ஏப்ரல் 15 2005
தராசு
வ..வ..வம்பு
திரையோவியம்
முத்தொள்ளாயிரம்
சிறுகதை
உள்ளங்கையில் உலகம்
மஜுலா சிங்கப்புரா
கவிதை
நியுஜெர்சி ரவுண்டப்
அறிவிப்பு
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
திரைவிமர்சனம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
இலக்கியவாதி  புதிது
- சத்யராஜ்குமார்
ஹர்ஷத் மேத்தா
- சசிகுமார்
- சத்யராஜ்குமார்
கோடிட்ட இடங்கள்
- சித்ரன்
சுய சாசனம்
- பாஸ்டன் பாலாஜி
என்னை எழுதியவர்கள்
- சத்யராஜ்குமார்
களம்
- நாகூர் ரூமி
கங்கை இல்லாத காசி
- பாஸ்டன் பாலாஜி
வார்த்தையல்ல, வாக்கியம்
- என். சொக்கன்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
 
மஜுலா சிங்கப்புரா : எண்ணினால் எண்ணியது நண்ணுங்காண்!
- எம்.கே.குமார்
| Printable version |
"நின்றால் விருது; நடந்தால் விருது; இருந்தால் விருது. ஏகப்பட்ட விருதுகள்! - சாங்கி விமான நிலையம்"

சச்சின் டெண்டுல்கரிடம் போய் சதம் அடிப்பதைப்பற்றி அதீதமாகப் பேசினால் எப்படி 'ரியாக்ட்' பண்ணுவாரோ அதேகதைதான் சாங்கி விமான நிலையத்திடம் போய் விருதுகள் வாங்குவது பற்றிக்கேட்பதும்! நின்றால் விருது; நடந்தால் விருது; இருந்தால் விருது. ஏகப்பட்ட விருதுகள்! ஆசியாவின் மிகச்சிறந்த விமான நிலையமாகத் தொடர்ந்து பலமுறையும் உலகின் மிகச்சிறந்த விமானநிலையமாகப் பலதடவையும் விருதுகளை அள்ளி வாரிக்குவித்துக்கொண்டிருக்கிறது சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம்.

Changi Airportஉலகின் பத்திரிகை சார்ந்த பல நிறுவனங்களிடமிருந்தும் அமைப்புகளிடமிருந்தும் 2004ஆம் ஆண்டில் மட்டும் 19 விருதுகள் பெற்றிருக்கிறது இது. 'யு.கே மற்றும் ஐரோப்பா'விலிருந்து வெளிவரும் 'பிஸினஸ் டிராவலர்' என்னும் இதழ், தொடர்ந்து 17வது முறையாக 'உலகின் மிகச்சிறந்த விமான நிலையமாக' விருது வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. 'கார்கோநியூஸ்' நிறுவனம் 1987 ல் இருந்து 2004 வரை தொடர்ந்து 18 வருடங்கள், ஆசியாவின் மிகச்சிறந்த விமான நிலையமாக அறிவித்து பெருமைப்படுத்தியிருகிறது.

'தி டைய்லி டெலகிரா·ப்' இதழ் ஏழு முறையும் (1988- 2004), 'டைம்' இதழ் ஆசியாவின் தேர்ந்த விமானநிலையமாக நான்கு முறையும் இதுபோக அமெரிக்க, சுவீடன், மத்தியகிழக்கு நாடுகள், கனடா நிறுவனங்கள், ஆசியா-பஸிபிக்கின் பல நிறுவனங்கள் ஆகியவையும் சிறந்த விமான நிலையம், சரக்கு கையாளுதல், பயணிகளின் விருப்பங்களைப் பூர்த்தி செய்தல், அதிக பயணிகளைக் கையாளுதல், சேவை மற்றும் தொலைத்தொடர்பில் சிறந்துவிளங்குதல் எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகளை அள்ளி வழங்கியிருக்கிறன்றன. 'அகில உலக விமானிகள் சங்கமும்' (IFALPA) தனது பங்கிற்கு, 'குறைகள் இல்லாத விமான நிலையம்' என 1981 ல் இருந்து 2004 வரை '24 முறை' சாங்கி விமான நிலையத்தை தனது சார்பாக பெருமைப்படுத்தியிருக்கிறது.

சாங்கி விமான நிலையத்திற்குக் கிடைக்கும் பெருமையும் புகழுமானது அதன் கட்டட நிபுணத்துவத்திலிருந்து ஆரம்பிக்கிறது. உலகிலேயே மிகச்சிறந்த விமான நிலைய வடிவமைப்பு என்ற தனி அந்தஸ்தைப் பெற்று விளங்குகிறது சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம். 1970களில் பரவத்தொடங்கிய நவீன கட்டிட பாணிக்குச் சாட்சியாய் உருவான இதன் வளர்ச்சி, முப்பது ஆண்டுகள் கழிந்த பின்னும் இன்னும் இளமையாகவும் இன்றைய உலகின் நவீன உத்தி கொண்டு எழுப்பப்படும் மூன்றாவது டெர்மினலுக்கு அடிகோலாகவும் இருக்கிறது. "இன்றைய நவீன யுகத்திற்கு ஏற்ற எல்லா வசதிகளைக் கொண்டிருத்தலும் வசதிகளுக்காக மட்டுமன்றி பயணிகளின் பயன்கொள்ளுதலுக்கு ஏதுவாக மிகச்சிறப்பாக திட்டமிட்டதிலும் அவற்றை நிறைவாகச் செயல்படுத்திக்கொண்டிருத்தலும் என சாங்கி விமான நிலையம், கட்டிட கலைக்கு மிகச்சிறந்த உதாரணமாக இருக்கிறது" என்கிறார் கட்டிடக்கலை நிபுணரான நிர்மல் கிஷ்ணானி.

சாங்கி விமான நிலையம் பரிசுகளைக் குவித்துக்கொண்டிருக்கும் கதை இருக்கட்டும். 'சாங்கி' என்ற இந்த இடம், விமானதளமாய்ப் பயன்படுத்துவதற்கு மிகவும் ஏற்றது; எந்தவித இடர்பாடுகளும் ஐயப்பாடுகளும் இன்றிச் சிறந்த விமானத்தளமாக இதைப் பயன்படுத்தமுடியும் என்று முதன்முதலில் கண்டறிந்தவர்கள் யார் தெரியுமா? வேறு யார்? ஜப்பானியர்கள் தான்!

இரண்டாம் உலகப்போரின் போது 1941 ஆம் ஆண்டின் இறுதியில் மலேசியாவை அடிபணியச்செய்த ஜப்பானியர்கள், 1942 ன் தொடக்கத்தில் சிங்கப்பூரையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பிறகு இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வரும்வரையில் சிங்கப்பூரில் ருத்ர தாண்டவமாடிய அவர்கள் தங்களது போர்விமானங்கள் வந்து இறங்குவதற்கு ஏற்ற இடமாய் சிங்கப்பூரின் கிழக்குப்பகுதில், கடலை ஒட்டிக் கிடந்த 'சாங்கி' என்ற இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தனர். 1943 ஆம் ஆண்டு இறுதியில், சிங்கப்பூரில் இருக்கும் தனது போர்க்கைதிகளைக்கொண்டும் தாய்லாந்தில் இருந்து போர்க்கைதிகளைக் கொணர்ந்தும் நீண்டு பரவிக்கிடந்த சதுப்பு நிலங்களை மீட்க ஆரம்பித்தனர். இதன் விளைவாய், சாங்கி விமான தள உருவாக்கப்பணி, 1945 ஆம் ஆண்டு மே மாதத்தில் பூர்த்தியானது. அடுத்த சில மாதங்களில் ஜப்பானியர்கள் போரில் தோற்று நாடு திரும்பியவுடன் பிரிட்டிஷ் ராயல் விமானப்படையின் பயிற்சிக்களமாக இது பயன்படத்தொடங்கியது.

'கல்லாங்' விமான நிலையமும் 'பாயா லேபர்' விமான நிலையமும் அனைத்துலக விமான நிலையங்களாகப் பல வருடங்கள் பயன்படுத்தப்பட, சாங்கி விமான நிலையம் போர்விமானங்களின் பயிற்சிக்களமாகவே நீண்ட காலம் இருந்து வந்தது. முதலில் ஜப்பானியப்படைகளின் களமாகவும் பிறகு பிரிட்டிஷ் விமானப்படைப் பயிற்சித்தளமாகவும் பிறகு 'சிங்கப்பூர் குடியரசு ராணுவ விமானத்தளமாகவும்' பயன்படுத்தப்பட்டு வந்த சாங்கி விமானத்தளம், 1975 ஆண்டு, 'கல்லாங், பாயாலேபர்' விமானத்தளங்களின் போதிய வசயின்மை காரணமாக, 'அனைத்துல விமான நிலையமாக' பயன்படுத்தப்பட ஆயத்தமானது. அவை இரண்டும் பிறகு ராணுவ பயிற்சிக்கென ஒதுக்கப்பட்டன.

இன்றைய விமான நிலையத்தில், எதுவும் இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லாதவாறு எல்லாம் இருக்கின்றன; கிடைக்கின்றன. இத்தகைய நிலை இல்லாவிட்டால், 'இரவில் நிம்மதியாய் ஓய்வெடுப்பதற்கு/தூங்குவதற்கு ஏற்ற, உலகின் சிறந்த வசதியான விமான நிலையம்' என்பது வரை இத்தனை இத்தனை பெருமைகள்தான் இதற்கு கிடைத்திருக்குமா என்ன?

'தரையில் கிடக்கும் விமான நிலையப்பயலே எழுந்து நின்று, புகழில் எட்டடி பாயும்பொழுது, கண்டம் விட்டு கண்டம் தாவும் எனக்கு எவ்வளவு பெருமையும் புகழும் இருக்கவேண்டும்' என்றுதான் 'சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்' விமானச்சேவையும் இருக்கிறது. வரிசையாக எழுதினால் ஆயிரக்கணக்கான கிலோபைட்டுகளை அள்ளிக்கொள்ளும் அளவுக்கு விருதுகள்! 1972 ஆம் ஆண்டு ஜனவரியில், மலேசியன்-சிங்கப்பூர் ஏர்லைன்ஸிலிருந்து பிரிந்து அக்டோபரில் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் வெற்றிக்கதை முடிவில்லாதது. 1973ல் வெகு தீர்மானமாக முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைத்த அது, போயிங் 747 விமானங்களை வாங்கி தனது சேவையைத் துவக்கி, அதே ஆண்டில் SATS எனப்படும் Singapore Airport Terminal Services Ltd நிறுவனத்தை ஆரம்பித்தது. பிறகு 1977ல் பிரிட்டிஷ் ஏர்வேசுடன் இணைந்து 'சூப்பர்சோனிக் கான்கார்ட்' விமானத்தை பஹ்ரைன் வழி, லண்டன் டு சிங்கப்பூருக்குக் கொண்டு வந்தது.

பிறகு படிப்படியாக உலகின் அனைத்து விமானச் சேவைகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, 1994 ஆம் வருடம் ஜூன் மாதம், 22 'மெகாடாப் 747' மற்றும் 30 'ஏர்பஸ் 340-300E' விமானங்கள் என மொத்தம் 52 விமானங்களை வாங்கிக்குவித்தது. நவம்பர் 1995ல், 77 'போயிங்777' விமானங்களை மீண்டும் அள்ளி தனது இறக்கைக்குள் சேர்த்துக்கொண்டு 1997 ஆம் வருடம், தனது ஐம்பதாம் ஆண்டு பொன்விழாவைக்கொண்டாடியது.

உலக பயணச்சேவையில் ஈடுபட்டுள்ள விமானங்களின் சராசரி வயதான 10 வருடத்திற்கெதிரே, கடந்த 17 வருடங்களில், 69 பழைய விமானங்களை விற்றபின், இன்றைய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களின் சராசரி வயது வெறும் 'ஐந்து' தான். அவ்வளவு இளமையான விமானங்களைக்கொண்டும் 'பியரே பால்மைன்' வடிவமைத்த மலாய உடையில் (கட்டாயமாய்) 26 வயதிற்குட்பட்ட, 22 சீட்டுகளுக்கு ஒரு பணிப்பெண்ணைக்கொண்டும், ஒரு விமானத்திற்கு 60 முதல் 80 ஒயின்போத்தல்களும், இலவச, 'அளவில்லாத' உணவு மற்றும் மது வகைகள் பரிமாறப்பட்டும் இன்று உலகின் மிகச்சிறந்த விமானச்சேவைகளில் ஒன்றாக இருந்து வருகிறது.

கடந்த 2004 ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் இன்னொரு இமாலய சாதனையைச் செய்தது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ். 16 மணி நேரங்கள் நிறுத்தமில்லாது தொடர்ந்து பறக்கும் நேரடி விமானச் சேவையை சிங்கப்பூருக்கும் லாஸ் ஏஞ்சலுக்கும் இடையே ஆரம்பித்து வைத்தது அது. உலகின் மிக நீளமான நிறுத்தமற்ற முதல் விமானம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸினுடையது. அதே ஆண்டு ஜூன் மாதத்தில், 18 மணி நேரங்கள் இடைவேளையற்று தொடர்ந்து பயணிக்கும் நியூயார்க்-சிங்கப்பூர் விமானச்சேவையும் ஆரம்பிக்கப்பட்டது. இவைகளெல்லாம் என்ன, அடுத்த வருட ஆரம்பத்தில் இதோ வருகிறது, உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான 'ஏர்பஸ் A380!'

சிங்கப்பூர் விமான நிலையமும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் தொடர்ந்து செய்துவரும் சாதனைகள், அகில உலக அளவில் பரவலாக அங்கீகரிக்கப்பட்டு இப்போது பன்னாட்டு நிறுவனங்கள் அவற்றுடன் இணைந்து, விமானங்களைச் செப்பனிடும், மொத்தமாக பழுதுபார்க்கும், சேவைகளைக் கற்றுத்தரும்/கற்றுக்கொள்ளும் பல்வேறு திட்டப்பணிகளில் இணைந்து பங்காற்றி வரலாறு படைத்து வருகின்றன.

சாதனைகளைச் செய்வதில் திரு. லீ குவான் யூ அவர்களுக்கு இருக்கும் ஆர்வமும் கடின உழைப்பும் இங்கேயும் சரித்திரமாயிருக்கின்றன. எந்த துறைக்குச் சென்றாலும் எல்லா வகையிலும், அங்கு, திரு. லீ குவான் யூ அவர்களுக்குத் துணை நிற்கும் ஓர் இந்தியராவது, வரமாய் கிடைத்தது உண்மையென்பதை மெய்ப்பிக்கும் வகையில் இங்கேயும் ஒருவர் வந்து வாய்த்தார். அவர், சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு எல்லாத்துறைகளிலும் நிகரில்லாத பணியாற்றிய திரு. ஜோசப் யுவராஜ் பிள்ளை (ஜே.ஒய்.பிள்ளை). 1971ஆம் ஆண்டிலிருந்து 1996 ஆண்டு வரை தொடர்ந்து, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாய் இருந்து சாதனைகள் படைத்தவர்; சாதிக்கத் துணை புரிந்தவர். இப்பணி மட்டுமில்லாது 'சிங்கப்பூர் முன்னேற்ற வங்கி', 'சிங்கப்பூர் எக்சேஞ்ச் நிறுவனம்', நிதி மற்றும் தற்காப்பு அமைச்சு இலாகா மற்றும் அரசின் நிரந்தர செயலாளர் உட்பட பல பதவிகளில் காலூன்றி வெற்றிக்கொடி பறக்கவிட்டவர் அவர். இவரைத்தவிர இன்னொருவரும் இருக்கிறார், அவர் திரு. எஸ். தனபாலன். 1997ல் அதன் 'சேர்மனாகவும்' அமைச்சராகவும் இருந்தவருமாவார்.

விமானியின் கவனக்குறைவு காரணமாக, 2000ஆண்டின் அக்டோபரில், தாய்பேயில் (தைவான்) நிகழ்ந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் ஒரு பெரிய விமான விபத்து, சற்றுப்பிந்தைய வருடங்களிலும் ஆரம்ப ஆண்டுகளிலும் இந்நிறுவன ஊழியர்களிடையே ஏற்பட்ட நிர்வாகம் மீதான போராட்டங்கள், சிங்கப்பூரின் வளர்ச்சி வயிற்றை கவ்வச்செய்த 'சார்ஸ்' பரவல், அண்மையில் ஏற்பட்ட விமானிகள்-நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஊதிய பிரச்சனைகள் என எல்லா தடைக்கற்களையும் தாண்டி வெற்றி நடைபோட்டுவரும் 'சிங்கப்பூர் சாங்கி விமான நிலையமும்' 'சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும்' இன்று மட்டுமல்ல என்றும் திரு. லீ குவான் யூ அவர்களுக்கும் அவருடைய சக மேய்ப்பர்களின் சாதனைக்கும் சாட்சிக்குன்றாக விளங்கும் என்பதில் ஐயமில்லை. 

(தொடரும்)


சிங்கப்பூர் டைம்ஸ் 2015 இதழில் இருந்து.

இந்தியா. ஏப்ரல் 29, இந்தியாவின் வடக்கு மாநிலமான உத்தராஞ்சலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அதன் தலைவர், இந்திய அரசியலில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு இருப்பிடமாய் இருந்து வந்த இருண்டகாலங்கள் இனிமேல் இருக்காது எனவும் விரைவில் 'மத்தியில்' கம்யூனிசத்தோழர்களின் ஆட்சி வரக்கூடும் எனவும் தெரிவித்தார். அக்கம்யூனிச ஆட்சியில் இன்றைய நடைமுறைகள் யாவும் மாற்றப்படும் என்றும் மக்கள் நலமுடன் வாழ எல்லாவித வழிமுறைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

'இதுவரை மத்தியில் ஆளும் கட்சிகள், வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் 89.9999 சதவீத மக்களைக் கண்டுகொள்ளவில்லை' எனவும் 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வறுமைக்கோட்டை இன்னும் கொஞ்சம் கீழே இறக்கி எல்லா மக்களையும் வறுமைக்கோட்டுக்கு மேலேகொண்டு வருவோம்' எனவும் கூறினார். 'கட்சிக்கு உறுப்பினர் படிவம் வழங்கப்படுவதாகவும் இன்னும் சில வருடங்களில் இந்தியாவில் பாதி மக்கள் தொகையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கொண்டு வருவதே எங்களுடைய தற்போதைய இலக்கு' எனவும் அவர் முழங்கினார். கூட்டத்தில் இலவசமாய் வழங்கிய தண்ணீர் பாக்கெட்டுக்கு அடிதடி நடந்ததில், 100 பேருக்கு மேல் பலத்த காயங்கள் ஏற்பட்டதாக மனித உரிமைகள் மீதான செய்திக்குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com - Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |