Tamiloviam
மார்ச் 15 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
அண்ணாச்சி உலகம் என்னாச்சி ? : நடிகை பூஜாவுக்கு கோயில்
- [feedback@tamiloviam.com]
| | Printable version | URL |

அண்ணாச்சி ஆத்து மணலை எடுத்து பல்துலக்க ஆரம்பித்தார். சனிக்கிழமை பாலத்து படிக்கட்டுப் பகுதியில நாலு முங்கு முங்கி எழுந்தாதான் அவருக்கு அடுத்தவாரம் ஒழுங்கா போகும். வழக்கம்போல கூட்டம்.

"லேய் மணி இன்னும் வரலியா?" அண்ணாச்சி கதையடிக்க கம்பனி தேடினார்.

"அந்தப் பயவ ராத்திரிபூரா கிரிக்கெட்டப் பாத்துட்டு காலையில கடையில தெருவுல ஒரு பயலக் காணோம்.", ஜோசப் பதிலளித்தான்

"செத்த பயலுவ. என்னடே இருக்கு அதுல பாக்க? பாகிஸ்தாங்காரனுவள வீட்டுக்கனுப்பியாச்சு, இந்தியாக்காரனுவ நம்ம முக்குத்தெருவுல வெளையாடுத பயலுவளோட வெளையாடினாலும் தோப்பானுவபோலிருக்கு. தன்னம்பிக்கையேயில்லாம ஆடுதானுவடே. பங்ளாதேஷ் பயலுவ எவனுக்கும் 25க்கு மேல வயசில்லடே என்னா நம்பிக்கையோட ஆடுதானுவ. எல்லாம் இந்தப் புது டீமயெல்லாம் பாத்து சிரிச்சானுவ. அவனுவதான் கலக்குதானுவ."

"அண்ணாச்சி பிச்செல்லாம் ரெடியாவல்லியாமே?"

Sachin Super Hero"எல பிச்சுல ப்ரச்சனண்ணா எல்லாவனுக்கும் ப்ரச்சனதானெ. எதெப்டி ஒருத்தன் சூப்பரா ஆடுதான் அடுத்தவன் சுருண்டுபோறான்? இதுக்கெடையில சச்சின சூப்பர்மேன் மாதிரி ஹீரோவாவச்சி படக்கத புத்தகம், காமிக்ஸ்னு சொல்லுவானுவள்ளா அது வெளியிடப் போறானுவளாம்."

"அப்ப தப்பு செய்தவன சச்சின் பேட்டோட தொரத்துவாரோ?"

"என்ன எளவோ. இவனுவளுக்கு என்னா பைசாடே ஜோசப்பு."

"அண்ணாச்சி அன்னா வாரான் மணி."

மணி வந்து சேர்ந்தான்.

"அண்ணாச்சி எப்ப வந்திய?" மணி கேட்டான். வாயைக் கழுவிவிட்டு அண்ணாச்சி பதிலளித்தார்.

"இப்பதாண்டே. துணியக் கழத்தி ஒழுங்கா வைல மணி. ஜப்பான்ல ஒருத்தன் பொம்புளைங்க போடுத உள்ளாடையெல்லாம் திருடி வச்சுருக்கான். ஆறு வருசமா நடந்திருக்கு இது. கிட்டத்தட்ட 4000 உருப்படிடே. இப்பத்தான் புடிச்சிருக்கானுவ."

மணி கழட்டிவைத்த துணிகளைச் சுருட்டிவைத்து மேலே ஒரு கல்லைத்தூக்கிவைத்தான்.

"அண்ணாச்சி காலையிலேயே கிழு கிழு சேதியெல்லாம் சொல்லுதிய?" ஜோசப் சிர்ப்புடன் கேட்டான்.

"இதுல என்னடே கிழுகிழுப்பு? இன்னொண்ணு கேழு. சென்னையில பொம்பளைங்க யூஸ் பண்ணதுக்கு காண்டம் அறிமுகப் படுத்தியிருக்காவ. அந்தக் கூட்டத்துக்கு வந்ததுல நெறையவேரு பாலியல் தொழில் செய்யுற பொம்பிள்ளைங்களாம்டே."

"இது எப்டி? நம்ம ஊர்லதான் சட்டப்படி குத்தமில்லியா?"

"ஆமா ஆனா ஒலகம் பூரா இது பெரிய தொழில்டா. இந்த பெண்ணுறை இருக்கே இது எய்ட்ஸ் பாதுகாப்புக்குன்னு சொல்லுதாவ ஆனா வெல 50 ரோபாய்கிட்டடே. இந்த சங்கமெல்லாமிருக்கில்லா இத மொத்தமா வாங்கி கொறஞ்ச வெலையில விக்க பாக்காவ., இந்த நாயர் எங்கடே போனாங்?"

"டீக் கட நாயரா? ஊருக்குப் போயிருக்காங்." ஜோசப் சொன்னான்.

"கேரளாவுல ஒருத்தன் விண்வெளிக்கு டூர் போப்போறானாம்டே.  ஒரு கோடி செலவழிக்காம்பாத்துக்க."

"இன்னா இருக்க கோயில்பட்டிக்கு போறதுக்கு நாம யோசிக்கோம்", மணி கடுப்பாகச் சொன்னான்.

"எல போன வாரம் ஸ்கூட்டர் பஞ்சர் ஆச்சுல்லா?"

" ஆமா அண்ணாச்சி, 25 ரூவா தண்டம்."

"இனி இந்த ப்ரச்சன வராதுடே. ரோட்டுல காந்தம் பொருத்துன வண்டியெல்லாம் அரசாங்கம் ஓடவிடப் போவுதாம்."

"ஆணியெல்லாம் காந்தத்துல ஒட்டிரும்.. நல்ல ஐடியால்லா!" ஜோசப்

"அண்ணாச்சி எல்லாஞ்சரி ஆனா நம்ம ஸ்கூட்டர் ஓடுத எடத்துலயெல்லாமா வரப்போரானுவ. இங்க ரோட்டவிட்டு கீழ எறங்குனா ரோடா இருக்கு கல்லுதான் இருக்கு. காந்தத்துல கல்லு ஒட்டாதுல்லா."

"நீ சொல்லுததும் சரிதாண்டே. சென்னைக்குப் போனா ஏதோ வெளிநாட்ல இருக்கமாரி கெடக்கு. ஒசர ஒசரமா பில்டிங்கு. நம்மூர்ல என்னல புதுசா வந்துருக்கு? முன்னாலெல்லாம் வடக்கு வாழுது தெக்கு தேயுதுன்னு தமிழ் நாட்டப் பத்தி சொல்லுவாவ. இப்ப தமிழ் நாட்டுக்குள்ளாலயே இப்டி ஆயிச்சுல்ல. இதுல இந்த எம்.பியெல்லாம் சண்டவேற போடுறானுவ."

"அதென்ன நியூசு?"

"ஒரு மரைன் எஞ்சினியரிங் யூனிவர்சிட்டி. அத தமிழ்நாட்டுக்கு வேணும்னு நம்ம எம்.பியெல்லாம் கேக்காவ ஆனா அது கல்கத்தாவுல வேணும்னு கம்யூனிஸ்ட்காரனுவ கேக்குறானுவ. ஒரே சண்ட. மொத்தத்துல தமிழ் நாட்டுக்கு கம்பெனி மேல கம்பெனி போட்டி போட்டுகிட்டு வர்றானுவ. இது எல்லாருக்கும் கண்ணுகடிப்புடே."

"இந்த டாட்டா கம்பெனி வடநாட்ல ஏதோ வெவகாரம கெட்ந்துச்சே என்னாச்சு அண்ணாச்சி." மணி கேட்டான்.

"எல வெறும் கிரிக்கெட்ட மட்டும் பாக்காதியடே கொஞ்சம் செய்தியயும் பாருங்க. நந்திகிராம்ல போனவாரம் பொதுமக்களுக்கும் போலீசுக்கும் மோதலாயி ஒரு 14பேரு துப்பாக்கிச் சூட்ல எறந்துபோனாவடே. பயங்கர கலவரமாப் போச்சு. நாடே அல்லோகல்லப் பட்டுட்டு கெடக்குது நீ சாவகாசமா கேக்குற. அதே சுட்டோட இன்னொரு சேதி. வடக்க மாவோயிஸ்ட் நக்சலைட்டுவ 50 போலிச சுட்டுக் கொன்னுட்டானுவடே."

"ஜாலியா சினிமா நீயூஸ் ஏதாது சொல்லுங்கண்ணாச்சி." மணி கேட்டான்.

"ஒரு பழைய இங்லீஸ் படத்துல நல்லா பாடியோட ஒருத்தன் தலையில ரிபன் கட்டிட்டு வருவானே.. துப்பாக்கியெல்லாம் தூக்கிட்டு."

"சில்வெஸ்டர் ஸ்டாலோனா?"

"ஆமாண்டே அவன் பேர்ல ஆஸ்த்ரேலியாவுல கேஸ் போட்ருக்கானுவ பாத்துக்க. பாடி பில்ட் அப் பண்றதுக்குன்னு வஸ்த்து மருந்தெல்லாம் எடுத்துட்டு போயிருக்கான். அங்க அதெல்லாம் தட சென்ஞ்சுருக்காவ."

"வஸ்த்து வச்சுத்தான் பாடி ஏத்துறானுவ என்னா?"

"ஆமாண்டே."

"அப்ப நம்ம ஊர் நடிகரெல்லாம்?"

Actress Pooja"யாருக்கு தெரியுண்டே இருக்கலாம். இன்னொரு கத கேழு பூஜான்னு ஒரு நடிகை இருக்கா. அவங்க அம்மா சிங்களத்து ஆளு. அவ இலங்கையில நடிச்ச படம் சக்க போடு போட, நம்ம குஷ்புக்கு கட்னமாரி அங்க அவளுக்கு ஒரு கோயில் கட்டிருக்கானுவ. இப்ப அத வெடி வச்சு இடிச்சுட்டனுவ. நடிகைக்கெல்லாம் கோயில் கட்டுத அளவுக்கு என்னத்தான் இருக்கோ?"

"அதெல்லாம் இருக்கு அண்ணாச்சி. ஒங்களுக்கு புரியாது." ஜோசப் வழிந்தான்.

"எல எனக்கா தெரியாது? இந்த சில்பா இருக்கால்லா. இங்கிலாந்து ராணியப் போய் பாத்து கலக்கிட்டாடே. ஒலகம் பூரா மவுசு. ஏச்சு வாங்கி பெரிய ஆளானது எனக்குத் தெரிஞ்சு இவ ஒருத்திதாண்டே."

குளித்துவிட்டு கரையேறினார் அண்ணாச்சி. "ஏல பாக்கிஸ்த்தான் கோச்சு மாரடைப்புல செத்து போனாராண்டே தெரியுமா?"

"மானஸ்தன்." ஜோசப்.

"எல ஒரு வயசானவன் செத்துப்போனா இப்டியெல்லாமா சொல்தது?

"பங்ளாதேசுக் காரனுவ ஜெயிச்சானுவல்லா அப்ப இங்கன இந்தியாவுல இருக்க முஸ்லீம் செலபேரு வெடி கிடின்னு அமர்க்களப் படுத்திட்டானுவளாம். என்னத்த சொல்ல. அப்துல் கலாம் காலமெல்லாம் மலையேறுப் போச்சோன்னு தோணுது அண்ணாச்சி." மணி சொன்னான்.

"ஏல ஒரேயடியா எல்லாத்தையும் அப்டிச் சொல்லிராதடே. இராணுவத்துல தொடங்கி இந்த நாட்டுகா வேண்டி உசுரக் குடுக்குற முஸ்லீம் லச்சக்கணக்குல இருக்காவ. சில சின்னப் பயவ செய்யுற வேலடா இது."

மணி கரைக்கு வந்து துணியை பார்த்தான். துணி மேலிருந்த கல் விலகியிருந்தது.

"அண்ணாச்சி, இதுக்குள்ள இருந்த என்..." 

அண்ணாச்சி முறைக்க, மணி கப்சிப்.

| | | | | |
oooOooo
                         
 
அவர்களின் இதர படைப்புகள்.   அண்ணாச்சி உலகம் என்னாச்சி ? பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |