மார்ச் 30 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கொஞ்சம் கதைக்கலாம் வாங்க : சொர்க்கமே என்றாலும்!
- ராமசந்திரன் உஷா
| Printable version | URL |

ஒரு அவசர பயணமாய் ஊருக்கு பத்து நாட்கள் சென்று வந்தேன். இன்னும் தமிழகத்தில் தேர்தல் சூடு பிடிக்கவில்லை. சுவரொட்டிகளில் விஜயகாந்தும், திருமாவும் அதிகம் கண்ணில் பட்டார்கள். அரசியல்வாதி அல்லாமல் சுவரொட்டிகளில் சிரித்துக் கொண்டு அருள்பாலித்துக்கொண்டு இருந்தவர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் (மூன்று ஸ்ரீ தானே?) இம்முறை அதிக வேலை என்பதால், வாங்கிய புத்தகக்கட்டு வெகு குறைவு. கோவை ஒடிசியில் கண்ணில் பட்டது "கி.ராவுக்கு கு. அழகிரிசாமி எழுதிய கடிதங்கள்" இப்பொழுதுதான் படிக்க ஆரம்பித்துள்ளேன்.

ஆர்.எஸ்.புரம் தெருவோர பழைய புத்தக குவியலில் சில புத்தகங்கள் கிடைத்தன. உலகிலேயே உனக்கு பிடித்த விஷயம் எது என்று என்னக் கேட்டால், பழைய புத்தகங்களை புரட்டுதல். அதில் இருந்து ஒரு மணம் வரும் பாருங்கள்.... ஆஹா! பைண்ட் செய்த பத்திரிக்கை தாள்கள் என்றால் அதில் இருக்கும் துண்டு செய்திகள், விளம்பரங்கள் படிக்க சுவையாய் இருக்கும். ஆனால் இம்முறை கிடைத்தவை பழைய்ய்ய்ய புத்தகங்கள்.

வெகு சுவாரசியமாய் இருந்ததால், அவசரமாய் படித்தது " நவீன ஒப்பாரி கோவை" "ஜெகமெங்கும் புகழ் பெற்ற இன்பகான கீதமணி திரிசிரபுரம் ஸ்ரீமான் ஆர்.டி.தங்கமுத்து தாஸ் அவர்கள் இயற்றியது"

அனைத்திலும் மாமியார் - உறவுமுறையில் தந்தையின் சகோதரியாக இருந்தாலும் மாமியாரின் சாவு முதல் கணவன் மற்றும் மற்ற உறவு இழப்பிலும் மாமியாரின் கொடுமை சொல்லப்பட்டுள்ளது. அடுத்த சுவாரசியம், கணவனுக்கான ஒப்பாரியில் அவன் தாசி வீட்டுக்கு சென்ற விஷயத்தையும், பிற பெண்களை சைட் அடித்ததையும் சொல்லி ஒப்பாரி வைப்பது. அது என்ன அந்தக்காலத்தில் ஆண்களின் ஒழுக்கம் என்பது இவ்வளவு மோசமாய் இருந்ததா?

Namithaமுன்பு அட்டை படத்தை எடுத்துவிட்டால், ஆனந்தவிகடனுக்கும் குமுதத்திற்கு வித்தியாசம் தெரியாது என்பார்கள். ஆனால் இப்பொழுது பெரிய முன்னேற்றம். அட்டை இருந்தாலும் வித்தியாசம் தெரியாது. அது என்னவோ ஆவியில் எப்பொழுதும் நமீதா படம் :-) ஆனால் கல்கி ஓரளவு நன்றாக இருக்கிறது. தினகரன் விற்பனை சூப்பர் என்றார் ஆட்டோ ஓட்டுனர். ஒரு ரூபாய்க்கு தரமான தாளில், பதினாறு பக்கங்கள், வண்ணப்படங்கள் என்று இருந்தாலும் தேர்தலுக்குப் பிறகு விலை ஏறிவிடும் என்ற உண்மையை எல்லாரும் தெளிவாய் உணர்ந்தே இருக்கிறார்கள். சூரிய குடும்பத்தின் பல மொழி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கண்ணில் பட்டன. ஜெயாவில் குஷ்பூ ஆரம்பித்த கோடீஸ்வரியைப் பார்த்து அதே போன்ற ரிடையர்ட் ஆன நடிகைகளை வைத்து மலையாள, தெலுங்கில் பொது அறிவை வளர்க்கும் நிகழ்ச்சிகள்.

தமிழில் ரம்யாகிருஷ்ணன் போல மலையாளத்தில் ஊர்வசி, தெலுங்கில் ராதிகா. வயதுக்குப் பொருந்தாத அதீத அலங்காரத்துடன், அனைவருமே அந்த கால திமிர் பிடித்த பணக்கார மாமியார் கோலத்தில்! பார்க்க சகிக்கவில்லை.

இணையம் மூலம் அறிமுகமான நண்பர்கள் சிலருடனே தொடர்ப்பு கொள்ள முடிந்தது. அதுவும் தொலைபேசியில் மட்டுமே. இரண்டு நபர்களுடனான உரையாடல்கள், அவர்கள் ஏன் தங்கள் அனுபவங்களை இன்னும் அதிகம் எழுதுவதில்லை என்ற எண்ணத்தை தோற்று வித்தது.

ஒருவர், பழைய தோழி. சமஸ்கிருதம் அறிந்தவர். வேதத்தைப் பற்றி அவர் சொன்ன விஷயங்களை அவரே எழுத முன் வர வேண்டும். வேதங்கள் ஆகாயத்தில் ஒலியாய் உலாவருகிறது என்று மெய்சிலிர்ப்பவர்களும், அவைகளை கடுமையாக விமர்சிப்பவர்கள் என்று இரண்டே கட்சிகள். தோழியின் எழுத்து நடுநிலைமையுடன் இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அவர் மதுமிதா. அவரின் வலைப்பதிவு http://madhumithaa.blogspot.com

அடுத்து அறிவொளி இயக்கத்தில் இருந்து பல சமூக பணிகளும், பத்திரிக்கை இலக்கிய அனுபவம் மிக்கவர். அவரும் தன் அனுபவங்களைப் பகிர்ந்துக் கொள்ள வேண்டும். அவர் ஒரு புத்தகம் எழுத முனைந்துள்ளர். புத்தகம் சொல்வது அரவாணிகளின் அவலங்களை. இது அதிகம் தமிழில் பேசப்படாத விஷயம். அவர்களுடனே வாழ்ந்து, செய்திகள் பலவற்றை படாத பாடுப்பட்டு திரட்டியுள்ள பாலபாரதி விரைவில் எழுதி முடிக்க வேண்டும் என்பது என் கோரிக்கை. அவர் எஸ். பாலபாரதி அவரின் வலைப்பதிவு http://piditthathu.blogspot.com/

Jereenaபத்து நாட்களுக்கு முன்பு கல்ப் நியூஸ் பத்திரிக்கையில் படித்த செய்தி பெங்களூரை சேர்ந்த ஜரீனா தன் தாய்மொழியான மலையாளத்தில் "ஒரு அரவாணியின் வாழ்க்கை வரலாறு" ( Autobiography of a Hijra (eunuch) by Jereena) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். பிறவி குறையால் அவதியுறும் இவர்களின் வலிகளை யாரும் கவனிப்பதில்லை. ஜரீனா சொல்வது, "இளமையில் பாலின தொழிலாளி, சிறிது வயதானதும் வட இந்தியரின் திருமணங்களில் பாடுவது, குழந்தை பிறந்தால் ஆசிர்வதிப்பது என்று பணம் சம்பாதிப்பது. இவையும் விரும்பி யாரும் தருவதில்லை. குழுவாய் வலுக்கட்டாயமாய் வீட்டில் புகுந்து பேரம் பேசி பணம் வாங்குவது. முப்பது வயதுக்குள் வியாதியால் பீடிக்கப்பட்டு பிச்சை எடுத்து சில காலம் வாழ்ந்து இறந்துப் போவது என்பதே அரவாணிகளின் வாழ்க்கை" என்கிறார்.

பிகு
மாமியாரின் சாவுக்கு மருமகள் பாடும் ஒப்பாரி. இதோ சாம்பிளுக்கு சில வரிகள்

நான் வுளுத்தவடையறியேன் என்னைக் கொண்டவுதாரி முண்டை
அத்தையாரே உன் வாசலிலே நான் ஒரு கரண்டி நெய்யறியேன்
இந்த ஊரார் மதிப்பாரென்று என் தகப்பனுடன் பிறந்த
அத்தையாரே நான் ஒப்புக்கு மாரடித்தேன்
நான் மஞ்ச: குளித்தறியேன் என்னைக் கொண்ட மகாபாவி
அத்தையாரே உன் வாசலிலே ஒரு மருக்கொழுந்து மணமறியேன்
இங்கு வந்த ஜென்மந்தான் மதிக்க என் வாயாடி அத்தையாரே
நான்வோடி வந்து மாரடித்தேன்.

| | |
oooOooo
ராமசந்திரன் உஷா அவர்களின் இதர படைப்புகள்.   கொஞ்சம் கதைக்கலாம் வாங்க பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |