Tamiloviam
ஏப்ரல் 2 2009
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
தராசு : தனியாக நின்று விஜயகாந்த் சாதிக்கப்போவது என்ன ?
- மீனா [feedback@tamiloviam.com]
  Printable version | URL |

Vijayakanth electionநாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மக்களாலும் அரசியல்வாதிகளாலும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு விஷயம் பா.ம.க மற்றும் தே.மு.தி.க கூட்டணி பற்றி என்ன முடிவு செய்யும் என்பதுதான். பா.ம.க வழக்கம் போல எதிரணிக்குத் தாவியது. அதைப் போலவே விஜயகாந்தும் மக்களுடன் மட்டும் தான் எனது கூட்டணி என்று கூறி தனியாகவே இந்தத் தேர்தலை எதிர்கொள்கிறார். இவர் தனியாக நின்று சாதிக்கப்போவது என்ன??

நேற்று என்.டி டிவி நடத்திய கருத்துக் கணிப்பில் தமிழகத்தில் ஆளும் திமுக அரசுக்கு எதிரான வாக்குகள் அதிமுகவுக்குச் செல்வதற்கு பதிலாக விஜய்காந்த் பக்கம் போய்க் கொண்டுள்ளதாகவும் இதனால் இந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு முழு வெற்றி கிடைக்காது என்றும் தெரியவந்துள்ளது. 

வழக்கமாக திமுகவுக்கு எதிரான வாக்குகள் அப்படியே அதிமுகவுக்கும் அதிமுகவுக்கு எதிரான வாக்குகள் அப்படியே திமுகவுக்கும் செல்லும். ஆனால் தனியாக நிற்பதன் மூலம் அப்படிச் செல்வதை விஜய்காந்த் தடுக்கிறார். இதன்மூலம் மத்திய காங்கிரஸ் அரசு, மாநில திமுக அரசுக்கு எதிரான வாக்குகள் இம்முறை ஜெயலிலதாவை முழுமையாக அடைவதை தேமுதிக தடுக்கிறது. இதனால் அதிமுகவுக்குக் கிடைக்க வேண்டிய பெரும் வெற்றி தடைபடுகிறது.

மொத்தத்தில் திமுக கூட்டணி 20 முதல் 22 இடங்களிலும் அதிமுக கூட்டணி 18 முதல் 20 இடங்களிலும் வெல்லும் என்று கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. விஜய்காந்துக்கு 12 சதவீத வாக்குகள் கிடைக்கும் - ஆனாலும் அவரது கட்சிக்கு ஒரு இடத்தில் கூட வெற்றி கிடைகாது என்றும் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

பல நடிகர்கள் கட்சி ஆரம்பித்து பெயரளவுக்கு நடத்தி வந்தாலும் விஜயகாந்தின் தே.மு.தி.கவிற்கு மக்களிடையே நல்ல செல்வாக்கு இருக்கிறது. அதைச் சரியாக பயன்படுத்த அவர் தவறிவிட்டார் என்றே அரசியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள். தி.மு.க மற்றும் அ.தி.மு.க விற்கு மாற்று சக்தியாகத் தன்னைக் கருதும் விஜயகாந்த் காங்கிரஸ¤டன் கூட்டணி அமைக்க விரும்பியும் காங்கிரஸ் தி.மு.க வுடன் பசை போட்டு ஒட்டிக்கொண்டுள்ளதால் கூட்டணி அமைக்கமுடியாமல் போனது. ஆனாலும் பா.ஜனதாவுடன் அவர் கூட்டணி அமைத்திருந்தால் அவர் மக்கள் முன்பு சொன்னதைப் போல தேசிய கட்சியுடன் மட்டுமே கூட்டு என்பது உறுதியாகியிருக்கும். நாடாளுமன்றத்தில் நிச்சயம் அவரது கட்சிக்கு ஒரு இடமாவது கிடைத்திருக்கும். மேலும் பா.ஜனதா ஒருவேளை மத்தியில் ஆட்சியைப் பிடித்தால் தமிழகத்தில் விஜயகாந்தின் செல்வாக்கும் வெகுவாக உயர்ந்திருக்கும்.

இது மட்டுமல்லாது தமிழகத்தில் வேர்விட்டு ஆலமரமாக வளர்ந்துள்ள தி.மு.க - அ.தி.மு.க வை அசைத்துப் பார்க்க விஜயகாந்தால் மட்டுமே முடியாது. அவர் பா.ஜனதாவுடன் கூட்டு சேர்ந்திருந்தால் நிச்சயம் தமிழகத்தில் ஒரு பெரும் மாற்றத்தை கொண்டுவந்திருக்கலாம்.

பா.ஜனதா மதவாதக் கட்சி என்ற காரணத்தால் விஜயகாந்த் அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க தயக்கம் காட்டியிருந்தால் அது மிகவும் தவறு. மதம் சார்ந்த பயங்கரவாதத்தின் ஆணிவேராகக் கருதப்படும் குஜராத்திலேயே மோடி தலைமையிலான பா.ஜனதா அரசை மீண்டும் ஜெயிக்க வைத்து மக்கள் மதவாதம் நல்ல ஆட்சி என்றுமே தடையல்ல என்பதை நிரூபித்துள்ளார்கள். 

மொத்தத்தில் தனியாக நின்று இந்தத்தேர்தலில் விஜயகாந்த் ஓட்டைப் பிரிப்பதைத் தவிர உருப்படியாக ஒன்றையும் சாதிக்கப்போவதில்லை. கோடீஸ்வரர்களை மட்டுமே தனது கட்சி சார்பில் அவர் வேட்பாளர்களாக நிறுத்துவதால் அவரது கட்சிக்கு பணப்பிரச்சனை இல்லாவிட்டாலும் வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்து நிற்கும் போது மானப்பிரச்சனை ஏற்படப்போவது உறுதி.

பா.ம.க மற்றும் சில கட்சிகளைப் போல தேர்தலுக்கு தேர்தல் ஒருவரோடு கூட்டணி வைத்து குரங்காட்டம் காட்டத் தேவையில்லை. ஆனாலும் அரசியலில் ஓரளவிற்கு நிலையான இடத்தைப் பிடிக்க விஜயகாந்த் எதிர்காலத்தில் ஒரு தேசிய கட்சியுடன் கூட்டணி அமைக்க முன்வரவேண்டும். இல்லாவிட்டால் தமிழக அரசியலில் அவரது கட்சியும் வெறும் சலசலப்பை மட்டும் ஏற்படுத்தும் கட்சியாக மக்களால் அடையாளம் காணப்படும்.

oooOooo
                         
 
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   தராசு பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |