் நீ..? ஏன் போகிறாய் ..?"
"நான் சதாசரண். நற்பண்புகளுக்கு அதிபதி. செல்வமும், தர்மமும் சென்றபின், எனக்கு என்ன வேலை? என்னையும் போகவிடு"
அவனுக்கு பின் அங்கு வந்த "புகழ்", "நற்பண்புகள் இன்றி நான் எப்படி இருப்பேன் ? என்னையும் போக விடு" என்றான்.
"ஓ அப்படியா நீயும் போய்வா..!" என்றான் மன்னன்.
சற்று நேரத்தில் தேஜோமயமான ஒருவன் "நான் சத்தியம் போகவழி விடு" என்றான்.
உடனே மன்னன், "மற்ற யார் வெளியேறினாலும் கவலையில்லை ஈடு செய்துவிடுவேன். நீ வெளியேறிவிட்டால்" அதை நான் எப்படி ஈடுசெய்வேன்? வெளியேறாதே.. உள்ளே போ.." என்று கெஞ்சினான்.
அவனுடைய வார்த்தைக்கு கட்டுபட்டு "சத்தியம் மறுபடியும் திரும்பிப் போயிற்று. அடுத்த கணம், ஏற்கனவே வெளியேறிச் சென்ற புகழ்,சதாசரண், தர்மதேவன், தனம் ஆகியோர் "சத்தியம் எங்கே இருக்கோ அங்கேதான் நாங்கள் இருப்போம், சத்தியம் இல்லாமல் எங்களால் ஒன்றும் சாதிக்க முடியாது" என்று சொல்லி நகருக்குள் திரும்பினர்.
|