Tamiloviam
மார்ச் 12 2009
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திரையோவியம் : ஒரு பழைய படத்தின் புதிய விமரிசனம்
- ச.ந. கண்ணன்
  Printable version | URL |

சில படங்களை மட்டும் உடனே பார்த்துவிடவேண்டும் என்று ஆலாய்ப் பறப்பேன். ஆனால் பல மாதங்கள் கழித்து அவை டிவியில் ஒளிபரப்பப்படும்போதுதான் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கும். சில படங்களை எப்பாடுபட்டாவது தவிர்த்து விடவேண்டும் என்று முன்கூட்டியே முடிவெடுத்து பாதுகாப்பு  உணர்வோடு தயாராக இருப்பேன்.

Pachaikili Muthucharamபாடல்களைக் கேட்ட மாத்திரத்தில் முதல் நாளே பார்த்துவிடவேண்டும் என்று நான் நினைத்த படம் வாரணம் ஆயிரம். சில வாரங்களுக்கு முன்பு பச்சைக்கிளி முத்துச் சரம் படத்தை டிவியில் பார்த்தபோது கெளதம் மேனனின் சிறந்த படமாக அப்படத்தை மதிப்பிடத் தோன்றியது. சரத்குமார் ஹீரோவாக இல்லாமல் இருந்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். முக்கியமாக கிளைமாக்ஸ் சண்டைக்காட்சிகள் தவிர்க்கப்பட்டிருக்கும். மாஸ் படமாக இல்லாவிட்டாலும் ஒரு ப்ரெஞ்ச் படம் பார்க்கிற உணர்வைத் தந்தது ப.மு. அற்புதமான ஒப்பனையுடன் சுண்டியிழுக்கும் அழகோடு ஜோதிகா நடித்த ஒரே படமும் அதுதான். இப்படி கெளதம் மேல் இருந்த நம்பிக்கையும் நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழையும் அடியே கொல்லுதேவும் படம் பார்க்கப் போ என்று தினமும் என்னை இம்சை செய்துகொண்டிருந்தன. ஆனால் பாருங்கள், நேற்றுதான், அதாவது படம் வெளிவந்து மூன்று மாதங்கள் கழிந்தபிறகே பார்க்க வாய்ப்பு கிடைத்தது.

ஒரே வரியில் சொல்லவேண்டும் என்றால் எனக்குப் படம் பிடிக்கவில்லை.

கெளதமுடைய முதல் பிரச்னை மொழியிலிருந்து தொடங்குகிறது. அவர் மலையாளி என்பதால் இயல்பாக அவருக்கு தமிழ்மீது ஒருவித இளக்காரம். அவருடைய படங்களின் தலைப்புகள் வேண்டுமானால் அழகிய தமிழ் வார்த்தைகளைக் கொண்டதாக இருக்கலாம். ஆனால் டைட்டில் கார்டில் ஆரம்பித்து எல்லா இடங்களிலும் Surya, Sameera Reddyஆங்கிலத்தை முதன்மைப்படுத்துவதையே அவர் விரும்புகிறார். தமிழர்கள் அல்லாது வேற்று மொழிக்காரர்களும் அவர் படத்தைப் பார்ப்பதாக இதற்கு வியாக்யானம் வேறு கொடுக்கிறார். சினிமாவை இதைவிடவும் தவறுதலாகப் புரிந்துகொள்ள முடியாது. வாரணம் ஆயிரத்தில் காட்சிக்கு காட்சி நீளமான ஆங்கில வசனங்கள். பல இடங்களில் ஆங்கிலத்தில் பேசிய வசனத்தை தமிழிலும் ஒப்புவிக்கிறார்கள். அலுப்பு போங்கள். (இவ்வளவும் செய்துவிட்டு லஜ்ஜையே இல்லாமல் எப்படித்தான் தமிழக அரசிடம் வரிவிலக்கு கோரினார்களோ!)

பெரும்பாலான தமிழ் சினிமா இயக்குநர்களுக்கு சினிமாவின் அடிப்படை இலக்கணங்கள், அதன் தேவைகள் தெரிவதில்லை. குறிப்பாக ரசிகர்களுக்குத் தெரிந்த அளவுகூட. உன்னாலே உன்னாலே பார்த்துவிட்டு என் நண்பன் சொன்னான், 'இது ஒன்றரை மணி நேரம் படம் மட்டுமே. ஏன் ஜீவா இவ்வளவு தூரம் படத்தை இழுக்கவேண்டும்!' ஒருமுறை வடிவேலு பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது ஒருவர் சொன்னார், 'குசேலன் படத்தை வடிவேலு எப்படி காலி செய்தாரோ அதுபோல படிக்காதவன் படத்தை விவேக் ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார். ' கல்லூரி படத்தின் பாடல்களிலேயே படத்தின் கதை தெரிந்துவிடுகிறதே என்றும் ஒருவர் விமரிசனம் செய்தார். இந்தக் கோணங்கள் எல்லாம் அப்படங்களின் இயக்குநர்கள்கூட அவதானிக்காதவை. ரசிகர்கள் ஒருமுறை பார்த்தவுடனே படத்தை சரியாக தராசில் நிறுத்தி் விடுகிறார்கள்.

வாரணம் ஆயிரம் படத்தின் வடிவமே முற்றிலும் கோணல். தந்தை கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தித்தான் கதையை யோசித்திருக்கிறார் கெளதம். ஆனால் அது வர்த்தகத்துக்கு உதவாது என்பதால் மகன் சூர்யாவை படம் முழுக்க பரவ விட்டிருக்கிறார். கதைக்கு வேண்டிய நியாயங்கள் இல்லாததால் அது இலக்கின்றி இரண்டரை மணிநேரமும் பயணிக்கிறது. இந்த இடத்தில் சுப்ரமணியபுரத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். துரோகம் என்கிற ஒற்றை வார்த்தையை அந்தப் படத்தில் சசிகுமார் எவ்வளவு அழகாக கையாண்டிருப்பார்! ஒவ்வொரு காட்சிகளும் துரோகத்தின் கிளைகளாக விரியும். அதுவே படத்தைத் தொடங்கியும் முடித்தும் வைக்கும். தந்தை சூர்யா பொம்மைபோல காட்சிப் பொருளாக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருப்பதால் நாயகன் கிளைமாக்ஸில் கமல் இறக்கும்போது ஏற்படும் பதற்றமும் பரிதாப உணர்வுகளும் தந்தை சூர்யா இறக்கும்போது துளிகூட ஏற்படவில்லை.

ஹாலிவுட் ஹீரோபோல் பார்க்க அத்தனை கவர்ச்சிகரமான ஓர் ஆண்மகனாக இருக்கிறார் சூர்யா. வயதான முகம் கொண்ட நடிப்பை மட்டுமே வித்தியாசம் என்று பார்த்துவந்த நமக்கு சூர்யா இளைஞனாக தன்னை உருமாற்றி நடித்திருப்பது விந்தையான அனுபவத்தைத் தருகிறது. தமிழ் சினிமாவில் இப்படியொரு மெனக்கெடல் எவரும் முயற்சி செய்யாதது. இளைஞனாக வேண்டும் என்றால் அதிகபட்சமாக மீசையை டிரிம் செய்வார்கள் (ஜெண்டில்மேன் அர்ஜீன்), கிழவன் என்றால் ஒட்டுத்தாடி. அவ்வளவுதான். சூர்யா பற்றி என் மனைவியின் கமெண்ட், 'நேருக்கு நேர் படத்தில்கூட சூர்யா இவ்வளவு சிறிய பையனாக இல்லையே!' விஜய், அஜீத்போல அடிதடி படங்களில் மட்டுமே நடிப்பது என்கிற முடிவை சூர்யா உதறித் தள்ளியது எத்தனை விவேகமானது! வருடத்துக்கு பத்துப் படங்களுக்கும் அதிகமாக இசையமைத்த தேவாவும் எஸ்.ஏ. ராஜ்குமாரும் இன்று நிற்கும் இடம் என்ன? இரண்டு படங்களுக்கு மேல் இசையமைக்க மறுத்த ரஹ்மானின் உயரம் இன்று எதுவரை சென்றிருக்கிறது? அப்படியொரு பலனையே வருங்காலத்தில் சூர்யாவும் அறுவடை செய்வார்.

சமீரா ரெட்டியின் அழகும் அவர் தொடர்பான காதல் காட்சிகளும் தமிழ் சினிமாவுக்கு மிகவும் புதிது. சூர்யா-சமீரா ரெட்டி காதல் விடலைத்தனமாக இருந்தாலும்கூட அதைக் காட்சிப்படுத்தியிருப்பதில் ரசிக்க முடிகிறது. படத்தில் வசனங்கள் எல்லாம் ரொம்பவே சுமார். படத்தின் இரண்டாம் பகுதியைப் பற்றி நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை. முற்றிலும் டெலீட் செய்யவேண்டிய பகுதிகள் அவை.

ஓர் இயக்குநராக அல்லாமல் தந்தைக்கு மகன் ஆற்றும் கடமையாக எண்ணி இந்தப் படத்தை கெளதம் அணுகியதுதான் பெரிய கோளாறாகி விட்டது.

oooOooo
                         
 
ச.ந. கண்ணன் அவர்களின் இதர படைப்புகள்.   திரையோவியம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |