மார்ச் 17 2005
தராசு
கார்ட்டூன்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
உள்ளங்கையில் உலகம்
பங்குச்சந்தை ஒரு பார்வை
முத்தொள்ளாயிரம்
கட்டுரை
அறிவிப்பு
ஆன்மீகக் கதைகள்
கவிதை
திரைவிமர்சனம்
வ..வ..வம்பு
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • ஹர்ஷத் மேத்தா
 • - சசிகுமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் : பெர்ஸனாலிடியும் பொரிவிளங்காய் உருண்டையும்
  - எஸ்.கே
  | Printable version |

  Personality என்றதுமே அதன் நேரான தமிழாக்கம் "ஆளுமை" என்ற சொல் என்பது தான் பரவலாக ஒப்புக்கொள்ளப்பட்ட மொழிபெயர்ப்பு. ஆனால் "பெர்சனாலிடி" என்ற சொல் நம் மனத்தினுள் தோற்றுவிக்கும் ஒரு கருத்துக்கு முழுமையாக இந்த "ஆளுமை" எனுஞ்சொல் ஈடுகொடுக்கிறதா என்பது உடனே எழும் கேள்வி. அதன் வீச்சு சற்றே குறைவாக உள்ளதுபோல் தோன்றுகிறது. ஆனால் நம் பெர்சனாலிடியின் நீள, அகல பரிமாணத்தில் அந்த "ஆளுமை"யின் பங்கு என்ன என்பதை ஆராய்ந்தால் அதன் தாக்கத்தைப் புரிந்து கொள்ளலாம்!

  இந்த பெர்ஸனாலிடி என்கிற சித்தாந்ததை உட்புகுந்து ஆராய முற்பட்டோமானால், அது எங்கோ இழுத்துச் செல்லும். Sigmund Freud எனும் மனவியல் அறிஞரின் கோட்பாடுகளான Id, ego, super ego என்பவற்றைப் பற்றி முன்னமையே குறிப்பிட்டிருந்தேன். நாம் இப்போது இத்தகைய தத்துவங்களைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கப் போவதில்லை. அவற்றையெல்லாம் கரைத்துக் குடித்து யாராவது டாக்டர் பட்டம் பெறட்டும். நாம் இப்போது செய்ய முனைவதெல்லாம் நம் பெர்ஸனாலிடியை இவ்வுலகில் முன்னிறுத்தி வாழ்க்கையில் வெற்றி எனும் இலக்கை எட்டுவதற்கான வழிமுறைகளைத் தேடுவதுதான்.

  இந்த "பெர்ஸனாலிடி" என்றசொல் "முகமூடி" என்று பொருள் கொண்ட "persona” எனும் கிரேக்க மொழிச் சொல்லிலிருந்து தோன்றியது. ஒருவர் பலவகை "பெர்சனா"வை வெளிக்காண்பிக்கக்கூடும். எவ்வகை மனிதனாகத் தன்னை பிறர் கண்முன் தோற்றுவிக்க  நினைக்கிறோமோ அந்தத் தோற்றத்தை பிறர் மனத்திறையில் அறுதியாக நிறுத்தவேண்டும். You must present a favourable facade before the world. இதுதான் இந்த பெர்ஸனாலிடியின் அடிப்படைத் தத்துவம். 

  சரி. இந்த மந்திரச் சொல் எதைத்தான் குறிக்கிறது என்பதை சற்று ஆராய்வோம்:

  1. மற்றவர்களிடமிருந்து நம்மைப் பிரித்து நம் தனித்தன்மையைக் காண்பிக்குமுகமாக நம்மை முன்னிறுத்தல்
  2. நம் பிரத்தியேகமான, நீட்சியுள்ள, முரண்பாடற்ற சிறப்பியல்புகள்

  இதையே ஆங்கிலத்தில் குறிப்பிட முற்பட்டால், “Personality can be defined as the complex amalgam of all the attributes that characterize an individual; attributes that are unique to him – behavioral,  temperamental and emotional” என்று கூறலாம். நம்மில் ஒவ்வொருவரும் நம் தனித்தன்மையினால் ஒரு முத்திரையைப் பதிக்கிறோம். அதன் ஆற்றலைப் பொருத்து நம்மைப் பற்றிய புரிதல், கணிப்பு பிறர்பால் அமையப்பெருகிறது. ஆனால் இந்த இயல்புகள் யாவும் நம்முடனே பிறக்கின்றன. ஆகையால் இந்த பெர்ஸனாலிடியும் பிறப்பிலிருந்தே நம்மோடு உள்ளதா, அதனை மாற்றியமைக்க முடியாதா என்று கேட்கலாம். அதற்கு விடையாகத்தான் இந்த "behavioral” என்ற சொல் அமைகிறது. நாம் நடந்து கொள்ளும் முறை, பிறரிடம் கொள்ளும் அணுகுமுறை இவற்றை சற்றே திருத்தி அமைத்துக் கொள்வதன் மூலம் நம்மைப் பற்றிய புரிதலை மாற்றமுடியும். ஆகையால் நம் "பெர்ஸனாலிடி"யின் வெளிப்பாடு நம் கையில் தான் இருக்கிறது என்று அடித்துச் சொல்லலாம்.

  நான்கு சுவர்களுக்குள் நீங்கள் வாழ்ந்துகொண்டிருந்தால் உங்கள் பெர்ஸனாலிடி பற்றி நீங்கள் இம்மியளவேனும் கவலை கொள்ள வேண்டாம். நீங்களே உங்களை எப்படி வேண்டுமானாலும் கற்பனை செய்து கொண்டு வாழலாம். ஒரு நிலைக் கன்னாடியை எதிரே வைத்துக் கொண்டு "Mirror mirror on the wall, who is the fairest of all” என்று உங்களை நீங்களே துதி செய்து கொண்டு வாழலாம். ஆனால் இந்த உலகத்தின் ஒரு அங்கமாக சமுதாயத்தில் வாழவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நீங்கள் என்றும் பிறர் பங்களிப்பைப் பெறவேண்டிய நிலையில் இருக்கிறீர்கள். பிறரிடமிருந்து நீங்கள் எதிர்பார்க்கும் பங்கு நீங்கள் விரும்பும் அளவில் அமைவது உங்கள் பெர்ஸனாலிடியைப் பொருத்து அமையும். அதாவது பிறர்மேல் உங்கள் "ஆளுமை" எத்தகையது என்பதைப் பொருத்து அமையும்! இங்கே நிற்கிறார் இந்த "ஆளுமை" அண்ணாச்சி!

  “ஆளுமை" என்று நான் அழைக்க முற்படுவது பிறர் மனத்தில் நாம் செலுத்தும் ஆளுமையை. நம்மைச் சூழ்ந்துள்ள சமுதாயத்தில் அங்கம் வகிக்கும் சக மனிதர்களின் எண்ணப்போக்கு மற்றும் நம்மைப் பற்றிய அவர்களின் கண்ணோட்டம் - இவற்றை நம் ஆளுமையால் தன்வசப்படுத்த வேண்டும். நம் செயல்முறைகள், விழுமியங்கள், சொற்கள், சொல்லும் முறை, பலவகை மனிதர்களிடம் நம் அணுகுமுறை, ஒழுகல், பலவித சூழ்நிலைகளில் நாம் வெளிக்காண்பிக்கும் தன்னம்பிக்கை முதலிய ஆளுமை வெளிப்பாடுகள் ஆகிய யாவையும் ஒருங்கே சேர்ந்து நம்மைச் சுற்றி ஒரு ஒளிவட்டத்தைத் தோற்றுவிக்கிறது. இதுதான் அந்த பெர்ஸனாலிடி! இந்த ஒளிக்கதிர்கள் பிறர் மனத்தினுள் புகுந்து அவர்களின் புரிதலையும், அவதானிப்புகளையும் நமக்குச் சாதகமாக மாற்றியமைத்து, நம்மைப் பற்றிய ஒரு உயர்வான பதிப்பை ஆங்கே செதுக்கிவிடக்கூடிய வல்லமை பெற்றது. இந்த வல்லமையைத்தான் பிறர்பால் கொண்ட "ஆளுமை" என்றழைக்கிறோம்.

  அதுசரி. பிறர்மனதை ஆட்கொண்டு நம்வசப்படுத்த நாம் ஏதாவது சித்தரிடமிருந்து தீட்சை பெறவேண்டுமா, அல்லது வசிய மந்திரம், தாயத்து, பச்சிலை, லேகியம், கயிறு, தகடு, பில்லி, சூனியம், காலடி மண், உப்பு, மிளகு, மை - இதுபோன்ற வஸ்துக்கள் தேவையா. அல்லது உடான்ஸ் சாமியார் யாருக்காவது சொத்தை எழுதி வைக்க வேண்டுமா? அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். திருவாசகத்தில் "அவனருளாலே அவன்தாள் வணங்கி" என்று கூறியுள்ளதுபோல், நம் எண்ணம், சொல், செயல், நடத்தை முதலியவற்றை நெறிப்படுத்துதல் மூலமே பிறர் மனத்தை ஆளலாம்!

  பலவகை மனிதர்கள் கூடியுள்ள ஒரு அவையினுள் நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதாவது கலை நிகழ்ச்சிகள் போன்றவை நிகழும் அரங்கு போலல்லாமல், ஒரு கருத்தாய்வுக் கூட்டம் நடக்கும் அமர்வறை - ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளக்கூடிய (லாடம் போன்ற அமைப்புடன்) வகையில் அமைந்தது. நடு நடுவே நீங்கள் ஒரு பேப்பர் வெயிட்டை உருட்டிக் கொண்டோ, பேனாவை ஒரே முறையில் சுற்றிக் கொண்டோ ஆட்டிக் கொண்டோ இருங்கள். சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் உங்கள் சேட்டைகளை அந்த அறையிலுள்ள பலர் பின்பற்ற ஆரம்பித்திருப்பார்கள்! அவர்கள் அறியாமலேயே உங்கள் செயலால் கட்டுப் படுத்தப் பட்டுள்ளார்கள். பின் நீங்கள் உரையாடும்போது ஒரு குறிப்பிட்ட சொல்லையோ சொற்றொடரையோ தொடர்ந்த்து பயன்படுத்துங்கள். சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் அந்த அவையிலிருக்கும் பலர் வாயில் அந்த சொற்கள் அவர்களறியாமல் ஒலிப்பதைக் காணலாம். இதற்குமேல் ஒருபடி போய், உங்களுக்குத் தோன்றிய ஒரு கருத்தை வேறு ஒருவர் சொல்லிவிட்டது போல் தோற்றமளிக்கும் படி, “அவைத் தலைவர் முன்னமையே கூறியுள்ளபடி" என்ரு ஓரிறு முறை திருப்பித் திருப்பி சொல்லிப்பாருங்கள் (அந்தக் கருத்து அந்த அவைத்தலைவருக்கு சாதகமாக அமைவது முக்கியம்!). அந்த அவைத்தலைவர் அது போல் சொல்லவில்லை என்பதுதான் உண்மை என்றாலும் நீங்கள் சொன்னதையே பலர் வழிமொழிவார்கள் . அந்த அவைத் தலைவரும் "ஒரு வேளை, நாம்தான் சொல்லியிருப்போமோ" என்று எண்ண ஆரம்பித்து விடுவார். நம் சொற்களுக்கு அவற்றை வெளிப்படுத்தும் விதத்தினால் அவ்வளவு சக்தி ஏற்பட்டுவிடுகிறது.

  மிகச் சாதாரணச் சொற்கள் கூட இடம், பொருள், ஏவல் மாறுபாட்டால் பல பின்விளவுகளை ஏற்படுத்துகின்றன. அவற்றை பிரயோகிக்கும் விதம், பாதி சொல்லி மீதியைத் தொங்கலில் விடுவது - இதுபோன்றவற்றின் தாக்கம் மிக அதிகம். சொன்னதைவிட சொல்லாமல் விட்டது (untold story) தான் மிக்க பலம் கொண்டது. “மறைமுகச் சுட்டிக் கூறல்" என்னும் ஆயுதம் இவ்வுலகில் மிகவும் சக்தி வாய்ந்தது என்பதைக் காணலாம். பல திரைப்பட நடிக,நடிகைகள் தங்கள் பேட்டிகளில் பல தீயவர்கள் தங்களைப் பற்றி அவதூறான செய்திகளைப் பரப்பி அவர்களின் மார்க்கெட்டை சிதைத்து விட்டார்கள் என்று அழுதுள்ளதைக் கண்டிருக்கிறோம். நம்மைச் சுற்றி பல நபர்கள் இதுபோல் இருக்கிறார்கள். அவர்கள் வாழ்வே இதுபோன்ற புல்லுருவித்தன்மை நிறைந்தது. ஊன்றிக் கவனித்தால் அது போன்றவர்கள் அந்தச் சூழலில் எந்தப் பங்களிப்பும் இல்லாதவர்கள். ஆனால் மனிதர்களின் அடிப்படை பலவீனங்களைப் பயன்படுத்தி யாரிடமாவது ஒட்டுப்புல் போல் ஒட்டிக் கொண்டு முகஸ்துதியிலேயே காலம் ஓட்டும் "வேப்பிலை கோஷ்டி" freeloaders. ஆனால் இவர்களின் செல்வாக்கையும், இவர்களுடைய mischief value and negative influence பற்றியும் சிறிதும் குறைவாக மதிப்பிடக் கூடாது. சமயம் பார்த்து அங்கொன்றும் இங்கொன்றுமாக வார்த்தைகளைச் சிதற விட்டுவிட்டு ஒன்றுமே அறியாதவர்கள்போல், யாருக்கு வெடி வைத்துவிட்டு வந்திருக்கிறார்களோ, அவர்களிடமே போய் ரொம்பவும் வேண்டியவர் போல் நடித்து அவர்கள் வீட்டிலேயே விருந்துண்டு வருவார்கள்! “அந்தப் பெண்ணா, பார்த்துப் போடுங்க. கால்ஷீட்டில ஏதோ குளறுபடி செய்வதாகக் கேழ்வி" என்று பொத்தாம் பொதுவாகக் கொளுத்திப் போட்டுவிட்டுப் போய்விடுவார்கள். அவ்வளவுதான்! அங்கு விதைக்கப்பட்ட விஷ வித்து வேலை செய்ய ஆரம்பித்துவிடும். இதுபோன்ற நபர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் ஒருவிதமாக compromise செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்திற்குக்கூட பலர் தள்ளப் பட்டுள்ளனர்.

  இது போன்ற oblique suggestions பலருக்கு பலவித பாதிப்புகளுக்குக் காரணமாக அமைந்திருக்கின்றன. கிரிக்கெட் உலகில் "கர்னல்' என்று அழைக்கப்படும் திலீப் வெங்சார்க்கர் ஒரு பேட்டியில், தான் பேட்டிங் செய்ய விக்கெட் முன் நிற்கும் நிலை (stance) ஏதோ குறைபாடுள்ளது என்று யாரோ சொல்லப்போக, ஒவ்வொருமுறை பேட்டிங் தொடங்கும்போதும் அதுபோன்ற சந்தேகமும், நிச்சயமற்ற மனநிலையும் தொடர்ந்து ஏற்பட்டதாகக் கூறியிருக்கிறார். இதேபோல் மறைந்த கர்நாடக இசைமேதை ஜி.என்.பி அவர்களிடம் "மேல்ஸ்தாயி சட்ஜம்" வரும்போது சற்று "சுருதி சேரல்லையே" என்று கூறப்பட்டு, அவருக்கு அதன்பிறகு சட்ஜத்துக்கு வரும்போதெல்லாம் ஒரு tentativeness ஏற்பட்டு, தன்னம்பிக்கை போய், நிஜமாகவே அங்கு பிசிரடிக்க ஆரம்பித்துவிட்டது. அவர் ஆரம்ப காலத்தில் பாடிய பதிவுகளையும் பிற்காலத்திய ஒலிநாடாக்களையும் கேட்டால் இந்த மாறுதல் விளங்கும். இதுதான் நம் சொல், செயல் இவற்றின் ஆளுமை!

  ஆகையால் நம் செயல்பாட்டை முழுவதும் நம் சுயக் கட்டுப்பாட்டுகுள் கொண்டுவந்து, அவற்றை சரியானபடி வெளிக்காண்பிப்பதன் மூலம், நம் ஆளுமையை நிலைநிறுத்தலாம் என்பது திண்ணம்.

  நன்கறிந்த பலர் ஒரு இடத்தில் குழுமியுள்ளார்கள்,  அங்கு நீங்கள் செல்கிறீர்கள் என்றால், உங்களையறியாமல் அவர்களில் ஒருவர்பால் ஈர்க்கப் பட்டு அவரிடம் eye contact செய்து உரையாடத் தொடங்குவீர்கள். இது ஏன் அப்படி என்று உங்களால் இனம் கண்டு சொல்ல முடியாது. இதுதான் அந்த நபருடைய ஆளுமையின் வெளிப்பாடு. 

  நாம் மாறுபட்ட சூழ்நிலைகளில் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதை நாம் அறிவதில்லை. நம்மை நாம் காண்பதில்லை. பிறர்தான் காண்கிறார்கள். நாம் மனத்தினுள் அனுமானித்தபடிதான் பிறர்நோக்கிலும் அமையும் என்று எண்ணுகிறோம். ஆனால் உண்மையில் அதற்கு எதிர்மாறாக பிறர் புரிந்துகொள்ளக்கூடும் என்பதை நாம் அறியமாட்டோம். அதனால் நம் அணுகுமுறையும் செயல்படும் விதமும், முற்றிலும் rehearse செய்யப்பட்டு, இப்படிச் செய்தால் எப்படி அதன் விளைவுகளிருக்கும் என்பதை தெளிவாகத் திட்டமிட்டுச் செய்தல் வேண்டும். பொது இடங்களில் கடைப் பிடிக்க வேண்டிய etiquette முதலியவற்றில் கவனிப்பாக இருத்தல் வேண்டும். நம்மை பிறர் அலட்சியம் செய்ய ஒருக்காலும் இடம் கொடுக்கக் கூடாது. அதற்கான சூழ்நிலைகளை நாமே ஏற்படுத்தலும் கூடாது. பேசும்போது நிதானமாக, இடைவெளி கொடுத்து, deep, resonant voice-ல் பேசவேண்டும். High-pitched shrieks கூடாது. சிறுபிள்ளைத் தனமாக ஒருபோதும் நடந்துகொள்ளக் கூடாது. ஒரு பொருட்டாக மதிக்கப்பட லாயக்கில்லாத மனிதர் என்று யாரும் நம்மை கணக்குப் போட்டுவிட அனுமதிக்கக் கூடாது. சின்னச் சின்ன விஷயங்களில்கூட நம் ஆளுமையை வெளிப்படுத்த வேண்டும். நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை, தெளிந்த சிந்தனை, அறிவார்ந்த உரையாடல் மற்றும் திருவள்ளுவர் பொருட்பாலில் கூறியுள்ள அறிவுரைகளின்படி நடந்தால் இப்பூவுலகம் உங்கள் கையில். மக்கள் மனமும் உங்கள் வசப்படும்!

  பின் குறிப்பு:

  பொரி விளங்காய் உருண்டை எனப்படும் "பொருள் விளங்கா உருண்டை" (“ஒப்பிலா அப்பன்" உப்பிலியப்பன் ஆனது போல), கொஞ்சம் hard-ஆன ஒரு தித்திப்பு மாவு உருண்டை.. இது அரிசி, கோதுமை, பாசிப் பருப்பு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, தேங்காய், ஏலக்காய், வெல்லம் சேர்த்துச் செய்யப்பட்டது. இன்ன ingredient-டினால் இன்ன ருசி என்று கணிக்க முடியாததினால் இது அந்தப் பெயரைப் பெற்றது என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்! வேண்டுவோர் அடையாற்றிலுள்ள பிரபல ஸ்வீட் அண்ட் ஸ்னேக்ஸ் கடையில் வாங்கி ருசி பார்க்கலாம்!

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2005 Tamiloviam.com - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |