Tamiloviam
ஏப்ரல் 10 2008
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
பேட்டி : நடிகர் கார்த்திக் பேட்டி
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
  Printable version | URL |

karthickநவரச நாயகன் என்ற பட்டத்தோடு மாடர்ன் அரசியல்வாதி என்ற பட்டத்திற்கும் உரிமையுடையவராகி இருக்கிறார் நடிகர் கார்த்திக். மறைந்த நடிகர் முத்துராமனின் மகனான இவருக்கு தென் மாவட்டங்களில், அவர் சார்ந்த ஜாதி ஜனங்களின் மத்தியில்  அவ்வளவு செல்வாக்கு. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஒரு கிராமத்தில் தேவர் சிலை உடைக்கப்பட்டது. இதன் காரணமாக பதட்டம் ஏற்பட்டு உண்ணாவிரதப் போராட்டம் ராஜபாளையாத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு தலைமை தாங்கி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடக்கிவைத்தார் பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழகத் தலைவர் கார்த்திக். பெரும் கெடுபிடியின் மத்தியில் பேட்டிக்கு நேரம் கிடையாது என அவரது உதவியாளர்கள் சொல்லி விட்டனர். கட்சியிரை பிடித்து பேச்சுவாக்கில் அவரிடம் பேசியதிலிருந்து.........

தமிழோவியம் :- ராஜபாளையம் தங்களால் மறக்க முடியாத ஊர் என்று பல நேர்காணல்களில் சொல்லி இருக்கிறீர்கள். இப்பொழுது அதே ஊரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்வது பற்றி?

பதில் :- மகிழ்ச்சியாக இருந்தாலும் அதில் வருத்தமும் இருக்கிறது. எங்களது மரியாதைக்குரிய தலைவரின் சிலையை சேதப்படுத்தியவர்களினை கண்டித்தும், அவர்களை கைது செய்யக் கோரியும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. ராஜபாளையம் உண்மையில் எனது அரசியல் வாழ்க்கையில் மறக்க முடியாத ஊர். எங்களது சரணாலயம் அமைப்பை இங்கு தான் தொடக்கினோம். அப்பொழுது என்னை ஊக்கப்படுத்த கூடிய மக்கள் கூட்டம் இன்னும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. அப்படிப்பட்ட இந்த மண்ணில் எந்த குழு மோதல்களும் நடக்கக் கூடாது, நடந்து விடக் கூடாது என்பது தான் எங்களது ஆசை. வன்முறையில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மோசமானவர்கள் தான்.

தமிழோவியம் :- சரணாலயம் அமைப்பு இருக்கிறதா? அது இருப்பது போல் தெரியவில்லையே?

பதில் :- கண்டிப்பாக இருக்கிறது. அதன் மூலம் மக்களுக்கு நல்ல நலத்திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு தான் இருக்கிறோம். இதில் சந்தேகம் வேண்டாம்.

தமிழோவியம் :-  சிலை உடைக்கப்பட்டதும், பஸ் மறியல் நடத்தப்பட்ட போது பிளஸ் டூ தேர்வு எழுத செல்ல முடியாமல் மாணவ, மாணவிகளை அவதிக்கு உட்படுத்தியதாக தங்கள் கட்சியினர் மீது குற்றம் சொல்லப்படுகிறதே?

பதில் :- தேர்வு எழுத மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்டுக் கொண்டு இருப்பதாக எனக்கு தகவல் வந்தவுடன் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யச் சொல்லி, மறியல் போராட்டத்தை கைவிடச் சொல்லிவிட்டேன். அதுவும் உடனே நடந்தது. எங்களால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் வராது. வந்து விடக்கூடாது என நினைப்பவன் நான். மறியலால் ஒரு மாணவ, மாணவிகள் கூட பாதிக்கப்படவில்லை என்பதை உறுதியாக நான் கூறுவேன்.

தமிழோவியம் :- பொதுவாக தங்கள் கலந்துகொள்ளும் கூட்டங்களில் தங்களை பேச விடாமல் கலாட்டா செய்வது நடந்துள்ளது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாங்கள் பேசியது பற்றி?

பதில் :- ஆரம்பத்தில் என் மீது இருக்கும் அன்பு காரணமாக அவைகள் நடந்திருக்கலாம். மதுரையில், திருநெல்வேலியில் நடைபெற்ற விழாக்களில் எல்லாம் நான் பேசி இருக்கிறேன். ஒன்றும் பிரச்சினை வரவில்லை. போகப் போக எல்லாம் சரியாகிவிடும் என நினைத்தேன். இப்பொழுது அது சரியாக நடக்கிறது என்கிறேன்.

தமிழோவியம் :-  2011ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் தான் வெற்றி பெறுவோம், முதலமைச்சர் ஆவோம் என நடிகர் விஜயகாந்த், சரத்குமார் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். தாங்கள் 2011ம் சட்டமன்றத் தேர்தல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில் :- நாங்கள் தான் முதல்வர் என்று சொல்வதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. யாரும் எப்படி சொல்லலாம் என கேள்வி கேட்க முடியாது. என்னைப் பொறுத்த வரை அத்தேர்தலில் எங்களது பார்வர்டு பிளாக் முக்கியமான கட்சியாக வளர்ந்திருக்கும். அத்தேர்தலில் நல்ல வெற்றியை பெற வேண்டும். கட்சியை மக்களிடையே வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறோம். 

தமிழோவியம் :- மேற்கு வங்கத்தில் தங்களது கட்சி ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிகளோடு இணைந்து செயல்படுகிறது. அது போன்ற நிலை தமிழகத்தில் ஏன் நடைபெறுவதில்லை?

பதில் :- இதற்கு நான் என்ன செய்ய முடியும்? ஆரம்பத்தில் இருந்து அவரவர் பாதையில் போய்க் கொண்டு இருக்கிறோம். சூழ்நிலைகள் மாறலாம். மாறாமலும் இருக்கலாம்.

தமிழோவியம் :- தமிழக அரசின் செயல்பாடு தங்களுக்கும், தங்களது கட்சிக்கும் திருப்தியை அளிக்கிறதா?

பதில் :- மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. வயது மிகுந்த பெரியவர் கலைஞர் அவர்கள் மக்களுக்கு நல்லது செய்து கொண்டு இருக்கிறார். அதே சமயத்தில் மக்களை பாதிக்கின்ற விசயங்கள் அதிகமாக நடைபெறுகிறது. விலைவாசி உயர்வு, வேலையின்மை என பிரச்சினையும் இருக்கத் தான் செய்கிறது.

oooOooo
                         
 
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   பேட்டி பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |