ஏப்ரல் 06 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : மார்க்ஸும் காந்தியும்
- செல்வன்
| Printable version | URL |


marxஇருக்கும் உலகை வைத்து இந்த இரு ஞானிகளும் திருப்தி அடையவில்லை.புதியதொரு பொன்னுலகம் படைக்க விரும்பினார்கள். மார்க்ஸ் காட்டிய பொன்னுலகம் இறைநம்பிக்கையை அழித்த, வர்க்க பேதமற்ற உலகம். காந்தி காட்டிய பொன்னுலகம் இறைநம்பிக்கை கொண்ட அவரவர் மதத்தின் நல்ல கொள்கைகளை அடிப்படையாக கொண்ட ராமராஜ்ஜியம்.

பொருளாதார கொள்கைகளில் இருவருக்கும் பெரிதாக வித்யாசமில்லை. பணக்காரனை இருவரும் வேறு வேறு காரணங்களுக்காக விரும்பவில்லை. "பணக்காரன் சுரண்டுகிறான்" என்பது மார்க்ஸின் வாதம். பணக்காரனை திருத்தி ஏழைகளுக்க்காக அவனை செலவு செய்ய வைக்கலாம் என்பது காந்தியின் எண்ணம். பணக்காரன் மேன்மேலும் பணக்காரன் ஆவதை இருவரும் விரும்பவில்லை.

பெரும் ஆலைகளை விட குடிசைத்தொழிலை மேம்படுத்தலாம் என்பது காந்திய சோஷலிசத்தின் வாதம். கைராட்டையை அவர் விரும்பி தேர்ந்தெடுத்தது இந்த காரணத்தால் தான். பணக்காரன் தானாக விரும்பி சோஷலிசத்தை ஏற்க வேண்டும் என்பது காந்தியின் எண்ணமாக இருந்தது. அவனாக திருந்தி ஏழைக்கு உதவ வேண்டும் என அவர் எதிர்பார்த்தார். மார்க்ஸுக்கு இந்த மென்மையான வழிமுறையில் எல்லாம் நம்பிக்கை இல்லை."பணக்காரன் தரமாட்டான். அவனிடம் எதையும் கேட்காதே. நீயாக எடுத்துக்கொள்" என்றார்.

"எதிரி அடித்தால் வாங்கிக்கொள், நீ அடிவாங்குவதை பார்த்து அவன் திருந்துவான்" என்றார் காந்தி. எதிரியின் மனதில் இருக்கும் அவன் மதநம்பிக்கை அவனை திருத்தும் என்பது காந்தியின் எண்ணம். அடுத்தவனை அடிமைப்படுத்தும் எவனும் தன் மதத்துக்கு விரோதமாக தானே செயல்படுகிறான் ?அதை அவனுக்கு எடுத்துச்சொல்ல நம்மை நாமே மெழுகுவர்த்தியாகிக் கொள்வோம் என்பது காந்தியின் எண்ணம்.

காந்தியை அடித்த பிரிடிஷார் அவர் திருப்பி அடிக்காததால் அதிசயமடைந்தனர். அடிக்க அடிக்க இன்னும் அடி என அவர் சொன்னது அவர்கள் குற்ற உணர்ச்சியை அதிகப்படுத்தியது. இதே போல் சொன்ன இன்னொரு நபர் ஏசு என்பது குறிபிடத்தக்கது. ஒருவன் ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை காட்டு என ஏசு சொன்னார். அதை காந்தி 2000 வருடம் கழித்து செய்து காட்டியதும் புராட்டஸ்டண்டு பிரிட்டன் மக்களுக்கு என்ன செய்வது என தெரியவில்லை.

ஏசுவை அடித்த ரோமானியர்களின் இடத்தில் தாங்கள் இருப்பது போல் பிரிடிஷார் உணர்ந்தனர். கிறிஸ்தவத்தின் அடிப்படையே guilt எனப்படும் குற்ற உணர்ச்சிதான். "அயலானை நேசி" என்ற கிறிஸ்தவ கொள்கையை மிக அழகாக அவர்களுக்கு பாடமாக எடுத்து சொல்லி வெற்றி அடைந்தார் காந்தி.

மார்க்ஸுக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. வலிமையே வெல்லும் என்பதை அவர் அழகாக உணர்ந்திருந்தார். வலியோனை திருத்த முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு சுத்தமாக இல்லை. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வலியோன் செலுத்தும் ஆதிக்கம் ஒழிய மெலியோன் வலியோனாக மாறூவதே சரி என அவர் நினைத்தார். "உரிமை என்பது பிச்சை அல்ல. கேட்டுப்பெறாதே. எடுத்துக்கொள்" என்றார் அவர்.

Gandhiஇந்த இருவரும் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் அளவிடற்கரியது. இவர்கள் இருவரின் சீடர்களும் மிகப்பெரும் நாடுகளின் தலைவர்களானார்கள். மிகப்பெரும் இரு கட்சிகள் இவர்களின் கொள்கைகளை தாங்கி உருவெடுத்தன. இவர்களுக்கு பின் வந்தவர்களின் குளருபடியால் இந்த இரு கட்சிகளும் இன்று தமது குருநாதர்களின் கொள்கைகளுக்கு விரோதமாக சென்று மக்களால் புறக்கணிக்கப்பட்டு நிற்கின்றன.

சொல்லி வைத்தாற்போல் இந்த இருவர் சொன்ன பொருளாதார கொள்கைகளும் சமூகத்தால் நிராகரிக்கப்பட்டன. இருவர் சொன்ன போராட்ட வழிமுறைகளும் தோல்வியடைந்தன. அடையாள உண்ணாவிரதம், சிறைவாசம் போன்றவை இன்று ஜோக்காக மாறிவிட்டன. பஸ் எரிப்பு, கடைமறியல் என காந்தியின் சத்தியாக்கிரகம் வன்முறையாக மாறிவிட்டது. மார்க்ஸ் சொன்னபடி துப்பாக்கி தூக்கியவர்கள் அதை கீழே போடும் வழி தெரியாமல் திகைக்கிறார்கள்.

இந்த இருவரின் உண்மையான சீடகோடிகள் இன்று அருகிவிட்டார்கள். பொன்னுலகம் வரும், உலகெங்கும் தமது பாதைக்கு திரும்பும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இன்னும் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியை திருத்த முடியும் என்ற நம்பிக்கையை இன்னும் சில தியாகிகள் வைத்திருக்கின்றனர். ரஷிய கம்யூனிஸ்ட் கட்சியை திருத்தி மார்க்ஸின் பொன்னுலகை அடைய முடியும் என்ற நம்பிக்கையை இன்னும் பல காம்ரேடுகள் வைத்திருக்கின்றனர்.

எனக்கு தோன்றுவது என்னவென்றால் குறைபாடுகள் உள்ள உலகை சகித்துக்கொள்ள நாம் பழகிக்கொள்ள வேண்டும் என்பதுதான். ஏற்றத்தாழ்வுகள்,வர்க்க பேதங்கள், போலித்தனங்கள் அனைத்தும் நிரம்பிய உலகில் நாம் வாழ்கிறோம். விஞ்ஞான, பொருளாதார முன்னேற்றத்தால் பசியை, வறுமையை ஒழிக்க முடியும் என நான் நம்புகிறேன். அதை செய்ய நாம் முன்னேற வேண்டும்.கல்வி பயில வேண்டும்.

அப்துல்கலாம் சொன்ன வழி தான் எனக்கு சரியென படுகிறது. காந்தியும் மார்க்ஸும் சாதிக்க முடியாததை அப்துல்கலாமின் வழி சாதிக்குமோ இல்லையோ இருக்கும் உலகை மேம்படுத்த அது உதவும் என நான் நம்புகிறேன். பொன்னுலகமும், ராமராஜ்ஜியமும் எப்போதுமே சாத்தியமில்லை என்ற முடிவுக்கும் நான் வந்துவிட்டேன். அவை இரு மனிதர்களின் கனவுலகங்கள். உடோபியாக்கள்.

| | |
oooOooo
செல்வன் அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |