மார்ச் 09 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
உள்ளங்கையில் உலகம் : ஸீபிட் 2006
- எழில்
| Printable version | URL |

வழக்கமான உற்சாகத்துடன் இந்த வருட ஸீபிட் உற்சவம் ஜெர்மனியின் ஹானோவர் நகரில் சென்ற வாரம் (மார்ச் 9) தொடங்கியது. ஜெர்மனியின் முதல் பெண் அதிபர் ஏஞ்சலா மெர்கெல் கண்காட்சியைத் தொடக்கி வைத்தார்.

இவ்வருட ஸீபிட்டில் ஸாம்சங் நிறுவனம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துக்கொண்டிருக்கிறது. சன் டிவியில் விளம்பரம் செய்வார்களே " உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக" என்று!

Samsung Q1அது போல "உலகின் முதல் " என்ற முத்திரையோடு ஏராளமான மின்னணுவியல் சாதனங்கள் ஸாம்சங் நிறுவனத்திலிருந்து காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த (அல்லது ஆவலோடு எதிர்பார்த்ததாகச் சொல்லப்பட்ட) மைக்ரோஸாப்ட் நிறுவனத்தின் புதிய தளமான ஒரிகாமி (Origami) ஸீபிட்-டில் அறிமுகமானது. ஒரிகாமி தளத்தினைக் கொண்டு வின்டோஸ் XP-யினை மாத்திரைக்கணினியில் அறிமுகம் செய்திருக்கிறார்கள் மைக்ரோசாப்டும் இன்டெல்லும். இந்த அடிப்படையில் உலகின் முதல் அல்ட்ரா மொபில் கணினி என்ற பெயரோடு அறிமுகமான ஸாம்சங்கின் குட்டிக் கணினி Q1 என்று அறியப் படுகிறது.

கண்காட்சியின் முதல் நாளில் பட்டையைக் கலக்கிய இந்த மாத்திரைக் கணினி (tablet PC) ஏழு இன்ச் அகலமுள்ள தொடு திரையைக் கொண்டது. 800 கிராம் எடை. செலிரான் M செயலி, 40 கிகா பைட்டுகள் வன் தட்டு, 512 மெகா பைட்டுகள் ராம் (RAM), கம்பியில்லா குறும்பரப்பு வலையமைப்பு வசதி ( WLAN) , இடங்கான உதவும் ஜி பி ஸ் வசதி(GPS) , ப்ளூடூத் போன்ற வசதிகளைக் கொண்டிருப்பதாக ஸாம்சங் சொல்கிறது. விலை எழுநூறு முதல் ஆயிரம் டாலர் வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். இதன் பேட்டரி எட்டு மணி நேரம் வரை தாக்குப்பிடிக்கும். ஆனால் டிவிடி கொண்டு ஏதாவது படம் பார்த்தீர்களேயானால் நூறு நிமிடங்களில் பேட்டரி தீர்ந்துபோய்விடும். இக்கணினியிலேயே இரண்டாவது இயங்குதளத்தையும் பத்து வினாடிகளில் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்கிறார்கள். பல்லூடகக் கோப்புகளைக் காண்பதற்கு இவ்வசதி என்று அறியப்பட்டாலும் இது குறித்து அதிகத் தகவல்களில்லை. ஏப்ரல் அல்லது மே மாதத்தில் விற்பனைக்கு வரலாம் என்கிறார்கள். பத்து மெகாபிக்ஸெல் வசதி கொண்ட உலகின் முதல் கேமெரா செல்பேசி - ஸாம்சங்கின் SCH-B 600.

samsung_sch-b6003X ஆப்டிகல் ஜூம், 5X டிஜிடல் ஜூம், ப்ளாஷ், ஆட்டோ போகஸ், கேமெராவின் ஷட்டர் வேகம் 1/2000, சாடிலைட் டிவி காணும் வசதி இன்னும் பல ... என்ன தலையைச் சுற்றுகிறதா? இவ்வகைச் செல்பேசிகள் உண்மையாகவே இன்னும் இரண்டு மாதங்களுள் கொரியாவில் அறிமுகமாகிறதாம்.

அடுத்து வருவது SGH-i310. இது உலகின் முதல் 8 கிகா பைட்ஸ் வன் தட்டு (Hard Disk) அடக்கிய, இசைச்செல்பேசி. ஆக, சுமார் இரண்டாயிரம் பாடல்களைச் சேர்த்து வைத்து இந்தச் செல்பேசியில் அடக்கிவிடலாம். வின்டோஸ் 5.0 இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன் வகையைச் சேர்ந்தது இது. இரண்டு மெகா பிக்ஸெல் கேமெராவும் உண்டு.

 
SGHi310தொலைக்காட்சியுடன் இணைத்து, படங்களைத் தொலைக்காட்சியிலேயே பார்த்துக் கொள்ளலாம். இன்னும் அதிக நினைவிடம் வேண்டுமா? நினைவுக் குச்சியையும் இணைத்துக் கொள்ளலாம். SPH-M8000 என்ற பெயர் கொண்ட ஸ்மார்ட்போன் உலகின் முதல் கம்பியில்லா குறும்பரப்பு வலையமைப்பு வசதி கொண்டது என்றும் அறிமுகப் படுத்தப்பட்டது.

இது தவிர சில அதிவேக இணைய இணைப்பு ஏற்படுத்தித் தரும் வசதி கொண்ட சில செல்பேசிகளையும் ஸாம்சங் அறிமுகப் படுத்தி இருந்தது. அதிவேகத் தரவிறக்கப் பொட்டல சேவை
(High Speed Downlink Packet Access, HSDPA) எனப்பெயர் பெற்ற இச்சேவை மூலம் அகலப்பட்டை இணைய இணைப்பினைச் செல்பேசி மூலம் ஏற்படுத்திக் கொள்ளலாம். மூன்றாவது தலைமுறைச் செல்பேசி மூலம் 384 கிலோ பிட்ஸ் வரை இணைய வேகத்தை ஏற்படுத்த முடியும். இந்த யு எம் டி எஸ் வலையமைப்பில் சில மாறுதல்கள் செய்து தரவிறக்க வேகத்தை 1 மெகாபிட்ஸ் முதல் 3 மெகாபிட்ஸ் வரை அதிகரித்துக் கொள்ள உதவும் நுட்பமே இந்த HSDPA. உலகின் முதல் HSDPA செல்பேசியையும், இந்நுட்பத்தின் சிறந்த செல்பேசியையும் , மிகவும் தட்டையான செல்பேசிகளையும் அறிமுகப் படுத்தியிருப்பதாக ஸாம்சங் விளம்பரப் படுத்தியிருக்கிறது.

செல்பேசிகள் தவிர கணினித் திரைகள் மற்றும் நவீனத் தொலைக் காட்சித் திரைகள் வடிவமைப்பிலும் ஸாம்சங் முத்திரை பதிப்பது நாம் அறிந்ததே. இவ்வருடமும் புதிய சில LCD தொலைக்காட்சிகளை அறிமுகம் செய்திருந்தது. வழக்கம் போல் "உலகத்தின் முதல் " எனும் விளம்பரமும் உண்டு. 57 இன்ச் LCD தொலைக்காட்சி, 80 இன்ச் ப்ளாஸ்மா தொலைக்காட்சி மற்றும் 102 இன்ச் தொலைக்காட்சி என்று கண்காட்சியினை அமைத்து " பெரிதினும் பெரிது கேள்" என்கிறது ஸாம்சங்.

பிற செல்பேசி நிறுவனங்களும் சளைத்தவையா என்ன? பிற நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு புதிய பல செல்பேசிகளை அறிமுகம் செய்திருந்தன. அடுத்த வாரமும் ஸீபிட் பார்வையைத் தொடரலாம் !

|
oooOooo
எழில் அவர்களின் இதர படைப்புகள்.   உள்ளங்கையில் உலகம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |