Tamiloviam
மார்ச் 08 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : காங்கிரஸ் - கோஷ்டி பூசல்
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
| | Printable version | URL |

Soniaநாம், தன்னைத் தானே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய காலம். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பணியை நாம் செய்தே ஆக வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி சமீபத்தில் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கூறி இருக்கிறாhர். மக்களின் செல்வாக்கை பெற்ற ஒரே கட்சி காங்கிரஸ் கட்சி மட்டுமே என்று இதற்கு முன்பு கூறிய சோனியா காந்தியின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை கிளப்பி இருக்கிறது.

சமீபத்தில் வெளியான பஞ்சாப், உத்தரகண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், மகாராஷ்டிரா மாநில உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், நாடாளுமன்ற இடைத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பலத்த அடியைக் கொடுத்தது. அதன் விளைவாகத் தான் சோனியா காந்தி மேற் சொன்னவாரு பேசி இருக்கிறார். சோனியா காந்தி காங்கிரஸ் கட்சிக்கு தலைமை ஏற்ற பொழுது நாட்டில் இனி தேனாறும், பாலாறும் ஓடும் என காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவர்களும் சொல்லிக் கொண்டிருந்தனர். அந்த எண்ணம் எவ்வளவு அபத்தமானது என்பது தற்பொழுது நிரூபிக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் ராஜியம் சரிந்து வருகிறது என்பது தான் யாதார்த்த உண்மை என்று அரசியல் நோக்கர்கள் விமர்சிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

அரசியல் கட்சிகளில் ஏற்றமும், இறக்கமும் வருவது இயல்பான ஒன்று தான். ஆனால் சமீப காலமாக மிகவும் படு பாதாள இறக்கத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் கட்சியாக காங்கிரஸ் கட்சி இருக்கிறது. மத்தியில் இரண்டு ஆண்டுகாலம் ஆட்சி நடத்தி, தனி ராஜியம் நடத்திக் கொண்டிருக்கும் இக்கட்சி இன்று விலைவாசி உயர்வால் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையை மாற்ற மத்திய பட்ஜெட்டில் வழி காணாமல் நாய், பூனைகளுக்கு விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலையை குறைத்துக் கொண்டிருக்கிறார் நிதி அமைச்சர் சிதம்பரம். எந்தவித கொள்கையும், கோட்பாடுகளும் தெளிவும் இல்லாத கூட்டணியாக தற்போதைய மத்திய அரசு இருக்கிறது. ஒரு லிட்டர் மண்ணெண்ணெய், மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையை ஒரு ரூபாய் உயர்த்தினாலே கூட்டம் கூட்டி ஆர்ப்பாட்டம் நடத்தும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் முக்கியமான ஆதரவு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை சொல்ல முடியாது. பொது துறையை தனியாருக்கு விற்கக் கூடாது, மானியங்களை அதிகரிக்க வேண்டும் என கம்யூனிஸ்ட்கள் கூறுகிறார்கள். ஆனால் பிரதமரும், நிதி அமைச்சரும் மானியங்களை படிப்படியாக ஒழிப்போம் என்கிறார்கள். இப்படி பல முரண்பாடுகள் கொண்ட கூட்டணியாக காங்கிரஸ் கூட்டணி இருக்கிறது.

1991ம் ஆண்டு நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் அமைந்த பொழுது தாராளமயம், தனியார்மயம் பொருளாதரா கொள்கைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்திய நிதி அமைச்சரான இருந்த மன்மோகன் சிங் இன்று பிரதமர். மற்றும் அவரது சகாக்களும் தற்போதைய அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளனர். அவர்கள் 2004ம் ஆண்டு பதவி ஏற்ற உடனே அவர்களது கோஷமாக, மனிதநேயப் பொருளாதாரக் கொள்கை கடைபிடிக்கப் போகிறோம் என்றார்கள். அந்த மனிதநேயப் பொருளாதாரக் கொள்கையை காண ஆதரவு தரும் கட்சிகள் தவிர, சராசரி இந்தியனும் ஆர்வமாக இருந்தான். அந்த மனித நேயப் பொருளாதார கொள்கையை அவர்களால் செயல்படுத்த முடியாத காரணத்தினால் இன்று இக்கட்சி மக்களிடம் தோல்வியை கண்டு வருகிறது. இந்த நிலை மாறவில்லை என்றால் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒரு முறை தோல்வியைத் தான் சந்திக்கும். பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வரும் காலம் விரைவில் உருவாகும் என்கிறார்கள் பாரதீய ஜனதா கட்சியினர்.  

கேரளா, கர்நாடகா, மகராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், மேகலயா, மணிப்பூர், பாண்டிச்சேரி யூனியன் பிரதேசம், ஆந்திரா, கோவா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. அதில் இன்று கேரளா, கர்நாடகா போன்றவற்றை காங்கிரஸ் கட்சி இழந்து விட்டது.  டில்லி, அரியானா, பஞ்சாப், அசாம், அருணாசல பிரதேசம், உத்தராஞ்சல், இமச்சல பிரதேசம், ஆகிய மாநிலங்களிலும் தனிப்பெரும்பான்மையோடு காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தது. அதிலும் பஞ்சாப், உத்தராஞ்சல், இமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தை காங்கிரஸ் கட்சி இழந்து விட்டது. இப்படி காங்கிரஸ் கட்சி தனது செல்வாக்கை இழந்து வருவதை தடுக்க மத்திய அரசு கண்டிப்பாக எதையாவது செய்து மக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும். சமீபத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைந்த பொழுதும் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையாத காரணத்தை மத்திய அரசு கண்டுபிடித்தாலே போதும். பெரும்பாலான பிரச்சினை முடிவுக்கு வந்து விடும் என காங்கிரஸ் கட்சியினர் சொல்கின்றனர்.

நாட்டில் உயர்ந்து வரும் விலைவாசி உயர்வு, கடன் சுமை, வேலைவாய்ப்பின்மை, வறுமை, விவசாயிகள் தற்கொலை, சில்லரை வணிகத்தில் அன்னிய நிறுவனங்கள் முதலீடு போன்ற காரணங்களால் இன்றைய மத்திய காங்கிரஸ் கூட்டணி மேல் மக்கள் வெறுப்பினை காட்டத் தொடங்கி விட்டனர். அதன் விளைவு தான் மேற்சொன்ன தேர்தல் முடிவுகள். இதன் முழுப் பலனையும் பாரதீய ஜனதா கட்சி தான் அனுபவிக்கப் போகிறது. அந்தத் மகிழ்ச்சியில் தான் நாடாளுமன்றத்தை சரிவர நடத்த ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கிறார்கள். குரோச்சி விவகாரத்தை பாரதீய ஜனதா கட்சி சரியாக பயன்படுத்திக் கொண்டு அதனை மக்களிடமும் கொண்டு போய் காங்கிரஸ் குறிப்பாக சோனியா காந்திக்கு எதிராக திருப்பி விட்டுக் விட்டனர். காங்கிரஸ் கட்சி 9 ஆண்டுகளுக்கு முன் தத்தளித்துக் கொண்டிருந்த பொழுது அதனை காக்கும் காவல் தெய்வம் போல் சோனியா காந்தி வந்தார். அவரது வருகையை அன்றே நடுநிலையாளர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அன்று காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த ஓட்டுக்கள் அன்றைய ஆளும் கட்சியாக இருந்த பாரதீய ஜனதாவுக்கு எதிரான ஓட்டுக்கள் என்று சொன்னார்கள். அது தான் இனியும் நடக்கப் போகிறது. இன்றைய காங்கிரஸ் கூட்டணிக்கு எதிரான ஓட்டுக்கள் பாரதீய ஜனதா கூட்டணிக்கு தான் போகப் போகிறது. இதனால் கம்யூனிஸ்ட்கள் செய்வது அறியாமல் புலம்பப் போகிறார்கள் பாருங்கள் என நடுநிலைவாதிகள் சொல்கிறார்கள். 

இப்படி காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு அல்லது ராஜியம் இந்தியா மாநிலங்களில் சரியும் நிலையில் காங்கிரஸ் கட்சியினரிடம் ஒற்றுமை இருக்கிறது என்றால் இது தான் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்தியாவில் அதிக கோஷ்டிப் பூசல்களை கொண்ட கட்சி எது என்று கணக்கு எடுத்தால் காங்கிரஸ் கட்சிக்கு முதல் இடம் கிடைக்கும். காங்கிரஸ் கட்சிக்குள் உள்ள கோஷ்டிப் பூசலுக்கு சிறந்த உதரணம் தமிழகத்தை சொல்லலாம். கட்சியின் உட்கட்சி கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் முதல் அடிப்படை தொண்டன் வரை பேசும் ஆப் த ரெக்கார்ட்டு பேச்சினை அப்படியே டேப்பில் பதிவு செய்து தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு அனுப்பும் அளவுக்கு காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிப் பூசல் கொடி கட்டிப் பறக்கிறது. இந்த கோஷ்டி கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி, ஆந்திரா என்று அனைத்து இடங்களிலும் ஒன்று போல் பரவிக் கிடக்கிறது. ஒரு வேலை இந்த கோஷ்டிப் பூசல்கள் மற்ற கட்சிகளுக்குள் வேண்டுமானால் இடையுறாக இருக்கலாம். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு கோஷ்டிப் பூசல்கள் தான் பலம் என்று சொல்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.

| | |
oooOooo
                         
 
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |