Tamiloviam
ஏப்ரல் 2 2009
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : இந்தியக் கிரிக்கெட்டின் தல!
- ச.ந. கண்ணன்
  Printable version | URL |

ஐபிஎல் போட்டிகளில் ஆடவேண்டும் என்று ஆசைப்படும் சீமைக்காரர்களுக்கு இந்தியாவின் வெற்றிகள் தொக்காகிப் போய்விட்டது. இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல்-லில் கலந்துகொள்வது பற்றிய சர்ச்சை நீடித்து வருகிற வேளையில் பீட்டர்சன் ஓர் அணுகுண்டை வீசியிருக்கிறார். இந்தியாவின் வெற்றிகளுக்கெல்லாம் காரணம் ஐபிஎல் போட்டிகள்தான் என்பது அவருடைய கணிப்பு.

பீட்டர்சன் இன்னும் கொஞ்சம் தெளிவாகப் பேசினால் பாராட்டலாம். ஐபிஎல் அல்ல 20-20 போட்டிகள்தான் இந்தியாவின் ஆட்டத்துக்குப் புதுரத்தம் பாய்ச்சியிருக்கிறது. 20-20 போட்டிகளில்  ஆடியபிறகுதான் ஹர்பஜன் சிங், இர்பான் பதான், ஆர்.பி சிங், ஷேவாக் ஆகியோர் மீண்டும் ஃபார்முக்குத் திரும்பினார்கள். 20-20 உலகக் கோப்பையை வென்றபிறகுதான் இந்திய கிரிக்கெட் அணி வரிசையாக பெரிய பெரிய வெற்றிகளையெல்லாம் பெற்றது. 20-20 உலகக்கோப்பையை வென்ற சில மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடந்த ஒருநாள் போட்டியையும் வென்றது காலத்துக்கும் பேசப்படும் ஒரு வெற்றி. ஐபிஎல் என்பது இப்போது போதையாகிவிட்டது. அதுதான்  வெவ்வேறு வார்த்தைகளில் உணரப்படுகிறது.

ooOoo

பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களாக ஒருநிமிடம் உங்களை நினைத்துப் பாருங்கள். விரக்தி, கையறுநிலை, பச்சாதாபம் போன்ற வார்த்தைகளின் அர்த்தத்தை முழுமையாக உணரமுடியும்.

அங்கு இப்போது சுத்தமாக கிரிக்கெட் கிடையாது. இருந்த நல்ல வீரர்களையும் ஐசிஎல் கடத்திக் கொண்டுபோய்விட்டது. ஒருவருடமாக சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த கேப்டனையும் நீக்கம் செய்தாகிவிட்டது. எல்லாம் ஒருவழியாக சரியாகி இலங்கை வீரர்கள் தயவால் நாட்டில் கிரிக்கெட் நடந்தால் அவர்களையும் சுட்டுக்கொள்ள தீவிரவாதிகள் பேருந்துக்குக் குறி வைக்கிறார்கள்.  என்னதான் செய்யமுடியும்?

2011 உலகக்கோப்பை இனி பாகிஸ்தானுக்குக் கிடையாது. குறைந்தது அடுத்த மூன்று வருடங்களுக்கு அங்கு கால் வைக்க எந்த நாட்டு வீரர்களுக்கும் துணிவு இருக்காது. எப்போது கூப்பிட்டாலும் கிளம்பத் தயாராக இருந்த இலங்கை வீரர்களும் பாகிஸ்தான் பக்கம் தலைவைத்துப் படுக்க மாட்டோம் என்று சத்தியம் செய்கிறார்கள்.

இம்ரான் கான் - மியாண்டட் - வாசிம் அக்ரம் - வக்கார் யூனுஸ் என்றொரு பொற்காலம் இருந்ததே, அது திரும்பக் கிடைக்குமா?

ooOoo

சத்தமே இல்லாமல் ஒரு சாதனை செய்திருக்கிறது தமிழ்நாடு கிரிக்கெட் அணி. பொதுவாக தேசிய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பற்றிய செய்திகளிலும் சாதனைகளிலும் ஆர்வம் செலுத்தும் ரசிகர்கள் உள்ளூர் போட்டிகள் பற்றி பெரும்பாலும் அசட்டையாகவே இருந்துவிடுவார்கள். சென்ற வருடம் ரஞ்சிக் கோப்பையை வென்ற அணியின் பெயர்கூட பல சென்னை கிரிக்கெட் ரசிகர்களுக்குத் தெரியாது (ஆனால் சென்னை ரசிகர்களுக்குத்தான் நாலெட்ஜபிள் கிரெளவுட் என்று பெயர்). ரஞ்சி கோப்பையில் அரையிறுதி வரை வந்த தமிழக அணி அதன் ஒருநாள் போட்டியில் கோப்பையை வென்றிருக்கிறது. இன்று கிரிக்கெட் வட்டாரத்தில் தமிழ்நாடுதான் தல.

ஸ்ரீகாந்த் இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் ஆனபிறகு தமிழக வீரர்களுக்கு புதுநம்பிக்கை துளிர்த்திருக்கிறது. பேர் சொல்லும் அளவுக்கு ஆடினால் போதும், மற்றதையெல்லாம் ஸ்ரீகாந்த் பார்த்துக்கொள்வார் என்கிற நம்பிக்கையை விதைத்திருக்கிறார் ஸ்ரீகாந்த். அவர் தேர்வுக்குழு தலைவர் ஆனபிறகு பத்ரிநாத், விஜய், பாலாஜி, தினேஷ் கார்த்திக் ஆகிய நான்கு தமிழக வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்திருக்கிறது. அடுத்ததாக முகுந்தும் அஷ்வினும் வரிசையில். ஸ்ரீகாந்த் இடத்தில் வேறொரு மும்பைவாலா தேர்வுக்குழு தலைவராக இருந்திருந்தால் நிச்சயம் விஜய்க்குப் பதிலாக வாசிம் ஜாபரோ ஆகாஷ் சோப்ராவோ தேர்வு செய்யப்பட்டிருப்பார்கள். இட ஒதுக்கீடு இப்போதாவது முறையாகக் கிடைக்கிறதே என்று பெருமூச்சு விட்டுக்கொள்ளலாம்.

oooOooo
                         
 
ச.ந. கண்ணன் அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |