ஏப்ரல் 06 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திரைவிமர்சனம் : கோவை பிரதர்ஸ்
- மீனா [feedback@tamiloviam.com]
| Printable version | URL |

சத்யராஜை வைத்து பல லொள்ளு படங்களை இயக்கிய ஷக்தி சிதம்பரம் - சத்யராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள மற்றொரு படம் கோவை பிரதர்ஸ். பொறுப்பான பதவியில் உள்ள அரசு ஊழியர்கள் முறைதவறி நடப்பதால் மக்களுக்கு உண்டாகும் பிரச்சனைகளைப் பற்றி கூறுவது இந்தப் படத்தின் ஒரு வரிக்கதை.

Sibi,Umaகோவையிலிருந்து வரும் சத்யராஜ் மற்றும் சிபிராஜுக்குள் என்ன உறவு என்று தெரியாத நிலை. பிரபல டி.வி சேனலில் வேலை பார்க்கும் நமிதாவின் நட்பை பெறுவதன் மூலமாக அந்த டி.வி சேனலுக்குள் நுழைய நினைக்கிறார்கள் சத்யராஜும் சிபியும். நமிதாவைக் காதலிக்க சத்யராஜ் செய்யும் முயற்சிகள் பலிக்காமல் போக, சிபியின் முயற்சி பலிக்கிறது. ஒருவழியாக நமிதாவின் உதவியுடன் டி.வி சேனலில் வேலைக்கு சேரும் சத்யராஜும் சிபியும் ஒரு மாவட்ட கலைக்டரைக் கொன்ற வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற கைதியை தங்களது திறமையால் குற்றமற்றவர் என்று நிரூபித்து விடுதலை செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் அந்தக் கலெக்டரைக் கொன்றவர்கள் சத்யராஜும் சிபியும் தான் என்பது நமிதாவிற்கு தெரிய வருகிறது. நமிதா போலீஸிடம்  உண்மையை தான் சொல்லப்போவதாக கூற தங்களது பிளாஷ்பேக்கை ஆரம்பிக்கிறார்கள் சத்யராஜும் சிபியும்.

தனது கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை தன்னால் முடிந்த அளவிற்கு காப்பாற்றிய தீர மங்கை உமா. இவரது தாய்மாமன் சத்யராஜ் - காதலர் சிபி. வீர சாகசம் புரிந்ததற்காக உமாவிற்கு மாநில அரசு லட்சரூபாய் பரிசு வழங்குகிறது. மழை வெள்ளத்தில் மக்களைக் காப்பாற்றும் போது உமாவின் தலையில் பட்ட அடியால் அவரது உடல்நிலை மோசமாகிறது. உமாவின் வைத்தியத்திற்காக மாநில அரசு வழங்கிய பணத்தை பெற முயற்சி செய்யும் சத்யராஜ் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ளும் மாவட்ட கலெக்டரைக் கண்டிக்க, அவர் வேண்டுமென்றே பணத்தைக் கொடுக்காமல் இழுத்தடிக்கிறார். மேலும் அரசு மருத்துவமனையில் மருத்துவர் அருண்பாண்டியன் உயிருடன் இருக்கும் உமாவை இறந்துவிட்டதாக சரியாக பரிசோதிக்காமல் சர்டிபிகேட் வழங்கிவிடுகிறார். பிறகு உமா உயிருடன் இருக்கும் விஷயம் தெரிந்தவுடன் எங்கே தனக்கு கெட்ட பெயர் ஏற்படுமோ என்று அஞ்சி உமாவைக் கொன்று விடுகிறார்.

இந்த இரண்டு அரசு ஊழியர்களால் உமாவை அநியாயமாக சாகக் கொடுத்த சத்யராஜும் சிபியும் முதலில் கலெக்டரைக் கொல்கிறார்கள். உண்மையை உணரும் நமிதா அவர்களுக்கு எல்லா விதங்களில் தான் உதவியாக இருப்பதாக உறுதியளிக்கிறார். பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்ட டாக்டரை சத்யராஜும் சிபியும் எப்படி பழிவாங்குகிறார்கள் என்பதே மீதிக்கதை

வழக்கமாக தனது எல்லாப் படங்களிலும் லொள்ளு பண்ணுவதைத் தவிர உருப்படியாக வேறு எதுவுமே செய்யாத சத்யராஜ் இந்தப் படத்திலும் அதையே செய்திருக்கிறார். கஜினி சூர்யா, நியூ சூர்யா மற்றும் மன்மதன் சிம்பு போன்ற கெட்டப்புகளில் வரும் சத்யராஜ் பிளாஷ்பேக் காட்சிகளில் மட்டும் தன்னுடைய சொந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் சத்யராஜின் இந்த ஸ்டீரியோ டைப் லொள்ளை சகித்துக்கொள்ளவேண்டுமோ தெரியவில்லை..

சத்யராஜின் புண்ணியத்தில் சிபி கொஞ்சம் சண்டை போடுகிறார். அப்பாவின் லொள்ளு மகனுக்கும் வருகிறது. நமிதாவுடன் டூயட் பாடுகிறார். பிளாஷ்பேக் காட்சிகளில் கொஞ்சம் நடிக்க முயற்சி செய்திருக்கிறார். சிபியைப் பற்றிச் சொல்ல அவ்வளவே.. வழக்கமாக சத்யராஜும் சிபியும் பல படங்களில் அப்பா-பிள்ளையாகவே வருவது மக்களுக்கு போரடித்துவிட்டது என்பதை உணர்ந்து கொண்ட இயக்குனர் இந்தப் படத்தில் அவர்களை முற்றிலும் புதிய உறவில் காட்டியுள்ளது ஓக்கே.

டி.வி காம்பயராக வரும் நமிதா கவர்சிப் புயலாக காட்சியளிக்கிறார். சிபியுடன் டூயட் பாடுவதைத் தவிர நடிப்பில் பெரிதாக ஒன்றும் சாதிக்கவில்லை. சத்யராஜை ஒருதலையாக காதலிக்கும் கோவை சரளாவின் நடிப்பு சலிப்பை ஏற்படுத்துகிறது. வடிவேலுவின் காமெடி ஓஹோ என்று இல்லாவிட்டாலும் ஓக்கே ரகம். சத்யராஜ் மற்றும் சிபியுடன் கிரிக்கெட் விளையாட்டும் காட்சியில் வைகைப்புயல் வெடிச்சிரிப்பை வரவழைக்கிறார்.

கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் சிக்கென்று தங்கும் பாத்திரம் உமாவிற்கு. அருமையான ஒரு நடிகையை ஏன் தமிழ் சினிமா இழந்து கொண்டிருக்கிறது என்பது புரியவில்லை. வில்லனாக அருண்பாண்டியன்.

இமானின் இசையில் பாடல்கள் ஓகே ரகம்தான். வழக்கமாக சத்யராஜுடன் சேர்ந்து தான் செய்யும் தனது எல்லாப் படங்களிலும் லொள்ளு பண்ணுவதைத் தவிர உருப்படியாக வேறு எதுவுமே செய்யாத ஷக்தி சிதம்பரம் இந்தப் படத்தில் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ளும் அரசு அதிகாரிகளால் மக்கள் படும் பாட்டை விளக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனாலும் படத்தின் இந்த மெசேஜை சத்யராஜின் வழக்கமான லொள்ளு காணாமல் போகடித்துவிடுகிறது.

| | | | |
oooOooo
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   திரைவிமர்சனம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |