ஏப்ரல் 15 2005
தராசு
வ..வ..வம்பு
திரையோவியம்
முத்தொள்ளாயிரம்
சிறுகதை
உள்ளங்கையில் உலகம்
மஜுலா சிங்கப்புரா
கவிதை
நியுஜெர்சி ரவுண்டப்
அறிவிப்பு
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
திரைவிமர்சனம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
இலக்கியவாதி  புதிது
- சத்யராஜ்குமார்
ஹர்ஷத் மேத்தா
- சசிகுமார்
- சத்யராஜ்குமார்
கோடிட்ட இடங்கள்
- சித்ரன்
சுய சாசனம்
- பாஸ்டன் பாலாஜி
என்னை எழுதியவர்கள்
- சத்யராஜ்குமார்
களம்
- நாகூர் ரூமி
கங்கை இல்லாத காசி
- பாஸ்டன் பாலாஜி
வார்த்தையல்ல, வாக்கியம்
- என். சொக்கன்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
 
முத்தொள்ளாயிரம் : யானையும் குதிரையும்
- என். சொக்கன்
| Printable version |

பாடல் 101

தனது நீண்ட, நல்ல வேலினால், பகைவர்களைக் குத்திக் கொன்று, அவர்களின் இறைச்சி ஒட்டியிருக்கும் வேலை ஏந்தியிருக்கிற அரசன் பாண்டியன் - அவனைச் சுமந்து செல்லும் யானையிடம், கெஞ்சலாய் ஒரு கோரிக்கை விடுத்த பெண்ணை, சென்ற பாடலில் பார்த்தோம்.

அந்தப் பெண்ணின் கோரிக்கைக்கு, பாண்டியனின் யானை இணங்கியதா ? அது நமக்குத் தெரியவில்லை. ஆனால், இந்தப் பாடலில், வேறொரு பெண், அந்தப் பெண் யானையைக் கடுமையாய்க் கோபித்துக்கொள்கிறாள்.

'ஏம்மா, என்னைப்போலவே நீயும் ஒரு பெண்தானே ? ஆனால், அந்தப் பெண்மைக்கு உரிய அடக்கம் உன்னிடம் இல்லையே !', என்று யானையை அதட்டுகிற இவளும், பாண்டியனின் (இன்னொரு) காதலிதான்.

ஆனால், அந்த யானைக்கு, இந்த விபரமெல்லாம் தெரியாது. ஆகவே, 'யார் இந்தப் பெண் ? திடீரென்று எங்கிருந்து முளைத்தாள் ? ஏன் இப்படி நம்மைத் திட்டுகிறாள் ?', என்று திகைத்து நிற்கிறது.

அந்தப் பெண் தொடர்ந்து பேசுகிறாள், 'எங்கள் கூடல் (மதுரை) நகரின் அரசன் பாண்டியனைச் சுமந்துகொண்டு தினசரி உலா வருகிறாயே. அப்போது நீ ஏன் விறுவிறுவென்று வேகமாய் நடக்கிறாய் ? கொஞ்சம் மெதுவாக நடக்கக்கூடாதா ?'

அவள் இப்படிச் சொன்னதும், அந்த யானைக்கு எல்லா விபரமும் புரிந்துவிட்டது - யானை மெதுவாக நடந்தால்தான், பாண்டியனின் வீதி உலா அதிக நேரம் நடைபெறும் - அப்போதுதான், இந்தப் பெண், பாண்டியனை அதிக நேரம் பார்த்து ரசிக்கமுடியும் !

'ஓஹோ, அப்படியா சமாச்சாரம் !', என்று நினைத்துக்கொண்டபடி, அவள்மீது குறும்பான பார்வை ஒன்றை வீசுகிறது அந்தப் பெண் யானை, 'ஏன் ? வேகமாய் நடந்தால் என்னவாம் ?', என்று கிண்டலாய்க் கேட்கிறது.

'மெதுவாகவும், மென்மையாகவும் நடப்பதுதான் பெண்களுக்கு அழகு !', என்கிறாள் அவள், 'இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்புளிக்க ... என்றெல்லாம் பாடல்களில் வர்ணிப்பார்களே, நீ கேட்டதில்லையா ?'

'ம்ஹ¤ம், இல்லை !' பெரிதாய்த் தலையாட்டுகிறது யானை, 'நீ என்ன வேண்டுமானால் சொல்லிவிட்டுப் போ, நான் அப்படிதான் வேகமாய் நடப்பேன் !'

'ஐயோ, அதெல்லாம் தப்பு', என்று பதட்டமாய்ச் சொல்கிறாள் அந்தப் பெண், 'நீ மெதுவாகதான் நடக்கவேண்டும்'

'அதுதான் ஏன் என்று கேட்கிறேன்', குறும்பும், சிரிப்பும் கொஞ்சமும் குறையாமல் கேட்கிறது யானை.

'நீ மெதுவாக நடந்தால்தானே, நான் என் பாண்டியனை அதிக நேரம் பார்த்து ரசிக்கமுடியும் ?', என்று தொண்டைவரை வந்துவிட்ட பதிலை அடக்கிக்கொண்டு, 'மெதுவாக நடப்பதுதான் பெண்களின் இயல்பு ! இப்படித் தரையதிர வேகமாய் நடந்தால், நீ ஒரு பெண்தானா என்று எல்லோரும் சந்தேகப்பட ஆரம்பித்துவிடுவார்கள் !', என்கிறாள் பாண்டியன் காதலி.

பாண்டியனைச் சுமந்துகொண்டு நடப்பது ஒரு பெருமையென்றால், அதற்காக இப்படி எத்தனை பேரின் திட்டுகளையும், போலி அக்கறையையும் சந்திக்கவேண்டியிருக்கிறது !

(இந்தச் சோதனை, பாண்டியனின் யானைக்குமட்டுமில்லை - சோழனின் யானைக்கும்தான் - முன்பு படித்த 34வது பாடலை நினைவுபடுத்திப் பாருங்கள்.)


எலாஅ மடப்பிடியே எம்கூடற் கோமான்
புலாஅல் நெடுநல்வேல் மாறன் உலாஅங்கால்
பைய நடக்கவும் தேற்றாயேல் நின்பெண்மை
ஐயப் படுவது உடைத்து

(எலாஅ - அழைப்பு
பிடி - பெண் யானை
புலா(அ)ல் - இறைச்சி
உலாஅங்கால் - உலா வரும்போது
பைய - மெதுவாக)பாடல் 102


சென்ற பாடலில் யானை, இந்தப் பாடலில் குதிரை.

தெருவழியே தேமே என்று நடந்துகொண்டிருந்த பாண்டியனின் குதிரையை, ஒரு பெண் வழிமறித்துக் கூச்சலிடுகிறாள், 'ஏ முரட்டுக் குதிரையே, பாண்டியனைச் சுமந்துகொண்டு போகும்போது, ஏன் இப்படி அதிவேகமாய்ப் பறக்கிறாய் ? இது என்ன போர்க்களமா ? நம் பாண்டிய நாடுதானே ? இங்கே ஏதும் ஆபத்து இல்லையே ? பிறகு ஏன் போர்க்களத்தில் பாய்வதுபோல் பாய்ந்து ஓடுகிறாய் ? கொஞ்சம் மெதுவாக நடக்கக்கூடாதா ?'

- இப்படிச் சொல்லிவிட்டு, அந்தப் பெண் சற்றே கெஞ்சல் பாவனையில் தொடர்ந்து பேசுகிறாள், 'சாலைக்கு வந்து, அங்கே உலா வரும் பாண்டியனைப் பார்க்கக்கூடாது என்று என் அம்மா என்னை வீட்டினுள் அடைத்துவிடுகிறாள். என்னைப்போலவே, இந்த ஊரில் பாண்டியனுக்கு ஏகப்பட்ட காதலிகள் - எல்லோரும் இப்படிதான் சிறைப்பட்டுக் கிடக்கிறார்கள் - எங்களுக்கெல்லாம் உன்னுடைய உதவி தேவை.'

'பாண்டியன் உன்மீது சவாரி செய்யும்போது, தயவுசெய்து, எங்களுக்காக, கொஞ்சம் மெதுவாகவே நடைபோட்டு வா. உன் புண்ணியத்தில், நாங்கள் பாண்டியனை நிதானமாய் தரிசிக்கிறோம் - கூரான வேலும், மதம் பிடித்த, கோபமான யானைகளையும் கொண்ட அந்தப் பாண்டியனின் அழகு மார்பை, நாங்கள் வீட்டினுள் இருந்தபடி நன்றாகப் பார்த்து ரசித்து, கண்களிலும், மனதினுள்ளும் அவனைச் சிறைப்பிடித்துக்கொள்கிறோம் !'


போர்அகத்துப் பாயுமா பாயாது உபாயமா
ஊர்அகத்து மெல்ல நடவாயோ கூர்வேல்
மதிவெம் களியானை மாறன்தன் மார்பம்
கதவம்கொண்டு யாமும் தொழ.

(பாயுமா - பாய்வதுபோல்
உபாயமா - உதவியாக / நாங்கள் பார்ப்பதற்கு வசதியாக
மதிவெம்களியானை - மதம் பிடித்து, அதனால் புத்தி கெட்டுத் திரிந்த, கோபமான யானை
கதவம்கொண்டு - கதவின் அருகே நின்றபடி)

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com - Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |