Tamiloviam
ஏப்ரல் 12 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திரைவிமர்சனம் : சபரி
- மீனா [feedback@tamiloviam.com]
| | Printable version | URL |

Jothimayi, Vijayakanthஉலகமே மெச்சும் இருதய அறுவைச் சிகிச்சை நிபுணரான விஜயகாந்த் மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்துடன் அரசாங்க மருத்துவமனையில் வேலை பார்கிறார். மருத்துவமனையில் நடக்கும் அநீதிகளைத் தட்டிக்கேட்டு மக்களுக்கு நீதி வழங்கவும் செய்கிறார். சமூகத்தில் நல்ல அந்தஸ்துடன் இருக்கும் விஜயகாந்த் பல கொலைகளுக்குக் காரணமான - போலீஸ் பிடியிலிருந்து தப்பிய ஒரு ரவுடிக்கு வைத்தியம் செய்ய நேர்கிறது. ஒரு மருத்துவராக அவனது உயிரைக் காப்பாற்றியவுடன் நல்ல பிரஜையாக அவனை போலீஸிடம் பிடித்துக்கொடுக்கிறார். அவனது கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. அவனது மனைவியின் சகோதரனான தாதா பிரதாப் ராவத்தின் நிரந்தர பகையை இதன் மூலம் சம்பாதிக்கிறார் விஜயகாந்த். விஜயகாந்தை எப்படியும் கொன்று பழிவாங்குவேன் என்று சபதம் செய்யும் பிரதாப்புடன் கை கோர்க்கிறார் மற்றொரு வில்லனான மகாதேவன். இருவரும் இணைந்து விஜயகாந்த்தையும் அவரது குடும்பத்தையும் பழிவாங்கும் விதமாக கொடூரத் தாக்குதலில் ஈடுபடுகிறார்கள். இத்தாக்குதலில் தந்தையை இழப்பது மட்டுமல்லாமல் உயிருக்குப் போராடும் அளவிற்கு தாக்கப்படுகிறார் விஜயகாந்த். தன் குடும்பத்தை சின்னாபின்னப்படுத்திய வில்லன்களை அவர் எப்படி பழிவாங்குகிறார் என்பதே கிளைமாக்ஸ்.

பெரும்பாலான படங்களில் போலீஸ் அதிகாரியாகவே பார்த்த விஜயகாந்திற்கு இந்த டாக்டர் பாத்திரம் ஓரளவிற்கு பொருந்தி உள்ளது. படத்தில் பக்கம் பக்கமாக வசனம் + பஞ்ச் டயலாக் பேசாமல் விஜயகாந்த் ஆறுதல் அளிக்கிறார். நறுக்கென்று நாலு வார்த்தை பேசி காதிற்கு இதமளிக்கிறார். மருத்துவமனை ஸ்பெஷல் வார்டை சமூக விரோதிகளுக்கு கொடுக்கும் டாக்டரை சகட்டு மேனிக்கு அர்ச்சனை செய்வதும், வில்லன் போலீசை ஏமாற்றி விட்டு ஹார்ட் அட்டாக் என்று இவரிடம் வந்ததும் அவனை ஷாக் டிரீட்மென்ட் கொடுத்து அவன் வாயாலேயே குற்றங்களை ஒப்புக் கொள்ள வைப்பதும், தன்னைத் தாக்க மருத்துவமனைக்கு வரும் வில்லனுக்கு ஊசி போட்டு கை கால்களை முடக்குவதும் சூப்பர். தன்னுடைய சில செய்கைகளால் படத்தில் நகைச்சுவை நடிகர் இல்லாத குறையைப் போக்கியுள்ளார் கேப்டன். ஆனாலும் ஜோதிர்மயி மற்றும் மாளவிகாவுடனான டூயட் காட்சிகள் மற்றும் செல்போன் வெளிச்சத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்வது எல்லாம் கொஞ்சம் ஓவர். சண்டைக் காட்சிகளில் கேப்டனின் ஆக்ரோஷம் குறைந்து போனது தெளிவாகத் தெரிகிறது.

வழக்கமான கதாநாயகியாக ஜோதிர்மயி.. இரண்டு பாடல்கள் நாலு காட்சிகள்.. அவ்வளவே.. ஏதோ கிளைமாக்ஸில் மட்டும் விஜயகாந்தை வில்லன் கோஷ்டியிடமிருந்து காப்பாற்றும் காட்சியில் ஓரளவிற்கு நடிக்க முயற்சி செய்துள்ளார். மாளவிகா வெறும் ஊறுகா..

வில்லன்கள் பிரதாப் ராவத் மற்றும் பிதாமகன் மகாதேவன் இருவரும் காட்டுக்கூச்சல் போடுகிறார்களே தவிர வில்லத்தனத்தில் புதிதாக ஒன்றுமே இல்லை. படத்தில் கருத்தம்மா ராஜஸ்ரீ, டெல்லிகணேஷ் ஆகியோரும் உள்ளனர்.

மணிசர்மா இசையில் பாடல்கள் ரொம்ப சுமார். பட்டுக்கோட்டை பிரபாகரின் வசனமும், ஓ.என்.முரளியின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம். ராணுவ பாதுகாப்பையும் மீறி மருத்துவமனைக்குள் ஆயுதம் கொண்டு போவது, செல்போன் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை நடத்துவது போன்ற லாஜிக் விதிமுறைகள் இருந்தாலும் ஓரளவிற்கு விஜயகாந்தின் முந்தய படமான ரமணாவைப் போல சமூக அவலத்தைச் சொல்லும் படத்தை எடுத்ததற்காவே இயக்குனர் சுரேஷுக்கு பாராட்டுகள்.

| | |
oooOooo
                         
 
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   திரைவிமர்சனம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |