பிப்ரவரி 23 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
உள்ளங்கையில் உலகம் : ஜி எஸ் எம் விழாவும் விருதுகளும்
- எழில்
| Printable version | URL |
"சென்ற ஆண்டின் சிறந்த செல்பேசியாக நோக்கியா 8800 அறிவிக்கப்பட்டது."

ஆண்டு தோறும் நடக்கும் ஜி எஸ் எம் உற்சவம் இந்த வருடமும் ஸ்பெயின் நாட்டின் பார்ஸிலோனா நகரில் பிப்ரவரி 13 முதல் 16 வரை நிகழ்ந்தது. ஜி எஸ் எம் திட்டத்தைக் கண்காணித்து முறைப்படுத்தும் ஜி எஸ் எம் சங்கம் ( GSM Association, GSMA) இந்தச் சந்திப்பை ஒவ்வொரு வருடமும் ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்துகிறது. செல்பேசித் தயாரிப்பாளர்கள் , கம்பியில்லா வலையமைப்பு தயார் செய்யும் நிறுவனத்தினர், ஜி எஸ் எம் சேவை வழங்கும் சேவையாளர்கள் , செல்பேசிப் பயன்பாடுகள் தயாரிக்கும் வன்பொருள்/மென்பொருள் நிறுவனத்தினர் எனச் செல்பேசித் தொழில் நுட்பத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் பங்கு கொண்டு , தத்தமது எண்ணங்களையும், கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளும் களமாகவும், புதிய பயன்பாடுகள், புதுவிதச் செல்பேசிகள் போன்றவற்றை அறிமுகப்படுத்தும் நிகழ்வாகவும் இச்சந்திப்பு அமைகிறது. ஒவ்வொரு வருடமும் , கடந்து சென்ற வருடத்தின் சிறந்த செல்பேசி, சிறந்த 3 G செல்பேசி, சிறந்த செல்பேசிப் பயன்பாடு போன்றவற்றினை அறிவிக்கும் ஜி எஸ் எம்- ஆஸ்கராகவும் இந்த விழா அமைகிறது.

சென்ற வருடம் வரை பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரத்தில் நடைபெற்ற இந்த விழா இந்த வருடம் முதல் பார்ஸிலோனாவில் நடைபெற முடிவு செய்திருக்கிறார்கள். கேன்ஸை விட பார்ஸிலோனாவில் இட வசதிகள் அதிகம். எனவே நிறையப் பேர் கலந்து கொள்ள ஏதுவாக இந்த இடமாற்றம் அவசியமானது. இந்த வருடம் நடந்த விழாவில் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் கலந்து கொண்டதாக ஜி எஸ் எம் அஸோசியேஸன் தெரிவித்தது.

செல்பேசித் தொழில் நுட்பத்தில் கொடிகட்டிப் பறக்கும் பல்வேறு நிறுவனங்களும் தங்களது புத்தம்புது படைப்புகளை அறிமுகம் செய்யும் வகையில் பெரிய கடைகளையும் விரித்திருந்தன . பிரபல நிறுவனங்களின் தலைவர்களும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர். சுவாரஸ்யமான ஒரு விஷயம் , செல்பேசிச் சேவை வழங்குனர்களில் முன்னிலை வகிக்கும் வோடபோன் மற்றும் ஆரஞ்ச் ஆகிய நிறுவனங்களின் தலைமைப் பதவிகளை வகிப்பவர்கள் இந்தியர்களே ( வோடபோன் - அருண் சாரின் , ஆரஞ்ச் - சஞ்சிவ் அஹுஜா ). இவ்விருவரும் விழாவில் சிறப்புரை ஆற்றியவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

இரண்டாவது நாள் இரவு நிகழ்ந்த வண்ணமிகு நிகழ்ச்சியில் இங்கிலாந்துப் பாடகர் கிரெக் டேவிடின் இசை விருந்தைத் தொடர்ந்து சென்ற வருடத்தின் சிறந்த செல்பேசிகள், சேவைகள் பற்றிய விருதுகள் அறிவிக்கப்பட்டன.

Nokia 8800சென்ற ஆண்டின் சிறந்த செல்பேசியாக நோக்கியா 8800 அறிவிக்கப்பட்டது.

இது சற்று ஆச்சரியமான அறிவிப்பு. விருதுக்குத் தகுதி பெற்ற பிற செல்பேசிகள் (ஸாம்சங் மற்றும் ஸோனி எரிக்ஸன்) நோக்கியா 8800 -ஐ விட சிறந்த வடிவமைப்பும் செயல்திறனும் கொண்டவை. நோக்கியாவின் கேமெரா மற்றும் இசைச் செயலிகளை விட ஸோனி எரிக்ஸனின் K750 மற்றும் W800 சிறந்தது. ஸோனி எரிக்ஸனின் இவ்விரு செல்பேசிகளும் தேர்ந்தெடுக்கப்படாதது ஆச்சரியமே.


சிறந்த மூன்றாம் தலைமுறைச் செல்பேசியாக (வீடியோ பேசி) மோடரோலாவின் RAZR- V3 Motorola Razorவரிசைச் செல்பேசி தேர்ந்தெடுக்கப் பட்டது. 

சரியான தேர்வு. ஒல்லிக்குச்சி உடலுடன் அறிமுகமான இந்தச் செல்பேசிகள் சந்தையிலும் பெரும் வரவேற்பைப் பெற்றன .மோடரோலாவின் விற்பனையைப் பெரிதும் அதிகரிக்கவும் இந்தச் செல்பேசி உதவியது.

பாகிஸ்தானில் சென்ற ஆண்டின் செல்பேசி வளர்ச்சி போற்றுதலுக்குரிய வண்ணம் அமைந்தது. சென்ற வருடம் செல்பேசிப் பயனாளர்களின் வளர்ச்சி வீதம் பதிமூன்று சதவீதம் அதிகரித்துத் தற்போது இருபது மில்லியன் மக்கள் செல்பேசிச் சேவையைப் பயன்படுத்துகிறார்கள் . இவ்வளர்ச்சியைப் பாராட்டும் வண்ணம் ஒரு விருது (Government Leadership Award) ) பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது.  சிறந்த செல்பேசிப் பயன்பாடு, சிறந்த செல்பேசி விளையாட்டு , சிறந்த செல்பேசிச் சேவையாளர் போன்ற பல பிரிவுகளிலும் பரிசுகள் அறிவிக்கப் பட்டன. முழுப் பட்டியலுக்கு இங்கே செல்லவும் : http://www.gsmworld.com/news/press_2006/press06_16.shtml.

விழா நடந்த நாட்களில் புதிய பல செல்பேசிகள் அறிமுகம் செய்யப்பட்டன. அவற்றுள் குறிப்பிடத் தகுந்த மாதிரிகள் சில:

நோக்கியா 6136

Nokia 6136உமா (UMA) தொழில் நுட்பத்தைத் தன்னுள் அடக்கிய முதல் செல்பேசி . அதென்ன உமா தொழில் நுட்பம்? உரிமமிலா நகரணுகல் (Unlicensed Mobile Access ) என்பதின் குறுக்கமே இந்த உமா. இத்தொழில் நுட்பம் செல்பேசி வலையமைப்புகள் இல்லாவிடங்களிலும் , அழைப்பு ஏற்படுத்தவோ, செல்பேசி கொண்டு இணைய இணைப்பு ஏற்படுத்தவோ உதவுகின்றது. எவ்வாறு ? செல்பேசி வலையமைப்புகள் இல்லாவிடங்களில் அங்குள்ள கம்பியில்லாக் குறும்பரப்பு வலையமைப்புகளைப் பயன்படுத்தி (Wireless LAN) அழைப்பு ஏற்படுத்த இந்நுட்பம் பயனாகிறது. இந்தத் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி வெளிவரும் முதல் செல்பேசி நோக்கியா 6136 என்ற வகையில் இது சிறப்புப் பெறுகின்றது. SE-W950

ஸோனி எரிக்ஸன் W950:

நான்கு கிகாபைட்டுகள் உள்ளடக்க நினைவோடு வந்துள்ள புதிய இசைச் செல்பேசி இது. தொடு உணர்வுடன் கூடிய திரை (touch screen) , ஒல்லி வடிவம் போன்றவை இதன் சிறப்பம்சங்கள். கேமெரா இல்லாதது இதன் குறை. ஆப்பிள் நிறுவனத்தின் ஐ- பாடுக்குப் போட்டியாக இந்தச் செல்பேசி கணிக்கப்பட்டுள்ளது.

lg-v9000எல் ஜி V9000:

செல்பேசியிலேயே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காணும் வண்ணம் வடிவமைக்கப்பட்ட செல்பேசி இது.

 

| | | |
oooOooo
எழில் அவர்களின் இதர படைப்புகள்.   உள்ளங்கையில் உலகம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |