மார்ச் 10 2005
தராசு
வ..வ..வம்பு
முத்தொள்ளாயிரம்
நையாண்டி
அறிவிப்பு
ஆன்மீகக் கதைகள்
கவிதை
சிறுகதை
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • ஹர்ஷத் மேத்தா
 • - சசிகுமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  முத்தொள்ளாயிரம் : என்னை விட்டுவிடு தோழி
  - என். சொக்கன்
  | Printable version |

  பாடல் 91

  நம்மிடையே வளரும் மரங்களிலேயே மிகவும் விலை மதிப்பு மிகுந்தது, சந்தன மரம்தான் !

  ஆகவே, எல்லா சந்தன மரங்களும் அரசாங்கத்துக்குச் சொந்தம் என்று உத்தரவாகியிருக்கிறது - அதன் இலையைப் பிய்த்து, கசக்கி, வாசனை பார்த்தாலே, காக்கிச் சட்டைக்காரர்கள் பிடித்துக்கொண்டு போய்விடக்கூடும் !

  இந்தக் காரணங்களால், மிகவும் உயர்வான விஷயங்களுக்கு சந்தனத்தையும், தாழ்வான விஷயங்களுக்கு கரிக்கட்டையையும் உதாரணம் காட்டுவது வழக்கம், 'அவன் ரொம்ப கெட்டுப்போயிட்டான் - சந்தனத்தை எரிச்சு கரிக்கட்டையாக்கினமாதிரி அவனோட நண்பர்களே அவனைக் கெடுத்துட்டாங்க !'

  ஒரே ஒரு சூழ்நிலையில்தான், சந்தனத்தை எரிப்பதை நாம் ஒப்புக்கொள்கிறோம் - பெருந்தலைவர்களோ, பெரும்புள்ளிகளோ இறந்துவிட்டால், அவர்களுடைய உடலை தகனம் செய்யும்போது, சந்தனக் கட்டைகளால் போர்த்தி எரிப்பது ஒரு கௌரவமாய் இருக்கிறது ! மற்றபடி, சந்தனத்தை எரிப்பது பெரும் பாவம் ! அல்லது, 'காசைக் கரியாக்கும்' மூடத்தனம் !

  இங்கே, பாண்டியனின் பொதிகை மலையை வர்ணிக்கும் புலவர், அதன் பெரும் வளத்துக்கு உதாரணமாக, 'சந்தனக்கட்டைகளை எரித்து சோறு சமைக்கிறவர்கள் நிறைந்த பொதிகை மலை' என்று சொல்கிறார் ! ஏனெனில், பொதிகை நாடெங்கும், ஏராளமான செல்வமும், இயற்கை வளமும் நிறைந்திருப்பதால், அவர்கள் சந்தன மரத்தைக்கூட பெரிய செல்வமாய் மதிப்பதில்லை - அடுப்பு எரிக்க உபயோகிக்கிறார்கள் !

  ஆனால், இந்தப் பாடல் பொதிகை வளத்தைப்பற்றியது அல்ல ! அதன் அரசனாகிய பாண்டியனின்மீது காதல் கொண்ட ஒரு பெண்ணின் ஏக்கப் புலம்பல் !

  பாண்டியனை நினைத்து ஏங்கியிருக்கும் இந்தப் பெண், தன்னைக் கடந்துசெல்லும் வாடைக் காற்றை அழைத்துப் பேசுகிறாள், 'குளிர் வீசும் வாடைக்காற்றே ! இப்போது எங்கே போகிறாய் ? என் மன்னன் பாண்டியனைச் சந்திக்கப்போகிறாயா ? அப்படியானால், கொஞ்சம் நில், நான் அவனுக்கு ஒரு சேதி சொல்லவேண்டும் ! அவனிடம் ஒரு கேள்வி கேட்கவேண்டும் !'

  'பகைவர்களைப் போரில் வென்று, அழிக்கும் அரசன் அவன் ! முழுநிலாவைப்போன்ற வெண்கொற்றக்குடையும், செங்கோலும் ஏந்தி, நல்லாட்சி செய்யும் மன்னன் அவன் ! அப்படிப்பட்ட பாண்டியன், என்னைமட்டும் கண்டுகொள்ளாமல் இருப்பது நியாயமா ?'

  - இப்படிக் கேட்டுவிட்டு, தன்னுடைய வெறுங்கைகளை முன்னே நீட்டுகிறாள் அவள், 'நீயே பார் ! அவன்மேல் கொண்ட காதலால், நான் என் வளையல்களைக்கூட இழந்துவிட்டேன் ! ஆனாலும், அவன் என்மீது அன்பு செலுத்த மறுக்கிறான் ! இது நியாயமா என்று நீ அவனைக் கேட்டு வா !'


  மாறுஅடுபோர் மன்னர் மதிக்குடையும் செங்கோலும்
  கூறிடுவாய் நீயோ ! குளிர்வாடாய் சோறுஅடுவார்
  ஆரத்தால் தீமூட்டும் அம்பொதியில் கோமாற்குஎன்
  வாரத்தால் தோற்றேன் வளை !

  (மாறுஅடுபோர் - பகைவர்களை அழிக்கும் போர்
  மதி - நிலா
  குளிர்வாடாய் - குளிர் வீசும் வாடைக் காற்றே
  அடுவார் - சமைப்பவர்கள்
  ஆரம் - சந்தன மரம்
  அம் - அழகிய
  பொதி - பொதிகை மலை
  வாரம் - அன்பு / காதல்
  தோற்றேன் வளை - வளையல்களை இழந்தேன்)


  பாடல் 92

  பாண்டியனை மனதில் நிறைத்துக்கொண்ட காதலி ஒருத்தி, தன்னை மறந்து, காதல் நினைவுகளில் மூழ்கியிருந்தாள் !

  அப்போது, அவளைச் சந்திப்பதற்காக அங்கே வந்த ஒரு தோழி, அவளுடைய நிலைமையைப் பார்த்து, அவளை கேலி செய்யத் துவங்கிவிட்டாள், 'ஏய், என்னாச்சு உனக்கு ?'

  'என்னை விட்டுவிடு தோழி ! என் மனது என்னிடம் இல்லை !', என்றாள் அவள்.

  ஆனால், அந்தத் தோழிக்கு இந்த பதில் போதவில்லை, 'உன் மனது உன்னிடம் இல்லை என்றால், வேறு எங்கே இருக்கிறது ?', என்று ஆவலோடு விசாரித்தாள்.

  'உனக்குத் தெரியாதா தோழி ? என் மனது, என் காதலன் பாண்டியனின் அரண்மனை வாசலில் இருக்கிறது !'

  'வாசலில்தானா ? அவனுடைய அரண்மனைக்குள் இல்லையா ?', கிண்டலாய்க் கேட்டாள் தோழி.

  'ம்ஹ¤ம் ! இல்லை !', என்று ஏமாற்றத்துடன் உதட்டைப் பிதுக்கினாள் அவள், 'அவனைப் பார்க்கவேண்டும் என்ற ஆசையில், அவனுடைய வீட்டு வாசல்வரை சென்ற என் மனது, அதற்குமேல் செல்ல தைரியமில்லாமல், அங்கேயே நிற்கிறது ! வீட்டினுள் போகிறவர்களுக்கு இடம் கொடுக்காமல், வீட்டிலிருந்து வெளியே வருபவர்களுக்கும் வழிவிடாமல், தன்னைப் பார்த்து கேலி செய்கிறவர்களுக்குக்கூட பதில் சொல்லத் தோன்றாமல் அங்கேயே தவித்து நிற்கிறது !'

  பேச்சின்வழியே அந்தக் காட்சியை மனதினுள் நினைத்ததும், சட்டென்று அவளுக்குக் கண்ணீர் துளிர்த்தது, 'தாழ்வான ஆற்றங்கரையில், வேடனின் அம்பு பாய்ந்த பெண் மான், நகரமுடியாமல் சுருண்டு விழுவதுபோல், அவனைத் தேடிச் சென்ற என் மனதும், அங்கேயே சுருண்டு விழுந்து கிடக்கிறது !'


  புகுவார்க்கு இடம்கொடா போதுவார்க்கு ஒல்கா
  நகுவாரை நாணி மறையா இகுகரையின்
  ஏமான் பிணைபோல நின்றதே கூடலார்
  கோமான்பின் சென்றஎன் நெஞ்சு.

  (போதுவார் - வெளியேறுகிறவர்கள்
  ஒல்கா - தளராத / ஒதுங்கி இடம்தராத
  நகுவார் - சிரிப்பவர்கள் / கேலி செய்பவர்கள்
  இகு - இறக்கமான / தாழ்வான
  ஏ - அம்பு
  பிணை - பெண்)

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2005 Tamiloviam.com - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |