மார்ச் 09 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : புவியிலோரிடம் : பா. ராகவன் - வாசக அனுபவம்
- பாஸ்டன் பாலாஜி
| Printable version | URL |

கிட்டத்தட்ட ஷங்கர் படம் பார்ப்பது போல் இருக்கிறது. பெரிய குடும்பம். நிறைய கதாபாத்திரங்கள். பா. ராகவன் அநாயசமாக அனைவரையும் மனதில் நிலைநிறுத்துகிறார்.

நாம் நாமாகவே இருப்பதில்லை. இன்னொருவராகவே இருக்கிறோம் என்பதை அழுத்தந்திருத்தமாக சொல்லும் கதை.

PuviyilOridamபல வருடம் முன்பு படித்தாலும் அதன் தாக்கங்களை இன்றளவிலும் தக்க வைத்திருக்கிறது. நாவல் படித்து முடித்தபின்பு உடனடியாக instant gratification-ஆக 'புத்தக விமர்சனம்' எழுதும் எனக்கு இது ஒரு புது அனுபவம். இரண்டு மூன்றாண்டுகள் கழித்து என்றோ படித்த நாவலைப் புரட்டுவ்து, அந்தக் குடும்பத்துடன் சில நிமிடங்கள் மலரும் நினைவுகளைப் பகிர்வது போல் இருக்கிறது. என்றோ வாழ்ந்த வீட்டுக்கு மறுவிஜயம் செய்வது; எப்பொழுதோ கூடப் படித்த பள்ளித் தோழனை அங்காடியில் சந்திப்பது; தொலைந்து போன கணினி கோப்பை வேறெதோ தேடும்போது வந்து விழுவது போன்ற உணர்வுகளை மீட்டும் நாவல். உடனடியாக 'வாசக அனுபவம்' எழுதாமால் விட்டுப் போனதால் கதையின் கோர்வை கிட்டாமல் போகலாம்.

வாசுதேவன் ஹீரோ. வாசுவின் அப்பா சௌரிராஜன். அம்மா செண்பகா. ஒன்பது பிள்ளைகள். கல்வியார்வம் அற்றவர்கள்; ஆனால் தறுதலைகள் அல்ல; பொறுப்புமிக்கவர்கள். ஏழு வருமானம். பன்னிரெண்டு பேர் சாப்பாட்டுக்கு பின் மீதம் எதுவும் வைக்காத பட்ஜெட். கல்யாண வேலைகளுக்கு செல்லும் பெரியண்ணா. அவன் வழியில் தொடரப்போகும் சுந்தரா.

எதிர்மறை சிந்தனைகளில் லயிக்கும் மத்தியவர்க்கப் பிரதிநிதியாக வாசு. தப்பித் தவறி கூடத் தவறான நம்பிக்கைகளைத் தந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பவன். +2வைத் தேறிவிட்டாலும் 'ஜஸ்ட் பாஸ்' என்று இந்தப் பக்கம் விழுந்தவன். அந்த மோசமான மதிப்பெண்களை வைத்துக் கொண்டு ·பார்வார்ட் கேஸ்ட்டுக்கு எந்தக் கல்லூரியும் இடம் ஒதுக்காது.

நான் +2 முடித்தவுடன் கல்லூரிகளைப் படையெடுத்தது கழிவிறக்கத்துடன் எட்டிப் பார்க்கிறது. நல்ல மதிப்பெண் எடுத்தாலும் காலை எட்டு மணி முதல் காத்திருக்க வேண்டும். சந்திக்கும் சில விநாடிகளில் மார்க் அதிகம் எடுக்காத கணிதமும் ஆங்கிலமும் மட்டுமே கேள்விகளாக 'ஏன்? எப்படி? எதற்கு?' என்று வினாவாகும். 'ஆகட்டும் பார்க்கலாம்' என்று திருப்பியனுப்பப்படுவேன். வாசுவிற்கோ எல்லா சப்ஜெக்டுமே கால் வாறியிருக்கிறது. பச்சையப்பன் கல்லூரி அனுபவங்கள் என்னுடைய லயோலா, விவேகானந்தா காத்திருப்புகளை மருக வைக்கிறது. கரெஸ்பாண்டன்ஸ் படிக்குமாறு ஆலோசனையுடன் சிபாரிசுகள் எல்லாம் பயனற்று செல்லாக்காசாகின்றன.

மைதிலி அண்ணி பொறுமைசாலி. சடகோபன் அண்ணனின் மனைவி. இளமைக் காதலுக்காக, கல்யாணம் செய்த பிறகும் கிராமத்துக் காதலியை கண்டினியூ செய்பவன்.

சின்ன அண்ணி வத்ஸலா. இன்னொரு அண்ணன் வரதனுக்குத் 'நாடார் கல்லூரி'யில் தெரிந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். நாடாராக சான்றிதழ் பெற்றால் கல்லூரியில் இடம் கிடைத்துவிடும்.

வரதன் பெண் பார்க்க செல்லும் படலம். தாசில்தார் ஆபீஸ் படலம். ரங்கன் ஷேத்ராடனம் சுற்ற அழைத்துப் போகும் படலம். தவறாமல் கிராமத்திற்கு செல்லும் சடகோபனை மைதிலி புரிந்துகொள்ளும் படலம். சமாஸ்ரயணப் படலம். என்று ஆங்காங்கே தேவையான உபகிளைகள் உண்டு.

குற்றவுணர்ச்சியில் தள்ளாடுகிறான் வாசு. போலியாக சர்டி·பிகேட் வாங்கி பி.காம். சேர்ந்தாகி விட்டது. வெளியாளாக வாழ வேண்டிய கட்டாயத்தில் சிக்கன் உண்டு பார்க்கிறான். கல்லூரி அரசியலில் பூந்து விளையாடுகிறான். சுடுசொற்களை வீசுகிறான். புகை, மது சகலமும் பயிலுகிறான். அவனைக் கண்டு கல்லூரி மாணவர்களே அஞ்சும்படி நடந்து கொள்கிறான்.

நாளை நடக்கப் போவது தெரிந்தால் நல்லதை விட நடக்காதவற்றையே எண்ணிப் புலம்புகிறோம். என்றாவது 'அய்யங்கார் ஆத்துப் பையன்' குட்டு வெளிப்படுமோ என்னும் அச்சம். சுய அடையாளங்களை மூடி மறைத்து பொய் வேஷம் கட்டுகிறோமே என்னும் கோபம். வெறுப்பும் படபடப்பும் இனப்பற்றா அல்லது அல்லாத வார்த்தைகளைக் கேட்டு உண்டாகும் அருவருப்பு மட்டுமா என்னும் உணர்ச்சிக்குழப்பம்.

அளவற்ற ஹாஸ்டல் சுதந்திரம். தன்னிலை மறந்த தேடல். விரக்தியில் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு டெல்லிக்கு இரயிலேறுகிறான். சுதந்திரமாக உணர்கிறான். இப்படித்தான் உன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவேண்டும்; இதை சொன்னால்தான் உன்னால் 'அவர்களுள்' ஒருவராக ஆக்க முடியும்; இப்படி நடந்து கொண்டால்தான் நீ ஏற்றுக் கொள்ளப்படுவாய் என்னும் கட்டுப்பாடுகள், அதிகாரபூர்வமற்ற விதிமுறைகள் இல்லை. முன்முடிவுகள் கிடையாத உலகத்தில் பரிகசிக்க ஆரம்பிக்கிறான்.

'நான் யார்' என்னு தேடல் கொண்டவர்கள்; சாதீயக் குறியீடுகள்தான் மனிதனை நிர்மாணிக்கிறதா என்று வினா எழுப்புபவர்கள்; வெளிவேஷம் போட வேண்டுமா என்று எண்ணுபவர்கள்; சுதந்திரத்தை எத்தனிப்பவர்கள் படிக்க வேண்டிய கதை.

"மனித வாழ்வின் அர்த்தமே, புரிந்து கொள்வது என்கிற ஒற்றைச் சொல்லில் முடிந்து விடுவதாகத்தான் நான் நினைக்கிறேன்."


முன்னுரையிலிருந்து :

சாதிபேதமற்ற சமூகம் என்னும் பொய்க்கனவை சலியாமல் விதைத்து வருகிறார்கள் அரசியல்வாதிகள். பொய்யை உண்டு வாழ்வதைக் காட்டிலும் பட்டினியில் இறந்துவிடுதல் உன்னதமானதென்று நினைக்கிறேன். தன்னளவில் இது முழுநாவலேயானாலும் என்னளவில் முதல் அத்தியாயமே ஆகும். முன் மதிப்பீடுகளற்று இதனை அணுகும் ஒவ்வொரு வாசகருமே இதன் அடுத்தடுத்த அத்தியாயங்களை நிர்ணயிப்பவர்களாவார்கள்.

- பா. ராகவன்
ஜூலை 13, 2000நாவலில் இருந்து சில பகுதிகள்...

 •  அவனுக்கு வெறுப்பும் கோபமும் படபடப்புமாக வந்தது. தனக்கு இனப்பற்றெல்லாமுங்கூட உண்டா என்ன என்று கேட்டுக் கொண்டான். உண்மையிலே அந்த ஆள் பேசியதன் விளைவான அருவருப்பு மட்டுமே பிரதானமான உணர்ச்சியாகத் தெரிந்தது.
 •  சுள்ளிகள் பரப்பி வைத்தாற்போலக் கூடம் முழுவதும் கால்கள் நீண்டிருந்ததைத்தான் முதலில் கவனித்தான்.
 •  சிந்தனையே கூடாது என்பதுதான் அவனது ஒரே சிந்தனையாயிருந்தது.
 •  உதவி கேட்க வேண்டும். ஆனால், கேட்கிற தோரணை தவறியும் எட்டிப்பார்க்கக் கூடாது. தன் மனதைப் புரிய வைத்துவிட வேண்டும். விடைகள் தாமாக எதிராளியின் பிரக்ஞை மீறி உதிரவேண்டும்.
 •  அவன் சட்டென்று சின்ன மன்னியைத் திரும்பிப் பார்த்தான். பளிச்சென்று எப்போதும் சிரித்துக் கொண்டிருக்க எப்படி முடிகிறது இவளால்?
 •  மிகச் சிறந்த சாதனையாளர்களையும் கடைந்தெடுத்த உதவாக்கரைகளையும் ஒன்றாக ஒரு கல்லூரி எப்படி உருவாக்கும்? இரண்டு விதத்திலும் சாதனை படைக்க அருகதையற்ற தன்னை எப்படி ஏற்றுக் கொள்வார்கள்?
 •  மூன்று கார்கள், இருபது மோட்டார் சைக்கிள்கள், நூற்றுப் பதின்மூன்று கால்நடையாளர்கள் கல்லூரிக்குள் நுழைந்தபிறகு ரங்கநாதன் வந்தார்.
 •  ஒம்பதாவதுல ரெண்டு வருஷம். பிளஸ் ஒன்ல ரெண்டு வருஷம். கண்ணுக்குத் தெரியாத எதிரியோட சண்டை போடற மாதிரி இருக்கு.
 •  "பிராமணனா பிறந்து தொலைச்சவன் சரணாகதி அடையக்கூடிய ஒரே வாசல் படிப்புதான். நாளைக்கு ஹரிஜன்ஸ் தவிர வேற யாரும் சுயதொழில் தொடங்கக் கூடாதுன்னு ஜி.ஓ. போட்டாலும் போட்டுடுவான். எச்ச இலை பொறுக்கித்தான் சாப்பிடணும்னு வேணா இப்போதைக்குச் சொல்லாம இருக்கலாம். ஜனநாயகத்துல அவாளுக்கு பிராமின்ஸ் வோட்டும் வேண்டியிருக்கே?"
 •  சன்னலோரம் அமர்ந்து ஒன்றைப் பற்ற வைத்தான். "நாள் முழுக்க சுத்திண்டே இருக்கறதுக்கு இது ஒண்ணுதான் வழித்துணை விநாயகர். மேலுக்கு ஒரு வெத்தலை சீவல் போட்டுண்டுட்டா, மல்லாண்ட திண்தோள் மணிவண்ணனுக்கே கூட வாசனை தெரியாது. ஸ்பஷ்டம்னா அப்படியொரு ஸ்பஷ்டம். பெருமாளே எழுந்து வந்து கையைக் கட்டிண்டு உட்கார்ந்துடப் போறாரோன்னு பார்க்கத் தோணும். வைதீகத்துக்கு வைதீகம். லௌகீகத்துக்கு லௌகீகம்".
 •  'குடுமிதான் ஓர் ஆணுக்கு எத்தனை கம்பீரம் தந்துவிடுகிறது என்று அவளுக்குத் தோன்றியது. "அவாவா ப்ரொ·பஷனுக்கு ஏத்த மாதிரி ட்ரெஸ் பண்ணிக்கறா."'
 • "அப்பாக்கு வடகலைன்னாலே அலர்ஜி. நீ வடமாள்ல தேடிறியா? தூக்கம் கலைய மூஞ்சி அலம்பிக்கற மாதிரி பார்த்து 'ரெ·ப்ரெஷ்' பண்ணிக்கறதோட நிறுத்திக்கோ, பேச்சுக் கொடுத்து சோத்தைக் கெடுத்துண்டுடாதே." அவனுக்கு எந்தப் பெண்ணை பார்த்தாலும் மைதிலியின் சாயல் துளியாவது ஒட்டிக் கொண்டிருப்பது போலவே பட்டது. அது சாயல் இல்லை; ஒரு குறியீடு போல அண்ணாவின் ஞாபகம் தன்னை மன்னியின் உருவில் கட்டிப் போடுவதாகப் பிறகு உணர்ந்தான்.
 •  தி.க.காரா நல்லதுதான் பண்ண நினைக்கறா. பூணூலை அறுத்துப் போட்ட கையோட, அத்தனை பிராம்மணனும் இனிமே 'பேக்வர்ட் காஸ்ட்'னு சொல்லி, அதுக்கு சட்டபூர்வமா அங்கீகாரம் வாங்கித் தந்துட்டார்ன்னா, நான் கூட ஜீயரை விட்டுட்டு, பெரியாருக்குக் கொடி பிடிக்க ஆரம்பிச்சுடுவேன்.
 •  சம்பாத்தியமும் மூணுவேளைச் சாப்பாடுமே பெரிசா தெரியறதாலே சம்பிரதாயமெல்லாம் துச்சம்மாத்தான் படும்.
 •  'பளிச்சென்று நாமம் போட்டால் எந்தக் கழுதைக்கும் அந்த தேஜஸ் வரும்' என்று வாசுவுக்கு நாக்கு நுனிவரை வந்துவிட்டது.
 •  எதையும் மறைப்பதில் எப்போதும் சிக்கல்கள்தான் வந்து சேருகின்றன. உண்மையைச் சொல்பவனுக்கு எதையும் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்க அவசியம் ஏற்படுவதில்லை.
 •  முட்டாளாக வாழ்வதில், அல்லது காட்டிக் கொள்வதில் உள்ள சௌகரியங்களை இரண்டரை வருட தில்லி வாழ்க்கையில் அவன் நன்றாக உணர்ந்திருக்கிறான். உள்ளுக்குள் போடும் கணக்குகள் உண்டாக்கும் பரவசத்தை வெளிக்காட்டி விடாதபடிக்கு முகத்தில் நிரந்தரமாகப் படிந்துவிட்ட அப்பாவித் திரையும் மொழியில் தட்டுப்படும் கோழைத்தனமும் ஓர் அரணாயிருக்கின்றன. சகலமானவர்களும் வசப்படுகிறார்கள்.
 •   "எல்லாப் பெண்களிடமும் என் மன்னியின் சாயல் கொஞ்சம் இருக்கிறது."
 •  'எப்படி உன்னால் சாப்பிட்டு எச்சில் பிரட்டித் துடைப்பது போல் உறவுகளைத் துடைத்து எறிந்துவிட்டுக் கண்காணாமல் இருக்க முடிகிறது என்பதுதான் புரியாத சங்கதியாக உள்ளது.'
 •  'பிராமணனுக்கு உடலுழைப்பு வராது. பிசினஸ் சரிப்படாது. வலி தாங்கமாட்டான். அவமானம் அவன் சகித்துக் கொள்ளக்கூடிய உனர்ச்சி அல்ல. தவிர, அவன் கோழை. ஒரு தட்டுத் தட்டினால் வேட்டியை நனைத்துக் கொண்டு விடுவான். அவனால் முடிந்ததெல்லாம் ப்டிப்பது. அசை போடும் பசுவைப் போல் உருப்போட்டுத் தேர்வெழுதித் தேறி, வெள்ளைக் காலர் வேலைகளில் புத்தியின் மூலம் அமர்ந்து விடுவது. பிறகு வீடு, மனைவி, பணம், பாதுகாப்பு. வயதான காலத்தில் வாசலில் ஒரு ஈஸிசெர். வாயில் நாலாயிரம். வ்சவில் நூறாயிரம். இறந்த பின் திவசம்; எள்ளுக்குக் கேடு. இதுதானே உங்கள் இறுதி மதிப்பீடு ?'
|
oooOooo
பாஸ்டன் பாலாஜி அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |