பிப்ரவரி 23 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : காற்று
- மதுமிதா [madhumitha_1964@yahoo.co.in]
| Printable version | URL |

காற்று உலகை வாழச் செய்கிறது.
காற்று அழிக்கவும் செய்கிறது.

windகாற்று உயிர்களை வாழ்விக்கச் செய்யவல்லது. காற்றுவெளி மண்டலமே பூமியைக் கதிர்களின் தீங்கிலிருந்து காக்கும் கவசமாகவும் உள்ளது. தாவரங்கள் காற்றிலிருந்து ஒளிச்சேர்க்கைக்கு கார்பன் -டை-ஆக்சைடை எடுத்துக்கொண்டு ஆக்சிஜனை வெளிவிடுகின்றன. மனிதன் போன்ற ஜீவராசிகள் சுவாசிக்க பிராணவாயு உட்கொண்டு,கரியமிலவாயுவை வெளியிடுகின்றனர். காற்று இல்லையேல் வாழ்வில்லை.உயிரில்லை. உலகில்லை.

காற்று உயிர்களை அழிக்கவல்லது. புயலாக,சூறாவளியாக உயிர்களை பந்தாடி அழிக்கவல்லது.

கண்களால் காண இயலா 'காற்றின் மகத்துவம்' காலங்களால் போற்றப் படவேண்டியது. உணர மட்டுமே இயலும் காற்று கணந்தோறும் வாழவைக்கும் மனிதகுலத்துக்கான வரம்.

ஒருமுறை அதிகாலை மூன்று மணிக்கு பெரிய சத்தத்தால் விழிப்பு ஏற்பட்டது. என்ன என்று பார்க்கையில் குளியலறையில் ஹீட்டருக்காக வைக்கப்பட்ட இடத்தில் (அப்போது ஹீட்டர் வைக்காததால்) நீர் வரும் பாதையை அடைத்து இரும்பு துருப்பிடித்துவிடும் என்பதற்காக, இரு பிளாஸ்டிக் திருகாணிகள் பொருத்தப் பட்டிருக்கும்; அதில் ஒன்று பிய்த்துக் கொண்டு தண்ணீர் பீய்ச்சியடித்து வெளியேறிக் கொண்டிருந்த சத்தம் அது.

கை வைத்து அடைக்க இயலவில்லை. பிளாஸ்டிக் திருகாணியையும் திருப்பிப் பொருத்த இயலவில்லை. எதுவும் செய்ய இயலாததால்,மொட்டை மாடிக்கு ஓடி,குளியலறைக்கு நீர் வரும் கேட் வால்வை மூடி வெளியேறும் நீரை நிறுத்தி தூங்கச் சென்றோம்.

மறுநாள் அதற்கு வேறு திருகாணி வாங்கி பொருத்தவந்தவர்,மேலே தண்ணீர் தொட்டி காலியாக இருந்ததா என்று வினவினார். ஆமாம் என்றதும்,தண்ணீர் ஏற்றியதும் காலியான தொட்டியில் நீர் நிரம்பியதும் அங்கிருந்த காற்று செல்ல இடமில்லாததால் திருகாணி பிய்த்துக் கொண்டுவிட்டது என்றார்.

பிளாஸ்டிக் திருகாணி மறுபடியும் பொருத்தப் பட்டதும்,கேட் வால்வை மூடச்சொல்லி,மற்ற குழாய்களைத்  திறந்து வைக்கச் சொன்னார்.சத்தமாய் காற்றும் நீருமாய் வெளியேறியது. குழாயினை மூடி மூடித் திறந்து காற்று முழுவதுமாய் வெளியேறி நீர் விழும் சத்தம் மட்டும் வந்ததும் மூடினார்.

இப்போது இங்கே காற்று நீருடன் வெளியேறி விட்டது; அன்று அது அடைத்தே இருந்ததால்,காற்று போக இடமில்லாததால் பிய்த்துக்கொண்டது,என்று மறுபடியும் சொல்லிவிட்டுப் போனார். அதிலிருந்து தவறியும் தொட்டியில் நீர் குறையாதவாறு பார்த்துக்கொண்டோம்.

வயிற்றில் காற்று சற்றும் அதிகமாய் இருக்கக் கூடாது.

பிறந்த குழந்தைக்குக் கூட பால் குடித்ததும்,தோளில் போட்டு முதுகை லேசாய்  தடவி அல்லது மடியில் உட்காருவது போல் வைத்து,வயிறு சற்றே அழுந்துவதாய் முன்னால் சாய்த்து, முதுகை லேசாய் தடவி ஏப்பம் விடச் செய்வர்.

பெரியவர்கள் வயிறு உப்பிசம் வந்து கஷ்டப்படும் போது காற்றுத் தொல்லை (gas trouble) என்பர். காற்று வெளியேறினால் சரியாகிவிடும் என்பர். காலையில் எழுந்ததும் வயிறு நிரம்ப (ஒரு லிட்டர்) தண்ணீர் குடித்து,குழாயில் அடைத்திருந்தது போல் அடைத்திருக்காது காற்றை வெளியேற்ற பழகிக் கொள்ள வேண்டும்.உடல் நலத்திற்கு இது அவசியம்.

காற்றின் மகத்துவம்.

உடல் நலத்திற்கு காற்று என்ன செய்யும் ?

நாம் தூய காற்றினை சுவாசிக்க வேண்டும்.சுவாசிக்கும் காற்று நுரையீரல்களை நிரப்பி,இரத்தத்தை சுத்திகரித்து,உடலை ஆரோக்கியமாக இயங்கச் செய்கிறது. ஓட்டம், நடை, விளையாட்டு, உடற்பயிற்சி, நடனம், உடலை வருத்தும் வேலை என வியர்வை வழிய செய்யும் அனைத்துப் பணிகளும் அதிக கொள்ளளவில் காற்றினை நுரையீரலுக்கு அனுப்பி உடலை சீராக இயங்கச் செய்யும்.

மன நலத்திற்கு காற்று என்ன செய்யும்?

அதற்கும் காற்று உதவும். மூச்சுக்காற்று பல சந்தர்ப்பங்களில் உணர்வுகளை மாற்றியமைக்கும் வல்லமையுடையது. கோபமாக இருக்கும்போது 1,2,3 பத்து வரை எண்ணுங்கள் என்று சொல்வர்.கோபம் குறைய வேண்டுமென்பதற்காக. கண்ணைமூடிக் கொண்டு மூச்சினை மெதுவாக,நன்றாக,முழுவதுமாக உள் இழுத்து வெளியிடவேண்டும். மூச்சுப் பயிற்சி செய்தால் உணர்வுகளை நம் வசப்படுத்தும் சக்தி அதிகரிக்கும். முற்காலங்களில்,முனிவர்கள் காடுகளுக்குச் சென்று தவம் செய்தது தங்கள் உணர்வுகளைத் தங்கள் கட்டுக்குள் வைத்துக் கொள்வதற்கே.காட்டிற்கோ,மலையுச்சிக்கோ கடும் பயணம் செல்ல வேண்டாம். இருக்கும் இடத்திலிருந்தே மூச்சுப் பயிற்சி மூலம் உணர்வுகளை,எண்ணங்களை நம் வசம் செய்யலாம். மந்திரம் மாயம் எதுவுமில்லை. மனமிருந்தால் போதும்.

முதலில் ஒரு அரைமணி நேரம் தினமும் ஒதுக்கவேண்டும் மூச்சுப்பயிற்சிக்கு.நேரமில்லை என்பவர்கள் பிறகு பயிற்சி செய்யச் செய்ய பத்துநிமிடம் ஒதுக்கினால் கூடப் போதும்.ஏதோ கடினமான வேலை நம்மால் செய்ய இயலாது என்ற மலைப்பே தேவையில்லை.சைக்கிளோ,நீச்சலோ கற்றுக் கொள்ளும் போது எப்படி கற்கிறோம்?முதலில் சிரமமாக இருப்பதாகத் தோன்றும். ஆனால் பழகி விட்டால்?அதிலேயே எத்தனை சாகசங்கள் செய்ய முடிகிறது? அதே நிலைதான்,அதே முறைதான் இதற்கும். ஆரம்பித்து விட்டால் அந்த அமைதி எப்போதும் உடனிருக்கும்படி பார்த்துக் கொள்ள இயலும், எந்த சூழலிலும். இந்த அமைதியெனும் போதையினை ஒருமுறை அனுபவித்துவிட்டால்,புகை,குடி... போன்ற வேறெந்த போதையும் முன்னே நிற்க இயலாது.

மூச்சுக் காற்றின் முறையான,முழுமையான உள் இழுப்பில் அறிவின் மற்றோர் ஊற்றுக்கண் திறப்பது திண்ணம். கையில் கிடைத்த நல்முத்தினை இழக்க யாரேனும் விரும்புவார்களா?

உடல்நலம், மனநலம் காக்கும் காற்றெனும் வரப்பிரசாதம் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும். காற்றினை மாசுபடாது காத்து அடுத்த தலைமுறையினருக்கு பொக்கிஷமாக அளிப்போம்.

|
oooOooo
மதுமிதா அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |