ஏப்ரல் 06 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கொஞ்சம் கதைக்கலாம் வாங்க : பெண்களுக்கான பத்திரிக்கைகள் தேவையா ?
- ராமசந்திரன் உஷா
| Printable version | URL |

எனக்கு நினைவிருந்தவரையில் பெண்களுக்கு என்று தமிழில் ஆரம்பிக்கப்பட்டு சக்கைப் போடுப் போட்ட முதல் பத்திரிக்கை "மங்கை". (இப்பொழுது வருகிறதா என்ன?) என் அம்மா அதை விரும்பி வாங்குவார். போதாதற்கு அம்மா எழுதி அனுப்பிய மூன்று பக்க சிறுகதை சுருக்கி ஒரு பக்க கதையாய் வந்தது. அதுவே முதலும் கடைசியுமான படைப்பு. இல்லை இல்லை அதற்கு முன்பு அம்புலிமாமாவில் அரைப்பக்க கதை. அப்பொழுது இணையமில்லை, இப்பொழுது இருக்கிறது. பிளாக் ஆரம்பித்து எழுதி தள்ளலாம் என்றால் அம்மாவுக்கு எழுத்தார்வம் எல்லாம் நீர்த்துப் போன வயது ஆகிவிட்டது.

படிக்க தெரிந்த நாள் முதலாய் வெள்ளை காகிதத்தில் எறும்பு ஊறினாலும் அதை எடுத்துப் படித்த எனக்கு மங்கையும், ஆனந்தவிகடனும் ஒன்றாகவே தோன்றியது. ஆனால் வீட்டுக்கு வரும் என்னுடைய வயதை ஒத்த உறவு பையன்கள் மங்கை மற்றும் அம்மா வாங்கும் கலைமகள் பத்திரிக்கைளை நான் படிப்பதைப் பார்த்து கிண்டல் அடிப்பார்கள்.

பிறகு வாழ்க்கை ஓட்டத்தில் இந்தியாவில் பல இடங்களில் குடியேறியப் பொழுது  அச்சில் தமிழ் எழுத்தை காண்பதே அபூர்வம் என்ற நிலையில் எப்பொழுதாவது கிடைக்கும் பத்திரிக்கைகளில் மங்கையர்மலர் கட்டாயம் இருக்கும். அப்பொழுதும் தமிழ் படிக்க கிடைத்ததே என்ற சந்தோஷத்தில் அச்சிட்டவர் முதல் கடைசி பக்கங்களில் வரும் திருமணமலர் வரை மேய்வேன்.

பிறகு வெளிநாட்டில் குடிபெயர்ந்து, இணையத்தில் தமிழும் படிக்க ஆரம்பித்ததும், தமிழ் பத்திரிக்கைகளைத் தேடி அலைவது குறைந்தது. மங்கையர் மலரின் அதீத விளம்பரங்களும் மற்றும் என் ரசனைக்கு ஒத்துவராத அம்சங்களும் அதிகம் இருந்ததால், வலுவில் கிடைத்தாலும் ஒரு புரட்டு புரட்டிவிட்டு திரும்ப தந்து விடுவேன்.

Mangayar Malarஅவள் விகடன் ஓரளவு பரவாயில்லை என்று தோன்றும். ஞாநீ எழுதிய போராட்ட பெண்களின் சரித்திரமும், மகளிர் சுயநிதி குழுக்கள் போன்ற பெண்கள் முன்னேற்றம் பற்றிய விஷயங்கள் நன்றாகவே இருக்கும். பெண்ணே நீ என்ற பத்திரிக்கை டாக்டர் ராமதாஸ் அவர்களின் மகளால் நடத்தப்படுவது, இணையத்தில் சில முறை கண்ணில் விழும். குமுத குழுவின் சிநேகிதி பார்த்ததில்லை.  ஆனால் எழுதுகிறேன் என்றதும், பலரும் சொன்னது "மங்கையர் மலருக்கு எழுதுவதுதானே என்று?" இந்த ஆணாதிக்க மனோபாவ கேள்வியின் அர்த்தம்
தெளிவாய் விளங்கும். இன்னும் பெண்கள் எழுத்து என்பது சமையலறையைத் தாண்டி வரவில்லை என்பதுதானே!

கொஞ்சம் இலக்கியவாதிகள் நட்பு, இலக்கியம் என்றால் என்ன போன்ற அறிதலில் (!) இந்த பத்திரிக்கைகள் குறித்து ஓரளவு அலட்சியம் ஏற்பட்டது என்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் இந்த எண்ணமும் முழுக்க முழுக்க தவறு என்பதை உணர்த்த ஒரு நிகழ்ச்சி,.

ஒருமுறை என் உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்றிருந்தப் பொழுது, பேசிவிட்டுக் கிளம்பும்பொழுது, அந்த அம்மாள் கொஞ்சம் தயக்கத்துடன் ஒரு பேப்பர் கட்டிங்கை காட்டினார். அதில் நடிகை ஜெயபிரதாவிடம் பெரிய ஷீல்டு வாங்குவதைப் போல ஒரு படம் இருந்தது. என்னவென்று விசாரித்தால், பலகைத் தொழில் திறமையைக்கு அந்த பரிசு என்றார். ஏதோ பெண்களுக்கான சங்கமோ, பத்திரிக்கையோ ஏற்படுத்திய விழாவில் அவருக்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் அதை  யாரும் பெரியதாய் எடுத்துக் கொள்ளவில்லை என்பதை அவர் தயக்கமே காட்டியது. அவரை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் பாராட்டி பேசியதும், பெரிய பைலைக் கொண்டு வந்தார். அதில் அவர் பல பெண்கள் பத்திரிக்கைகளில் எழுதிய குறிப்புகள், கோலங்கள், கைத்தொழில்கள், சமையல்குறிப்புகள். அவைகளைப் பாராட்டி பலர் எழுதிய வாசகர் கடித வரிகள் என்று ஏராளமாய் இருந்தது. அவர் அதிகம் படித்தவர் இல்லை. ஆனால் தன் திறமை என்பதை நீரூபிக்கவும், ஒரு அங்கீகாரத்தை தேடும் ஏக்கமும் அவர் செயலில்
வெளிப்பட்டது. இது இலக்கியம், ஓவியம், நடனம் மற்றும் அனைத்து திறமையை நீருபிக்க மற்றும் அங்கிகாரத்தை நாடும் அனைவரின் எண்ணம்தானே? இதில் அவருடையது தாழ்ந்தது, மற்றவை சிறந்தது என்ற எண்ணம் தவறு என்பதை அன்று உணர்ந்தேன்.

பெண்கள் பத்திரிக்கை என்றால் கேவலம் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. எந்த விஷயம் யாருக்கு தேவையோ, அது அவர்களுக்கு! அவரவர் அறிதலும் புரிதலும் வைத்து ரசனையும் படைப்பும் இருக்கின்றன. அதற்கேற்ற வாசகர் வட்டமும் இருக்கிறது. இதில் உயர்ந்தது, தாழ்ந்தது என்ற எண்ணத்தை உருவாக்கிக்கொள்வது நாம்தானே!

எனக்கு தெரிந்த இரண்டு மங்கையர்மலர் வகையறா குறிப்புக்கள்.

1) குக்கர் போன்றவைகளில் இருக்கும் கைப்பிடியில் இருக்கும் ஸ்க்ரூக்கள் அடிக்கடி லூஸ் ஆகிவிடும். super glue போன்ற பசை ஒரு சொட்டு ஸ்க்ரூவில் இட்டுவிட்டு முடுக்கினால், நன்கு பிடித்துக் கொள்ளும்.

2) காலை அவசரத்தில் உள்பாவாடை, சல்வார்கம்மீசின் நாடா ஒரு பக்கம் உள்ளே போய் பேஜார் செய்யும். சுண்டு விரலை உள்ளே நுழைத்து எடுக்க முயற்சித்து, கடைசியில் முழுவதும் உருவி, பின்னை தேடி நாடாவில் இணைத்து மீண்டும் நுழைப்போம். இந்த பிரச்சனையில் இருந்து மீள ஒரு வழி. நாடாவை  உள்ளே நுழைத்தப் பிறகு, நடுவில் பாவாடை/ சல்வாரில் ஒற்றை தையல் தைத்துவிட்டால், (மிக சரியாய் பின் பக்கத்தின் மேல்) உருவிக் கொண்டு வெளியே வராது.

|
oooOooo
ராமசந்திரன் உஷா அவர்களின் இதர படைப்புகள்.   கொஞ்சம் கதைக்கலாம் வாங்க பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |