ஏப்ரல் 13 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
நூல் அறிமுகம் : ஒரு நிலவில் சில நட்சத்திரங்கள் - அணிந்துரை
- புஹாரி
Bookmark in Del.icio.us | | Printable version | URL |

மேகங்களில் மடல்கள் எழுதி, நிலாவினில் வலைப்பக்கங்கள் செதுக்கி, நட்சத்திரப் பொத்தான்களைத் தட்டித்தட்டி பைனரி மின்னிழைகளில் தமிழ்க் கவிதைகள் எழுதும் இனியவர், இளையவர் கவிஞர் ப்ரியன்.

உலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமமான அன்புடனில் இவர் எனக்கு அறிமுகமானார். இவரின் இதயத்திலிருந்து நேரடியாய் இணையத்தில் இறங்கும் கவிதைகளோ உன்னை நான் முன்பே அறிவேனே என்று புரிபடாத ஜென்மக் கதைகள் பேசின.

சின்னச் சின்னதாய்க் கொஞ்சிக் கொஞ்சி காதல் கவிதைகள் எழுதத் தொடங்கிய ப்ரியன் இன்று ஒரு புத்தகமே போட வளர்ந்திருப்பது தமிழுக்கும் எனக்கும் தித்திப்பாய் இருக்கிறது.

காகங்கள் கூடியிருக்கும்போது ஒரு கல்லெறிந்து கலைத்து விடுவதைப்போல, தனிமைகள் கூடியிருக்கும் இதயத்தில் இவரின் கவிதைகளைச் செல்லமாய் எறிந்து அப்படியே ஓட்டிவிடலாம்.

வாசிக்கத் தொடங்கிய உடனேயே வேற்றுக் கோளுக்கு இழுத்துப் போகும் மந்திரக் கயிற்றை இவரின் கவிதைகளில் நான் அவ்வப்போது கவனித்து வருகிறேன்.

இவரின் பார்வை இவர் மனதைப் போலவே மென்மையானது, காட்சியைக் காயப்படுத்திவிடாமல் இவர் பார்க்கும் பார்வைகள் காதல் கவிதைகளைக் குளிர்ச்சியாய்க் கொட்டிவிடுகின்றன.

இவர் நிலாவைப் பார்ப்பார் நிலா தெரியாது, பூவைப் பார்ப்பார் பூ தெரியாது, மழையைப் பார்ப்பார் மழை தெரியாது, காற்றில் அசையும் இலைகளைப் பார்ப்பார் இலை தெரியாது, அதிகாலையில் ஒளிப்பூ மலர்வதைப் பார்ப்பார் விடியல் தெரியாது, எல்லாமாயும் இவருக்கு இவரின் காதலி மட்டுமே தெரிவாள்.

தன் இதயத்தின் சுற்றுப்புறங்களையும் சேர்த்தே இவர் தன் காதலிக்குக் கொடுத்துவிட்டுப் புல்லரிக்கும் கவிதைகளையும் பொழுதுக்கும் கொடுத்துக்க்கொண்டே இருக்கிறார்.

    அன்று தொடங்கிய மழை
    சாரலாகி ஓடிப் போனது
    வாசல் தெளிக்கும் அளவுகூட
    பூமி நனையவில்லை
    ஆனாலும்
    என் மனது தெப்பலாக
    நனைந்திருந்தது
    நீ மழையில் நடந்து சென்றதில்

காதலி சாரலில் நனைந்ததற்கே இவர் தெப்பலாய் நனைந்து விட்டாராம் அவள் தெப்பலாய் நனைந்திருந்தால் இவர் டைடானிக் கப்பலாய்க் கவிழ்ந்திருப்பார் என்று சொல்லாமல்
சொல்லும் இந்தத் துவக்கக் கவிதையே சிலிர்ப்பானது.

காதலியை எப்படி எப்படியெல்லாமோ வர்ணித்திருக்கிறார்கள் கவிஞர்கள். இவர் எப்படி வர்ணிக்கிறார் என்று கொஞ்சம் பாருங்கள்.

    தண்மையான
    உன்னைச் செதுக்குகையில்
    சிதறிய
    சின்னச் சின்ன சில்லுகள்தாம்
    மழை

சில்லுகளெல்லாம் மழைத்துளி என்றால் சிலை என்னவாக இருக்கும்? யோசிக்கும்போதே நனைந்து போகிறதல்லவா, தலை துவட்டிக்கொள்ளவும் மறந்துபோகும் நம் கற்பனைகள் ? கவிஞனின் கற்பனை முடியும்போது நம் கற்பனை தொடங்கி விடவேண்டும். அதுதான் நல்ல கவிதைக்கு அடையாளம். அப்படியான கவிதைகள் இத்தொகுப்பில் ஏராளம்.

    சுகம்!
    மழையில் நனைந்து கரைதலும்
    உன் பிடியில்
    கரைந்து தொலைதலும்

யாரைத்தான் காதலிக்கிறார் இவர்? மழையையா தன் காதலியையா? மழையோடு கோபம் கொண்டு மழை பொழியும் நாட்களிலெல்லாம் இவரை சன்னல்களும் இல்லாத அறையில் பூட்டிவைக்கப் போகிறார் இவரின் காதலி  :)

    மழை ரசித்தாலும்
    உனை ரசித்தாலும்
    நேரம் கடப்பதும்
    தெரிவதில்லை
    உயிர் கரைந்து
    ஓடுவதும் தெரிவதில்லை

இப்படி இரண்டு பேரை ஒரே சமயத்தில் காதலிப்பது தமிழ்ப் பண்பா :)  ஆசை இருக்க வேண்டியதுதான் ஆனாலும் கட்டுபடியாகும் ஆசையாக இருக்கக்கூடாதோ ப்ரியன்?

    நனைய நீ ஊரில் இல்லை
    என்பதற்காக
    எட்டியே பார்க்கவில்லை
    மழை

இதற்கு என்ன பொருள்? மழையே பொழியாமல் இருந்திருக்குமா என்ன? அப்படியல்ல. பெய்தவையெல்லாம் இவருக்கு மழையாகத் தெரியவில்லை. அவள் இருந்தால் பெய்யாதபோதும் மழையை உணர்கிறார் இவர். அப்படியென்றால் காதலியும் மழையும் வேறு வேறு அல்ல. இவரின் காதல்தான் மழையோ?

எதையும் தொடர்ந்து கண்டுகொண்டே இருந்தால் அது எத்தனை அழகானாலும் அலுப்புதான் தோன்றும். எத்தனை முறைதான் ஒன்றையே காண்பது? ஆனால் காதலனுக்குத் தன் காதலிதான் பிரபஞ்ச அதிசயம். பொழுதுக்கும் அவளைக் கண்டு கொண்டே இருப்பான் அலுக்கவே அலுக்காது என்பதைவிட காணக்காண மேலும் மேலும் ஆவலையே தூண்டுவாள் அவள். அதை எத்தனை எளிமையாய்ச் சொல்கிறார் பாருங்கள் ப்ரியன்.

    வானம்
    பெய்ய மழை
    பெய்யப் பெய்ய பெருமழை
    நீ
    காண அழகு
    காணக் காணப் பேரழகு

அவள் ஓர் ஏழை. ஆனால் அழகில் சீமாட்டி. கிழிந்த ஆடை அவள் அழகைக் குறைக்கவில்லை மேலும் கூட்டிவிடுகிறது. அதோடு கொஞ்சம் மழை நீரும் சேர்ந்துகொண்டால் அவளின் அழகு என்னவாகும்? இந்தக் காட்சியை எத்தனை நயமாய்ச் சொல்கிறார் பாருங்கள். ஓர் எசகுபிசகான காட்சியை மிக நாகரிகமாகச் சொல்லும் இந்த மெல்லிய வரிகளை பண்பாடுமிக்க ஒரு பொன்மனக் கவிஞனால்தான் பொழியமுடியும்.

    உடுத்திக்கொள்ள
    உன் கிழிந்த சேலைதான் வேண்டுமாம்
    அம்மணமாய் விழும்
    அம்மழைக்கு

அதென்ன "ஒரு நிலவில் சில நட்சத்திரங்கள்" என்றொரு தலைப்பு ? இதோ காரணத்தை அவரே சொல்கிறார் கேளுங்கள். அது எத்தனை இனிமை என்று உணருங்கள்

    மழையில் நனைந்த உன் முகம்
    ஒரு நிலவில்
    சில நட்சத்திரங்கள்

இவரின் மழைத்துளிக் கவிதைகளில் மேகத்தின் மொத்தமும் அப்படியே ஊர்வலம் போகிறது. உதாரணத்திற்காக ஒரு கவிதை இதோ

    நின்ற பின்னும்
    சிறிது நேரம்
    இலை தங்கும் மழைப்போல
    நீ நின்றுபோன
    இடத்தில் எல்லாம்
    கொஞ்சநேரமாவது தங்கிச்
    செல்கிறது அழகு

காதலின் மிக முக்கிய ஓர் பணி என்னவென்றால், அது காதலர்களைப் பண்படுத்த வேண்டும். எத்தனைக் கரடுமுரடான இதய வேர்களையும் அது சீவிச் சிக்கெடுத்து இனிப்பு நீரில் நீந்தச் செய்யவேண்டும். காதலியின் பார்வையால் மீண்டும் மீண்டும் பிரசவமாகும் உயிரைப் போன்றவன்தான் காதலன்.

    பூமியை சுத்தமாக்கி
    புதியதாக்குவது மழை
    என்னை
    துடைத்துப் புதியவனாக்குவது
    உன் பார்வை

காதலி, மழை, காதலன், கவிதை ஆகிய நான்கும் ஒன்றாய்க் கலந்த பிரிக்க முடியாக் கலவையே இந்தத் தொகுப்பு. அதையும் மிக அழகாக ஒரு கவிதையில் சொல்லி இருக்கிறார் ப்ரியன்

    எப்போதிலிருந்து இப்படி எழுதுகிறீர்கள்
    என்றாய்
    நீ மழையில் நனைவது
    கண்டதிலிருந்து என்றேன்
    ச்சீ என வெட்கப்பூ பூத்தாய்
    அடுத்த மழைப் பெய்யத் தொடங்கியது
    நீயும் நனையத் தொடங்கினாய்
    நானும் இன்னமும் அழகாய் எழுதத் தொடங்கினேன்

காதல் என்றாலே அது அதீத சந்தோசமும் அதீத சோகமும் கொண்ட வினோதமான பூ. அழுகை அந்தப் பூவின் இதழ்கள். சந்தோச நெசிழ்வில் அழுகை, சோகத்தின் பிடியில் அழுகை. ஆனால், நாம் அழவேண்டாம், நமக்காக அழ ஓர் ஆள் இருக்கிறது என்று காதலியிடம் சொல்கிறார் ப்ரியன். யார் அந்த ஆள் என்று பார்த்தால் ஆச்சரியமாய் இருக்கிறது.

    சந்தோசம்
    துக்கம்
    எதற்கும் அழுதுவிடாதே
    நமக்காக தான்தான்
    அழுவேன் என
    அடம்பிடித்து வரம் வாங்கியிருக்கிறது
    மழை

என்றால் மழை இவருக்கு யார்? இந்தக் கேள்வியை இதயத் தாடைகளில் அசைபோட்டபடியே இந்தத் தொகுப்பெனும் தோப்பினுள் நீங்களும் முயல்களாய்த் தத்தித்தத்திச் செல்லுங்கள். குயில்களாய்ப் பாடிப்பாடித் திரியுங்கள். மலர்களாய்ப் பூத்துப்பூத்துக் குலுங்கள்.

பிரியாத ஆர்வத்தோடு கவிஞர் ப்ரியன் மேலும் பல நல்ல கவிதை நூல்களைத் தருவார் என்ற நம்பிக்கையோடு அவரை வாழ்த்துகின்ற இவ்வேளையில் வாழ்க இவர் போன்ற கவிஞர்களால் மேலும் இளமை எழில் கொப்பளிக்கும் தமிழ்க் கவிதைகள் என்றும் வாழ்த்தி மகிழ்கின்றேன்.

அன்புடன் புகாரி
கனடா

|
oooOooo
புஹாரி அவர்களின் இதர படைப்புகள்.   நூல் அறிமுகம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |