மார்ச் 24 2005
தராசு
வ..வ..வம்பு
மஜுலா சிங்கப்புரா
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
உள்ளங்கையில் உலகம்
பங்குச்சந்தை ஒரு பார்வை
கவிதை
முத்தொள்ளாயிரம்
திரைவிமர்சனம்
அறிவிப்பு
நையாண்டி
 
  முதல் பக்கம்
தொடர்கள்
இலக்கியவாதி  புதிது
- சத்யராஜ்குமார்
ஹர்ஷத் மேத்தா  புதிது
- சசிகுமார்
- சத்யராஜ்குமார்
கோடிட்ட இடங்கள்
- சித்ரன்
சுய சாசனம்
- பாஸ்டன் பாலாஜி
என்னை எழுதியவர்கள்
- சத்யராஜ்குமார்
களம்
- நாகூர் ரூமி
கங்கை இல்லாத காசி
- பாஸ்டன் பாலாஜி
வார்த்தையல்ல, வாக்கியம்
- என். சொக்கன்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
 
மஜுலா சிங்கப்புரா : குற்றமென்று கண்டால் குறைவுண்டோ வாழ்வினுக்கே?
- எம்.கே.குமார்
| Printable version |

"ஒரு இன்று, இரண்டு நாளைகளுக்குச் சமம். இன்று எதைச்செய்யமுடியுமோ அதை ஒருபோதும் நாளைக்குத் தள்ளிப்போடாதே! நாளைய நாளை நீ வெற்றிகொள்ள வேண்டுமெனில் இன்றைய இன்று உன்னுடையதாக இருக்கட்டும்." வரலாற்றில் இன்று வாழ்பவர்களெல்லாம் அன்று சொல்லிவிட்டுச்சென்றவைகளின் சாரம் இதுதான். நாளை நமது நாளே என்ற மனப்பான்மை நமது செயல்பாடுகளோடு ஒன்றிணைந்து கிடப்பது இருக்கட்டும். நிஜமாகவே 'நாளை நமது'தானா? நெஞ்சு சொல்லும் வழி நேற்று நடந்தோம். நேற்றின் வழியில் இன்று வீறுநடை போடுகிறோம். நாளைய நமது பயணம் எப்படியிருக்கும்? 

உலக அரசியல் அரங்கில் எங்கேயாவது ஒருநாட்டில், ஒரு கட்சியே பல ஆண்டுகள் ஆண்டுகொண்டிருப்பது பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவ்வாட்சியும் எத்தனை ஆண்டுகளுக்குத் தாக்குப்பிடித்திருந்தது? தாக்குப்பிடித்திருந்தாலும் தனித்துவம் இழக்காமல் இருந்திருந்ததா? தனித்துவம் கொண்டிருந்தாலும் நாட்டை செழித்து வளரச்செய்ததா அது? இடையில் கொள்கையடிப்படையில் எத்தனை முறை மாறியது அது? எத்தனை தலைகள் தலைவர்களாகிப்போனார்கள்? எதுவரை அவர்கள் தலைவராய் இருந்தார்கள்? இன்னொரு 'தலை' தலையெடுத்து வரும் வரையா? தலையெடுத்து வந்தவர் பழைய தலைவரையும் நாட்டையும் செம்மையாக்கினாரா? இல்லை அவரையே செம்மைப் படுத்திக்கொண்டாரா?

வெங்காயங்களும் விலையேற்றங்களும் ஆடம்பரங்களும் பணப்புழக்கமின்மைகளும் சிமிண்ட் விலையேற்றங்களும் ஏன், வளர்ப்பு மகன்களும் கூட ஒரு கட்சியின் ஆட்சியை கூண்டோடு தூக்கி வீசமுடியும் நமது இந்தியாவில். ஆனால் உலக அரசியலில் ஒரே ஒரு வெற்றிக்குதிரையாய் நீண்ட காலம் ராஜபாட்டையில் சவாரி செய்து தங்களை 'நிரந்தரத்தின் அடையாளமாய்' கருதிய அதிபர்களும் முதல்வர்களும் எப்படியெல்லாம் கவிழ்ந்துபோனார்கள் கவிழ்க்கப்பட்டார்கள் என்பதையறிய ஒருசில 'நேற்றுகளுக்கு' நாம் சென்று வரவேண்டியிருக்கும். உலக அரசியலில் மேற்குறிப்பிட்ட அத்தனை கேள்விகளையும் ஒரே ஒரு குகையாக்கிக்கொண்டு உள்ளே நுழைந்து பார்த்துவிட்டு வருவோம் வாருங்கள்.

சூரியன் உதிக்கும் ஜப்பான் நாட்டில் 'லிபரல் டெமோகிரேடிக் பார்ட்டி' (LDP), சுமார் 38 ஆண்டுகள் ஆட்சிக்கட்டிலை விட்டு அகலாமல் இருந்தது. ஆனால் அந்தோ பரிதாபம், 1993 ல் ஒட்டுமொத்தமாய் அனைத்தையும் அது இழந்தது. தைவான் நாட்டில் 2000 ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் தோல்வியைத் தழுவிய KMT எனப்படும் 'குவாமிண்டாங் கட்சி' எப்போதிலிருந்து அங்கு ஆட்சியிலிருந்து தெரியுமா? 1949 ஆண்டிலிருந்து. மிக அதிக ஆண்டுகள் ஆட்சியிலிருந்து அசைக்க முடியா சக்தியுடன் விளங்கிய மெக்ஸிகோ நாட்டு கட்சியான PRI (Partido Revolucionario Institucional) கட்சி, தொடர்ந்து 71 ஆண்டுகள் அந்நாட்டில் வெற்றி பெற்று வந்தது, 2000 ஆண்டு நடந்த தேர்தலில் என்ன ஆனது அதன் நிலை? PAN எனப்படும் Partido Accion Nacional கட்சியிடம் தோல்வி கண்டது வரலாறு இல்லையா?

"மக்கள் செயல் கட்சி"-- 1954 ஆம் ஆண்டு லண்டனிலிருந்து படித்து விட்டுத் திரும்பிய ஐந்து இளைஞர்களால் சிங்கப்பூரில் ஆரம்பிக்கப்பட்டது. ஐம்பது ஆண்டுகள் ஒரு சுகமான கனவைப்போல விரைவாக கரைந்துவிட்டன. ஐம்பது ஆண்டுகளில் கட்சியே இல்லாமல் போகலாம். உடைந்து ஒன்றாகவோ ஐந்தாகவோ சிதறி சிறப்பிழந்து போயிருக்கலாம். ஆனால் ஆரம்பித்து ஐம்பது ஆண்டுகள் கழிந்தும் இதோ இன்றுவரை தொடர்ந்து 45 ஆண்டுகள் ஒரே ஒரு வெற்றிக்குதிரையாக ஓடிக்கொண்டிருக்கிறது; ஆட்சிப்பீடத்தில் அமர்ந்திருக்கிறது; பொன்விழா கொண்டாடுகிறது.

1959 ஆண்டு நாட்டு மக்களின் மனங்களில் குடிபுகுந்தவர்தான் அவர். இன்னும் ஐம்பது வருடங்கள் கழித்து மக்கள் செயல்கட்சியின் 'நூற்றாண்டுவிழா' கொண்டாடப்படுமா என்று கேட்டால், 'இதோ அதற்கான திட்டங்கள்' என்று கையில் வைத்திருக்கும் காகிதங்களைக் காட்டுவார் திரு. லீ குவான் யூ அவர்கள். மக்கள் செயல் கட்சியின் நிறுவனர்களுல் ஒருவர். நாட்டின் முதல் பிரதமர். தொடர்ந்து 31 ஆண்டுகள் பிரதமர். 8 பொதுத்தேர்தல்களில் கட்சியை வழிநடத்தி வெற்றி பெறச்செய்தவர். இன்று மதியுரை மூத்த அமைச்சர்.

"இது எனக்கும் எங்களுக்கும் கிடைத்த மிகப்பெரிய சந்தோசப்பொக்கிஷமாகும். கட்சியை ஆரம்பித்தவர்களே அக்கட்சியின் ஐம்பதாம் ஆண்டு  பொன்விழாக்கூட்டங்களில் பங்கு கொள்வது என்பது எல்லோருக்கும் கிடைத்துவிடுமா என்ன?" மிகவும் உற்சாகத்தோடு ஆரம்பிக்கிறார் திரு. லீ குவான் யூ அவர்கள்.

"இன்னும் ஐம்பதாண்டுகள் ஆட்சியில் இருப்பதற்கு நாங்கள் புதிதாக எதையும் செய்யவேண்டியதில்லை. கடந்த ஐம்பது ஆண்டுகள் நாங்கள் என்ன செய்துவருகிறோமோ அவற்றை ஒழுங்காகச் செய்து வந்தாலே போதும். நாளைய நாள் நம்முடையதாக இருக்க இன்று என்ன செய்யவேண்டும் என்பது எங்களுக்குத்தெரியும்" என்கிறார்.

"இரு விஷயங்களை, இன்று மட்டுமல்ல என்றும் நாங்கள் நினைவு கொள்ளவேண்டும். நாளைக்கென்று எடுத்துச்செல்லப்படும் எந்த ஒரு காரியத்திற்கும் இந்த இரண்டு மட்டுமே மிக முக்கியமானவைகளாக என்னால் சொல்ல முடியும். ஒன்று, 'சுய மாற்றங்கள்'- இன்றைக்கேற்றவாறு என்னை நான் மாற்றிக்கொள்வது. இரண்டாவது, இளையவர்கள் என்றாலும் திறமையுள்ளவர்களைக் கட்சியிலும் ஆட்சியிலும் ஏற்றுக்கொள்வது, அவர்களை அங்கீகரிப்பது, அவர்களை 'நாளைய நாளு'க்குத் தயார் செய்வது."

"மேற்கொள்ளப்படும் எந்தவொரு விவாதமும், நாட்டு முன்னேற்ற நலனில் அக்கறை கொண்டிருக்கும் மாற்றுக்கருத்துகளும் கட்சிக்குள்ளே மட்டுமே விவாதிக்கப்பட வேண்டும் என்பதில் நான் மிகவும் நிதானமாக இருக்கிறேன். கட்சிக்குள்ளேயே அவற்றை விவாதிப்பதில் தவறில்லை. கட்சிகளுக்கிடையே தான் விவாதிக்கக்கூடாது. பிறகு அது, வேறொரு தளமாக, கட்சியாக உருவாகி இடையறாத தொல்லைகள் தரக்கூடும். நாட்டு நலனில் அவை ஏற்படுத்தப்போகும் குந்தகங்கள் நாட்டுக்கும் மக்களுக்கும் எப்போதும் நல்லதில்லை."

குகையை விட்டு வெளியே வந்தபோது நான்கு விஷயங்கள் தடுப்புச்சுவர்களாக இருந்ததைக் கவனீத்தீர்களா? அந்த நான்கும் தான் எந்தவொரு ராஜாங்கத்தையும் குப்புறத்தள்ளி அப்புறப்படுத்தவல்லது என்பதை எல்லோரும் உணர்ந்திருக்கிறார்கள். அந்த நான்கு விஷயங்களை மக்கள் செயல் கட்சியும் இன்று போல என்றும் தொடர்ந்து மேலாண்மை செய்துகொண்டு வந்தால் இன்னும் ஐம்பது ஆண்டுகள் என்ன நூறு ஆண்டுகள் கூட ஒரே கட்சியாக சிறந்து விளங்கி ஆட்சியிலும் அமர்ந்து சிங்கப்பூரை வழிநடத்தலாம் என்பதாகக் கூறப்படுகிறது.

முதலாவது, பொருளாதாரச் சிக்கல்களும் அவற்றிலிருந்து மீளும் வழிமுறைகளும்.
1997 ஆம் ஆண்டு ஏற்பட்ட குறைவான பொருளாதார வளர்ச்சி நாட்டை இக்கட்டான நிலைக்குக் கொண்டு வந்துவிடுமோ என்று பலர் பயந்து கொண்டிருந்தார்கள். மிகவும் திறமையாக அவற்றை எதிர்கொண்டார்கள் மக்கள் செயல் கட்சியின் ஆட்சியாளர்களான திரு. கோ சோ டாங் மற்றும் அவரது சகாக்கள். எனவே இனிமேலும் அத்தகைய சூழ்நிலை இங்கு வந்தால் எதிர்கொண்டு வெற்றிவாகை சூடும் மந்திரக்கோலை இடுப்பில் வைத்திருப்பது அவசியம். பொருளாதாரத்தில் ஏற்படும் முதல் சரிவு மிகப்பெரிய சரிவாகிவிடும் என்பதால் இது முதன்மை பெறுகிறது.

இரண்டாவது, கொஞ்சம் கொஞ்சமானாலும் வீட்டை மொத்தமாக அரித்துவிடும் கரையான்களான லஞ்ச ஊழல் லாவண்யங்கள்.  இத்தாலியின் மிகப்பெரிய கட்சியான கிறிஸ்டியன் டெமோகிரேட்ஸ் 1949 லிருந்து 1992 வரை வெற்றிக்கொடி நாட்டி வந்தது. பிறகு? 2600 பேர் குற்றம் சாட்டப்பட்டார்கள். மொத்த அமைச்சரவை மந்திரிகளும் கட்சித்தலைவர்களும் பார்லிமெண்டேரியன்களுமான சுமார் 325 பேர் பிரதான ஊழல் குற்றவாளிகளாக விசாரிக்கப்பட்டார்கள்.

மெக்ஸிகோ, ஜப்பான் மற்றும் தைவானில் நடந்த நீண்ட ஆட்சி மாற்றங்களுக்கும் இதைவிட என்ன பெரிய காரணம் இருக்கமுடியும் என்று நினைக்கிறீர்கள்? ஆக, லஞ்சங்கள் மற்றும் ஊழல்கள் தற்போதைய ஆட்சியாளர்களிடம் மட்டுமின்றி சிங்கப்பூரர்களிடையேயும் குறிப்பிடத்தகுந்த சில மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். நீண்ட ஆயுளுடைய கட்சிகள், இளையதலைமுறைகளைச் சரியாக உணர்ந்து கொள்ளாதபோதும் அவர்கள் அவற்றின் பாரம்பரியம் அறியாதபோதும் இது நடந்துவிடலாம். இவற்றை இன்று போல என்றும் அரசும் கட்சியும் முறையாக கைக்கொள்ளுதல் அவசியம்.

மூன்றாவதாக, ஒன்றுபடுதலும் உயர்தலும். ஜப்பான், தைவான் போன்ற நாடுகளின் ஆட்சிமாற்றங்களுக்கு கட்சியில் ஏற்ண்ட்ட பிளவுகளும் ஒரு முக்கியக்காரணமாகும். சிங்கப்பூரைப் பொறுத்தவரையில் விரைவில் கட்சியின் தலைமையிலோ வேறெங்குமோ ஏதும் பிரிவினை, பிரச்சனை ஏற்பட வழி இருக்காது. திரு. லீ குவான் யூ அவர்களும் அவரின் மகனும் நாட்டின் தற்போதைய பிரதமரான திரு. லீசியன் லூ அவர்களும் இப்பொறுப்புகளில் சிறந்துவிளங்கும் வரை இதே நிலை நீடிக்கக்கூடும். பிறகு தடம் மாறலாம்.

மக்கள் செயல்கட்சியைப் பொறுத்த வரை பெரிய 'ஆள் பிடிக்கும் கூடை' ஒன்றை எப்போதும் தன்னுடன் வைத்திருக்கிறது அது. எதிர்க்குரல்கள் கொடுக்கும் தனினபர்கள் உண்மையிலேயே நாட்டு நலனில் அக்கறை கொண்டவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களை கூடைக்குள் போட்டு அமுக்கி கட்சிக்குள் உலவவிட்டு அவர்களது திறமையை பயன்படுத்திக்கொள்ளும் லாவகம் தெரிந்திருக்கிறது. தற்போது சிங்கப்பூரின் கல்வி அமைச்சராக இருந்து சிங்கப்பூரை மிகச்சிறந்த கல்விக்கூடமாக்கிக்கொண்டிருக்கும் திரு. தர்மன் ஷண்முகரத்தினம் அவர்களைக்கூட அத்தகைய ஒரு கூடையைப்போட்டுத்தான் பிடித்தது மக்கள் செயல் கட்சி. இன்று அவரின் செயல்பாடு உலகம் மெச்சும் வகையில் இருக்கிறது.

நான்காவதும் முக்கிய ஒன்றுமானதுமான தேர்தல் விதி முறைகள் மற்றும் சட்டதிட்டங்கள். தற்போது இருக்கும் தேர்தல் அமைப்புகளும் சட்டதிட்டங்களும் ஆளுங்கட்சிக்கு சாதகமாகவே இருப்பதாக ஒரு சாரார் நினைக்கலாம். ஆளுங்கட்சியே அவற்றை நிர்வகிப்பதால் எதிர்க்கட்சிவேட்பாளர்களுக்கு சம வாய்ப்பு போட்டியில் இல்லை என்று முனகுபவர்களும் இருக்கலாம். இவற்றைப் போன்றதொரு பிரச்சினை மெக்ஸிகோவில் உருவாகி தன் கட்சிக்கு என தனியே தேர்தல் சட்ட திட்டங்களையும் விதிகளையும் சில அரசியல் கட்சிகள் வகுத்துக்கொண்டு கலவரம் புரிந்ததையும் மறக்க இயலாது.

ஆக, எல்லாம் இப்படி இருக்க, நூற்றாண்டு விழாவையும் ஆட்சிப்பீடத்தின் நிரந்தர நிலையையும், 'மக்கள் செயல் கட்சி' மனதில் கொண்டு செயல்படுமா, அவற்றையெல்லாம் சாதித்துக்காட்டுமா என்பதெல்லாம் 'அவற்றில்' தான் இருக்கிறது. 'அவற்றில்' தான் 'இன்றும்' இருக்கிறது!

(தொடரும்)


சிங்கப்பூர் டைம்ஸ் 2015 இதழில் இருந்து.

சென்னையைக் காலி செய்யும் அக்னிராஜா.

சென்னை. அக்னிபகவானின் கோபத்தில் அல்லாடுகிறது சென்னை நகரம். வானிலை வரலாற்றிலேயே முதன்முறையாக மிக அதிகபட்ச வெயில் நேற்று சென்னையின் சில இடங்களில் பதிவு செய்யப்பட்டது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் இன்னும் சில நாட்களுக்கு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மிக அதிக அனல் கொண்ட வெயில் இருக்கும் என்றும் ஆங்காங்கு சில பகுதிகளில் 'மிதமான மற்றும் குளிர்ந்த வெப்பக்காற்று' வீசக்கூடும் என்றும் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதைக் குறைத்துக்கொள்ளவேண்டும் எனவும் அது கூறியுள்ளது. மழை திடீரென்று 'வந்தாலும் வரலாம்' எனவும் 'வராமல் போனால் உஷ்ணக்காற்று வீசக்கூடும்' எனவும் அச்செய்திக்குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.

கடந்த ஆண்டு நவம்பர்-டிசம்பர் (கார்த்திகை-மார்கழி) மாதங்களில் இருந்ததை விட இம்முறை அதிக வெப்பம் வீசுவதாகவும் ஏப்ரல்-மே-ஜூன் மாதங்களில் இதற்கேற்றவாறு நல்ல மழை பெய்யலாம் எனவும் அக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இம்மாதங்களில் மழை பெய்யாவிட்டால் அதற்கடுத்த மூன்று மாதங்களில் 'கட்டாயம்' பெய்யலாம் எனவும் அது கூறுகிறது.

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com - Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |