பிப்ரவரி 23 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கொஞ்சம் கதைக்கலாம் வாங்க : முத்துக்கள் மூன்று
- ராமசந்திரன் உஷா
| Printable version | URL |
"படையெடுப்பின் நோக்கம் கொள்ளை அடித்தல். இது எல்லா மதத்தினருக்கும் பொருந்தும். இந்து மன்னர்களே இந்து கோவிலை கொள்ளை அடித்தும் உண்டு"

என் அம்மாவைப் பெற்ற பாட்டிக்கு திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டும் என்று தீராத ஆசை. அவர் வாழ்கை கொங்கு மண்டலத்திலேயே கழிந்தது.  இருமுறைகள் சென்னைக்கு வந்தாலும் திருப்பதிக்கு யாரும் அழைத்துப் போகாமலேயே அவர் காலம் முடிந்தது. எல்லோருக்கும் அப்படி ஏதாவது ஒரு இடத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் கட்டாயம் இருக்கும். லடாக், நாகாலாந்து உட்பட இந்தியாவில் பல இடங்களும் பங்களாதேஷ், பாக்கிஸ்தானின் புராதன  கோவில்களும், கம்போடியா அங்கோர்வாட் கோவிலும் என் பட்டியலில் உண்டு.

பக்தி மார்கத்தை விடுத்து, பழங்கால கோவில்கள் நம் நாட்டின் சிறப்பையும் செழுமையையும் பறைச் சாற்றுகின்றன என்பது என் எண்ணம். சென்ற ஜூலை மாதம் குஜராத் போக வேண்டும் என்றதும் சோமநாதர் நினைவுதான்.

சின்ன வயதில் படித்த தமிழ் மொழிப்பெயர்ப்பு நாவலான எம்.கே. முன்ஷி எழுதிய குஜராத்தி நாவல் "ஜெய் சோமநாத்", படித்ததில் இருந்து சோம்நாத் கோவிலுக்குப் போக வேண்டும் என்று ஒரு ஆவல்.

கஜினி முகமதில் இருந்து, ஒளரங்கசீப் வரை, கோவிலில் உள்ள செல்வங்களை கொள்ளையடித்தும், கோவிலை பலமுறை அழிக்கப்பட்டும் மீண்டும் மீண்டும் உயிர்தெழுந்தது ஜோதிலிங்க வடிவில் காட்சியளிக்கும் சோமநாதர் கோவில். கடைசியாய், லிங்கமும் இடிக்கப்பட்டு இஸ்லாமிய வழிப்பாட்டு தலமாகவும் மாற்றப்பட்ட இக்கோவில் சுதந்திரம் கிடைத்ததும், வல்லபாய்பட்டேல் அவர்களின் முயற்சியில் முழுக்க முழுக்க பொது மக்களிடமிருந்து நிதி வசூலிக்கப்பட்டு புதியதாய் கட்டப்பட்டது.

நாங்கள் போய் சேரும்பொழுது இருட்டிவிட்டது. ஹோட்டலில் சாமான்களைப் போட்டுவிட்டு வெளியே வந்தால் மின் விளக்குகளில் கோபுரம் பளிச்சிட்டது. கூட்டம் குறைந்திருந்தது. நிறைய பாதுகாப்பு ஏற்பாடுகள். உள்ளே போய் சோம்நாத்ஜிக்கு வணக்கம் சொல்லி விட்டு, வெளியே வந்தால் அலைக்கடல் அடித்துக் கொண்டிருந்தது. கஜினி முகமதில் இருந்து எத்தனைப் பேர்கள் இந்த செல்வத்தை கொள்ளை அடிக்க இந்த மண்ணில் கால் வைத்திருப்பார்கள்? அலைகள் பேசும் மொழி நமக்கு புரிந்தால், எத்தனை உண்மைகதைகள் தெரிந்திருக்கும்?

அப்படியே சுற்றிவிட்டு ஹோட்டலுக்கு திரும்பினோம். திரும்ப காலையில் இன்னொரு விசிட். உள்ளே நுழையும்பொழுது இன்னொரு பக்கத்தில் நிறைய புகைப்படங்கள் கண்ணில் பட்டன. வேண்டிக் கேட்டுக் கொண்டு அந்த பக்கம் போனோம். அனைத்தும் பழைய புகைப்படங்கள். பேப்பர் கட்டிங்குகள். இவற்றை பொதுவில் அனைவரும் பார்க்கும்படி வைக்கக்கூடாதா என்ற ஆதங்கம் எழுந்தது.

கோவிலுக்கு பின்புறம், பழைய கோவிலின் இடிப்பாடுகளை வைத்திருந்தார்கள். அதைப் பார்த்துவிட்டு அப்படியே மணலில் உட்கார்ந்துவிட்டேன். எத்தனை ரத்தம் சிந்திய இடம்? காலசக்கரத்தின் துணைக் கொண்டு பின்னால் போனதுப் போல இருந்தது.

அடுத்து சென்றது துவாரகா. பகவான் கிருஷ்ணன் உருவாக்கிய நகரம் என்றுச் சொல்லப்படுவது. ஊர் நெருங்க, நெருங்க வெறும் உப்பரித்த நிலங்கள். துர்வாசர் சாபம் என்று படித்த நினைவு. வழக்கப்படி ஹோட்டலில் சாமான்களை வைத்துவிட்டு நகர்வலம் ஆரம்பித்தால், ஊர் மிக வித்தியாசமாய் இருந்தது.

மறுநாள் அதிகாலையில் மீண்டும் கிருஷ்ணன்கோவிலுக்குப் போகும்பொழுது, தெருக்களும், கட்டிடங்களும் கோட்டையும் மதில்களும் கோவிலும் எந்த நூற்றாண்டில் இருக்கிறோம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தின. ஆயர்பாடி கதைகளில் வருமே அதுப் போல ஆண்கள் பளபளப்பான அந்தக்கால கோபாலன் உடையில்! பெண்கள் வழக்கமான குஜராத்தி பாணி உடையில், கையில் பால் சொம்புடன் கோவிலை நோக்கிப் போய் கொண்டு இருந்தார்கள். கடற்காற்றால் அரிக்கப்பட்ட மிக பழைமையான பிரமாண்ட கோவிலும் கோபுரமும். கோலாட்டம் நடந்துக் கொண்டிருந்தது. கைட், ஐந்தாயிரம் வருடம் பழைமையானது என்றார்.

துவாரகாவிற்கு அருகில் "பேட் துவாரகா" என்று கடலில் ஒரு தீவு. இன்னொரு கோவில் ராதாவிற்கு. இவை இரண்டும்கூட மிக பழையவை. அபூர்வ சிற்பங்கள். நின்று நிதானமாய் பார்க்கத்தான் நேரமில்லை.

அடுத்து சென்றது மவுண்ட் அபு. ஊர் முழுக்க எங்கு பார்த்தாலும் ஹோட்டல்கள். கூட்டமான கூட்டம். ஆனால் பார்க்க விசேஷமாய் ஒன்றுமில்லை. ஆனால் குளிர் சுகமாய் இருந்தது. ஜெயின், ராஜஸ்தானி உணவு வகைகள் தரமாகவும் சுவையாகவும் இருந்தன. நான்கு நாட்கள் ஊர் சுற்றியதில் இந்த ஓய்வு தேவையாய் இருந்தது.

மறுநாள் பிரம்மகுமாரிகள் சங்கத்திற்கு ஒரு விசிட், பிறகு அவர்களின் பிரமாண்டமான செயற்கையான பூங்கா. பல வேலையாட்கள் வேலை செய்துக் கொண்டு இருந்தார்கள். அங்குள்ள வாலண்டியர்களில் பல இளைஞ, இளைஞிகள். சங்கத்தை நிறுவியவரின் புத்தகங்கள், கீ செயின், படங்கள் விற்பனைக்கு இருந்தன. ஒரு ஒளி ஒலி காட்சி வேறு!

மவுண்ட் அபுவில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது "தில்வாரா கோவில்" என்ற ஜெயின் கோவில். கி.முவில் கட்டப்பட்ட, முழுக்க முழுக்க சலவைகல் அற்புதம். பூஜிக்கும் இடம் என்பதால் கேமிராவுக்கு அனுமதியில்லை. ஜைனர்களின் கோவில் என்றாலும் இந்து கடவுள்களே எங்கும். தாமரையும், விதவிதமான மிருகங்களும், பறவைகளும், சக்கரங்களும், கோல வடிவங்களும் ராஜஸ்தானின் சலவைகல்லால் இழைத்திருக்கிறார்கள்.

சில உள்ளறைகளில் ஜைனர்கள் அல்லாதவர்களுக்கு அனுமதியில்லை. சிறு பிள்ளைகள் முதற்கொண்டு, பெரியவர்கள்வரை வாயில் துணியைக் கட்டிக் கொண்டு நடமாடிக் கொண்டு இருந்தார்கள்.

dwarakaசுற்றுலா முடிந்து திரும்பும்பொழுது சோமநாத்தும், துவாராகாவும், தில்வாரா கோவிலும் நினைவில் இருந்து நீங்க மறுத்தன. சோமநாத் கோவிலைப் படையெடுத்தவர்களின் கவனம் இந்தக் கோவில்கள் மேல் ஏன் திரும்பவில்லை? படையெடுப்புக்கு முக்கிய காரணம், லிங்கத்தின் அடியில் புதைக்கப்பட்ட செல்வம். " படையெடுப்பின் நோக்கம் கொள்ளை அடித்தல். இது எல்லா மதத்தினருக்கும் பொருந்தும். இந்து மன்னர்களே இந்து கோவிலை கொள்ளை அடித்தும் உண்டு " சரித்திர பேராசிரியர் ஒருவர் சொன்னது இது.

| |
oooOooo
ராமசந்திரன் உஷா அவர்களின் இதர படைப்புகள்.   கொஞ்சம் கதைக்கலாம் வாங்க பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |