மார்ச் 31 2005
தராசு
வ..வ..வம்பு
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
மஜுலா சிங்கப்புரா
உள்ளங்கையில் உலகம்
முத்தொள்ளாயிரம்
கவிதை
கட்டுரை
சிறுகதை
அறிவிப்பு
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
தொடர்கள்
இலக்கியவாதி  புதிது
- சத்யராஜ்குமார்
ஹர்ஷத் மேத்தா
- சசிகுமார்
- சத்யராஜ்குமார்
கோடிட்ட இடங்கள்
- சித்ரன்
சுய சாசனம்
- பாஸ்டன் பாலாஜி
என்னை எழுதியவர்கள்
- சத்யராஜ்குமார்
களம்
- நாகூர் ரூமி
கங்கை இல்லாத காசி
- பாஸ்டன் பாலாஜி
வார்த்தையல்ல, வாக்கியம்
- என். சொக்கன்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
 
உள்ளங்கையில் உலகம் : செல்லுலர் வலையமைப்பு
- எழில்
| Printable version |

செல்லுலர் வலையமைப்பின் மற்ற பகுதிகளை இந்தப் பதிவில் காண்போம். படத்தில் காணப்படுவது போல் ஒரு செல்லிடை வலையமைப்பு அமைந்திருக்கிறது.  

நமது கையிலிருக்கும் கைக்கருவி சமிக்ஞைகளை அனுப்பும் நிலையத்திற்குத் தள நிலையம் (Base Transceiver Station, BTS) என்று பெயர். தகவல்களை செல்பேசிக்கு அனுப்புவதும் , செல்பேசியிலிருந்து தகவல்களைப்பெறுவதும் இத்தள நிலையத்தின் பணியாகும்.  உயரமான இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் ஆன்டெனாக்கள் செல்பேசிகள் அனுப்பும் வானலைகளைப் பெற/செல்பேசிகளுக்குத் தகவல் அனுப்ப உதவி செய்கின்றன. செல்பேசியிலிருந்து இந்தத் தள நிலையம் வரைதான் கம்பியில்லாத்தொடர்பு முறை. தள நிலையத்திலிருந்து மற்ற அனைத்துக் கூறுகளும் கம்பியிணைப்பு செய்யப்பட்டவை.

ஒரு தள நிலையமும் அதனைச் சுற்றியுள்ள பகுதியும் ஒரு செல் (Cell) என்று அழைக்கப்படும். அதனைச் சுற்றியுள்ள பகுதி என்று சொல்வதை விட, எவ்வளவு சுற்றளவுக்கு அந்தத் தள நிலையம் சமிக்ஞைகளை அனுப்பத் திறன் படைத்ததோ, அந்தச் சுற்றளவுதான் ஒரு செல் எனலாம். அல்லது "ஒரு செல் என்பது ஒரு தள நிலையத்தை மையமாகக் கொண்டது " என்றும் கூறலாம். உதாரணமாய்ச் சென்னையின் சைதாப்பேட்டை பகுதியை ஒரு செல் என்றால் அங்கு ஒரு தள நிலையம் அமைந்திருக்கும். சைதாப்பேட்டையின் இரண்டு அல்லது  மூன்று கிலோமிட்டர் சுற்றளவுக்கு  உள்ள செல்பேசிகள் அந்தத் தள நிலையத்துடன் தொடர்பு கொண்டிருக்கும். இதேபோல் கிண்டியில் ஒரு தள நிலையம் அமைந்திருக்கும். கிண்டியைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள செல்பேசிகளுடன் தொடர்பு கொள்ள இது பயன்படும். இவ்வாறு சென்னை நகரம் முழுவதும் சிறுசிறு செல்களாய்ப் பிரிக்கப் பட்டு ஒவ்வொரு செல்-லிலும் ஒரு தள நிலையம் அமைக்கப்பட்டிருக்கும்.

அடுத்ததாய் வருவது தளநிலையக் கட்டுப்பாட்டு நிலையம்(Base Station Controller ,BSC). தள நிலையங்களின் செயல்பாடுகள் அனைத்தையும் கட்டுப்படுத்துவது இதன் வேலை. ஒரு தள நிலையம் , கட்டுப்பாட்டு நிலையம் இடும் கட்டளைகளைக் கொண்டே இயங்குகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட தள நிலையங்கள் ஒரு கட்டுப்பாட்டு நிலையத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். ஒரு செல்லுலர் வலையமைப்பின் மேலாளர் இந்தக் கட்டுப்பாட்டு நிலையமாகும். செல்பேசிகள் ஏற்படுத்தும் அழைப்புகளை முறைப்படுத்தி அவைகளை ஒழுங்கு படுத்துதல், தள
நிலையத்திற்கும் செல்பேசிக்கும் இடையே ஏற்படுத்தப்பட்டிருக்கும் தொடர்பை நெறிப்படுத்துதல், ஒரு செல்பேசி ஒரு செல்லிலிருந்து மற்றொரு செல்லுக்கு நகர்ந்து செல்கையில் அச்செல்பேசியின் கட்டுப்பாட்டை வேறொரு தள நிலையத்திற்கு மாற்றித் தருதல் போன்ற பல்வேறு வகையான வேலைகள் தளக்கட்டுப்பாட்டு நிலையத்திற்கு உண்டு.

பி எஸ் ஸி முடிந்ததா? அடுத்து வருவது எம் எஸ் ஸி (MSC) , ஏதோ பட்டப்படிப்பு என்று எண்ணி விடாதீர்கள். இது செல்பேசி இணைப்பகம் (Mobile Switching Center) . நம் வீட்டிலுள்ள தொலைபேசிகள் எவ்வாறு இணைப்பகத்தில் இணைக்கப்பட்டுள்ளதோ , அதுபோல ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள செல்பேசிகள் இந்த இணைப்பகத்தில்  இணைக்கப்பட்டிருக்கும். நீங்கள் ஒரு அழைப்பு ஏற்படுத்துகையில் அந்த அழைப்பை  நீங்கள் அழைத்த எண்ணிற்கு எடுத்துச் செல்லும் பணி இந்த இணைப்பகத்திற்கு உண்டு. நீங்கள் அழைத்த எண் ஒரு செல்பேசியா அல்லது வீடுகளிலுள்ள தொலைபேசியா , உள்ளூரா அல்லது வெளியூரா என்றெல்லாம் தீர்மானித்து அந்த அழைப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பொறுப்பு இந்த இணைப்பகத்தைச் சார்ந்தது. முக்கியமான ஒரு வேலை, கட்டணங்களைக் கணக்கிட்டு பில் போடுவது இந்த இணைப்பகங்கள் தான். இந்த இணைப்பகத்துடன் பல்வேறு வகையான தரவுத்தளங்கள் (Data bases) மற்றும் பதிவேடுகள் (Registers)  இணைக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பார்ப்பதற்கு முன் இன்னொரு முக்கியமான இணைப்பகத்தைப் பார்த்து விடலாமா? ஒரு நகரின் எல்லா செல்பேசி இணைப்பகங்களும்  இறுதியாக நுழைவாயில் இணைப்பகம்  (Gateway Mobile Switching Center, GMSC )ஒன்றில் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு செல்பேசி வலையமைப்பின் இறுதி அங்கம் இந்த நுழைவாயில் இணைப்பகமாகும்.  பிற வலையமைப்புகளிலிருந்தும் , பிற தொலைபேசிகளிலிருந்தும் வரும் அழைப்புக்கள் இந்த நுழைவாயில் இணைப்பகத்தையே முதலில் அடைகின்றன. அதுபோல்  செல்பேசியிலிருந்து அழைக்கப்படும் எண்கள் , செல்பேசி இணைப்பகத்தை அடைந்து பின்னர் நுழைவாயில் இணைப்பகம் வழியாகப் பிற இடங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

செல்பேசி இணைப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ள பிற தரவுத்தளங்கள் மற்றும் பதிவேடுகள் என்னென்ன என்று பார்க்கலாமா?

முதன்மை  இருப்பிடப் பதிவேடு (Home Location Register , HLR): ஒரு செல்பேசி வலையமைப்பில்  பதிவு செய்யப்பட்ட அனைத்து செல்பேசி எண்களும் இப்பதிவேட்டில் குறித்து வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு செல்பேசி எண்ணுக்கும்(Mobile Number) ஒரு சர்வதேச செல்பேசிப் பயனாளர் அடையாள எண்(International Mobile Subscriber Identity, IMSI) உண்டு எனச் சென்ற பதிவில் பார்த்தோம் , நினைவிருக்கிறதா? அந்த எண்ணும் இப்பதிவேட்டில் குறித்து வைக்கப்பட்டிருக்கும். உங்கள் ஸிம் அட்டையில் என்னென்ன சேவைகளை நீங்கள் பயன்படுத்த அனுமதி பெற்றிருக்கிறீர்கள் போன்ற விவரங்கள் இந்தப் பதிவேட்டில் தான் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாய் , நீங்கள் அயல்நாடுகளுக்குப் பேசும் வசதி உங்கள் செல்பேசியில் இல்லை என்று வைத்துக் கொள்வோம். ஒரு அயல்நாட்டு எண்ணை நீங்கள் டயல் செய்கிறீர்கள். அந்த அழைப்பிற்கான தொடர்பை ஏற்படுத்தும் முன் உங்களுக்கு அயல்நாடு பேசும் வசதி இருக்கிறதா என்ற விவரம் இந்தப்பதிவேட்டில் சரிபார்க்கப்படும் . உங்கள் எண்ணிற்கு இந்த வசதி இல்லை என்று இப்பதிவேடு இணைப்பகத்திற்குத்
தெரியப்படுத்திவிடும். இணைப்பகமும் உங்களிடம் " இந்த வசதி உங்களிடம் இல்லை " என்று எதிர்ப்பாட்டு பாடிவிடும். இது தவிர,  தற்போது செல்பேசி எந்த இடத்தில் உள்ளது என்ற விவரமும் இப்பதிவேட்டில் இருக்கும். இதற்கும் ஒரு உதாரணம் பார்க்கலாம்: உங்கள் செல்பேசி எண் மதுரையில் பதிவு செய்தது எனலாம். மதுரையிலிருந்து நீங்கள் திருச்சி வந்துவிட்டீர்கள். திருச்சியிலுள்ள வலையமைப்பில் உங்கள் எண் தற்போது பதிவாகியிருக்கும்.  திருச்சியில் பதிவு செய்தவுடன் அந்த விவரம் மதுரையிலுள்ள இந்த முதன்மை இருப்பிட பதிவேட்டுக்குத் தெரியப்படுத்தப்படும்.  உங்கள் செல்பேசி எண்ணை எவரேனும் அழைத்தால் அந்த அழைப்பு முதலில் மதுரைக்குத் தான் அனுப்பபடும். பின்னர் , மதுரையிலுள்ள பதிவேட்டில், அந்த எண்ணின் தற்போதைய இருப்பிடம் எங்கே என்று தெரிந்தவுடன் அங்கிருக்கும் நுழைவாயில் இணைப்பகம் (GMSC) அவ்வழைப்பைத் திருச்சிக்குத் திருப்பி விடும்.

வருகை இருப்பிடப் பதிவேடு  (Visiter Location Register , VLR) : முதன்மை இருப்பிடப் பதிவேட்டினைப் போன்று அமைந்த மற்றொரு பதிவேடு இந்த வருகை இடப்பதிவேடு. முதன்மை இருப்பிடப் பதிவேட்டிலுள்ள தகவல்களைப் போன்றே இந்தப் பதிவேட்டிலும் அதே போலத் தகவல்கள் சேகரித்து வைக்கப்படும். இரண்டு பதிவேட்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?  வருகை இருப்பிடப் பதிவேட்டில், தற்போது எந்த செல்பேசிகள் ஒரு குறிப்பிட்ட நெட்வொர்க்கினுள் இருக்கின்றனவோ அவை அனைத்தின் தகவல்களும்  சேகரித்து
வைக்கப்பட்டிருக்கும். அதாவது  மதுரையிலிருந்து திருச்சி வந்த செல்பேசி பற்றிய தகவல்கள் இந்த வருகைப் பதிவேட்டில்தான் பதியப் பட்டிருக்கும்.  எனவே வருகைப் பதிவேட்டின் மூலமே ஒரு செல்பேசியின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்படுகிறது. இதிலுள்ள தகவல்கள் எல்லாம் நிலையான தகவல்கள் அல்ல, மாறிக்கொண்டே இருக்கும் (Dynamic). செல்பேசிகள் ஓரிடத்திலிருந்து மற்ற இடம் செல்லும் போது  அவற்றின் விவரங்கள் வருகை இருப்பிடப் பதிவேட்டிலிருந்து அழிக்கப்படுகின்றன. புதிதாய் அவ்விடத்திற்கு வரும் செல்பேசியின் தகவல்கள் சேர்க்கப்படுகின்றன. ஆனால் முதன்மை இருப்பிடப் பதிவேட்டிலுள்ள தகவல்கள் நிலையானவை (Static).

உறுதி செய்யும் மையம் (Authentication Center ,AuC): இது ஒரு தரவுத்தளம். ஒரு பயனாளரின் ( அதாவது ஒரு ஸிம் அட்டையின்) ரகசியத் தகவல்கள் இந்தத்தரவுத் தளத்தில் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும். இதே போன்ற தகவல்கள் ஸிம் அட்டையிலுமிருக்கும். இந்த ரகசிய நெறிமுறைகளைப்(Secured Algorithms) பயன்படுத்தியே செல்பேசிக்குத் தொடர்பு வழங்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்யப்படுகிறது. நீங்கள் உங்கள் செல்பேசியை இயக்கி அதை உயிர்ப்பித்த பின்(Power On), அது  தனது வலையமைப்பைத் தேடிக்
கண்டுபிடிக்கிறது . பின்னர் அந்த வலையமைப்பில் தனக்கு ஒரு இடம் கேட்கிறது. அவ்வாறு கேட்கும் போது வலையமைப்பு உடனே இடம் கொடுத்து விடுவதில்லை. அந்த செல்பேசியைப் பற்றிய தகவல்களைச் சரிபார்க்க ஆரம்பிக்கிறது. ஒரு தற்போக்கு எண் (Random Number) செல்பேசிக்கு அனுப்பப் படும் . செல்பேசியிலிருந்து அந்த எண் ஸிம் அட்டைக்கு அனுப்பப் படும். ஸிம் அட்டை அந்த எண்ணையும்   ரகசிய நெறிமுறைகளையும்  பயன்படுத்தி  ஒரு எண்ணைக் கணக்கிடுகிறது. கணக்கிடப்பட்ட அந்த எண் மீண்டும் செல்பேசி வழியாக
வலையமைப்பிற்கு அனுப்பப் படும்.   வலையமைப்பு செல்பேசிக்கு அனுப்பிய அதே தற்போக்கு எண்ணை  உறுதிப்படுத்தும் மையத்திற்கு அனுப்புகிறது. உறுதிப்படுத்தும் மையமும் தன்னிடமுள்ள ரகசியத் தகவல்களைக் கொண்டு ஒரு எண்ணைக் கணக்கிட்டு அவ்வெண்ணை வலையமைப்பிற்குத் தெரிவிக்கும்.  இந்த இரு எண்களும் , அதாவது செல்பேசியிலிருந்து பெறப்பட்ட எண்ணும், உறுதி மையத்திலிருந்து பெறப்பட்ட எண்ணும் ஒரே எண் எனில் , உங்கள் செல்பேசிக்கு வலையமைப்பு இடம் அளித்து விடும். அதன் பிறகு தான் உங்கள் செல்பேசியின் திரையில்  அந்தக் குறிப்பிட்ட நெட்வொர்க்கின் பெயர் தெரியும். இரு எண்களும் வெவ்வேறாக  இருந்தால் உங்களால் நெட்வொர்க்குடன் தொடர்பேற்படுத்த
முடியாது.

இது போல நீங்கள் ஒரு அழைப்பு ஏற்படுத்த முயன்றாலும் இம்மாதிரி ஒரு உறுதிப்படுத்தும் சோதனை நடபெற்ற பின்பே அழைப்பு ஏற்படுத்தப்படும். போலி ஸிம் அட்டைகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கவே இவ்வாறான உறுதி செய்யும் நடவடிக்கைகள் அவசியமாகின்றன.

கைக்கருவி அடையாளப் பதிவேடு (Equipment Identity Register): ஸிம் அட்டையின் நம்பகத் தன்மையை உறுதி செய்ய, உறுதி செய்யும் மையம் பயன்படுவது போல் எல்லா கைக்கருவிகளையும் உறுதி செய்ய இப்பதிவேடு பயன்படுகிறது. இந்தப் பதிவேட்டில் கைக்கருவிகளின் அடையாள எண்கள் (IMEI ,Ineternational Mobile Equipment Identity) சேர்த்து வைக்கப்பட்டிருக்கும். மூன்று வகையான பட்டியல்கள். வெள்ளைப்பட்டியல் (White List)- இப்பட்டியிலுள்ள கைக்கருவி எண்கள் எல்லாம் ஒழுங்கானவை. எந்த விதத் திருட்டுத்தனமும் செய்யாமல் முறையாக வாங்கிய கைக்கருவிகளின் பட்டியல் இது. இரண்டாவது பட்டியல் கரும்பட்டியல் (Black List). இப்பட்டியலில் இருக்கும் கைக்கருவிகள் நெட்வொர்க்கைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்படுபவை. திருட்டுப்போன கைக்கருவிகளை முடக்க வேண்டுமெனில் , இப்பட்டியலில் அக்கைக்கருவிகளின் அடையாள எண்ணைப் பதிவு செய்தல் வேண்டும்.

மூன்றாவது  வருவது சந்தேகப்பட்டியல்(Grey List). இப்பட்டியலுள்ள கைக்கருவிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டாலும் இவற்றின் நடவடிக்கைகள் குறித்துத் தொடர்ந்து கண்காணிக்கப்படும். இவற்றின் நடவடிக்கைகளில் ஏதும் குறை இருப்பின் கரும்பட்டியலுக்கு மாற்றப்பட்டு நெட்வொர்க்கினைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்படும். சில கைக்கருவிகள் தள நிலையத்துடன் தொடர்பு கொள்ளும்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு ரேடியோ அலைவீச்சு (Emission) வெளிப்படலாம். இவ்வாறு வெளியிடும் அலைவீச்சு மற்ற செல்பேசிகள் வெளியிடும் அலைவீச்சைப் பாதிப்பு ஏற்படுத்தும் அபாயம் உண்டு. இத்தகைய செல்பேசிகளைச் சில நாட்கள் கவனிப்பில் வைத்து, பிரச்சினை தொடர்ந்தால் இந்த கைக்கருவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு முடக்கப்படலாம்.

கைக்கருவிகளின் பயன்பாட்டை நெறிப்படுத்தும் வகையில் அமைந்த இந்த தரவுத்தளத்தை  சென்னையில் உள்ள செல்பேசி சேவை வழங்கும் நெட்வொர்க்குகள் பயன்படுத்துவதில்லை என்பது வேதனை தரும் விஷயம். ஒருமுறை எனது நண்பனின்  கைக்கருவி தொலைந்துபோனது.  சம்மந்தப்பட்ட சேவையாளரை அழைத்து அக்கருவியை முடக்கச் சொன்னபோது மறுத்து விட்டார்கள். அத்தகைய தரவுத்தளமே இல்லை என்று அந்தச் சேவையாளரின் தொழில்நுட்பப் பிரிவில் தெரிவித்து விட்டார்கள். ஐரோப்பாவில் நிலை வேறுமாதிரியானது. இங்கு நெட்வொர்க் சேவை வழங்குபவர்கள் ஸிம் அட்டை தருவதோடு குறைந்த விலையிலோ அல்லது மாதத்தவணை முறையில் பணம் கட்டும் முறையிலோ கைக்கருவிகளையும் தருவது வழக்கம். எனவே அவற்றின் பயன்பாட்டை கவனித்துக்கொண்டே இருப்பார்கள். ஏதேனும் தவறாகப் பயன்படுத்த முயற்சிப்பது தெரிந்தால் அக்கைக்கருவி கரும்பட்டியலில் சேர்க்கப்படும். ஐரோப்பா முழுமைக்கும் உள்ள சேவை வழங்குனர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு  கரும்பட்டியல் தரவுத்தளம் அமைத்து , அக்கருவிகள் எந்தவொரு நெட்வொர்க்கில் நுழைந்தாலும் அனுமதி மறுக்கும் வண்ணம் ஒரு திட்டம் தற்போது செயலாக்கப் பட்டு வருகிறது.

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com - Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |