மார்ச் 02 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
உள்ளங்கையில் உலகம் : ஸீபிட்
- எழில்
| Printable version | URL |

சுமார் ஆறாயிரம் கடைவிரிப்பாளர்கள், மூன்று லட்சம் சதுரமீட்டர் பரப்பளவு கண்காட்சி மைதானம், புத்தம்புதுக் கண்டுபிடிப்பு வடிவங்களின் அணிவகுப்பு மற்றும் இலட்சக்கணக்கான பார்வையாளர்கள். இவையனைத்தும் எங்கே என்று கேட்கிறீர்களா? ஜெர்மனியின் ஹானோவர் (Hannover) நகரில் வருடாவருடம் நடக்கும் ஸீபிட் (CeBIT) கண்காட்சியில் தான்.

உலகின் மிகப்பெரிய தகவல் தொழில் நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புக் கண்காட்சி ஒவ்வொரு ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு வார காலத்திற்கு இங்கு நடைபெறுகிறது. உலகெங்குமுள்ள ஆயிரக்கணக்கான தயாரிப்பு நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள், வன்பொருள் மற்றும் மென்பொருள் தயாரிப்பாளர்கள், மின்னனுவியல் சாதனங்கள் தயாரிப்பாளர்கள், செல்பேசி நிறுவனங்கள், செல்பேசி சேவை அளிக்கும் நிறுவனத்தினர் என அனைவரும் ஒரு குடையின் கீழ் கூடும் இடம் மார்ச் மாதத்து ஹானோவர்தான். ஒவ்வொரு நிறுவனமும் தான் புதிதாய்த் தயாரித்த மின்னனுவியல் பொருட்கள், வன்பொருள், மென்பொருள் மற்றும் செல்பேசி போன்றவற்றைச் சந்தையில் வெளியுடும் முன் ஸீபிட் - டில் காட்சியாய் வைத்து விளம்பரம் தேடுகின்றன. தகவல் தொழில் நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களும் தாம் அளிக்கும் உயர்வகை நுட்பங்களையும் பட்டியலிட்டு அச்சேவை சார்ந்த பிற நிறுவனங்களுக்கு வலை விரிக்கின்றன. தொழில் நிறுவனங்களிடையே வணிக ஒப்பந்தங்கள் ஏற்படுவதற்கும் மற்ற போட்டியளர்களின் தயாரிப்புகளை அறிந்துகொண்டு தற்போதைய சந்தையின் போக்கினைப் (Trend) புரிந்து அதற்கேற்ப தொழில் நுணுக்கங்களை வகுப்பதற்கும் இந்த ஹானோவர் சந்திப்பு பெரிதும் உதவுகிறது.

ஸீபிட் தோன்றிய கதை மிகப் பெரியது, சுருக்கமாகவே சொல்கிறேன்: ஒவ்வொரு வருடமும் ஹானோவர் சந்தை (Hannover Fair) சுமார் ஐம்பது வருடங்களாக நடந்துவருகிறது. குறைக்கடத்திகளின் (Semi conductors) கண்டுபிடிப்புகளுக்குப்பின் மின்னணுவியல் துறையில் ஏற்பட்ட புரட்சி, மின்னணு இயந்திரங்களுக்கும் இந்தச் சந்தையில் ஒரு இடம் பிடித்துக் கொடுத்தது. கணினியின் வரவு மற்றும் தொலைத் தொடர்பியலின் அசுர வளர்ச்சியின் காரணமாக தகவல் தொழில் நுட்பச் சந்தை இக்காட்சியில் முக்கியப் பங்கு வகிக்க ஆரம்பித்தது. 1980- களின் ஆரம்பத்தில் "மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பச் "சந்தையினைத் தனியான ஒரு கண்காட்சியாக நடத்தும் திட்டம் வலுப்பெற்று அதற்கு செயல் வடிவமும் கொடுக்கப்பட்டது. ஜெர்மனியின் பெரிய நகரங்களிலெல்லாம் இம்மாதிரியான சந்தைகள், விழாக்கள் நடைபெறுவதற்கென்றே காட்சி மைதானங்கள் (ஜெர்மன் மொழியில் இதை Messe என்பார்கள்) அமைக்கப்ப்பட்டிருக்கும். அத்தகு மைதானத்தில் 1987 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஸீபிட் கண்காட்சி தனியான ஒரு பெருங்காட்சியாக மலர்ந்தது. சரி , ஸீபிட் என்றால் என்ன? மத்திய தகவல் தொழில்நுட்ப அலுவலகம் (Center for office and Information technology) என்பதன் சுருக்கமே ஸீபிட்.  87-ல் அனைவரும் கண்காட்சியை ஆவலுடன் எதிபார்த்துக் கொண்டிருக்க எதிபாராமல் வீசிய பனிப்புயலினால் சுமார் ஒரு மீட்டர் உயரத்திற்கு பனி வளர்ந்துவிட்டதாம். பனியகற்றும் வேலையைப் பலமணி நேரம் செய்து காட்சி தடையின்றி நடைபெற்றது. இதனால் அந்த வருடத்து ஸீபிட் வேடிக்கையாக Snowபிட் என்றழைக்கப் பட்டது.

ஹானோவரில் இக்கண்காட்சியின் மாபெரும் வெற்றி, உலகின் மற்ற பகுதிகளிலும் ஸீபிட் விழா தற்போது நடத்த வழி வகுத்தது. அமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களிலும் கண்காட்சிகள் திட்டமிடப்பட்டு நடைபெறுகின்றன. சீனாவின் ஷங்கை நகரில் ஸீபிட்-ஆசியா நடைபெறுகின்றது. ஸீபிட்-அமெரிக்கா, நியூ யார்க் நகரில் ஆண்டு தோறும் மே மாதத்திலும், ஸீபிட் ஆஸ்திரேலியா சிட்னியில் அதே மே மாதத்திலும் நடைபெறுகின்றன. துருக்கியின் தலைநகரம் இஸ்தான்புல்-லில் ஸீபிட் - ஈரோ ஆசியா ஆண்டு தோறும் நடைபெறுகின்றது.

இந்த வருடம் ஸீபிட் கண்காட்சி இந்த வாரம் (மார்ச் 9 முதல் 15 வரை) நடைபெறுகின்றது. உலகெங்கிலுமுள்ள மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளுடன் இவ்வருடமும் கண்காட்சியில் கடை விரிக்கின்றன. அடுத்த வாரம் இவ்வாண்டுக் கண்காட்சியின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்!

புத்தம் புதுசு!

Sony Ericsson K800சென்ற வாரம் ஸோனி எரிக்ஸன் வெளியிட்ட அறிவிப்பில் ஆறு புதிய செல்பேசிகளை அறிமுகப்படுத்தி இருந்தது. அவற்றுள் குறிப்பிடத் தகுந்த ஒரு செல்பேசி ஸோனி எரிக்ஸன் K800. மூன்று மெகா பிக்செல் (3.2 MP) திறன் கொண்ட கேமெரா இணைக்கப்பட்ட செல்பேசி இது. டிஜிடல் கேமெராவின் தரத்துடன் இனி செல்பேசியிலும் படங்கள் எடுத்துக்கொள்ளலாம். ஸோனி டிஜிடல் கேமெராக்களின் சைபர் ஷாட் ( Cyber Shot) முத்திரையுடன் இந்தச் செல்பேசி அறிமுகமாகிறது. ஏற்கனவே ஸோனியின் வாக்மேன் முத்திரையுடன் கூடிய இசைபேசிகள் சென்ற ஆண்டு அறிமுகமாகி வரவேற்புப் பெற்றது நினைவிருக்கலாம். இந்த சைபர் ஷாட் செல்பேசியில் 16 X டிஜிடல் ஜூம் , 64 மெகா பைட்ஸ் உள் நினைவு உண்டு . அதிக அளவு புகைப்படங்களைச் சேகரிக்க ஸோனியின் புதிய M2 நினைவுக் குச்சி (Memory Stick ) யைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இன்னுமொரு வசதி கூகிளின் ப்ளாக்கர் சேவை. எடுத்த புகைப்படங்களை உடனுக்குடனே இணையத்தில் அஞ்சல் செய்து புகைப்படப் ப்ளாக்கரில் ( Photo Blogger)  பதிப்பித்துக் கொள்ளவும் முடியும் (Instant Publishing). இதற்கான ஒப்பந்தம் சோனி எரிக்ஸனுக்கும் கூகிளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கிறது. அடுத்த காலாண்டின் இறுதியில் (ஜூன்) ஸோனி எரிக்ஸன் K800 சந்தையில் விற்பனைக்கு வருகிறது.

| | |
oooOooo
எழில் அவர்களின் இதர படைப்புகள்.   உள்ளங்கையில் உலகம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |