ஏப்ரல் 13 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கொஞ்சம் கதைக்கலாம் வாங்க : சில செய்திகள் மற்றும் முடிவுரை
- ராமசந்திரன் உஷா
Bookmark in Del.icio.us | | Printable version | URL |

Rajkumarஒரு வழியாய் பெங்களூரில் கலவரங்கள் ஓய்ந்து, அமைதி திரும்பிக் கொண்டிருக்கிறது. தலைவர்களின் இயற்கையான மரணமோ அல்லது கைது போன்று எதுவானாலும்  இத்தகைய கலவரங்கள் வரும் என்பதை வெகு யதார்த்தமான விஷயமாய் ஏற்றுக் கொள்ள நம் மனது பழகிவிட்டது. ரசிகர்கள் எம்.ஜி.ஆர் தலைவனாய் ஏற்றுக் கொண்டார்கள், என்.டி.ஆரோ கலியுக தெய்வம். ஆனால் ராஜ்குமாரை, தன் குடும்பத்தின் மூத்த அண்ணனாய் அவரின் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டதும், மொழிக்கு அவர்தந்த முதலிடமும் கலவரங்களுக்கு காரணமா? அல்லது இதுவும் ஒரு அரசியலா? இதுநாள்வரை மனிதமனத்தில் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த மிருகம் வெளிவர இது ஒரு வாய்ப்பா?  பளபளக்கும் வண்டிகளும், அதன் உள்ளே இருக்கும் பணம்படைத்தவர்களும், மாதாந்திர சம்பளமாய் லட்சங்களை சம்பளமாய் அளிக்கும் நிறுவனங்களும், ஏழ்மையில் வாழ்பவனின் இயலாமையின் ஆத்திரம், குரூர வெறி தாக்குதலாய் வெளிப்படுகிறதா? எல்லாமே கலந்து கலவரமாய் வெடிக்கிறது.

ஆனால் இந்த இடத்தில் ஒரு மிக நல்ல விஷயம். ராஜ்குமார் அவர்கள் தன் இரு கண்களையும் தானமாய் வழங்கியுள்ளார். இந்த நல்ல விஷயத்தை அவரின் ரசிகர்களும் பின்பற்றினால் நன்றாக இருக்கும்.

படிக்கத் தொடங்கிய, "கு.அழகிரிசாமி கடிதங்கள். கி.ரா.வுக்கு எழுதியது" புத்தகத்தை முடித்துவிட்டேன் என்று சொல்ல முடியவில்லை.  காரணம், சில இடங்கள் திரும்ப திரும்ப படிக்க வேண்டியுள்ளது. எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் முதல் இடம் வகிக்கும் கி.ரா அவர்களின் இசை முயற்சிகள், இலக்கிய ஆர்வங்கள் வியக்க வைக்கின்றன. கடிதங்களைப் படிக்கும்பொழுது, இது நண்பர்களுக்கிடையேவான கடிதமா அல்லது காதலர்கள் எழுதிக் கொண்டதா என்ற எண்ணம் தோன்றும் விதம் அன்பு வார்த்தைகளில் பிரவாகமாய் பொங்கி வழிகிறது.

கி.ரா.வுக்கும், அழகிரிசாமிக்கும் தாய்மொழி தெலுங்கு. அதை அவர்களின் மொழியில் சொல்ல வேண்டும் என்றால் "லிபி அழிந்து, ஏட்டின் பலமில்லாத, தொய்ந்துப் போன தெலுங்கு". தாய்மொழி என்பதால் ஏதோ ஒட்டிக்கொண்டு இருக்கிறதே தவிர, எழுத படிக்க இலக்கிய தீனி கிடைக்காதததால், மொழியின் மீது பிரேமை கிடையாது.

இதை நான் சொல்ல காரணம், எனக்கும் தாய்மொழி என்று சொல்லப்பட்டது கன்னடம். பல நூற்றாண்டுகளாய் தமிழகத்தில் வசிப்பதால், பேச்சு மொழியில் தமிழ் அதிகமாய் கலந்திருக்கும். ஒருமுறை பெங்களூரில் நாங்கள் பேசுவதைப் பார்த்து, 'நீங்கள் என்ன மொழியில் பேசுகிறீர்கள்? கன்னடம் போல இருக்கிறது. ஆனால் கன்னடம் மாதிரி இல்லையே" என்றார்.  முன்பு வீட்டில் பெரியவர்கள் கண்டிப்புக்கு இணங்க பேசப்படும் மொழி,  சினிமா, புத்தகம், வம்பு,தும்பு என்றால் சாதாரணமாய் தமிழே புழங்கும். (இன்று இது ஆங்கிலமாய் மாறி
விட்டது வேறு கதை).


"கொஞ்சம் கதைக்கலாம் வாங்க" முன்னுரையும் சேர்ந்து இந்த வாரத்துடன், பன்னிரண்டு வாரம் ஆகிவிட்டது. இத்துடன் முற்றும் போட்டு விடலாம் என்று இருக்கிறேன்.

மீண்டும் கோவை, சென்னைப் போக வேண்டிய வேலை  வந்துள்ளது.  அப்படியே ஈரோடு, நாமக்கல் என்று ஒரு ரவுண்ட் அடிக்க உத்தேசித்துள்ளேன். கொங்கு மண்டலத்தை சேர்ந்த என் பாட்டி தன் வாழ்க்கையைப் பற்றி நிறைய சொல்லியிருக்கிறார்கள். அவை பாட்டியின் சொந்தகதை மட்டுமில்லாமல் ஒருவகையில் அக்காலச் சரித்திரம் என்று சொல்லலாம். முன்பு பொதுவில் லேசாய்  சொன்ன விஷயத்தை, இன்று விலாவாரியாய் சொல்லுகிறேன். பாட்டி மற்றும் வீட்டின் பெருசுகள் சொன்னதை நாவலாய் எழுத வேண்டும் என்ற பேராசை, ஒரு வருடத்திற்கு மேலாய் மனதின் ஒரு ஓரத்தில் உழன்றுக் கொண்டு இருக்கிறது.

ரூட்ஸ், தலைமுறைகள் படித்ததின் தாக்கமோ என்னவோ! கிட்டதட்ட ஒரு நூற்றாண்டு கதை மனதில் உருவமாய் வந்துவிட்டது.  இன்னும் எழுத தொடங்கவில்லை. எப்படி வரும், எதிர்கால திட்டம் என்ன? புத்தகமாய் வருமா என்றெல்லாம் கேட்டவர்களுக்கு, கேட்க இருப்பவர்களுக்கு என்னிடம் எந்த பதிலும் இல்லை. எழுதப் போகிறேன், அவ்வளவே :-)

இப்பொழுது தற்செயலாய் நாமக்கல் போக வேண்டும் என்றதும், செண்டிமெண்ட்ஸ் பார்க்க மாட்டேன் என்று சொல்லிக் கொள்பவள், கொஞ்சம் கிறுகிறுத்துப் போனேன். பாட்டியின் தந்தைக்கு சொந்த ஊர் நாமக்கல். நாமகிரி அம்மன் குலதெய்வம். நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, என் அப்பாவின் மாமாவுக்கு இன்றும் மண்டகப்படி உண்டு என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். ஊரில் இருந்து வந்ததும், எழுதத் தொடங்கலாம் என்று இருக்கிறேன்.

சொந்த விளம்பரம் போட்டுக் கொண்டதற்கு தமிழோவிய ஆசிரியர் குழு மன்னிக்கவும். இந்த பன்னிரண்டு வார தொடரை என் என் சொந்த பதிவில் http://nunippul.blogspot.com/ மறுபதிப்பாய் போட்டதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. விவாதங்கள், எதிர்வினைகள், மறுமொழிகள் என்று பல நட்புக்கள் இட்ட பின்னூட்டங்கள், என்னைப் போன்ற ஆரம்ப கட்ட எழுத்தாளர்களுக்கு மிக நல்ல ஊட்ட சத்து.

எழுத வாய்ப்பு தந்த தமிழோவிய ஆசிரியக்குழுவிற்கு மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள். எழுத விழைபவர்களுக்கு இன்று இணையம் ஒரு வரப்பிரசாதம் என்றால் மிகையில்லை. எழுத்தை உடனுக்குடன் பாராட்டவோ அல்லது தவறுகளை சுட்டிக்காட்டவோ, திட்டவோ வாசகர் குழு. இதைவிட, எழுத்துக்காரர்களுக்கு வேறு என்ன வேண்டும்?

தமிழ் இணையம் என்பது சிறு வட்டம்தானே. எங்காவது என் எழுத்துக்கள் உங்கள் கண்ணில் பட்டுக் கொண்டே இருக்கும். படித்துப் பார்த்து உங்கள் கருத்தை சொல்லுங்கள். வாசகர்கள் இல்லாமல் எழுத்தாளன்(ளி)க்கு வாழ்க்கை ஏது?

நன்றி! வணக்கம்!

| | | |
oooOooo
ராமசந்திரன் உஷா அவர்களின் இதர படைப்புகள்.   கொஞ்சம் கதைக்கலாம் வாங்க பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |