மார்ச் 31 2005
தராசு
வ..வ..வம்பு
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
மஜுலா சிங்கப்புரா
உள்ளங்கையில் உலகம்
முத்தொள்ளாயிரம்
கவிதை
கட்டுரை
சிறுகதை
அறிவிப்பு
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
தொடர்கள்
இலக்கியவாதி  புதிது
- சத்யராஜ்குமார்
ஹர்ஷத் மேத்தா
- சசிகுமார்
- சத்யராஜ்குமார்
கோடிட்ட இடங்கள்
- சித்ரன்
சுய சாசனம்
- பாஸ்டன் பாலாஜி
என்னை எழுதியவர்கள்
- சத்யராஜ்குமார்
களம்
- நாகூர் ரூமி
கங்கை இல்லாத காசி
- பாஸ்டன் பாலாஜி
வார்த்தையல்ல, வாக்கியம்
- என். சொக்கன்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
 
முத்தொள்ளாயிரம் : 'ஊடுதல் காமத்திற்கு இன்பம்'
- என். சொக்கன்
| Printable version |

பாடல் 97

'ஊடுதல் காமத்திற்கு இன்பம்', என்று திருக்குறளின் நிறைவுக் குறள் சொல்கிறது - காதலர்கள் ஒருவர்மீது மற்றவர் செல்லமாய்க் கோபித்துக்கொள்கிற, ஊடல் எனப்படும் இந்தப் பொய்க்கோபம்தான், காதல் பொழுதை சுவாரஸ்யமாக்குகிறது !

ஆனால், சில சமயங்களில், இந்த ஊடலே, காதலுக்குப் பெரிய எதிரியாகவும் ஆகிவிடுகிற வாய்ப்பு உண்டு ?

அது எப்படி ? இந்தப் பாடல் சொல்லும் காட்சியைப் பாருங்கள் -

பாண்டியனும், அவனுடைய காதலியும் தனித்திருக்கிறார்கள் - ஆசையோடு ஒருவரையொருவர் தழுவியிருக்கவேண்டிய இரவுப் பொழுது !

ஆனால், பாண்டியனின் காதலிக்கு, அவன்மீது ஏதோ செல்லக் கோபம், 'என்னோடு பேசாதீர்கள் !', என்று முகத்தைத் திருப்பிக்கொண்டு அமர்ந்துவிடுகிறாள்.

அவளுடைய கோபத்துக்குக் காரணம் புரியாத பாண்டியன், அவளை நெருங்கி, 'ஏன் கோபம் ? எதற்குக் கோபம் ? நான் அப்படி என்ன தவறு செய்துவிட்டேன் ?', என்றெல்லாம் விசாரிக்கிறான், சமாதானங்கள் சொல்கிறான்.

ஆனால், இந்தச் சமாதானங்களால், அவளுடைய கோபம் தணியவில்லை. அவள் இன்னும் ஊடல் குறையாமல்தான் அமர்ந்திருக்கிறாள்.

சிறிது நேரத்துக்குப்பின், பாண்டியனுக்கு இந்த விளையாட்டு சலித்துப்போய்விடுகிறது !, 'சர்தான் போம்மா !', என்பதுபோல் அவனும் முறைத்துக்கொண்டு திரும்பி அமர்ந்துவிடுகிறான்.

அதைப் பார்த்ததும், அவனுடைய காதலி பதறிப்போகிறாள், 'ஐயையோ, நான் ஏதோ உங்கள்மீது கோபம் இருப்பதுபோல் நடித்தேன், விளையாடினேன் ! அதைப்போய் நீங்கள் நிஜம் என்று நம்பிவிட்டீர்களே !', என்கிறாள்.

ஆனால், இதைக் கேட்டபின்னும், பாண்டியனிடம் எந்த அசைவும் இல்லை - அவன் அப்படியேதான் அமர்ந்திருக்கிறான். அவள் அவனுடைய தாடையைப் பிடித்துக் கெ(¡)ஞ்சுகிறாள், 'என் ராசா, கோவப்படாம மறுபடி என்னோட பேசுவியாம் !' - இப்படி அவள் எத்தனை முயன்றும், அவன் அசையவே இல்லை. கோபம் குறையாமலேதான் இருக்கிறான்.

இப்படியாக, இவளுடைய ஊடலைத் தணிக்க அவன் முயற்சி செய்ய, பின்னர், அவனுடைய ஊடலைத் தணிக்க இவள் முயற்சி செய்ய, இப்படி ஒருவருக்கொருவர் முறைத்துக்கொண்டு, சமாதானமாகிக்கொண்ட இந்தப் போராட்டத்திலேயே இரவு கழிந்து, பொழுது விடிந்துவிட்டது !

உற்சாகமாய்க் கழிந்திருக்கவேண்டிய இரவுப் பொழுது, இந்த ஊடல் சமாச்சாரத்தால் பாழாகிவிட்டது, 'தேன் ஊறும் மலர்களைப் பறித்துத் தொடுத்த மாலையை அணிந்த என் காதலன் பாண்டியனின், குளிர்ச்சியான சந்தனம் பூசிய அழகிய மார்பைத் தழுவாமலேயே, இந்த இரவு வீணாகிவிட்டது !', என்று புலம்புகிறாள் இந்தக் காதலி !

யான்ஊடத் தான்உணர்த்த யான்உணரா விட்டதன்பின்,
தான்ஊட யான்உணர்த்தத் தான்உணரான் தேன்ஊறு
கொய்தார் வழுதி குளிர்சாந்து அணிஅகலம்
எய்தாது இராக்கழிந்த வாறு.

(ஊடுதல் - பொய்க் கோபம் கொள்ளுதல்
உணர்த்துதல் - அந்தப் பொய்க்கோபத்தைத் தணிக்க முயற்சி செய்தல்
தார் - மாலை
சாந்து - சந்தனம்
அணி அகலம் - அழகிய மார்பு
எய்தாது - அடையாமல்)பாடல் 98

நமக்கு ஒரு கஷ்டம் வரும்போது, யார் உதவி செய்வார்கள் ?

நண்பர்களா ? அல்லது, உறவினர்களா ? அல்லது, மற்றவர்களா ?

நிஜத்தில் எப்படியோ தெரியாது, இதுபோன்ற சிரம சந்தர்ப்பங்களில், யார் கை கொடுக்காவிட்டாலும், நமது உறவினர்கள்தான் நமக்கு உதவுவார்கள் என்று சில பழைய வாசகங்களும், நம்பிக்கையும் இருக்கிறது - 'தான் ஆடாவிட்டாலும், தொடை ஆடும்', என்று தமிழிலும், 'Blood is thicker than water' என்று ஆங்கிலத்திலும் சொல்வார்கள் !

இந்தப் பாடலில், அந்த வாசகங்களைச் சுட்டிக்காட்டி, அதற்கு நிரூபணமும் சொல்கிறாள் ஒரு பெண் !

'ஒளி வீசும் ஆபரணங்களை அணிந்த என் தோழி, நான் இன்றைக்கு ஒரு உண்மை¨யைக் கண்டுகொண்டேன் !', என்கிறாள் இவள்.

இதைச் சொல்லும்போது அவளுடைய முகத்தில் பரவியுள்ள மகிழ்ச்சியைக் கண்டதும், தோழிக்கும் அந்த உற்சாகம் தொற்றிக்கொள்கிறது, 'அப்படி என்ன பெரிய உண்மையைக் கண்டுகொண்டாய் ?', என்று விசாரிக்கிறாள்.

'கஷ்ட காலத்தில், யார் நமக்கு உதவி செய்யாவிட்டாலும், நமது உறவினர்கள் நமக்கு உதவுவார்கள் என்று சொல்வார்களே ! அது உண்மை என்று நான் புரிந்துகொண்டேன் !'

'அது எப்படி ?'

'சொல்கிறேன் கேள் !', என்று சொல்லிவிட்டு, தன் கையை முன்னே நீட்டுகிறாள் அவள், 'என் காதலன், வைகை ஆற்றின் தலைவன் பாண்டியனைப் பிரிந்த ஏக்கத்தில் நான் தவித்திருக்க, என் உடல் தானாக மெலிந்துபோனது ! அப்போது, இந்தச் சங்கு வளையல்கள் என் கையை விட்டுக் கழன்று கீழே விழப் பார்த்தன ! அப்போதுதான், சாலையில் என் பாண்டியன் வீதி உலா வந்தான். அதை அறிவிப்பதற்காக வலம்புரிச் சங்கு ஒலித்தது ! அந்தச் சப்தம் கேட்டதும், அவன் வருகிறான் என்கிற சேதி அறிந்ததும், என்னுடைய மனமும், உடலும் சரியாகிவிட்டது - வளையலும் கீழே விழாமல் தப்பிவிட்டது !'

அவள் பரவசத்துடன் சொல்லிமுடிக்க, தோழிக்கு பயங்கர குழப்பம், 'இதற்கும், நீ முன்பு சொன்னதற்கும் என்னடீ சம்பந்தம் ?', என்று அதட்டுகிறாள்.

'சம்பந்தம் இருக்கிறது தோழி !', என்று சிரிக்கிறாள் பாண்டியன் காதலி, 'என் கையிலுள்ள நீண்ட வளையல்கள், சங்கினால் செய்யப்பட்டவை ! அப்படியானால், பாண்டியனின் வலம்புரிச் சங்கும், இந்தச் சங்குகளும் ஒருவிதத்தில் உறவினர்கள்தானே ?'

'ஆமாம்', இன்னும் நிச்சயமில்லாத மனதுடன் தலையாட்டுகிறாள் தோழி.

'அதனால்தான் சொல்கிறேன், பாண்டியனைப் பார்க்காமல், நான் மேலும்மேலும் மெலிந்துகொண்டேபோனால், என்னுடைய சங்கு வளையல்கள் கீழே விழுந்து, உடைந்துவிடுமோ என்ற பயத்தில், அந்த வலம்புரிச் சங்கு சரியான நேரத்தில் ஒலித்து, அதன் இனமாகிய வளையல்களைக் காப்பாற்றிவிட்டது !'


செய்யார் எனினும் தமர்செய்வர் என்னும்சொல்
மெய்யாதல் கண்டேன் விளங்கிழாய் கைஆர்
வரிவளை நின்றன வையையார் கோமான்
புரிவளை போந்துஇயம்பக் கேட்டு.

(செய்யார் - (உதவி) செய்யமாட்டார்கள்
தமர் - தமக்கு உரியவர்கள் / உறவினர்கள்
விளங்கிழாய் - ஒளி மிகுந்த ஆபரணங்களை அணிந்த பெண்ணே
ஆர் - நிறைந்துள்ள
வரி வளை - நீண்ட வளையல்கள்
வையையார் - வைகை ஆறு
புரிவளை - வலம்புரிச் சங்கு
போந்து - வந்து
இயம்ப - சொல்ல)

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com - Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |